இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, India



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)






உயிர்ப்பு ஞாயிறு

‘ உயிர்ப்பில் உயிர்த்த சமூகமாக ’

திப 10‘34அ,37-43
கொலோ 3‘1-4
யோவா 20‘1-9

உயிர்ப்பே திருச்சபையின் உயிர்மூலம்

இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வழியில்லை: கிறிஸ்தவத்திற்கு வேலையில்லை. அவருடைய உயிர்ப்பில்தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது: திருச்சபைப் பிறந்திருக்கிறது: கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்தூர் இயேசுவாக அறியப்பட்டவர், இன்று கிறிஸ்துவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். கல்லறை கருவறையாகியது: அவரது சாவு நம் மறுவாழ்வின் தொடக்கமானது. அவருடைய மீட்பு நம்மை இறைவனுக்கு நெருக்கமாக்கியது. ஆகையால் தான் ஆலயமணியின் ஓசை ஆர்ப்பரிக்கிறது: விசுவாசிகளின் நாவில் ‘ அல்லேலூயா’ என்ற ஆரவாரகீதம் எழுகிறது. அவருடைய உயிர்ப்பிலேதான் உயிருக்கு பயந்து உயிரோடு மூடப்பட்ட திருத்தூதர்களின் அறைக்கதவுகள் (உயிர்க்கல்லறை) திறக்கப்படுகின்றன. அவருடைய உயிர்ப்பிலேதான் எதிரிகள் வீழ்கின்றனர். உயிர்ப்பில் உயிர்த்த சமூகம் மலர்கிறது.

அவருடைய உயிர்ப்பிலே திருச்சபையின் எழுச்சி அடங்கியுள்ளது. ‘அவரைப் கொன்றுவிட்டோம்’ என்று ‘எல்லாம் நிறைவேற்றப்பட்டது’ என்று இறுமாந்திருந்தவர்கள் வாழ்வில் செயலில் தேக்கம் ஏற்பட அவருடைய உயிர்ப்பு வழிவகுத்தது. ஒருவேளை ஆண்டவர் உயிர்த்தெழவில்லையென்றால் ... நற்செய்தி, இறையாட்சி, திருச்சபை, தூய ஆவியின் வருகை.. எல்லாம் இல்லாமல் போயிருக்கும். ஆகையால் திருச்சபை உயிர்ப்பு பெருவிழாவை மிகுந்த சிரத்தையுடன் கொண்டாடுகிறது. ‘அல்லேலூயா’ அனைவரின் புகழ்ச்சிக்கீதமாகிறது. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லையென்றால் நாங்கள் பறைசாற்றும் நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி15‘14,17). ஆகையால்தான் உயிர்ப்பிலே ஒரு புதுவாழ்வு அனைவருக்கும் பிறக்கிறது. அவர் சிலுவையில் கிடைத்த வெற்றியால் (கொலோ2‘15) நமக்கு மீட்பை ஈந்தார். நாம் இறைவனுக்கு ஏற்புடையராகுமாறு உயிர்த்தெழுந்தார் (உரோ4‘25) இப்படி அவருடைய உயிர்ப்பிலேதான் நமக்கு நிறைவு ஏற்படுகிறது. ஆகையால்தான் திருச்சபையின் திருவழிபாடு அனைத்தும் ‘ஈஸ்டரை’ மையப்படுத்தி ஆண்டவருடைய உயிர்ப்பு நாளான ‘ஞாயிறை’ மையப்படுத்தி அமைந்திருக்கிறது. வழிபாட்டுக்காலம் கூட, ‘ஈஸ்டரை’ மையப்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது

தம் மரணத்தைப்போல உயிர்ப்பை முன்னறிவித்த யூதாவின் சிங்கம்!

ஆண்டவர் எப்படி தன் மரணத்தை முன்னறிவித்தாரோ அப்படியே தன் உயிர்ப்பையும் பல முறை முன்னறிவித்தார். ‘இக்கோவிலை இடித்துவிடுங்கள்: நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்’ என்று (யோவான2‘18-23) என்று முன்னறிவித்தார். தலைமைக்குருக்களும், பரிசேயர்களும், பிலாத்துவிடம் இதனை மனதில் இருத்தி கல்லறைக்கு காவல் கேட்கிறார்கள் மத்27‘62-66). தன் உருமாற்றத்தின் போது மலையிலிருந்து இறங்கி வரும்போது ‘ மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்க கூடாது என்று கட்டளையிடுவதன்மூலம் தன் உயிர்ப்பை எடுத்துரைக்கிறார். மறைநூல் அறிஞர்கள் அருங்குறி கேட்கின்ற போது யோனாவைக் குறிப்பிட்டு அவர் மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். என்று சொல்லி தன் உயிர்ப்பை அடையாளப்படுத்துகிறார். மேலும் எப்பொழுதெல்லாம் தன் பாடுகளையும், மரணத்தையும் பற்றி பேசினாரோ, அப்போதெல்லாம் தன் உயிர்ப்பையும் முத்தாய்ப்பாக குறிப்பிடுகிறார்(மாற்கு 8‘31, 9‘31, 10‘34). தன் இறுதி பாஸ்கா உணவின் போது கூட ‘நான் உயிருடன் எழுப்பப்பட்ட பிறகு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்கு போவேன்’ என்று இறுதியாக நினைவூட்டுகிறார். தலைமைக்குருவுக்கும், நல்ல கள்ளனுக்கும் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார்(மத்26‘64, லூக்23‘43). ஆகையால் மரணம் எப்படி ஆணித்தரமான வரலற்று உண்மையோ அப்படியே உயிர்ப்பும் என்பதை ஒவ்வொருவரும் ஆழ்ந்து விசுவசிக்க வேண்டும். திருச்சபையின் தூண்களான புனித பேதுருவும் புனித பவுலடியாரும் ‘கெரிக்மா’ என்று சொல்லப்படுகின்ற விசுவாச பேருண்மையை (கிறிஸ்து இறந்தார் உயிர்த்தார் மீண்டும் வருவார்) என்பதை முறையே 7தடவையும், 9 தடவையும் எடுத்துரைக்கின்றனர். திருச்சபையின் உயிர்மூலம் இந்த உயிர்ப்புதானே!

உயிர்ப்பு அனுபவம் நமதாக வேண்டும்

கிறிஸ்தவத்தை அழித்தொழிக்க வாளொடு புறப்பட்ட சவுல் ஆண்டவருடைய உயிர்ப்பு அனுபவத்தின் வழியாகத்தான் திருச்சபையைக் கட்டியெழுப்பும் மகத்தான பணியை செய்தார். அவரே இதனை பல இடங்களில் ஒப்புக்கொள்கிறார்(1கொரி 15‘3-8. திப9‘3-9, 22‘6-11, 26‘12-18) ஆண்டவருடைய உயிர்ப்பு அனுபவமே மிக தைரியமாக பேதுருவை சாலமோன் மண்டபத்திலும் யூத தலைமைச்சங்கத்திலும் சாட்சியம் பகர வைத்தது (திப3‘15). ஆகையால்தான் புனித பவுலடியாரே ‘நானே மறற திருத்தூதரோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்’ என்று அனுபவரிதியாக குறிப்பிடுகிறார்.

இயேசு உயிர்த்தார் என்பதற்கு வெறுமையான கல்லறையும், அவருடைய திருக்காட்சி வெளிப்படுத்துதலும், வீரியமிக்க சீடத்துவமும் சாட்சியாகும். ஆகையால் ஆண்டவாரில் உயிர்ப்போம். உயிர்ப்பில் உயிர்த்த சமூகமாய் வாழ்வோம். புனித லியோ சொல்வதைப்போல இதுதான் திருவிழாவுக்களுக்கெல்லாம் திருவிழாவாகும் (the Feast of feasts). ஆகையால் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும்போதெல்லாம் நாம் உயிர்த்தெழுந்த சமூகமாக ஒளிர்ந்திட வேண்டும். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில் அவர் உயிர்த்தெழுந்ததுபோலவே, நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். அவரோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம். (உரோ6‘5,8). அவரோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுகைச் சார்ந்தவற்றை நாடுவோம் (கொலோ 3‘1).

இருளிலிருந்து ஒளிக்கு.....மகதலா மரியா

இயேசு சாவிலிருந்து வாழ்வுக்கு கடந்த இந்த பாஸ்கா பெருவிழாவில் நாமும் மரிய மதலேனாளைப்போல இருளிலிருந்து ஒளிக்கு கடந்து செல்வோம். யூதர்கள் இறந்தவர்களுடைய உடல் கல்லறையில் வைக்கப்பட்டபின் மூன்று நாட்களுக்கு கல்லறையைச் சந்திப்பர். ஏனெனில் அவருடைய ஆவி (ஆன்மா) உடல் அழுக ஆரம்பிக்கிற வரை அதாவது மூன்று நாட்களுக்குச் சுற்றிக்கொண்டேயிருக்கும்: அதன்பிறகே கல்லறையை விட்டு வெளியேறும் என்று நம்பினர். சனிக்கிழமை ஓய்வுநாள். ஆகையால் நடப்பது உட்பட எந்த வேலையும் செய்யக்கூடாது என்பதால் ஞாயிறு காலை விடியற்காலை வேளையில் மகதலா மரியா கல்லறைக்கு பரிமளத்தைலத்துடன் பயணிக்கிறாள். இதுதான் அவருடைய மேலான அன்பு. இறைவன் அவரை மிகுதியாக அன்புச் செய்தார். இங்கே அவருடைய திரிசங்கு நிலை குறிப்பிடத்தக்கது.

கல்லறைக்கு முத்திரையிடப்பட்டது: அதோடுகூடவே, வலிமையான காவலும் போடப்பட்டது: மூன்றாம் நாள் மிகுதியாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இங்கே கவனிக்கத்தக்கது எதிரிகள் ஆண்டவருடைய உயிர்ப்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால் ‘நண்பர்கள்’ என்று ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள் உயிர்ப்பை எதிர்பாராமல் முடங்கி கிடக்கின்றனர். விசுவாசிகள் இங்கே சந்தேகப்பர் வழிகளாகின்றனர். சந்தேகப்பேர்வழிகள் விசுவாசிகளாகின்றனர். ஆண்டவர் பாடுகளைப்பற்றி பேசிய நேரங்களிலெல்லாம் இவர்கள் மரணத்தைப் பற்றித்தான் நினைத்தார்களே தவிர உயிர்ப்பை ஒருபோதும் நினைக்கவில்லை. ஆண்டருடைய கல்லறையில் வாயிற்கல் அடைக்கபட்டபொழுதே இவர்களுடைய நம்பிக்கையெல்லாம் புதைபட்டுபோயின.

மகதலா மரியாவின் தடுமாற்றம்!

பரிமளத்தைலத்துடன் மகதலா மரியா செல்வதே அவர் ‘ இயேசு உயிர்க்கமாட்டார்’ என்ற எண்ணத்துடன் , அவருடைய உடலுக்கு உரிய மரியாதை செலுத்ததான். மகதலா மரியாவின் இச்செயல் அவநம்பிக்கையான செயலானாலும்கூட நம்பிக்கையில்லா அன்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆகையால்தான் அடுத்த கவலை அந்த கல்லறை வாயிற்கல்லை யார் புரட்டுவது? எப்படி புரட்டுவது? என்ற சிந்தனை மரியாவை அலைகழிக்கிறது (மாற் 16‘3). இப்படி உயிர்ப்பு என்பது எதிர்பாரத ஒன்றாக இயேசுவால் இயலாத ஒன்றாக இவர்களால் கருதப்படுகிறது. ஆனால் கல்லறையில் வாயிற்கல் புரட்டப்பட்டிருக்கிறது. கல்லறை புரட்டப்பட்டிருக்கிறது என்று நிலையிலும்கூட ‘உயிர்த்திருப்பார்’ என்று ஐயப்படவில்லை. ஆகையால் தான் கல்லறைத் திருடர்கள் ஆண்டவருடைய உடலை திருடியிருப்பனரோ? (அதுவும் கடுமையான காவலை மீறி) என்ற ஐயம் மேலிடுகிறது. திருத்தூதர் பேதுருவும் யோவான் நற்செய்தியின் குறிப்பிடப்படும் மற்ற சீடரான யோவானும் கல்லறைக்கு விரைகின்றனர். மகதலா மரிய இன்றைய நற்செய்தியின் அடிப்படையில் உயிர்ப்பின் செய்தியைத் தாங்கி பயணிக்கவில்லை. ஆகையால் தான் யோவானைவிட பேதுருவைவிட அவள் பின்தங்கி விடுகிறாள். கல்லறையிலிருந்து தொலைவிலிருக்கிறார். பின்னா; ஆண்டவரின் திருக்காட்சிமூலம் விசுவாசம் பெற்றாள்.

மூவரின் உயிர்ப்பு அனுபவம்- விசுவாசப் பயணம்

பேதுருவுக்கும் கூட முதலில் சந்தேகம். கல்லறைக்கல் அகற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னபோதுகூட ‘அல்லேலூயா! ஆண்டவர் உயிர்த்துவிட்டார்’ என்று ஆர்ப்பரிக்கவில்லை. வெறுமையான கல்லறையைக் கண்ட பிறகுகூட ‘உயிர்த்துவிட்டார்’ என்று உரக்கச் சொல்லவில்லை. இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு மற்ற துண்டுகளோடு இல்லாமல் தனியாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டவுடன் உயிர்ப்பின்மீது நம்பிக்கை அரும்புகிறது: ஆனாலும் வெளியே சொல்லவில்லை. இன்னொரு சீடரான யோவான் கூட , கல்லறைக்கல் அகற்றப்பட்டிருக்கிறது என்றபோதும் நம்பாமல், முதலில் ஓடிவந்து கல்லறைக்குள் குனிந்து பார்த்து முதலில் வெறுமையான கல்லறையை கண்டபோதும்கூட நம்பாமல், சுருட்டிவைக்கப்பட்டிருந்த துண்டைக் கண்டதும் சிந்தித்தார். நம்பினார்.

இங்கே விசுவாசப்பயணம் கவனிக்கத்தக்கது. ஒருமுறையல்ல இரண்டுமுறை மகதலா மரியா கல்லறைக்கு வெளியிலேயே நின்று விடுகிறார். யோவான் ஒருவேளை மரியாதை நிமித்தமாக இருப்பினும்கூட முதலில் கல்லறையை அடைந்து குனிந்து பார்த்தாலும் கல்லறையின் வாயிலுக்கருகிலேயே நுழையாமல் நின்று விடுகிறார். பேதுருவோ, கல்லறைக்குள் நுழைந்து சுருட்டப்பட்ட துண்டைக்கண்டார் வியப்புற்றார்(லூக்24‘12). முதலாமர் (மகதலா மரியா) கல்லறைக்கு வெளியே, இரண்டாமவர்(யோவான்) கல்லறைவாயிலில், முன்றாவமா; (பேதுரு) கல்லறைக்குள்... கல்லறை அனுபவம் அவர்களை சாட்சிகளாக்குகிறது. ‘வந்துபாருங்கள்’ என்று (யோவா 1‘39) சீடத்துவத்தின் முதற்பகுதிக்கு அழைத்த ஆண்டவர், இன்றும் கூட சொல்லாமலே ‘வந்து பாருங்கள்’ என்று சீடத்துவத்தின் இறுதிப்பகுதிக்கு சாட்சிய வாழ்விற்கு அழைக்கிறார். யோவான் நுழைந்தார் கண்டார் நம்பினார்.

அன்புதான் உயிர்த்த ஆண்டவரை அடையாளம் கண்டுகொள்கிறது. யோவான் ஆண்டவரை மிகுதியாக அன்புச் செய்தார் ஆண்டவரும் யோவானை மிகுதியாக அன்புச் செய்தார். ஆகையால்தான் முதன் முதலில் உயிர்ப்பை துண்டைக் கண்டதன் வழியாக நம்புகிற பாக்கியம் இவருக்கு கிடைக்கிறது. பாவியான மகதலா மரியாவை ஆண்டவர் பல்வேறு தடைகளையும் அவமானங்களையும் தாங்கி அன்புச் செய்தார். அவரும் ஆண்டவரை மிகுதியாக அன்புச் செய்தார். ஆகையால்தான் விலையுயர்ந்த நறுமணத்தைலத்தால் அவரது பாதங்களைக் கழுவி, தன் கூந்தலால் துடைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்(லூக்7‘36-39) இவர் யோவானுக்கு அடுத்தபடியாக, ஆண்டவரின் உயிர்ப்பை நம்புகிறார் உயிர்ப்பின் தூதுவரனார் (20‘18). ஆண்டவரை மூன்று முறை மறுதலித்த பேதுரு அந்த அளவுக்கு ஆண்டவரை அன்புச் செய்யவில்லை: ஆனால் ஆண்டவர் அவரை அன்புச் செய்தார். எனவேதான், நீ என்னை அன்புச் செலுத்துகிறாயா? என்று மூன்றுமுறை(யோவான் 21‘15,16,17) கேட்டு உயிர்ப்புக்குச் சான்று பகர்கிறார் (முதல்வாசகம்). ஆகையால் ஆண்டவரை அன்புச் செய்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவத்தைப் பெறுவது உறுதி: புனித பவுலடியார்கூட ‘நீ துன்புறுத்தும் இயேசு நானே’ என்று சொன்னவரை அன்பு செய்யத்தொடங்கினார் பார்வைப் பெற்றார் உயிர்ப்புக்குச் சாட்சியமானார் சிறந்த அப்போஸ்தலரானார். நீ இயேசுவை அன்புச் செய்கிறாயா? உயிர்ப்பை அனுபவிப்பாய்: விசுவசிப்பாய்!

உலகிலே மிகச் சிறந்த புதுமை என்னவெனில், உலகம் அப்போஸ்தலர்களுடைய சாட்சியத்தை ஏற்றுக்கொண்டது. இதுதான் திருச்சபைக்கான அஸ்திவாரம்: வளர்ச்சி: தொடர்ச்சி. எந்த ஒரு புதுமையுமின்றி அன்று இவ்வுலகம் அப்போஸ்தலர்களை நம்பியதே ஒரு மாபெரும் புதுமையாகும். அன்புச் சமூகமே உயிர்த்த சமுகமாக உயிர்பெறு! அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.