இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலத்தின் பன்னிரன்டாம் ஞாயிறு

முதல்வாசகம்: செக் 12,10-11: 13,1
திருப்பாடல்: 63
இரண்டாம் வாசகம்: கலாத் 3,26-29
நற்செய்தி: லூக் 9,18-24


கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது (தி.பா 63,1)

முதல் வாசகம்
செக் 12,10-11: 13,1

10நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள். 11அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும். 13,1'அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும் தோன்றும்.

இன்றைய முதலாம் வாசகம் மனமாற்றத்தை மையப்படுத்துகிறது. இறைவாக்கினர் செக்கரியாவின் பெயர், 'கடவுள் நினைவுகூருகிறார்' என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. (זְכַרְיָה ட்செகாரெயாஹ்). விவிலியத்திலுள்ள சிறிய இறைவாக்கினருள் இவர் பதினொராவது இடத்தில் இருக்கிறார். இந்த புத்தகத்தை ஆய்வாளர்கள் இரண்டாக பிரிக்கின்றனர். 1-8 வரையான அதிகாரங்கள் கி.மு 6ம் நூற்றாண்டை சார்ந்தது என்றும், 9-14 அதிகாரங்கள் பிற்காலத்துக்குரிய இரண்டாம் செக்கரியா எனவும் பார்கின்றனர். இந்த இரண்டாவது செக்கரியாவின் காலத்தை கணிப்பதில் பல கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை கிரேக்கருடைய காலத்துடனும் சிலர் தொடர்பு படுத்துகின்றனர். ஆனால் இதனை இஸ்ராயேலில் ஹஸ்மோனியருடைய (மக்கபேயர்) காலம் என்று சொல்வதற்கில்லை ஏனெனில் இஸ்ராயேலருக்கு, ஹஸ்மோனியருடைய காலத்திற்கு (கி.மு. 2ம் நூற்றாண்டு) முன்னமே கிரேக்கருடன் தொடர்பிருந்தது. இந்த 12ம் அதிகாரம் எருசலேமிற்கெதிரான எதிர்கால தாக்குதல்களை விவரிக்கின்ற அதேவேளை கடவுள் தரும் நம்பிக்கையையும் விளக்குகிறது.

வ.10: இந்த வசனம் ஏதோ ஒரு போருக்கு பின்னான நிலையைக் குறிப்பது போல உள்ளது. தாவீதின் குடும்பம் என்பது எருசலேமில் ஆட்சியில் இருந்தவர்களைக் குறிக்கிறது. குடியிருப்போர் என்பது யூதேய நாட்டு மக்களைக் குறிக்கிறது. இந்த வசனத்தில் சில கவனிப்புக்களை காணலாம்.

அ. ஊடுருவக் குத்தியவனைக்: மசறோட்டிக் வாசகங்கள் 'ஊடுவருக் குத்திய என்னை' என்று வாசிக்கிறது. இது சில இறையியல் பிரச்சனைகளை உருவாக்கலாம் என்றபடியால், ஊடுருவக் குத்தியவரை, என இலகு வாசக முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆ. ஒரே பிள்ளை மற்றும் தலைப் பிள்ளை என்பவர்கள் இஸ்ராயேல் சமூகத்தில் மிக முக்கியமானவர்கள். இவர்கள் வாயிலாகவே சந்ததி பெருகியது அத்தோடு சொத்துக்களும் கைமாறியது. இவர்களின் இறப்பு குறிப்பிட்ட குடும்பத்தின் எதிர்கால தொடர்ச்சியை கேள்விக்குறியாக்கும். இதனால் இவர்கள் மட்டிலான அழுகையும் புலம்பல்களும் அதிகமாகவே இருக்கும்.

இ. இந்த ஊடுருவக் குத்தப்பட்டவரை, புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவாக காண்கின்றனர். இது சிலுவையில் இயேசுவின் விலாவை ஒரு படைவீரன் ஈட்டியால் குத்தியதை நினைவூட்டுகிறது (காண்க யோவான் 19,37: திருவெளி 1,7). அத்தோடு இயேசு தலைமகனாகவும் ஆங்காங்கே விவிலியத்தில் காட்டப்படுகிறார்.

வ. 11: இங்கே எருசலேமின் ஓலம் இஸ்ராயேலருக்கு தெரிந்திருந்த வரலாற்று நிகழ்சிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. அதாத் மற்றும் ரிம்மோன் எனப்படுவது இரண்டு கானானிய பழைய தெய்வங்களின் பெயர்கள். ஒன்று சூறாவளி மற்றது இடியின் தெய்வமாக காணப்படுகிறது. இங்கே இஸ்ராயேல் கடவுளின் போரையும், அவர் இந்த தெய்வங்களுடன் போரிட்ட காட்சியையும் மறைமுகமாக காட்டுவதனைப் போலவும் உள்ளது என ஆய்வாளர்கள் காண்கின்றனர். அத்தோடு மெகிதோ என்னும் இடம் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான இடம், இங்கேதான் மிக நேர்மையான மன்னன் என அறியப்பட்ட யோசியா, போரில் நிக்கோ எனப்படும் பாரவோனால் மரணமானார் (காண்க 2குறி 35,22-25). நமக்கு நந்திக் கடலும், அனுராதபுரத்தில் எல்ளாளனும் நினைவுக்கு வரலாம். மெகிதோ இன்றுவரை புலம்பலுக்கு உரிய இடங்களில் ஒன்றாக யோசியாவின் பொருட்டு நினைவுகூரப்படுகிறது. ஆசிரியர் இந்த புலம்பலுக்கு ஒத்ததாக எருசலேமின் புலம்பல் இருக்கும் என்கிறார்.

13,1: இந்த வரி நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுக்கிறது. இந்த வரிக்கு முன்னர் உள்ள மூண்று வரிகள் (12,12-14) எருசலேமில் மக்கள் குடும்பம் குடும்பமாக செய்த மனந்திரும்புதலைக் காட்டுகின்றன. இறுதியாக, அவர்களின் முயற்சியின் பலனாக தீமைகள் அகற்றப்படுகின்றன. நீரூற்று அல்லது நீர், உடல் ரீதியான கழுவுதலைக் குறிக்கிறது. [மசறோட்டியர் முறைப்படியான உயிர்ரெழுத்து குறியீடுகள்: எபிரேய விவிலியம் முதலில் மெய்யெழுத்து வடிவில் மட்டுமே பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. மசறோட்டியர் என்பவர், விவிலிய அறிஞர்கள். இவர்கள் பாலஸ்தீன, பபிலோனிய மற்றும் தைபீரிய குழுக்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர். 600-950 கி.ப காலப்பகுதிகளில் இவாக்ள் செயற்பாடுகளில் இருந்தனர். இவர்கள் எபிரேய விவிலிய பிரதிகளை பாதுகாப்பதிலும் மீள்உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினர். தைபீரிய கையெழுத்து படிவங்கள் இந்த மெய்யெழுத்து விவிலியத்திற்கு உயிர்ரெழுத்து குறியீடுகளைக் கொடுத்தது. மசறோட்டிக் வாசகங்கள் என்பது இந்த உயிரெழுத்து குறியீடுகளை உள்ளடக்கிய விவிலியத்ததை குறிக்கிறது.]



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 63

1கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

2உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

4என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.

5அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.

6நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.

7ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.

8நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

9என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.

10அவர்கள் வாளுக்கு இரையாவர்; நரிகளுக்கு விருந்தாவர்.

11அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்; அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்; பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்.



ஒரு காலத்தில், பல யூத-கிறிஸ்தவ வரலாற்று வடுக்களின் காரணமாக, யூதர்களை வெளிவேடக்காரர்களாகவும், வெறுக்கத்தக்கவர்களாகவும் அதிகமானவர்கள் (கிறிஸ்தவர்களும்) பார்த்தனர். இந்த காழ்ப்புணர்சிகளின் நிழல்களை சில பிரசித்தி பெற்ற இலக்கியங்களிலும் காணலாம். இதனை, 'அந்த வெனிஸ் நகர வாணிபர்', என்ற சேர்க்ஸ்பியரின் நாடகத்திலும் காணலாம் (The Merchant of Venice). ஆனால் இந்த திருப்பாடல் இஸ்ராயேல் அல்லது யூத மக்கள், கடவுளில் கொண்ட நம்பிக்கையின் ஆழத்தை ஆடம்பரமாக காட்டுகிறது. இன்றைய கிறிஸ்தவர்களின் மேலோட்டமான நம்பிக்கைக்கு இந்த திருப்பாடல் பல முக்கியமான சவால்களையும் கேள்விகளையும் முன்வைக்கிறது. திருப்பாடல் 63இன் பின்புலத்தை சில ஆய்வாளர்கள், தாவீது அவர் மகன் அப்சலோமிடமிருந்து தப்பிய வேளை பாடினார் என்று காண்கின்றனர். அப்சலோம் தனது தந்தையும் அரசருமாகிய தாவீதுக்கு எதிராக சதிசெய்து எப்ரோனில் தன்னைத்தானே அரசனாக பிரகடனம் செய்து, பின்னர் விரைவாக எருசலேமையும் அதன் ஆட்சிப்பீடத்தையும் கைப்பற்றுகிறான்;, இதனால் பதற்றமடைந்த தாவீது, வீண் இரத்த சிந்தலை தடுக்க தன்வீரர்களுடன் தப்பி ஒலிவ மலையூடாக பயணம் செய்கிறார் (காண் 2சாமு 15,13-17). இந்த வேளையில் தாவீது எருசலேமை நோக்கி இந்தப் பாடலை பாடினார் என சிலர் காண்கின்றனர். இந்த சிந்தனைக்கு எதிராகவும் சில தரவுகளை இந்தப் பாடலில் காணலாம்.

வ. 1: இப்பாடலில் தலைப்பை மசறோட்டிக் வாசகம், யூதேயாவின் பாலைநிலத்தில் தாவீதின் பாடல் என்று அறிமுகப்படுத்துகிறது. தரிசு நிலம், தாகம், நீர் போன்றவை இஸ்ராயேல் புவியியலில் முக்கியமான எண்ணக்கருக்கள், இவை இவர்களுக்கு பல ஆன்மீக அனுபவங்களையும் கொடுத்தது. பாலைவனத்தில் ஒருவர் தண்ணீருக்காக தவிப்பதைவிட கொடூராமான தாகம் இருக்க முடியாது. இப்படியான தாகத்தை, தன் உள்ளம் கடவுளுக்காக ஏங்குவதாக ஆசிரியர் ஒப்பிடுகிறார்.

வவ. 2-4: இப்பாடல் ஆசிரியர் தாவீதாக இருந்தால், இங்கே வரும் திருத்தலம், எருசலேம் ஆலயமாக இருக்க முடியாது. எபிரேயம் இந்த திருத்தலத்தை தூயகம் (קֹּדֶשׁ கோடேஷ்) என்றே சொல்கிறது. ஒரு வேளை இது ஆண்டவரின் பேழை இருந்த கூடாரமாக இருக்கலாம். இங்கே சொல்லப்படுகின்ற செயற்பாடுகள் அதாவது: தூயகம் வருவதல், கடவுளை நோக்குதல், புகழ்தல், போற்றுதல், கைகூப்பி கடவுளின் பெயரை ஏத்துதல் போன்றவை ஆசிரியரின் பழைய செயற்பாடுகளாக இருக்கலாம். அத்தோடு இங்கே எதிர்கால வினைகளும் பாவிக்கப்பட்டுள்ளன. இவை ஆசிரியர் எதிர்காலத்திலும் இவற்றை செய்ய விரும்புகிறார் என்பதை காட்டுகின்றன.

வ. 5: அறுசுவை உணவு என்பது எபிரேய மூல வாசகத்தில் மிருக கொழுப்பு மற்றும் தாவரக் கொழுப்பு உணவுகளைக் குறிக்கிறது (חֵלֶב ודֶשֶׁן). இக்கால அரசியல்வாதிகளைப் போல அன்று தாவீதும் நன்றாக சாப்பிட்டிருப்பார் போல. இந்த கொழுப்பு உணவுகளைப் போல, கடவுள் தன் உள்ளத்தை திருப்திப்படுத்துவதாக சொல்கிறார், இதனால் அவர் இதழ்கள் கடவுளைப் போற்றுகின்றன.

வவ. 6-8: கடவுளை தியானிக்கும் முறை என்பது இஸ்ராயேலருக்கு தனித்துவமானது. ஆரிய திராவிட முறைகளைப்போலன்றி செமித்தியர் (அநேகமாக இஸ்ராயேலர்) ஒரு வகை மௌமான முணுமுணுக்கும் தியானத்தை செய்தனர் (הָגָה ஹகா- முனுமுனு, உறுமு, புலம்பு). இதனை தாவீது கட்டிலிலும், இரவு விழிப்பிலும் செய்வதாக சொல்கிறார்.

கழுகுகளின் இறக்கையின் நிழலை கடவுளின் பாதுகாப்பிற்கு ஒப்பிடுவது ஒரு புராணக்கதை சார்ந்த செமித்தியரின் நம்பிக்கை. இது ஒரு எகிப்திய கழுகு தெய்வத்தின் உருவில் இருந்து வளர்ந்தாகவும் ஒரு வாதம் இருக்கிறது. அத்தோடு பல பறவைகள் தங்கள் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து காக்க தம் இறகுகளில் மறைக்கின்றன. இந்த உவமையை ஆசிரியர் இங்கே கடவுளின பாதுகாப்பை வர்ணிக்க பாவிக்கின்றார். புதிய ஏற்பாட்டில் இயேசுவும் இந்த உவமையை கையாழ்வார் (காண்க மத் 23,37 எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!: எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!: லூக் 13,34).

கடவுளின் பலத்தை வலக்கைக்கு ஒப்பிடுவதும் விவிலியத்தின் இன்னொரு அடையாள மொழி. வலக்கை பலமானதாகவும் ஆயுதம் தாங்குவதாகவும் பொதுவாக இருப்பது இதற்கான காரணமாகலாம்.

வவ. 9-10: இந்த வரிகளில் ஆசிரியர் தன்னுடைய சாபங்களை தன் எதிரிகளுக்கு இடுகிறார். எதிரிகளை சபிப்பது இஸ்ராயேலரின் செபத்தில் முக்கியமான பங்கை வகிக்கிறது. பூவுலகின் ஆழம் என்பது உலகத்தின் கீழ் பகுதியைக் குறிக்கிறது. உலகின் கீழ் பகுதியை இருள் படர்ந்த, கடவுளால் கைவிடப்பட்ட பகுதியாக இஸ்ராயேலர் கண்டனர். (கிறிஸ்தவர்களின் நரகம் பற்றிய நம்பிக்கையுடன் இது ஒத்திருக்கலாம்). போரில் வாளால் மடிகிறவர்கள் பாலைவன நரிகளால் உண்ணப்படுவது அக்கால பயங்கரமான நியதி.

வ. இந்த வரியில் ஆசிரியர் தன்னுடைய எதிர்காலத்தை உரைக்கிறார். அப்சலோம் தாவீதைப்பற்றி பல தப்பறைகளை பரப்பியிருந்தான். அவையனைத்தும் தவிடுபொடியாகும் என்ற பின்புலம் இங்கே தெரிகிறது.



இரண்டாம் வாசகம்
கலாத் 3,26-29

26ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். 27அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். 28இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். 29நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

கடந்த வார வாசகங்களைப்போலவே, இந்த வார இரண்டாம் வாசகமும் பவுலுடைய திருத்தூதுத்துவ ஒருமைப்பாட்டை நியாயப்படுத்தி வருகிறது. இறைவனின் மக்கள் என்பது யூதர்களுக்கான அடையாளங்களின் முக்கியமான ஒன்று. இறைவன் மோசே வாயிலாக சீனாய் மலையில் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கை, கடவுளின் சட்டங்களை மக்கள் கடைப்பிடிப்பதாகவும், கடவுள் இஸ்ராயேலரை தனது மக்களாக ஏற்றுக்கொள்வதாகவும் அமைந்திருந்தது. இந்த சட்டங்கள் இஸ்ராயேலரின் வாழ்கையில் ஒவ்வொரு அங்கத்திலும் தாக்கம் செலுத்தியது. இந்த சட்டங்களே இஸ்ராயேலரை மற்றைய மக்கட் கூட்டத்திலிருந்து தனித்துவப்படுத்திக் காட்டியது. இஸ்ராயேலின் சட்டங்கள் அக்காலத்தில் ஒழுக்கவியலுக்கு இந்த மக்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும், இவர்கள் சந்தித்த வாழ்வியல் சிக்கல்களையும் படம்பிடிக்கின்றன. சட்டங்கள் தன்னிலே தீமையானது அல்ல, சட்டங்கள் இல்லாத மக்கள் அநாகரீக மக்களாக மாறி வரலாற்றிலே இல்லாமல் போனதை, நாம் இலக்கியங்கள், புராணங்களில் வாசிக்கிறோம். இஸ்ராயேலர் இன்றும் உலகில் முக்கியமான மக்கள் கூட்டங்களில் ஒன்றாக இருப்பதற்கு இவர்களின் ஒழுக்கவியல் பற்றிய சிந்தனையே காரணம். மனித சட்டங்களுக்கு தெய்வ சாயம் பூசியவாக்ளில் இஸ்ராயேல் மக்கள் முக்கியமாக நினைக்கப்பட வேண்டியவர்கள். இஸ்ராயேல் சட்டங்களில் பத்துக் கட்டளை மிகவும் முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும் (காண்க: வி.ப 20, 1-17: இணை 5, 6-21). இந்த சட்டங்களை தனி மனித சட்டம், சமூக சட்டம் என்ற இரண்டு முக்கியமான கூறுகளாக பிரிக்கலாம்.

இயேசு ஆண்டவரோ, பவுலோ இஸ்ராயேலின் இந்த சட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இயேசு ஆண்டவரின் பெற்றோர் இந்த சட்டங்களின் ஆன்மீகத்தை நுணுக்கமாக கடைப்பிடித்தார்கள். பவுல் இந்த சட்டங்களை நிறைவேற்றுவதில் உண்மையான பரிசேயனாக வாழ்ந்தவர். ஆனால் ஆண்டவர் இயேசு சட்டங்களுக்கு உட்பட்டவர் அல்ல, அவர் கடவுள். இந்த நல்ல சட்டங்களும் அவருடையதே. மக்களுக்கு தேவையில்லாதது, பழுதடைந்தது, காலவதியாகியது போன்றவற்றை திருத்த அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதற்கு அவர் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இதனால்தான் மனிதனுக்குத்தான் சட்டம், சட்டத்திற்கு மனிதன் அல்ல என்கிறார் (காண் மத் 12,8 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள். 8ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே' என்றார்.: மாற் 2,27 மேலும் அவர் அவர்களை நோக்கி, 'ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.). இதனைத்தான் பவுல் தன் வாழ்வில் அனுபவித்தார், அதனையே தன்னுடைய நற்செய்தி பணியாக புறவினத்தாருக்கு கொண்டுசென்றார். அவர் கருத்துப்படி சட்டங்கள் பாதைபோன்றது, ஆனால் கிறிஸ்து இயேசுவே அந்த பாதை (சட்டம்) அழைத்துச் செல்கின்ற இலக்கு. ஆக கிறிஸ்துவே அருகில் இருக்கும் போது இந்த சட்டங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது என்பதே இவர் வாதம்.

வ. 26: இங்கே முக்கியமான வரலாற்று உண்மையை பவுல் உடைக்கிறார். அதாவது 'அனைத்து மக்களினமும் கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தின் பொருட்டு கடவுளின் பிள்ளைகள்' என்பதே அந்த உண்மை. இந்த முக்கியமான வசனம் தமிழில் அழகாக மொழிபெயர்கப்பட்டுள்ளது. இங்கே எழுவாய்ப்பொருள், கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கை என்பதே, இவ்வாறே இது மூல கிரேக்க மொழிபெயர்பில் உள்ளது. (Πάντες γὰρ υἱοὶ θεοῦ ἐστε διὰ τῆς πίστεως ἐν Χριστῷ Ἰησοῦ· நேரடி மொழிபெயர்ப்பு: அனைவரும் உண்மையில் கடவுளின் பிள்ளைகளாக இருக்கிறீர்கள், கிறிஸ்து இயேசுவில் கொண்டுள்ள நம்பிக்கை ஊடாக).

வ. 27: கிறிஸ்துவை அணிந்துகொள்ளுதல் என்பது பவுலின் முக்கியமான இறையியல் வாதம். ஆடை அணிதல் என்பது ஒருவரின் தகமையை குறிக்கும், அத்தோடு அவரின் மேன்மையையும் குறிக்கும். முதல் ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி ஒருவரின் முக்கியத்துவத்தை அல்லது அவரது சமூக முக்கியத்துவத்தை அவரின் ஆடைகளை வைத்தே கணித்தனர். இங்கே இந்த மகத்தான ஆடையான கிறிஸ்து, திருமுழுக்கு வாயிலாக அணியப்பட்டுள்ளார்.

வ. 28: இந்த நம்பிக்கை அல்லது கிறிஸ்து என்னும் ஆடை, எல்லா பிரிவினைகளான இனம், சாதி, தொழில், பால் போன்றவற்றை இல்லாமல் ஆக்குகிறது.

வ. 29: இந்த கிறிஸ்துவின் பொருட்டு ஏற்கனவே முதல் ஏற்பாட்டில் கடவுள் வாக்களித்த பெறுபேறுகளான, ஆபிரகாமின் பிள்ளைகளாகுதல், கடவுளின் சார்பு மக்களாகுதல், வாக்குரிமையுடைய உரிமைப்பேற்று மக்களாகுதல் போன்றவை அனைவருக்கும் கிடைக்கின்றன.


நற்செய்தி வாசகம்
லூக் 9,18-24

18இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று அவர் கேட்டார். 19அவர்கள் மறுமொழியாக, 'சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்' என்றார்கள். 20'ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, 'நீர் கடவுளின் மெசியா' என்று உரைத்தார். 21இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னை, மெசியா அல்லது தாவிதின் குடும்ப வாரிசாக அறியப்படுவதை தவிர்ப்பதை பல சந்தர்பங்களில் வாசிக்கிறோம். லூக்கா நற்செய்தி புறவின கிறிஸ்தவர்களை மையப்படுத்தி அவர்களுக்கு ஆண்டவரை கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளதே இதற்கு காரணமாகலாம். இந்த பகுதியை பற்றி ஆழமாக நோக்க இந்த அதிகாரம் விளக்குகின்ற சிறிய பகுதிகளை ஒப்பிட வேண்டும்.

9,1-6: பன்னிருவரை அனுப்புகின்ற ஆண்டவர், அவர்களுக்கு சகல அதிகாரங்களையும் அளிக்கிறார். அத்தோடு இந்த பயணத்தின் சவால்களையும் அறிவிக்கிறார். மத்தேயு நற்செய்தியில் புறவினத்தவரிடம் செல்ல வேண்டாம் என்பதை லூக்கா சொல்லவில்லை.

9,7-9: ஆண்டவரைப் பற்றி கேள்வியுறுகிற ஏரோது குழப்பமடைகிறான். அவனோடு சேர்ந்த பலர் இயேசுவை எலியாவாகவோ அல்லது முற்கால இறைவாக்கினராகவோ கண்டனர். ஆனால் ஏரோது இயேசுவை கொலைசெய்யப்பட்ட யோவானாக காண்கிறான். இதனை சமநோக்கு நற்செய்திகள் அனைத்தும் காட்டுகின்றன.

9,10-17: ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வு இயேசுவை வல்லமையுள்ள கடவுளாக காட்டினாலும், இயேசு இங்கே சீடர்களுக்கே பகிர்வைப்பற்றிய பாடத்தையும், மக்கள் மீதான அவர்களின் அக்கறை எப்படியிருக்க வேண்டும் என்பதனையும் படிப்பிக்கிறார். இங்கே சீடர்களும் மக்களும் இயேசுவை யார் என்று கண்டுகொள்கின்றனர். இந்த நிகழ்வும் அனைத்து சமநோக்கு நற்செய்திகளிலும் காணப்படுகிறது.

9,18-21: இயேசுவை யாரென அறிந்த பேதுரு அதனை அறிக்கையிடுகிறார். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் பேதுருவை அவரின் பதிலின் பொருட்டு பாராட்டி திருச்சபையையும் அவர் பொறுப்பில் கொடுக்கிறார் (காண்க மத் 16,13-20). மாற்கு நற்செய்தியில் பேதுரு பாராட்டப்படவில்லை அத்தோடு இதனைப் பற்றி பேசவேண்டாம் என்று கட்டளை கொடுக்கப்படுகிறது (காண்க மாற் 8,27-30). லூக்காவும் மாற்குவையே பின்பற்றுகிறார்.

9,28-36: இயேசு தோற்றம் மாறுகின்ற போது, அவர் உண்மையாகவே எலியாவிற்கும் மோசேக்கும் மேற்பட்டவர் என்பதை பேதுரு கண்டுகொள்கிறார். இதனையே அனைத்து சமநோக்கு நற்செய்திகளும் காட்டுகின்றன.

இவை இப்படியிருக்க, ஏன் இயேசு பேதுருவுக்கு, தன்னை மெசியா என்று மற்றவருடன் பேச வேண்டாம் என்கிறார்????

வ. 18: இந்த பகுதிக்கு முன்னர்தான் இயேசு பலருக்கு உணவுகளை நிறைவாக கொடுத்திருந்தார். அதை சீடர்கள் கண்டிருந்தனர். இப்போது இயேசு மட்டுமே செபித்ததாக லூக்கா காட்டுகிறார். சீடர்கள் வழக்கம் போல பராக்கு பார்க்கிறார்கள் போல. செபித்தல் லூக்காவிற்கு மிகவும் பிடித்த கருதுகோள். இயேசுவின் கேள்வி உண்மையில் மக்களுக்கு அல்ல மாறாக அது திருத்தூதர்களுக்கே. அல்லது மக்கள் தன்னைப்பற்றி என்ன கதைக்கிறார்கள் என்பதை சீடர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் இயேசு விரும்பியிருக்கலாம்.

வ. 19: இயேசுவின் கேள்விக்கான பதிலை அனைத்து சீடர்களும் கொடுக்கிறார்கள் என்கிறார் லூக்கா. இவ்வாறே அனைத்து நற்செய்தியாளர்களும் (சமநோக்கு) காட்டுகின்றனர். ஆக சீடர்களுக்கு மக்களின் பேச்சுக்கள் தெரிந்திருக்கின்றன. அவர்களின் பதில்:

அ. திருமுழுக்கு யோவான்:
திருமுழுக்கு யோவான், அவருடைய கவர்ந்திழுக்கும் போதனைகளின் காரணமாக அக்காலத்தில் முக்கியமான மறையுரைஞராக உருவெடுத்திருந்தார். இவரால் ஏற்பட்ட சவாலை முறியடிக்கவும், அரசியலில் குழப்பமடையாமல் இருக்கவும் ஏரோது இவரை கொலைசெய்திருந்தான். யோவானின் கொலைக்கான காரணம் ஏரோதியா என நற்செய்திகள் சில கூறினாலும், அதற்கு முழுக் காரணம் ஏரோதும் அவனின் அசிங்கமான அரசியலுமேயாகும். மற்றய நற்செய்திகளைப் போலல்லாது லூக்கா யோவானுக்கு மிக முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார். லூக்காவின் முதல் மூன்று அதிகாரங்கள் யோவானின் குழந்தைப் பருவத்ததையும், அவர் பெற்றோரையும், அவர் பணிவாழ்வையும் அழகாக படம்பிடிக்கின்றன. யோவானைப் பற்றிய சில வதந்திகளை திருத்தவும், அவரை கடவுளின் உண்மையான இறைவாக்கினராக காட்டவும், லூக்கா இப்படி செய்திருக்கலாம்.

இந்த யோவானை பலர், முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர் எலியா என்றே கண்டனர். எலியா வானகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர். இறக்க முடியாதவர் (காண்க 2அரசர் 2,9-12). ஆக யோவான் எலியாவாக இருந்தால் அவரும் இறக்க முடியாதவர் எனவே இயேசு உருவில் வந்திருக்கிறார் என நம்பினர்.

ஆ. எலியா: வடஅரசில் வேலை செய்த மிக முக்கியமான இறைவாக்கினர். மோசே எப்படி சட்டங்களுக்கு காவலாளியோ அதைப்போல எலியா இறைவாக்குகளுக்கு அடிப்படையும் பாதுகாவலருமாவார். எலியா பற்றிய பல கதைகள் வட அரசில் இருந்து வந்து, தென்னரசில், அரசர்கள் புத்தகமாக உருவெடுத்தது. இறைவாக்கினர் புத்தகங்களில் இவர் இல்லாவிடினும், இவரைப் போல ஒரு இறைவாக்கினரை இஸ்ராயேலோ யூதாவோ கண்டதில்லை. வட அரசின் மிக பலம் வாய்ந்த அத்தோடு முக்கிய அரச வம்சமான ஒம்ரியின் வம்சத்தை கடுமையாக எலியா சாடினார். இஸ்ராயேலில், ஒரு-கடவுள் நம்பிக்கைக்கு அடித்தளமிட்டவர் எலியா இறைவாக்கினராவார். இவருடைய பெயருக்கு 'என் கடவுள் ஆண்டவர்' (אֵלִיָּהוּ எலியாகு) என்பது பொருள். கானானிய பால் தெய்வங்களுக்கு எதிராக யாவே-கொள்கைகளை அதிகமாக மக்கள் மத்தியில் பரப்பினார். எலியா சந்தித்த முக்கியமான பிரச்சனையாக, பலகடவுள் வழிபாடுகளின் தாக்கம் இருந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒம்ரியின் மகன் ஆகாபுடன் முரன்பட்ட எலியா அவர் மனைவி ஜெசபேலையும் அதிகமாக சாடினார், அத்தோடு பால் தெய்வத்தின் பல இறைவாக்கினர்களையும் குருக்களையும் கார்மேலில் அழித்தார். இதனையே ஜெசபேல் கடவுளின் இறைவாக்கினர்களுக்கு செய்தாள். இறுதியாக நெருப்பு குதிரைத்தேரில் வானகம் சென்ற எலியா திரும்பி வருவார் அதுவும் மெசியாவின் வரவிற்கு முன் வருவார் என இஸ்ராயேலர் நம்பினர்.

இ. முற்காலத்து இறைவாக்கினர் எனப்படுவது யாரைக் குறிக்கிறது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. மத்தேயு இந்த தொடரில் எரேமியா இறைவாக்கினரையும் இணைத்துக்கொள்கிறார் (காண்க 16,14). இறைவாக்கு பணி இஸ்ராயேல் மக்களிடையே தன் மகத்துவத்தை இழக்காமல் இருந்தது. தலைவர்கள், அரசர்கள் தங்கள் பணிகளை செவ்வனவே செய்யாமல் இருந்தபோது, மக்கள் இறைவாக்கினர்களையே எதிர்பார்த்தனர். இதனையே இங்கேயும் காண்கிறோம்.

வ. 20: ஆண்டவரின் இந்த கேள்வி பல கேள்விகளை எழுப்புகிறது. அதாவது மக்களின் இந்த நம்பிக்கைகள் இன்னும் ஆழப்படவேண்டும் அல்லது சீடர்கள் இதனையும் தாண்டி மெய்யறிவு பெறவேண்டும் என எதிர்பார்திருப்பார் போல. மற்றய நற்செய்திகளைப் போல இங்கேயும் பேதுருவே பதிலளிக்கிறார். இது மற்றவர்களுக்கு விடை தெரியாது என்பதனை காட்டவில்லை, மாறாக பேதுருவின் தனித்துவத்தை காட்டுகிறது. கடவுளின் மெசியாவைத்தான் அனைவரும் இறுதியாக எதிர்பார்த்தனர், அதனை பேதுரு சரியாக இயேசுவில் கண்டுகொள்கிறார்.

வ. 21: இந்த வசனம் ஆச்சரியமாக உள்ளது. ஏன் இயேசு தன்னை மறைக்கிறார். இந்த பகுதிக்குப் பின்னர், உருமாற்றத்தில் தன்னை மெசியாவாக காட்டுகிறார்... ஒருவேளை மெசியா பற்றிய அறிவு இப்போதைக்கு உகந்ததல்ல என்கிறார் போல. அல்லது ஒவ்வொருவரும் (மக்கள்) தாமாகவே இந்த அறிவை பெறவேண்டும் என்று நினைத்திருப்பார். அல்லது மெசியா பற்றிய செய்திகள், இயேசு இன்னும் செய்ய இருந்தவற்றை பாதிக்கலாம் என்றும் நினைத்திருப்பார். உரோமையர்கள் நிச்சயமாக இந்த செய்தியை விரும்ப மாட்டார்கள், அத்தோடு அது சீடர்களுக்கும், இயேசுவை பின்பற்றிய அப்பாவி மக்களுக்கும், ஆபத்தாக அமையும் என்பதையும் ஆண்டவர் நல்லாயனாக நன்கு அறிந்திருப்பார். மேலும், இந்த உண்மைச் சத்தியம் ஒரு முக்கியமான இரகசியம் என்பதையும் இயேசு பேதுரு மூலம் அனைவருக்கும் சொல்லியருக்கலாம்.

இயேசு யார் என்ற கேள்வி பல வேளைகளில் எழுகிறது. இயேசுவைப் பற்றிய மேலோட்டமான எண்ணக்கருக்கள் சிலவேளைகளில் அவரின் மாட்சிக்கு குந்தகத்தை ஏற்படுத்தலாம். இயேசு நம்முடைய சொந்த அறிவிற்கும், அனுபவங்களுக்கும் அப்பாற்பட்டவர். அவை அவரை விளக்கலாமே தவிர வரைவிலக்கணப்படுத்த முடியாது. இயேசு பற்றிய அறிவு ஓர் அனுபவமும், அறிவும் சார்ந்த தேடல், அதற்கு முடிவு கிடையாது.

அன்பான ஆண்டவரே தாகம் கொண்ட பல நாவுகள் உமக்காக ஏங்கிக் தவிக்கின்றன. இன்றைய உலகில் பல திரவங்கள் தாகத்தை தீர்ப்பதை விடுத்து, அதனை மேலும் அதிகப்படுத்துகின்றன. எம் தாகம் தீர்க்க வருவீரே. ஆமென். மி.ஜெகன்குமார் அமதி, உரோமை, புதன், 15 ஜூன், 2016