இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு

கர்மவீரர்களாக

மலா 1:14-2:2,8-10
1தெச 2~7-9,13
மத் 23~1-12

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் அது. வழக்கமாக நெடுந்தூரப் பயணம் என்றால் காரின் பின் இருக்கையில் அப்படியே சுருட்டிக்கொண்டு படுத்துவிடுவது வழக்கம். ஒருமுறை வெளியூர் சுற்றுப்பயணம் முடிந்து அவர் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஒரே இடத்தில் கார் நீண்ட நேரம் அப்படியே நிற்பதும் ஏராளமான கார்களின் ஹாரன்கள் ஒலிப்பதும் அவரை விழிப்படைய செய்தது. எழுந்து வெளியே பார்த்தார் காமராசர். சைதாப்பேட்டையில் தற்போது உள்ள மறைமலையடிகள் பாலம். பயங்கர டிராபிக் ஜாம் ஆகியிருந்தது. முன்னால் பார்த்தார் காமராசர். நடுப்பாலத்தில் ஒரு லாரி பிரேக்டவுன் ஆகியிருந்தது. ஒரே ஒரு டிராஃபிக் போலிசார் போக்குவரத்தை சரிப்படுத்த முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டிருந்தார்.

தான் ஒரு முதலமைச்சர் என்பதையெல்லாம் மறந்து விட்டு, உடனே காரை விட்டு இறங்கி, அந்தப் போலிஸ்காரரோடு உதவியாக இருந்து போக்குவரத்தைச் சரிப்படுத்திவிட்டே காரில் ஏறினார் காமராஜர். அது மட்டுமல்ல. பொறுப்போட சைதாப்பேட்டை போலிஸ் ஸ்டேசனுக்குச் சென்று ‘இது போன்ற இடங்களில் இன்னொருவரை கூடுதலாகப் போட்டால் என்னன்னேன்’ என்று கண்டித்து விட்டுச் சென்றார். ஏ.சி காரில் இருந்தபடியே போலிஸ் பந்தபஸ்தோடு இருளடைந்த கண்ணாடிக்குள் ஒளிந்து கொண்டு செல்லும் இன்றைய அரசியல்வாதிகளில் எவரேனும் இவரைப் போல் செய்திருப்பார்களா? அவர்தான் கர்மவீரர் காமராஜர். 1963 ஆம் ஆண்டு கடும் புயல் வீசியதால் கடல் கொந்தளித்தது. தனுஷ்கோடி தீவையே அழித்துவிட்டது. ஆண்களும் பெண்களும் பச்சைக் குழந்தைகளும் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். உயிரோடிருந்தவர்கள் ஒலமிட்டு என்னசெய்வதென்று தெரியாமல் அழுது புலம்பினார்கள்.

தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே சென்று என்ன செய்வதென்ற தெரியாமல்..பித்துப் பிடித்தவர்களைப் போல திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது காற்று வேகத்தில் காமராஜர் வந்து இறங்கினார். தலையிலே முண்டாசு கட்டி, வேட்டியை முழங்காலுக்குத் தூக்கி கட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் செயலில் இறங்கிவிட்டார். அதுவரை ஒதுங்கி நின்ற அதிகாரிகள் தலைவரைப் பின்தொடர்ந்து செயல்பட தொடங்கினார்கள். மிதக்கும் பிணங்கள்..நெற்றியிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு காமராஜரைப் பார்த்து கதறி அழும் மக்கள், கம்மிய குரலில் ஆறுதல் சொல்லும் காமராசர்! ‘இறந்தவர்கள் மீள முடியாது: இருப்பவர்களைக் காப்பாற்றுவோம்’ என்று தனக்கே உரிய பாணியில் முழங்கால் அளவு கடல் நீரில் நடந்து கொண்டே அவர் பேசியபடி காரியத்தில் இறங்கினார்: அரசு இயந்திரம் முடக்கிவிடப்பட்டது. மக்கள் சேவையில் மறப்பதற்கரிய தொண்டனாக சேவையாற்றினார். இவர்தான் ‘கர்மவீரர்’ காமராசர்.

கற்பனை செய்து அடுக்குமொழிப் பேசும் கவிஞர்களைவிட, கஷ்டப்பட்டு வாழ்ந்துக் காட்டும் கலைஞர்கள்தான் திருச்சபைக்குத் தேவைப்படுகின்றனனர். இன்றைய நற்செய்தியில் ‘அவர்கள் சொல்வதைச் செய்யுங்கள்: செய்வதைப் போல் செய்யாதீர்கள்’ என்று ஆண்டவர் இயேசு வலியுறுத்துகிறார். ஆம்! பரிசேயர்களின் வார்த்தைகளில் தவறில்லை: ஆனால் அவர்கள் வாழ்ந்து காட்டுவதில்தான் தவறு இருக்கிறது. சொல்வதில் நியாயமிருக்கிறது: ஆனால் செயல்பாட்டில்தான் குற்றமிருக்கிறது.

யார் இவர்கள்?
முதலில் நற்செய்தியில் இடம்பெறுகின்ற பரிசேயர், சதுசேயர், மற்றும் மறைநூல் அறிஞர்களின் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், ஏன் ஆண்டவர் அவர்களைச் சாடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். முதலாவதாக, பரிசேயர்கள். ‘பரிசேயர்’ என்பதற்கு பிரிந்து நிற்பவர்கள் என்று பொருள். மக்கபேயர் காலத்தில் அதாவது கி.மு 135 ஆம் ஆண்டளவில், ‘கசிதிம்’ என்ற சமயப் பற்றுக்குழு தோற்றுவிக்கப்பட்டது. அசுமோனிய பரம்பரையின் முறையற்ற வாழ்வு முறையையும் கிரேக்க கலாச்சாரத்தையும் எதிர்த்துச் செயல்பட்டதால், பெரும்பாலான யூதர்களால் ‘பரிசேயர்கள் - பிரிந்து நிற்பவர்கள்’ என்று பரிகசிக்கப்பட்டனர். பரிசேயர்கள் யூதர்களின் ஆட்சியாளர் இறைவன் மட்டுமே என கருதி, ஏனைய அரசியல் அதிகார அமைப்புகளை எதிர்த்தனர். யூதத் திருச்சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, மிகவும் நுணுக்கமாக அதனைக் கடைப்பிடித்தனர். பரிசேயர்கள் ஆன்;மாவின் அழிவின்மை, இறந்தப் பிறகு நடுத்தீர்வை, மரணத்திற்குப் பின் உயிர்ப்பு ஆகியவற்றை நம்பினர். இயேசுவின் காலத்தில் ஏறக்குறைய ஆறாயிரம்பேர் இருந்தனர். மற்றவர்களைவிட தாங்களே மேன்மையானவர்கள் என பெருமையடித்துக்கொண்டனர். ஏரோதின் ஆட்சியுரிமைக்கு ஓத்துழைப்பை இவர்கள் நல்கவில்லை. அதே சமயம், மக்கள் ஏரோதுக்கு கீழ்படிவதை அனுமதித்தனர். இது ஒரு முரண்hபாடான வாழ்க்கைக்கு இது ஓர் உதாரணம். பல அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் பயந்து போய் அரசியலிலிருந்து ஓதுங்கினர். ஆனாலும் மெசியாவின் விரைவில் வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர். யூத தலைமைச் சங்கத்தில் குரு மரபினருக்கு மாபெரும் சவாலாக விளங்கினர். பெரும்பாலான பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களாகவும் இருந்தனர்.

இரண்டாவதாக, சதுசேயர்கள். குருமரபைச் சார்ந்த சதோக் என்பவரின் பெயரிலிருந்துதான் சதுசேயர்கள் என்ற வார்த்தை வருகிறது. அவருடைய பரம்பரையைச் சார்ந்த யூத இனப்பிரிவுதான் ‘சதுசேயர்கள்’. பரிசேயர்களைப் போல ய+த மதத்திலிருந்து பிரிந்து வாழாமல், ய+த மதத்தின் ஒரு போக்கைச் சார்ந்த இவர்கள் குருமரபினர்: மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவர்களாவர். உயர்குடி மக்களான இவர்களுக்கு சமுகத்திலும், அரசியலிலும் செல்வாக்குண்டு. காலச்சூழ்நிலைக்கேற்ப தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ள, ‘கிரேக்க கலாச்சரத்தை’ தீவிரமாக கடைப்பிடித்து ஆதரித்தனர். கிரேக்கர்களின் விளையாட்டை ஆதரித்து ரசித்து மகிழ்ந்தனர். கிரேக்க இலக்கியத்தையும், மெய்யியலையும் கற்பதில் ஆர்வம் காட்டினர். கிரேக்க கட்டிடக் கலையை ஏற்றுக் கொண்டனர். மகா ஏரோது இவர்களை ஒடுக்கினாலும் அவரது மறைவுக்குப்பின் யூதயா, உரோமைப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொணரப்பட்டபோது, அவர்களை ஆதரித்து, நட்புப் பாராட்டி சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, உரோமை ஆளுநருக்கு உதவினர். அவர்களுடன் எவ்விதமான மோதலையும் தவிர்த்தனர். (யோவா19:15). எனவேதான், கி.பி 6 முதல் கி.பி70 வரை சதுசேயரினத்தைச் சேர்ந்தவர்களே உரோமையர்களால் தலைமைக்குருக்களாக நியமிக்கபட்டனர்.

மூன்றாவதாக, மறைநூல் அறிஞர்கள். நாடுகடத்தப்பட்டு மீண்டு வந்தப் பிறகு ய+தர்களிடையே திருச்சட்டத்தின் மீதான ஆர்வமும் அதனை விளக்குவதில் புலமைச்துவமு; வளர்ந்தது. சட்ட நுணுக்கங்களை அடுத்த திருச்சட்டத்தையும் படிக்குவும் அதனை ஆழ்ந்து விளக்கவும் தெரிந்த சிறந்தவர்களெல்லாம் ஒன்றிணைந்து, புதியச் சமூகக்குழுவாக செல்வாக்கு நிறைந்தச் சமூகமாக அணிதிரண்டனர். கிரேக்கமயமாக்கலை எதிர்நோக்கும் பண்பும், திருச்சட்ட அடிப்படையிலான வாழ்வு முறையும் சமூத்தில் இவர்களுக்கென தனிமதிப்பையும் செல்வாக்கையும் பெற்றுக்கொடுத்தன. தனக்கென சீடர்குழுக்களை ஏற்படுத்தி பாடசாலை நடத்தியமையால் ‘ரபி’ என்;று அழைக்கப்பட்டனர். சமுதாயத்தில் மேல்தட்டு குடிகளாக விளங்கினர். நீதி வழங்குவதிலும், அரசாங்கத்தின் செயல்பாடுகளில் செல்வாக்குமிக்கவர்களாகவும், குடிமைப்பணியில் அதிகாரமிக்கவர்களாகவும் விளங்கினர். ய+தத்தலைமைச் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்து தீர்ப்பின் போது சட்ட வல்லுநர்களாக விளங்கினர். மக்களால் ஜெபக்கூடத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். தங்கள் போதனைகளில் ஒருவன் கடினமான நெறிமுறைகளால் மட்டுமே விண்ணரசில் நுழைய முடியும் என்பதை வலியுறுத்தினர். உண்மையான சமயத்தலைவர்களாக தங்களையே அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள் குருமரபினர் மட்டுமின்றி, சமுதாயத்தில் யார் வேண்டுமானாலும், மறைநூல் அறிஞர்களாக முடியும் என்பதை நிருபித்தனர்.

பொதுவாக எல்லோருமே சட்டாம்பிள்ளைகளாக.. சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, மக்களை ஆட்டிப்படைத்தனர்: சட்டத்தை விளக்குகிறேன் பேர்வழி என்று துணை, இணை, பிணை என சட்டப் பிரிவுகளை அடுக்கிக் கொண்டே போயினர். ஒரு பிரிவினர் உரோமையைச் சார்ந்தும், இன்னொரு பிரிவினர் ஏரோதைச் சார்ந்தும், இன்னொரு பிரிவினர் தலைமைச் சங்கத்தைச் சார்ந்தும் மக்களைப் பாடாய்ப்படுத்தினர். எதற்கெடுத்தாலும் ‘சட்டம்’ ‘சட்டம்’ என்று பாடாய்படுத்தினர். ‘ நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?’ (மலா 2~10) என்பதை அவர்கள் உள்@ற உணரவில்லை. முதன்மையான இடம், சந்தைகளில் வணக்கம், ராபி என்ற பாராட்டு...என்று புலித்தோல் போர்த்திய பசுவாக நடமாடினார்கள்: சட்டங்களை தங்கள் குஞ்சங்களிலும், நெற்றிப்பட்டைகளிலும் கட்டிக்கொண்டு, அதனைத் தாங்கள் கடைபிடிக்காமல், மற்றவர்களை கடைபிடிக்க நச்சரித்தனர். இவர்களால் மக்கள் அனலில் பட்ட புழுவாக துடிதுடித்தனர். எனவேதான் ஆண்டவர் இயேசு இவர்கள் யார் என்பதை தோலுரித்துக் காட்டுகிறார். சொல்வார்கள்- செய்யமாட்டார்கள்: சுமத்துவார்கள்- சுமக்கமாட்டார்கள். இவர்கள் வாழ்வில் ‘செய்வினை’ என்பதே இல்லை: எல்லாமே செயப்பாட்டு வினையாகத்தான் இருந்தது.

மரங்களும் மனிதர்களும்
மரங்கள் மூன்று வகை அதேபோல் மனிதரிலும் மூன்று வகையுண்டு. சில மரங்கள் பூக்கும் ஆனால் காய்க்காது. உதாரணத்திற்கு பாதிரி மரம். இப்படித்தான் சில மனிதர்களும். பேசுவார்கள்: ஆனால் செய்யமாட்டார்கள். இரண்டாவதாக, சில மரங்கள் பூக்கும்: காய்க்கும். உதாரணத்திற்கு மாமரம். இப்படித்தான் சில மனிதர்களும். சொல்வார்கள்: அதே சமயம் சொன்னதை அப்படியே செய்வார்கள். மூன்றவதாக, சில மரங்கள் ஒருபோதும் பூக்காது: ஆனால் காய்க்கும். இப்படித்தான் சில மனிதர்கள். சொல்லமாட்டார்கள்: ஆனால் செய்து முடிப்பார்கள். இன்றைய திருச்சபைக்கும் சமுதாயத்திற்கும் மாமரங்கள் போன்ற மனிதர்களும், பலாமரங்கள் போன்ற மகான்களும் தேவைப்படுகிறார்கள். காந்தியடிகள் சொன்னதை செய்ததாலும், சொல்லமலே செய்ததாலும்தான் ‘மகாத்மாவாக’ உயர்ந்து நிற்கிறார். அளவுக்கு அதிகமாக இனிப்புகளை விரும்பித் தின்னும் தன் மகனைத் திருத்தும்படி வேண்டிக்கொண்ட தாயிடம், ஒருவாரம் கழித்து வரச் சொல்லி, முதலில் தான் திருந்தி பின்னர், அந்தச் சிறுவனைத் திருத்தியவர் காந்தியடிகள். எனவேதான் மனிதருள் மகாத்மாவாக இருக்கிறார். தென்னாட்டு காந்தி, கறுப்பு காந்தி காமராசரும்கூட ‘கர்மவீரர்’ செயல்வீரர் என்றே அழைக்கப்படுவது சிறப்பு. சொல்லும் வாழ்வும் வேறுபடுகிறபோது விட்டுச் செல்கிற சுவடுகள் எல்லாம் அழிந்து போகும். கல்லறை வாழ்க்கைதான் அந்த சொல்வழி வாழாத வாழ்க்கை.

கர்மவீரர்கள்!
புனித பவுலடியார் என்னைப் போல் ‘சொல்லுங்கள்’ என்று சொல்லாமல், என்னைப் போல் ‘நடங்கள்’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார். இதுதான் கர்மவீரர்களின் மகத்துவம். ‘நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்’ 1 கொரி. 11~1 பிலி 3~17). அவர் கிறிஸ்துவாகவே வாழ்ந்தார். சொல்லுக்கும் வாழ்வுக்கும் வேறுபாட்டை வளர்க்கவில்லை. விசுவாசமும் செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் என்று புனித யாக்கோபு வலியுறுத்துவதும் சிறப்புக்குரியதாகும். (யாக் 2~17-20).செயலற்ற விசுவாசம் செத்ததன்றோ?! கட்டளை என்பதே கடைபிடிப்பதற்குத்தான். கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதற்கு அன்று. எனவேதான் அண்ணாகூட ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்று ஆட்சிக்கான சூத்திரம் தந்தார். ஆகையால் நாமும் செயல்படுகின்றவர்களாக, கர்மவீரர்களாக வாழ முற்படுவோம் (இச23~23).