இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு

வாழ்க்கை நம் கையில்

நிமொ 31:10-13,19,20,30,31
1தெச 5:1-6
மத் 25~14-30

ஒருவர் சந்தையில் பலூன்களை விற்றுப் பிழைப்பை நடத்திக்; கொண்டிருந்தார். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்ச் என பல வண்ணப் பலூன்கள் அவரிடம் இருந்தன. வியாபாரம் மந்தமாகும் நேரங்களில் எல்லாம் ஹீலியம் நிரப்பிய பலூன் ஒன்றைப் பறக்க விடுவார். அது மேலே எழும்பிச் செல்வதைப் பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் பலூன் வாங்க ஆசைப்படுவார்கள். அவர்கள் உடனே அவரிடம் ஓடிவந்து பலூன்களை வாங்குவார்கள். அதனால் அவரது விற்பனை மீண்டும் உயரும். நாள் முழுவதும் அவர் இது மாதிரியே செய்து வருவார். இவ்வாறு இருக்கும்போது ஒரு நாள் அவரது சட்டையை யாரோ பின்னால் இருந்து பிடித்து இழுப்பது போன்று உணர்ந்து திரும்பிப்பார்த்தார். அங்கே ஒரு சிறுவன் நின்றுக்கொண்டிருந்தான். அவன் ‘நீங்கள் கறுப்பு பலூனை விட்டால் கூட பறக்குமா?’ என்று கேட்டான். அக்கேள்வியில் உள்ள அர்த்தத்தை உணர்ந்து நெகிழ்ந்த அவர் ‘மகனே! இந்த பலூன் மேலெழும்பிச் செல்வதற்கு இந்தப் பலூனின் வண்ணம் காரணமில்லை: மாறாக அதற்கு உள்ளே என்ன உள்ளதோ அதுவே காரணமாகும்’ என்று பரிவுடன் பதில் சொன்னார். இது நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். நமக்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே முக்கியமானதாகும். நமக்குள்ளே இருந்து நாம் உயர்வதற்கு உறுதுணையாயிருப்பது நம்முடைய ‘மனப்பாங்கு’ (யுவவவைரனந). மனப்பான்மையை மாற்றினால் மலையைப் புரட்டிப்போட்டுவிட முடியும்: மணலைக் கயிறாக திரித்திட முடியம். வெற்றிப்பெறுகிற ஒவ்வொருவரும் வித்தியாசமான செயல்களைச் செய்வதால் வெற்றிப்பெறுவதில்லை: அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்: வெற்றிப்பெறுகிறார்கள். (ஷிவ் கெரா). தாலந்து என்னும் திறமை அது எல்லோருக்குள்ளும் புதைந்திருக்கிறது: திறமைகளில்லாத மனிதர்கள் இல்லை: தாலந்து (உற்பத்தி) இல்லாத படைப்பில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லவேண்டுமெனில் திறமையை நீங்கள்தான் தீர்மானிக்கிறிர்கள். ஆம்! திறமையைத் தீர்மானிப்பது நீங்கள்தான்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த வில்லியம் ஜேம்ஸ் என்ற பேராசிரியர் சொல்கிறார் ‘ மனிதன் தன் மனநிலைகளை மாற்றி கொள்வதன் மூலமாகத் தான் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்’என்கிறார்.

ராவியதுல் பஸரியா என்று ஈராக் நாட்டில் ஒரு பெண் ஞானி இருந்தார். அவர் ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் காலத்திலேயே வாழ்ந்த இன்னொரு ஞானி ஒருவர் தொழுதுவிட்டு கைகளை ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்தார். ‘இறைவா! எனக்கு வெற்றியின் கதவுகளைத் திறந்துவிடுவாயாக! உன் கருணையின் கதவுகளைத் திறப்பாயாக’ என்று. அதைக் கேட்ட ராவியதுல் பஸரியா பிரார்த்திக்கொண்டிருந்த அந்த ஞானியின் தலையில் ஓங்கிக் குட்டினார். வலியோடும் கோபத்தோடும் யார் அப்படிச் செய்தது என்று பார்க்க திரும்பிய அவரைப் பார்த்து சொன்னார் ‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி முட்டாள்தனமாகப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பாய்? வெற்றியின் கதவுகளும் கருணையின் கதவுகளும் என்றைக்கு மூடியிருந்தன? அவை எப்போதும் திறந்தேதான் உள்ளன? ஆம்! அவர் சொன்னது சரிதான். அவை என்றைக்குமே மூடியிருந்தததில்லை. அவை நம்மை வந்து சேர்ந்துவிடாமல் நாம் தான் நமது தவறுகளாலும் முட்டாள் தனங்களாலும் நம்முடைய கதவுகளை இழுத்து மூடிக்கொள்கிறோம்: நம்முடைய பானையைக் கவிழ்த்து வைத்திருந்தாலோ ஓட்டைப் பானையை வைத்திருந்தாலோ கொட்டுகிற மழை எப்படி அந்தப் பானையை நிறைக்கும்?. எல்லோரிடமும் திறமைகளோடு வெற்றிக்கான சூத்திரங்கள் இருக்கின்றன. அதனை முறைப்படி பயன்படுத்துபவர்கள் வரலாற்றில் நிலைத்துவிடுகிறார்கள். ஆம்! தன் கடமையைக் கண்டறிந்தோர் பேறுபெற்றோர்.

உலகை வென்றவர்கள்
உலகம் பெரிதும் போற்றுகிற சாதனையாளர்களெல்லாம் சாதாரணமானவர்கள்தான்: உழைப்பால்தான் உலகை வென்றார்கள். ஆங்கில இலக்கிய பெரிதும் கொண்டாடுகிற ஷேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரைச் சாணம் அள்ளிக்கொண்டிருந்தார்: அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் சட்டம் படிப்பதற்காக ஸ்டூவர்ட் என்பவரிடமிருந்து புத்தகங்களை கடனாக வாங்க நியூசேலம் என்ற இடத்திலிருந்து 32 கிலோமீட்டர் பல முறை நடந்து போக வேண்டியிருந்தது: இரண்டாம் உலகப் போரை ஏற்படுத்தி உலகை ஜெர்மனியின் மீது திரும்பிப் பார்க்க செய்த ஹிட்லர் வியன்னாவின் தெருக்களில் படங்கள் தீட்டி வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தான்.(அப்படியே பிழைத்திருந்தால் பரவாயில்லைதான்). புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்து நியூட்டன் சிறுவயதில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்: உலகப் பெரும் கோடீஸ்வரர்களான ஆன்ட்ரு கார்னிட்ஜ், ராக்பெல்லர், ஹென்றி போர்டு ஆகியோர் முறையே 4, 6, 21 டாலர்களை வாரச் சம்பளமாகப் பெற்றுக்கொண்டிருந்தனர். மளிகை கடையில் ஆரம்பத்தில் வேலைப் பார்த்தவர்தான் பெர்னார்ட் ஷா.

ஆங்கிலத்தில் தலைசிறந்த கவிஞராகக் கருதப்படுகின்ற ஜான் மில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட’ என்ற காவியத்தை, அதன் பனிரெண்டு காண்டங்களையும் ஸ்பெல்லிங் உட்பட தனது வாயால் சொல்லச் சொல்ல அவருடைய இரண்டு மகள்களும் எழுதினார்;களாம். ஏனென்றால் அவரால் எழுத முடியாது: காரணம் அவர் பார்வையற்றவராக இருந்தார். இப்படி சாதாரண மனிதர்களெல்லாம் அசாதரண காரியங்களைச் செய்து வரலாற்றை வென்றெடுத்தார்கள். வள்ளுவரின் இந்த ஏழு வார்த்தைகள் ஒருவரின் வாழ்வைத் தீர்மானிக்கிற சூத்திரமாகும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
தண்ணீரின் உயரம், தாமரையின் உயரம். வாழ்வின் எண்ணத்தின் உயரம், உங்களது உயரம். உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் உயர்வதை எவராலும் தடுக்க முடியாது. அதேபோன்ற தாழ்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் சரிந்து விழுவதை எவராலும் தடுக்க முடியாது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது தமிழறியின் நெறியன்றோ?!

நம்வாழ்க்கை நம் கையில்
வாழ்வா? சாவா? புகழா? இகழா? வெற்றியா? தோல்வியா? இவையெல்லாமே நம் கையில் இருக்கிறது. பட்டாம் பூச்சியை கையில் ஒளித்து வைத்துக்கொண்டு உயிரோடு இருக்கிறதா? இல்லையா? கேட்டவரிடம் ஜென் ஞானி ‘எல்லாம் உன்கையில் இருக்கிறது’ என்றதைப் போன்று ‘வாழ்க்கை நம் கையில்’ இருக்கிறது. உங்கள் வாழ்க்கையைத் தீர்;மானிக்கிறவர்கள் நீங்கள்தான். தாலந்து எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து, இரண்டு,ஒன்று என்று தாலந்து எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவரின் இந்த தாலந்து உவமையில் தாலந்து இல்லாத மனிதர் இடம்பெறாதது சிந்திக்கத்தக்கது. கண்டிப்பாக இரட்டிப்பாக்க வேண்டும் என்று விதியொன்றுமில்லை. ஜந்து தாலந்தைக் கொண்டு இன்னும் மூன்றை கூடுதலாக ஈட்டி, எட்டை பதினாறாக்கினால்கூட நீங்கள் பாராட்டுக்குரியவர்கள்தான். ஐந்தைப் பத்தாக்கி, பத்தை பதினைந்தாக்கினாலும்கூட பாராட்டுக்குரியவர்கள்தான். ஏன், ஐந்தை மூன்றாக்கி, மூன்றை ஆறாக்கினாலம் நீங்கள் பாராட்டுக்குரியவர்கள்தான். ஆனால் ஒரு முயற்சியையும் கிஞ்சித்தும் எடுக்காமல், வாளாயிருந்து, கொடுத்தவரையே குறைச் சொல்லி..வஞ்சித்து, வசைபாடி இருப்பதை இந்தா என்று வேண்டா வெறுப்பாக கொடுக்கிற போதுதான் அங்கே தண்டணை தரப்படுகிறது. அவன் மண்ணில் கொடுத்த ஒரு தாலந்தை மண்ணில் புதைக்காமல் அதனைக்கொண்டு சிறிது முயற்சித்து ஒருவேளை தோற்றுப்போயிருந்தால்கூட அவனை கொடுத்தவர் நிச்சயம் பாராட்டியிருப்பார். தான் செய்த தவறை மறைக்க, இன்னொருவரின் நேர்மையைக் குறைக்கூறி, அபாண்டமாக பழிசுமத்தி, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலுகிறவனை யாராக இருந்தாலும் இந்த உலகம் எள்ளி நகையாடும். பகவத் கீதை ஆறவாது அத்தியாயம் ஐந்தாவது வசனம் ‘தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க: தன்னை இழிவுறுத்தல் ஆகாது. ஏனென்றால் தானே தனக்குப் பகை. தனக்குத் தானே நண்பன்’ என்கிறது. ஆம்! உண்மையில் நாமே நமது எதிரி: நாமே நமது நண்பன். நமது வாழ்வை நாமே நிர்ணயிக்கிறோம். என் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற எஜமானன் நான்தான். விதியோ, தலையெழுத்தோ, ஜாதகமோ, கைரேகையோ, அதிர்ஷ்டக்கல்லோ.. எதுவும் என்னைத் தீர்மானிப்பதில்லை. ‘தானே தனக்குப் பகை! தானே எனக்கு நண்பன்’ – எவ்வளவு அற்புதமான வரிகள். இன்னும் நம் தமிழ்பாட்டன் ‘கணியன் பூங்குன்றன்’ வரிகளில் சொல்ல வேண்டுமெனில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’.

குறைகளே மூலதனம்
குறைகளை மூலதனமாக்கிட முயலுங்கள். தாலந்துகள்..ஜந்து, இரண்டு, ஒன்று. உண்மைதான் குறைகள் இல்லாத மனிதர்களுமில்லை: துன்பமில்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கையில் நமக்கு அமைந்த குறைகள் இரண்டு வகை. ஒன்று மாற்றக்கூடியது: இன்னொன்று மாற்ற முடியாதது. எது மாற்ற கூடியது.. எது மாற்றவே முடியாதது என்பதை அறியும் விவேகம் கடவுள் கருணையால் எல்லோருக்குமே இருக்கிறது. மாற்றவே முடியாத குறைகளை ஒருபோதும் குறைகளாக கருதாதீர்கள்: முடிந்தால் அவற்றை மூலதனமாக்கி முன்னேறிடுங்கள்.

நீங்கள் வெற்றியாளர்களாக... கவனத்தைத் திருப்புங்கள்: எல்லாவற்றிலும் நல்லதையோ பாருங்கள். இப்பொழுதே செய்துவிட வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். உண்மையானக் கல்வியைப் பெறுங்கள்.உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுயமதிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தீய பாதிப்புகளிலிருந்து விலகி இருங்கள். பொறாமைப்படாதீர்கள். நீங்கள் மிகச் சிறந்த வெற்றியாளராக வேண்டுமெனில் ஆசை (னுநளசைந), உறுதி (ஊழஅஅவைஅநவெ), பொறுப்பு (சுநளிழளெiடிடைவைல) கடின உழைப்பு (ர்யசனறழசம), நற்பண்புகள் (ஊhயசயஉவநச), நல்லவித நம்பிக்கை (Pழளவைiஎந வுhiமெiபெ), நீங்கள் பெறுவதைவிட அதிகமாகக் கொடுங்கள் , விடாமுயற்சியின் சக்தி (Pநசளளைவநnஉந) , செயற்பாட்டின் பெருமை (Pசழரன ழக லுழரச Pநசகழசஅயnஉந) ஒரு தாலந்தைப் பெற்றவன் எந்த முயற்சியைச் செய்யவில்லை: கொஞ்சம்கூட உழைக்கவில்லை: தன் குறையை மறைக்க அடுத்தவரையும் கொடுத்தவரையும் குற்றஞ்சாட்டுகிறான். கொடையென கொடுத்தவரையே ‘நீர் கடின உள்ளத்தினன்’ என்கிறான்: விதைத்தவரையே ‘விதைக்காதவன்’ என்று அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறான். வாங்கியபோது குறைகளைக் காணாதவன், திருப்பிக் கொடுக்கிறபோது இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வதை என்னவென்பது. அந்த ஒரு தாலந்திற்கு ஒரு மரக்கால் விதையை வாங்கி..புதைத்து வைத்திருந்தால்கூட அது விளைந்து பயனளித்திருக்கும். முட்டாளைப் போல நாணயத்தை அது பண மரமாகும் என்று நினைத்து மண்ணில் புதைத்திருக்கிறான்: இவன் சோம்பேறி மட்டுமில்லை: அறிவிலியும்கூட. நாமும் நம்மைச் சுய சுத்திகரிப்புச் செய்வோம்! வாழ்வின் நோக்கத்தைக்கண்டறிந்திடுவோம்! வெற்றி பெறுவோம்!

நம் தமிழ் மரபு, உலகில் உள்ளவற்றை இரண்டாக இலக்கண ரீதியாக பகுத்துப்பார்க்கிறது. அவை அஃறிணை- உயர்திணை ஆகியனவாம். ஆறறிவு படைத்த மனிதர்களை உயர்திணை என்று வகைப்படுத்துவர். உயர்திணை என்பது வினைத்தொகையாம். உயர்ந்த திணை, உயர்கின்ற திணை, உயரும்திணை என்று முக்காலத்திற்கும் பொருந்துமாறு அதற்குப் பொருள் கூறுவர். ஆம்! மனிதன் எப்போதும் தான் உயர்ந்தவன் என்று நிலைப்புத்தன்மையடைந்துவிடக்கூடாது. குளத்தைப் போன்ற தேங்கினால் வளர்ச்சி என்பது தடைபட்டுப்போகும். அவன் ஆற்றைப் போல ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். அப்போது தான் உயர்திணை என்பது நமக்குப் பொருந்திப் போகும்.