இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு

உறவோடு வாழும் உள்ளங்களே!

எசே 3:7-9
உரோ 13:8-10
மத் 18:15-20

வாழ்க்கை குறுகியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை! அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் டிரினிட்டி தேவாலயம் நிரம்பி வழிகிறது. ஃபாதர் பெலிக்ஸ் புருக்ஸ் அங்கே நிரம்பி வழிந்த கூட்டத்தினரின் முகங்களை ஒவ்வொன்றாக உற்றுப்பார்க்கிறார். எல்லோரையுமே அவருக்கு நன்குத் தெரியும். அவர்களின் புன்னகைக்குப் பின்பு வெறுப்பு, பகைமை, பழிவாங்கும் குணம், பொறாமை, புரிந்து கொள்ளாமலிருப்பது, விட்டுக்கொடுக்காத வீறாப்பு, விரோதமனப்பான்மை என அனைத்தும் ஒளிந்திருப்பதை அவர் பின்புலங்களோடு அறிவார். ஆகையால் இன்றைய நற்செய்தியைப்போன்றே அன்றும் நற்செய்தி வாசிக்கப்பட்டது. மறையுரையைத் தொடங்கினார். (இது உலகப் புகழ்பெற்ற மறையுரை)

ஓ! என் இனிய நண்பர்களே! வருடா வருடம் தங்கள் மன வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டு ஒரு நாள் அவற்றைத் தீர்க்கலாம் என்று உங்களில் சிலர் நினைக்கின்றனர்.

உங்கள் கர்வத்தை விட்டுக் கொடுத்து, சண்டைகளை மறக்கும் நாள் ‘இதுதான்’ என்று தீர்மானிக்காமல், உங்களில் சிலர் தேவையற்ற சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தெருவில் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு, தெரிந்தவர்களிடம்கூட பேசாமல் போவீர்கள். அவர்களில் யாராவது நாளை காலை இறந்துவிட்டால் உங்களுக்கு அவமானமும் குற்ற உணர்வும் ஏற்படும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் பட்டினி கிடக்க விட்டுவிடுகிறீர்கள். அவன் பட்டினியால் சாகக் கிடந்தாலும் நீங்கள் மனம் இறங்குவதில்லை.

பாராட்டு அல்லது பரிவோடு ஒரு வார்த்தை நீங்கள் கூற வேண்டும் என்று உங்கள் நண்பனின் இதயத்தை ஏங்க வைக்கிறீர்கள். ஒரு நாள் செய்யலாம் என்றிருக்கிறீர்கள். திடீரென்று காலம் குறுகியது என்று உங்களால் பார்க்க, அறிய முடியுமென்றால் உங்கள் தடை எப்படி உடையும்? இன்னொரு வாய்ப்பு இனி கிடைக்காத போது, இனி கிடைக்காத ஒன்றை இப்போதே செய்தால் எப்படி இருக்கும்?.

திருப்பலி முடிந்ததும் வெளியே வந்த கூட்டத்தினர், வருடக்கணக்கில் பேசிக்கொள்ளாதவர்கள் தீடீரென்று புன்னகைத்தார்கள். கைக்குலக்கி;க் கொண்டார்கள். அண்டை வீட்டுக்காரர்கள், வெறுத்து தவிர்த்து வந்தவர்கள் ஒன்றாக வீடு நோக்கி நடந்தார்கள். ஒட்டுமொத்தத்தில் எல்லோருமே மனதில் அமைதி நிறைந்து இல்;லம் திரும்பினார்கள். இது நடந்த நிகழ்வு. இத்திருப்பலிக்குப் பிறகு நம் பங்கிலும் நடந்தால் நலமே.

ஆம்! வாழ்க்கை குறுகியதுதான். நாம் வாழ்வதும் ஒருமுறைதான். நம்மில் பலர் கொடூரரர்களாக, மன்னிக்கும் மாண்பினைக் கொண்டிராமல், வஞ்சக மனப்பான்மையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ‘அஞ்சு வயதில் அண்ணன்தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்று சொன்னதே சொன்னார்கள் ஒரு தாயின் பிள்ளைகளே பகைமையின் வேரோட்டத்தோடு வாழ்நாள் முழுவதும் வாழ்கிறார்கள். ஒவ்வொரு பாகப்பிரிவினையும் உறவறுந்த நிலையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

நாம் ஒருவரை மன்னிக்காமல் அவரின் கல்லறையில் வடிக்கின்ற கண்ணீரில் நீலிக் கண்ணிராகும். வாழ்கிறபோது கொண்டிராத அன்புறவு, இறப்பிற்கு பிறகு அவருக்காக வருந்துவதால் நெறிபட போவதில்லை. இது திண்ணம். ஆகையால் வாழுகிறபோது உறவுகளை நாம் புதுப்பிக்க, புத்துணர்வுள்ளதாக்க இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. முதல் வாசகம் உறவறுந்து இச்சமுதாயம் வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவருமே பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுரைக்கிறது, இரண்டாம் வாசகம் உறவுகளைச் சரிசெய்ய அன்பே மருந்தாக அமையும் என்று எடுத்துரைக்கிறது.

உறவு சிக்கல்

பனிக்குடத்தில் தாயோடு மட்டும் தொடங்குகிற ‘தொப்புள்கொடி உறவு’ (தாய்-பிள்ளை உறவு), பிறந்தபிறகு தந்தை, உடன்பிறப்பு, குடும்பம், சொந்தம், ஊர், உலகம் என பரந்து விரிகிறது. உறவு ஒவ்வொரு நாளும் வளர்கிறது: சொந்தம் எட்டுத்திசையிலும் விரிவடைகிறது. இப்படி உறவு-என்பது மனித வாழ்வுக்கு ஆதாரமாக அமைகிறது. ‘ஊர்’ என்பதே உறவுகளின் சங்கமமன்றோ? இவ்வுலகில் பிறக்கிற ஒவ்வொரு மனிதரும் எப்போதுமே சாhந்து வாழக்கூடியவர்கள். தனித்து இயங்க அவர்களால் ஒருபோதும் முடியாது. ஆனால் மனிதனுக்கே உரிய பலவீனத்தால் இந்த உறவுகளில் சிக்கல் விரிசல் ஏற்படலாம். நம் சொல், செயல், சிந்தனை உறவுகளை உதாசீனப்படுத்தலாம்: காயப்படுத்தலாம். இது மனித இயல்பு. ஆனால் அதனை சரிசெய்ய முயல்பவர்கள்தான் மனித மாண்புக்குரியவர்கள்.

உறவுகளைச் சரிசெய்து கொள்வது காலத்தின் கட்டாயம். இன்றிரவு உயிரோடு இருப்பவர்கள் நாளையும் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகையால் ‘ஒருநாள் வரும்’ அன்று சரிசெய்து கொள்ளலாம் என்று காலம் தாழ்த்துவதைவிட, முடிந்தவரை உடனடியாக சரிசெய்வது நலம் பயக்கும். இன்று எத்தனைக் குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன? எத்தனை உடன் பிறப்புகள் முகத்தை திருப்பிக்கொண்டு பழிவாங்கத் துடிக்கின்றனர்? எத்தனை பிள்ளைகள் பெற்றோரை அனாதைகளாக்கி அவமானப்படுத்துகின்றனர்? ‘ஊர்விலக்கு’ என்ற பெயரில் எத்தனை ஊர்களில் மனிதர்களை உறவுவிலக்கி வைக்கின்றனர்? நம்முள் எத்தனை பேர், கல்யாணம், புதுநன்மை இவற்றிற்கெல்லாம் ஒரு சிலரை ‘ஒதுக்கி’ ‘தள்ளி’ வைத்து பத்திரிகை வைக்கிறோம்? இன்றைய நற்செய்தி நமக்கெல்லாம் நல்ல பாடம்.

அரபியில் மனிதனுக்கு ‘இன்சான்’ என்று பெயர். இன்சான் என்ற சொல் ‘உன்ஸ்’ என்ற சொல்லிலிருந்து பிறந்தது. உன்ஸ் என்றால் உறவு, நட்பு, தோழமை, என்று பொருள். இன்சான் என்றால் உறவு கொள்பவன், நட்புக் கொள்பவன், தோழமைக் கொள்பவன் என்ற பொருள். இது தான் மனிதனை மற்ற உயிர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. மனிதன் மட்டுமே பிறருடன் உறவு கொள்வான். நட்புக்கொள்வான் தோழமைக் கொள்வான்.

‘உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்ற பாடல் இன்று நமக்கு முற்றும் பொருந்தும். உறவு இல்லாத வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையாகாத வாழ்க்கை. ஆகையால் ஆண்டவர் இயேசுவும் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் (மத்18:20). உறவுகளில்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப் போன்றே ஒரே இடத்திலே நிலைத்திருக்கும். அதனால் பயனொன்றும் இல்லை. ஆகையால் அன்பே தலை சிறந்தது என்று வலியுறுத்துகிற பவுலடியார்கூட ‘நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் தனித்தனி உறுப்புகள் என்று சொல்லி (1கொரி 12:12-28) உறவோடு செயல்படவே பணிக்கிறார். ஒன்றாய் உணவருந்தி உறவோடு வாழும்படியே பணிக்கிறார் (1கொரி 11:21). தொடக்கத்திருச்சபையும் உறவிலும் பகிர்விலும் நிலைத்திருந்தது (திப4:32-35). உறவில் இறைவன் உறைகிறார்.

உறவுகளை சரிசெய்த ஆண்டவர்

ஆண்டவர் இயேசுவும் உறவுகளைச் சரிசெய்து மானுடத்தை சிறப்பாக கட்டி எழுப்ப முயன்றார். அன்றாட வாழ்க்கையில் ‘பழிக்குப் பழி’ ‘பல்லுக்குப் பல்’ ‘கண்ணுக்கு கண’; என்ற வன்முறைக் கலாச்சாரம் உறவுகளுக்கு அழிவையே ஏற்படுத்தும். ஆகையால் இயேசு மாற்றுக் கலாச்சாரத்தை, மனிதநேய கலாச்சாரத்தை முன்வைக்கிறார்;.(மத்5:38-42).

வார்த்தை ஒவ்வொரு மனிதனையும் வாளைவிட கொடூரமாக காயப்படுத்தும். எனவேதான் இயேசு முட்டாளே’ அறிவிலியே என்று தன் உடன் பிறப்பை திட்டுபவர்களுக்கே தண்டணைத் தீர்ப்பை மலைப்பொழிவில் இயேசு முன்வைக்கிறார். நாவடக்கம் (யாக் 3) உறவு வளர மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். வலியுறுத்தினார்.

பலி பீடத்தில் காணிக்கைச் செலுத்தி, கடவுளோடு நீ கொண்டிருக்கிற உறவை சரிசெய்வதற்கு முன்பாக உன் சகோதரனோடு சக மனிதரோடு கொண்டிருக்கிற உறவுச் சிக்கலை சரி செய்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனையை இயேசுவே விதிக்கிறார். (மத்5:23). உறவுநிலை சரியில்லாத நிலையில் செய்கின்ற வழிபாடு பொருளற்றது என்பதற்காக பின்னர் வந்து காணிக்கையைச் செலுத்து என்று ஆணையிடுகிறார்.

எதிரிகளோடு சமரசம் செய்துகொள்ளுங்கள்: உடன்பாடு செய்துகொள்ளுங்கள் என்ற அறிவுரையை ஆண்டவர் இயேசு தருகிறார் (மத்5:25-26). சமரசம் என்பது விட்டுக்கொடுப்பதல்ல@பெருந்தன்மையின் அடையாளம். (லூக்14:31-33).

எப்பொழுதுமே பிறரை ‘குற்றவாளிகள்’ என தீர்ப்பு அளிக்காதீர்கள். உங்கள் கண்ணில் உள்ள மரக்கட்டையை பார்க்காமல் அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதை விட் முட்டாள்தனம் இவ்வுலகில் வேறுஎதுவுமில்லை (மத் 7:3-5) என்று சொல்லி தன் தவறுகளை ஒப்புக்கொண்டு ஒப்புரவாகி மகிழ்ச்சியாய் வாழ பணிக்கிறார். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லையன்றோ?

ஒருகட்டத்தில் ‘யார் பெரியவர்? (மத்16:1-5). என்ற உறவுச் சிக்கல் ஏற்படுகிற போது, இது ஆணவத்தின் அஸ்திவாரம் என்பதை அறிந்து, ‘குழந்தைகளாக மாறுங்கள்’ என்று பணிக்கிறார். ஆணவம் என்பதுதான் உறவுகள் முறிந்த போது சரி செய்ய முட்டுகட்டையாக இருக்கும் என்பதை அறிந்துணர்ந்து, இது ஒருபோதும் கூடாது என்று சொல்லி ஒருவருக்கொருவர் பணி புரிகின்ற சீடத்துவத்தை, நான் முன்மாதிரி காட்டினேன் என்று பாதங்கழுவுகிற சீடத்துவத்தை முன்வைக்கிறார். தன்னைத் தான் அன்புச் செய்வதுபோல ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவரை அன்புச் செய்தால் எப்படி உறவுகள் சிக்கலாகும்.? ஆகையால் அன்பை கட்டடளையாக கொடுக்கிறார்.

இன்றைய நற்செய்தி உறவுகளைச் சரிசெய்ய நல்ல போதனையை உள்ளடக்கியிருக்கிறது, உறவு சிக்கல் ஏற்படும்போது அதற்குள்ளான இருவரும் தனித்திருக்கும் போது உரையாடி குறைகளை சரிசெய்து கொள்ளுங்கள் என்கிறார். இதனை இன்று அமெரிக்க உளவியலாளர் ர்ழககஅயnn ‘நஅpவல நௌவ ளலனெசழஅந’ என்பார். வீட்டில் இல்லாத போது ‘இருவரும்;’ மனம் திறந்து பேசி சரிசெய்து கொள்வது. இது முதல் நிலை.

உறவினை சரிசெய்தே ஆக வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருக்கிறார். அடுத்த நிலை நீதிபதிகள் முன்பு வழக்காடி உறவுகளைச் சரிசெய்வது. இது அடுத்தவரின் அறிவுரைப்படி நடப்பது. தானாக சரியாகாத போது சட்டத்தின் மூலம் சரிசெய்யப்படுவது. இங்கே தீர்ப்பு திணிக்கப்படுகிறது.

இறுதியிலேதான் திருச்சபையின் தலையீடு. இது சமுதாயப் பொறுப்போடு திருச்சபை (இறைமக்கள்) தீர்மானிக்க வழிவகுக்கிறது. இங்கே கவனிக்கத்தக்கது என்னவெனில், உறவு நிலைகளை சரியாய் கொண்டிராதவர்கள் தீர்ப்பிட முடியாது. அடுத்தவர் கண்ணில் உள்ள துரும்பை எடுப்பதற்கு முன்பாக தன்முதுகில் விட்டத்தை எடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஆகையால் ஒரு உறவு சிக்கலால் ஒட்டுமொத்த திருச்சபையும் தீர்ப்பிற்குள்ளாகிறது. புதிய உறவும் மனித நேயமும் நிறைந்த நல்ல சமுதாயம் வலிமையான திருச்சபை இங்கே கட்டியெழுப்பபடுகிறது.

உறவுகள் புனிதமானவை. இவற்றை சாதி, மதம், இனம், மொழி, என்று குறுக்கி, சுருக்குகிறபோது, மனிதம் முடக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் என் நண்பன் - என் சகோதரன் சகோதரி என்ற சிந்தனைப் பாங்கோடு செயல்படுகிறபோது திருச்சபை இறையாட்சியின் திருப்பீடமாக அமைகிறது. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் உறவுகைளைச் சரிசெய்து புனிதமான மனிதத்தை இம்மண்ணில் கட்டியெழுப்புவோம்.

‘வாழ்க்கை குறுகியது. நாம் நம் பகைமையை, தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும் போதே மறக்க வேண்டும்@ மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்;திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல, அன்பான செயலைச் செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது. நாளை மிகவும் தாமதமாகிவிடலமாம்’ இந்த பூமிக்கு ஆபேல் சிந்திய இரத்த்ம் எந்நாளும் போதும்,. பகைகை அழிப்போம். உறவை வளர்ப்போம்.