இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம்,

முதல் வாசகம்: தி.பணி 5,27-32.40-41 திருப்பாடல்: 30 திருவெளிப்பாடு 5,11-14 யோவான் 21,1-19


முதல் வாசகம்
தி.பணி 5,27-32.40-41

27அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!' என்றார். 29அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்' என்றனர். 40பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். 41இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

இந்தப் பகுதி திருத்தூதர்கள் துன்புறுத்தப்பட்ட வரலாற்றை விவரிக்கின்றது. இதற்கு முன் உள்ள பகுதியில் ஏற்கனவே திருத்தூதர்கள் எச்சரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். ஆண்டவரின் தூதரின் வல்லமையால் இவர்கள் விடுதலையாகி ஆலயத்தின் வாயிலில் வாழ்வு தரும் வார்த்தைகளை கற்பிக்கும்படி கேட்கப்பட்டிருந்தனர். தலைமைச் சங்கம் அவர்களை விசாரனை செய்யும்படி சிறையை ஆய்வு செய்தபோது அவர்கள் ஏற்கனவே தப்பியிருந்தனர். சிறையில் இல்லாத திருத்தூதர்களை, மீண்டும் கோவிலில் கைது செய்து தலைமைச் சங்கத்தின் முன் கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் நடந்தவற்றையே இன்றைய முதலாம் வாசகம் நமக்கு காட்டுகிறது.

வவ.27-28: இந்த தலைமைக்குரு அநேகமாக கயபாவாக இருக்கலாம். அவர் இரண்டு விதமான குற்றச்சாட்டுக்களை திருத்தூதர்கள்மேல் சுமத்துகிறார். அ). கீழ்படியாமை ஆ). மரணப்பழி: லூக்கா இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் வாயிலாக இரண்டு செய்திகளை ஆழமாக கற்பிக்கிறார். அவை, இயேசுவின் போதனைகளை முன்னெடுக்கிறவர்களும் அவரை பின்பற்றுகிறவர்களும் நிச்சயமாக சமய தலைவர்களினால் சோதிக்ப்படுவார்கள், எனவே அவர்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பது. அவர்கள் வித்தியாசமான கட்டளைகளை அதிகாரத்தின் பேரில் முன்வைப்பார்கள். இங்கே இவர்கள் இயேசுவை பற்றி கற்பிக்கக்கூடாது என்று கட்டளை வைக்கிறார்கள். இயேசுவை கற்பிக்கக்கூடாது என்று கட்டளை கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கடவுளை தடுக்க மனிதர்கள் முயல்வதை இங்கே காணலாம். (இன்றும் இயேசுவை அறிவிப்பதை தடுக்க பல மனித அரசாங்கங்கள் கட்டளை கொடுப்பதை என்னவென்று சொல்வது. இதில் இன்னும் நசைக்சுவையான விடயம், சில கிறிஸ்தவ அரசுகளே தங்களை அறிவாளிகளாகவும், அரச-தந்திரிகளாகவும் நினைத்து ஆண்டவரை தடுக்க முயலுவார்கள்!!!). இறுதியாக இயேசுவின் இரத்தபழி தங்களுடையது அல்ல என்று மறுதலிக்கின்றனர். பிலாத்து, பல முறை முயன்றும் இதே தலைமைச் சங்கம்தான் ஆண்டவரை சிலுவையில் அறையக்கேட்டது. பிலாத்து ஆண்டவருடைய இரத்தப்பழியை கழுவியபோது, தங்கள்மேலும், தங்கள் பிள்ளைகள் மீதும் இவர்கள்தான் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். ஆக இந்த கேள்விக்கான விடையை இவர்கள் தங்கள் வாயிலாக அவர்களே சொல்வதை அழகாக லூக்கா படம்பிடிக்கிறார்.

வ.29: லூக்கா இங்கே கிரேக்க பொதுக் கூட்டங்களில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் விவாதம் செய்வதனைப்போல காட்சியமைக்கிறார். இப்போது எதிர்கட்சியாக உருவெடுத்திருக்கும் பேதுருவின் தலைமையிலான ஆரம்ப கால திருச்சபை பேசுகிறது. இங்கே பேதுருவின் பதில், இந்த தலைவர்கள் தங்களுக்கு கடவுள்கள் அல்ல எனவும், தங்களின் கடவுள் இயேசு, ஆகவே வானதூதர் சொன்ன கட்டளையைத்தான் தாங்கள் செய்வதாக (காண் வ.20) காரணம்காட்டுகிறது.

வவ.30-31: இங்கே திருச்சபை பல குற்றச்சாட்டுக்களையும் கடவுளின் செயல்களையும் முன்வைக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்ததாக தலைமைச் சங்கத்தை சாடுகிறது. ஏற்கனவே பேதுரு தன்னுடைய தலைமையுரையில் மக்களையும் உரோமையரையும் குற்றம் சுமத்தியிருந்தார், இங்கே தலைமைச் சங்கத்தை சாடுகிறார். அத்தோடு பேதுரு தன்னுடைய மறைபோதனையை அழகாக தலைமைச்சங்கத்திற்கே முன்வைக்கிறார், அதாவது: மனமாற்றத்தையும் பாவமன்னிப்பையும் வழங்க கடவுள் இயேசுவை தனது வலப்பக்கத்திற்கு உயிர்பித்துள்ளார் எனவும், அதற்கு தாங்களும் தூய ஆவியும் சாட்சிகள் என்கிறார்.இங்கே ஆழமாக பார்கப்படவேண்டியவை இரண்டு: வலப்பக்கம் என்பது, (δεξιᾷ αὐτοῦ அவரின் வலப்பக்கம்) இனி கடவுளின் அதிகாரம் இயேசுவையே சாரும், தலைமைச் சங்கத்தையோ அல்லது அவர்களின் சட்டங்களையோ சாராது என்பதைக் குறிக்கிறது. இரண்டாவது, மனிதர்களின் சாட்சியத்தை தலைமைச் சங்கம் மறுக்கலாம், ஆனால் தூய ஆவியை மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்பதாகும்.

வவ.40-41: எப்படித்தான் திருச்சபை உண்மையை உரைத்தாலும் தண்டிக்கப்படுவாள்; என்று கூறுகிறார் லூக்கா. இறுதி வசனம், திருத்தூதர்கள் தண்டிக்கப்பட்டாலும் மகிழ்சியோடு சென்றார்கள் என்று காட்டுகிறது. ஆக துன்பங்களில் இருந்து தப்பியோடுதல் சாட்சியம் அல்ல மாறாக அதனை தாங்கி, தாண்டி வருவதே மகிழ்சியளிக்கும் என்று பாடம் புகட்டுகிறார் லூக்கா.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 30

நன்றி செலுத்தல் (புகழ்ப்பர் திருக்கோவில் அர்ப்பணப்பர் தாவீதுக்கு உரியது) 1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 2என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர். 3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். 4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. 6நான் வளமுடன் வாழந்தபோது, 'என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன். 7ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக் கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன். 8ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்; என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன். 9நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா? 10ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர். 12ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

நன்றிப்பாடல்கள் அனேகமான வேளைகளில், செபங்களாக இருப்பதனைக் காணலாம் இதனை இந்த முப்பதாவது திருப்பாடலிலும் காணலாம். அத்தோடு நன்றிப்பாடல்கள், பழைய நிகழ்வுகளையும் நினைவூட்வதனையும் காணலாம். இறுதியாக, வேண்டுதல்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது எனவும், பாடலாசிரியர் தான் எக்காலமும் இனி நன்றி செலுத்துவதாகவும் கூறுவதாக அமையும். இந்தப் பாடல், தேவை-மீட்பு-நன்றி என்ற தோரனையில் அமைந்துள்ளதனைக் காணலாம்.

வவ.1-3: இந்தவரிகள் ஆண்டவரை மூன்று தடவை விழிக்கின்றன அத்தோடு மூன்று தடவை பாதாளம், படுகுழி, குணப்படுத்தல் என்றும் சாட்சியம் சொல்கின்றன. குணப்படுத்தல் அக்காலத்தில் கடவுளுக்கே உரித்தான உன்னதாமான ஆசீராக கருதப்பட்டது. שְׁאוֹל nஷயோல் בּוֹר போர், என்பவை அதாளபாதாளத்தையோ அல்லது படுகுழியையோ குறிக்கின்றன. இறப்பிற்கு பின்னர் மனிதர்கள் அல்லது உயிர்கள் இங்கே அலைவதாக இஸ்ராயேலர் கருதினர். இது மீட்பில்லாத இருண்ட நிலையையும் குறிக்கும். ஆசிரியர், கடவுள் தன்னை இப்படியான நிலையிலிருந்து மீட்டு குணப்படுத்தியுள்ளார் என்று சாட்சி சொல்கிறார்.

வவ.4-5: திருப்பாடல் ஆசிரியர் அறிவுரை கூறுகிறார். இறையன்பர்கள் என்பவர்கள், חָסִיד ஹசிட் என்ற பக்திமான்களைக் குறிக்கிறது. ஆசிரியர் கடவுளை நினைக்கவும், நன்றி சொல்லவும் அழைப்புவிடுகிறார். ஆண்டவரின் சினம் குறைவானது ஆனால் அவரின் கருணையோ வாழ்நாள் வரை என்று தன் அழைப்பிற்கு காரணம் காட்டுகிறார்.

வவ.6-7: தன்னுடைய பழைய கால வாழ்க்கையை உதாரணத்திற்கு எடுக்கிறார். தான் தலைக்கனம் உடையவராக இருந்ததாக சாட்சி சொல்கிறார். ஆண்டவரின் மறைக்கப்பட்ட முகம் என்பது இங்கே ஆணடவரின் பிரசன்னத்தைக் குறிக்கும். ஆண்டவரின் இருப்பில்லாத வாழ்வு கலக்கம் நிறைந்த வாழ்வு என்கிறார்.

வவ.8-10: தனது வேண்டுதல்களையும் நியாயங்களையும் முன்வைக்கிறார். ஒன்பதாவது வசனம், இஸ்ராயேல் மக்கள் மரணத்தை வாழ்வின் முடிவாகவும் மரணித்தவர்கள் கடவுளைப் போற்ற முடியாதவர்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருந்ததையும் காட்டுகிறது. இந்த உலகத்திலே கடவுளைப் போற்ற வேண்டும், நல் வாழ்வை வாழவேண்டும் என்பதே இவர்களின் முக்கியமான நம்பிக்கை. கிறிஸ்தவ நம்பிக்கையும் இவ்வுலக நல் வாழ்விற்கு எதிரானதல்ல என்பதையும் இவண் காணவேண்டும். செவிசாயும், இரங்கும், துணையாய் இரும் என்பதே இங்கே ஆசிரியரின் வேண்டுதல்கள்.

வவ.11-12: இந்த வரிகளில் புது வாழ்க்கையை ஆசிரியர் விவரிக்கிறார். புலம்பல் களிநடனமாக மாறுதலும், ஓர் ஆடை களைந்து இன்னோர் ஆடை அணிதலும் புது வாழ்வை காட்டுகிறது. பவுல் இந்த உருவகத்தையே திருமுழுக்கிற்கு ஒப்பிடுவார். பன்னிரன்டாவது வரி, இஸ்ராயேல் மக்களின் விசுவாச வாழ்வை ஒப்பனை செய்கிறது. துன்பத்தில் இருந்து நம்பிக்கைக்கு வருவதே திருப்பாடல்களின் வழமையாக இருப்பதனை இங்கே காணலாம்.



இரண்டாம் வாசகம்
திருவெளிப்பாடு 5,11-14

11தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: 12'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். 13பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், 'அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன' என்று பாடக் கேட்டேன். 14அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென்' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

வானுலக காட்சி என்ற பகுதியிலிருந்து, இன்றைய இரண்டாம் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யோவான் ஆட்டுக்குட்டியின் மாட்சியை விவரிக்கின்றார்.

வ.11: நான் பார்த்துக்கொண்டிடுருக்கும் போது என்று யோவான் தொடங்குவது, வெளிப்பாட்டு இலக்கியங்களின் முக்கியமான பண்பாகும். இந்த முறை அவர் பலவற்றைக் காண்கிறார். அவை, அரியணை, மூப்பர்கள், கோடிக்கணக்கான வானதூதர்களின் குரல் என்பனவாகும். 4,10 இந்த மூப்பர்களை இருபத்தினாங்கு என்று வரையறுக்கிறது. இந்த இலக்கம் பன்னிரண்டின் நிறைவான இன்னொரு இலக்கமாகும். அத்தோடு இது பன்னிரு குலங்களையோ அல்லது பன்னிரு திருத்தூதர்களையோ அல்லது நிறைவான திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். இந்த நான்கு உயிர்கள், முழு உலகத்தையும் குறிக்கிறது. அல்லது முழு உலகத்திற்கு பொறுப்பான கடவுளின் அதிகாரத்தை குறிக்கிறது. கோடிக்கணக்கான வானதூதர்கள் உண்மையில் ஆயிரம் ஆயிரம் வானதூதர்களின் கூட்டம் என்றே மூல மொழியில் அமைந்துள்ளது.

வ.12: வானதூதர்கள் இங்கே மூப்பர்கள், உயிர்கள் முன்நிலையில் ஆட்டுக்குட்டிக்கு சாட்சியமும் தீர்ப்பும் சொல்கிறார்கள். இந்த ஆர்ப்பரிப்பு எசாயா நூலில் செராபீன்கள் கடவுளுக்கு புகழ்பாடி சாட்சியம் சொன்னதை நினைவூட்டுகிறது.

வ.13: இந்த வசனத்தின் மூலம் இப்பொழுது முழு பிரபஞ்சமுமே ஆட்டுக்குட்டியை புகழத்தொடங்குகின்றன. விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் என்பவை இந்த நான்கு உயிர்களுடன் தொடர்புடைய, வாழும் உலக உயிர்களைக் குறிக்கின்றன. ஆக முழு உலகமும் இங்கே அரியணையிலிருக்கும் கடவுளையும் அவருடைய ஆட்டுக்குட்டியான இயேசுவையும் புகழ்கின்றன.

வ.14: உயிர்களின் அறிக்கையை கேட்டவுடன் நான்கு உயிர்கள் ஆமென் என்று பதிலளிக்கின்றன. இது இஸ்ராயேல் மக்களின் செபத்தைக் குறிக்கிறது. ஆமென் என்பது ஏற்றுக்கொள்ளுதலைக் குறிப்பவை. மூப்பர்கள் விழுந்து வணங்குதலும் இன்னொரு ஏற்றுக்கொள்ளுவதற்கான அடையாளம். இந்த வரிகளின் அடையாளங்கள் மூலமாக யோவான், இயேசுவை அனைத்து உலகங்களும், கடவுளின் வானதூதர்களும் முறையாக ஏற்றுக்கொண்டனர் என்று விவரிக்கின்றார்.


நற்செய்தி வாசகம்
யோவான் 21,1-19

1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: 2சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், 3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். 6அவர், 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். 8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. 10இயேசு அவர்களிடம், 'நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்' என்றார். 11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களிடம், 'உணவருந்த வாருங்கள்' என்றார். சீடர்களுள் எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். 14இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.இயேசுவும் பேதுருவும். 15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார். 16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளை மேய்' என்றார். 17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளைப் பேணிவளர். 18'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்' என்றார். 19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், 'என்னைப் பின் தொடர்' என்றார்

இந்த பகுதியில் பேதுருவிக்கு ஆண்டவர் பொறுப்பாளர் பட்டம் கொடுக்கும் நிகழ்வை யோவான் அழகான கிரேக்க வார்த்தைகளில் காட்சிப்படுத்துகிறார். யார் இந்த பேதுரு என்ற சற்று பார்ப்போம்.

அ. சிமோன் பார்யோனா என்பது அரமேயத்தில் யோனாவின் மகன் சிமோன் என்று பொருள்படும் (Σίμων Βαριωνᾶ). சீமோன் பேதுரு தனது சகோதரர் போல ஒரு கலிலேய மீனவராவர். நற்செய்தியாளர்கள் பல விதமான அழைப்புக் கதைகளை பேதுருவுக்கு கொடுக்கின்றனர். மாற்கு-லூக்காவின் காட்சிப்படி இவர் மீன்பிடித்தபோது இயேசுவால் அழைக்கப்படுகிறார் (மாற்கு 1,16-17: லூக்கா 5,1-11). யோவான் இவரை அவர் சகோதரர் அந்திரேயா இயேசுவிடம் அழைத்துவந்தாக காட்டுவார் (யோவான் 1,35-42). ஆக பேதுரு அழைக்கப்பட்ட முக்கியமான திருத்தூதர் என்பது புலப்படுகிறது. அனைத்து நற்செய்தியாளர்களும் பல விதமாக பேதுருவின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றனர். மத்தேயுவின் நற்செய்தியில் பேதுரு முக்கியமான பாத்திரம். முக்கியமான மூன்று பேர்களிலும் சரி, பன்னிருவரிலும் சரி மிக முக்கியமானவராக பேதுரு இருப்பார், பேசுவார். பிறகால முதல் திருச்சபையும் பேதுருவிற்கு முக்கியமான இடத்தை கொடுத்திருந்தது, பவுலடிகளார் கூட பேதுருவுடன் கருத்தில் முரன் பட்டாலும், அவரது முக்கியத்துவத்தை கேள்வியாக்கமாட்டார் என்பதை நோக்க வேண்டும் (1கொரி 15,5).

ஆ. ஆளுமையைப் பொறுத்த மட்டில் ஒரு சாதாரண மீனவராக இருந்தார், அதீத ஈடுபாட்டாலும், இயேசுவின் மீது கொண்ட ஆழமான அன்பினாலும் சில வேளைகள் இடம் பொருள் ஏவல் மறந்து செயல் பட்டு இயேசுவிடம் அன்பு-குட்டு வாங்குவார். நற்செய்தியாளர்களும் சரி பவுலும் சரி பேதுருவை சுயநலவாதியாகவே அல்லது தீய என்னங்கள் உடையவராகவோ காட்ட மாட்டார்கள். பலவீனனான பேதுரு இயேசுவின் அசைக்க முடியாத கட்டளைத் தளபதி என்பதை புதிய ஏற்பாடு விதவிதமாக விவரிக்கிறது. ஆண்டவரை மறுதலித்த காட்சி உண்மையில் பேதுருவிற்கு எதிரான காட்சியல்ல மாறாக அது பேதுருவிற்கு முக்கியமான படிப்பினையும், சாட்சியமும் தந்த காட்சி. பேதுருவின் மறுதலிப்பைவிட அவரது அழுகையையும், விசுவாச பிரமாணங்களையும் நாம் உற்று நோக்க வேண்டும்.

இ. பேதுரு பல கடிதங்களை எழுதியதாக பாரம்பரியம் நம்புகிறது, அவற்றுள் இரண்டு புதிய ஏற்பாட்டில் தரப்படுத்தப்பட்டுள்ளது. பேதுரு உரோமைக்கு மறை பயணம் செய்ததாகவும், உரோமையில் ஏற்பட்ட பெரிய தீச் சம்பவத்தின் பின் (கி.பி 64) சிலுவையில் தழைகீழாக அறையப்பட்டு மறைசாட்சியானதாகவும் பாரம்பரியம் ஏற்றுக்கொள்கிறது. திருமுகங்களைவிட, பேதுருவின் பணிகள், பேதுருவின் வெளிப்பாடு, பேதுருவின் நற்செய்தி, பேதுருவின் போதனைகள், பேதுரு-பவுலின் பாடுகள், பேதுரு மற்றும் பன்னிருவரின் பணிகள், பேதுரு யாக்கோபுக்கு எழுதிய கடிதம், மற்றும் பேதுரு பிலிப்புக்கு எழுதிய கடிதம் என்பவை விவிலியத்திற்கு வெளியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறைந்திருக்கின்றன. இவற்றை பேதுரு எழுதாவிட்டாலும், அவை பேதுருவிற்கு அர்பணிக்கப்பட்டிருப்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் கேள்வியின்றி புலனாகின்றது.

அதிகமான அறிஞர்கள் இந்த பகுதியை பிற்சேர்ப்பு என்றே அழைக்கின்றனர். இவர்கள், இந்தப் பகுதி யோவான் நற்செய்திக்கு முடிவுரை போலவும், திருச்சபையை மையப்படுத்தியதாகவும் இருக்கிறது என்று காரணம் காட்டினாலும் சில முக்கியமான தற்கால, யோவான்-நற்செய்தி அறிஞர்கள் இப்பகுதி யோவான் நற்செய்தியின் பிரிக்க முடியாத பகுதியே என்றும் வாதாடுகின்றனர். இந்த நற்செய்தி இரண்டு முக்கியமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது. வவ.1-14: இயேசுவின் காட்சி, வவ.15-24: பேதுருவுடனான இயேசுவின் உரையாடல்.

வவ. 1-3: கானாவூர் திருமண வீட்டுக் காட்சி போலுள்ளது. நேரம், இடம், காலம் சொல்லப்பட்டுள்ளது. திபேரியாக்கடல் என்று காட்டி உயிர்த்த ஆண்டவர் எருசலேமைவிட்டு வெளியில் தோன்றுவது காட்டப்படுகிறது. இயேசு தோன்றினார் என்று, கடவுளின் காட்சிக்கு பயன்படுத்தும் வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது (φανερόω தோன்று). ஏழு சீடர்கள் இங்கே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நத்தானியேல் முதல் தடவையாக பெரிய நிகழ்வொன்றைக் காண்கிறார். மூன்றாவது வசனம் சீடர்கள் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பியதை காட்டுவதாக அமைந்துள்ளது. சிலர், பேதுருவின் தலைமையில் புது மீன்பிடித்தலில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் இதனை பார்க்கின்றனர். ஆண்டவர் இல்லாமல் மீன்பாடு குறைவாக இருக்கிறது (மீன்பாடு சவுத்).

வவ. 4-6: நற்செய்தியாளருக்கு (ஆசிரியர்) கரையில் நிற்பவர் இயேசு என்ற தெரிகிறது, சீடர்களுக்கல்ல. பகல் நம்பிக்கையை குறிக்கிறது. பிள்ளைகளே என்று நெருக்கமான வார்த்தையாலும், கேள்வி கேட்பதன் மூலம் தான் அவர்களின் சிக்கல்களை புரிந்துள்ளார் என்று காட்டுகிறார் (παιδίον பைதியொன்- பிள்ளாய்). வலப் பக்கம் அதிகமான மீன்கள் இயேசுவின் அதிகாரத்தையும் ஆசீர்களையும் குறிக்கின்றன.

வவ. 7-14: அதிகமான மீன் பாடு இயேசுவை அன்புச் சீடருக்கு அடையாளம் காட்டுகிறது. கல்லறையில் நடந்ததைப் போல, இங்கே மீண்டுமாக அன்புச் சீடர்தான் இயேசுவை அடையாளம் காண்கிறார். பேதுரு அதே உற்சாகத்தை இங்கேயும் எண்பிக்கிறார். ஆர்வத்தோடும் கூட ஆடையணிவதில் முக்கியம் காட்டி ஆண்டவருக்கு மரியாதை செய்ய முயற்சிக்கிறார். ஆண்டவர் சீடர்களுக்கு அப்பமும் மீனும் கொடுப்பது அவர்தான் ஊற்றுக்களின் உறைவிடம் என காட்டுகிறது. பெரிய மீன்கள், 153 என்ற எண்ணிக்கை, வலைகள் கிழியவில்லை என்றுமாக சொல்லி வாசகர்களின் பார்வையை திருப்புகிறார் ஆசிரியர். சிலர் இந்த எண்ணிக்கையை உருவகமாக பார்க்கின்றனர். உதாரணமாக அகுஸ்தினார் இதனை நிறைவின் அடையாளமாக பார்கிறார், அலெக்சாந்திரிய சிறில் இதனை திருத்துவத்தின் அடையாளமாக அகுஸ்தினாருடன் சேர்ந்து பார்க்கிறார். சிலர் இதனை திருச்சபையின் நிறைவின் அடையாளமாக பார்க்கின்றனர். பேதுரு வலையை இழுத்தது பிடிப்பட்டவற்றை இயேசுவோடு இணைக்கிறது என்று பார்க்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள வினைச்சொல் இதனையே குறிக்கிறது (ἕλκω இழு). கேள்வி கேட்காமையும், ஆண்டவரோடு உணவருந்தியமையும், உயிர்த்த ஆண்டவர் சீடர்களுடன் நல்ல உறவை கொண்டிருந்ததைக் காட்டுகிறது. அத்தோடு சில பாடங்கள் இந்த நிகழ்வில் நற்கருணை ஏற்படுத்திய செபங்களையும் இணைத்து, இதனையும் நற்கருணைக் கொண்டாட்டமாக பாhக்கின்றன (வ.13). ஆண்டவர் மூன்றுமுறை தோன்றினார் என்பது பல முறை தோன்றினதை உறுதிப்படுத்துகிறது.

வவ.15-17: 15வது வசனத்தில் தமிழில் இவர்களைவிட என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது, கிரேக்கத்தில் பலர்பால் வகையில் உள்ளது (πλέον τούτων இவைகளைவிட) ஆதலால் கிரேக்கத்தில் இது பேதுருவின் பழைய சீடத்துவத்தையோ அல்லது அவரது தொழில் துறைகளையோ அல்லது மற்றைய சீடர்களின் மேல் அவருக்கிருந்த அன்பையோ குறிக்கலாம், இவையனைத்தையும் அவர் துறக்கவேண்டும். இங்கே ஆண்டவர் பேதுருவை தன்னுடைய ஆடுகளை மேய்குமாறு மூன்று தடவை கேட்கிறார், இது பேதுரு மூன்று தடவை ஆண்டவரை மறுதலித்ததை சரிபடுத்த என்று பலர் வாதிடுகின்றனர். இயேசு மூன்று தடவை பேதுருவை முழுப் பெயர் சொல்லி அழைத்தமை, அவரை நல்ல ஆயராக காட்டுகிறது. ஏற்கனவே நல்ல ஆயன் தன் ஆடுகளை பெயர்சொல்லி அழைப்பான் என்று யோவான் சொல்லி இருக்கிறார். அன்பைக் குறிக்க இரண்டு முக்கியமான சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன (ἀγαπάω அகாபாஓ- அன்புசெய், φιλέω ஃபிலெஓ- நட்புகொள்). அதேபோல ஆடுகளைக் குறிக்கவும் இரண்டு வேறு வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன (ἀρνίον அர்னியோன்- செம்மறி, πρόβατον புரொபாடொன்- மந்தை). இந்த அமைப்புகள், சாதாரண ஒத்த கருத்துச் சொற் பாவனை என்று சில அறிஞர்கள் பார்க்கின்றனர், சிலர் இதனையும் அடையாளமாக பார்க்கின்றனர். அதிகமானவர்கள் இந்த பகுதியை பேதுரு பொறுப்பெடுக்கும் காட்சியாக காண்கின்றனர். உண்மையில், இந்த பகுதியின் முக்கியத்துவம் பேதுருவுக்கும் இயேசுவிற்குமான உறவாகும். இங்கே ஆண்டவர் தன் ஆடுகளை பேதுருவின் அதிகாரத்திலோ அல்லது தனி கவனிப்பிலோ விடவில்லை, மாறாக இயேசுவை அன்புசெய்வதென்றால், தன் ஆடுகளை பேணிகாப்பதே ஆகும் என்று விளங்கப்படுத்துகிறார். இயேசு மட்டுமே, என்றும் ஆண்டவர். வவ.18-19: இவ்வரிகள் பேதுருவின் சாட்சிய மரணத்தை பற்றியது என்று திருச்சபை பாரம்பரியமாக நம்புகிறது. கைகளை விரித்துக்கொடுத்தல் சிலுவை மரணத்தை குறிக்கலாம் (ஒப்பிடுக: வி.ப 17,12: எசா 65,2). இடையைக் கட்டுதல் ஒருவருடைய தனிச் சுதந்திரத்தை குறிக்கிறது. இயேசுவைப் போல் பேதுருவும் தம் மரணத்தால் கடவுளை மாட்சிபடுத்தினார் என்கிறார் ஆசிரியர். இறுதியான வசனம் அனைத்து சீடர்களுக்கும் உரியது. பேதுருவின் அதிகாரம் அவரது தலைமைத்துவத்தில் இருந்து வரவில்லை மாறாக அவர் இயேசுவோடு கொண்ட உறவிலும், நட்பிலும் அவரது சாட்சியத்திலிருந்தும் வருகிறது என்பது யோவானின் ஆழமான போதனை.

ஆண்டவர் இயேசு மட்டும்தான் ஆண்டவர், ஆடுகளுக்கிடையில் வெள்ளாடோ, கறுப்பாடோ செம்மறியோ கிடையாது. ஆடுகள் என்பதும் உருவகம் மட்டுமே. அனைவரும் சீடர்கள். இயேசுவுடன் உள்ள உறவே பணியை தெரிவு செய்கிறது. இந்த பணி இயேசுவை பற்றிக்கொள்ள கேட்கிறது, அதிகாரத்தையல்ல. பேதுருவின் அதிகாரம் என்ற மாயையை பார்க்காமல் அவர் இயேசுமேல் கொண்ட நம்பிக்கையையும், அவர் காட்டிய அன்பையும் பார்த்து வாழ்வோம்.

ஆண்டவரே, அனைத்தையும் விட உம்மை அன்பு செய்வது கடினமாக இருக்கிறது, அதனைச் செய்ய நம்பிக்கையையும் வல்லமையையும் தாரும். ஆமென்.