இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 18 ஆம் ஞாயிறு

ஆன்மீக செல்வந்தர்களாக

எசா 55:1-3
உரோ 8:35,37-39
மத் 14~13-21

‘ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில் ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகிறது. அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகிறது. குணங்களெல்லாம் பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகிறது. புத்தி கெடுகிறது. கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது. காது கும்மென்று செவிபடுகிறது. நா உலர்ந்து வறளுகிறது. கை,கால் சோர்ந்து துவளுகின்றன. வாக்குத் தொனி மாறிக் குளறுகிறது. இவ்வளவு அவஸ்தைகளும் ஆகாரம் கிடைத்த போது உண்டு பசி நீங்க நீங்குகின்றன.... பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகிறபோது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் ஜீவ காருண்யம். இதனால் அறிவு விளக்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடென்றும் அறியப்படும்’ என்று பசியின் கொடுமையை விளக்கி அதற்கு தீர்வையும் முன்வைக்கிறார் வடலூர் வள்ளலார்.

‘வறுமையும், ஊட்டச்சத்து குறைபாடும் பருவநிலை மாற்றத்தாலும், இயற்கைப் பேரிடராலும் விளைந்த எதிர்மறையான தலையெழுத்து அல்ல: ... பசிப் பிணியால் அல்லலுறும் மக்களுக்கு நீதி தன் கடமைகளைச் செய்வதை, தொழில்நுட்பம் சார்ந்த, பொருளாதார கோட்பாடுகள் தடுக்ககூடாது....பொதுநலத்தை நிலைநாட்டுவதில் தற்போதுள்ள நிர்வாக கட்டமைப்புகள் கொண்டிருக்கிற குறைபாட்டையே இது காட்டுகிறது. உணவுக்கு வழியின்றி அல்லலுறும் வறுமை நிலையை ஆழ்ந்து சிந்திக்கவும், அதே சமயம் அடுத்தவர்படுகின்ற துன்பத்தைப் பற்றி அக்கறையின்றி வாழ்கின்ற ஆன்மீக வறுமையையும் சிந்திக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்’

2008, ஜுன் 2 ஆம் நாள் ஐ.நாவின் உணவுக் கழகத்திற்கு விடுத்த செய்தியில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட். இந்த இரண்டு மேற்கோள்களும் இன்றைய இறைவார்த்தைக்கு உரம் சேர்க்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, வறுமையின் கோரத்தாண்டவத்தையும் பசியின் கொடுமையையும் ஒவ்வொருவருமே அறிந்திருக்கிறோம். எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்பர். ஒவ்வொரு மனிதனும் கடுமையாக உழைப்பதே நம் உடம்பின் மத்திய பிரதேசமான இந்த ஒரு சாண் வயிற்றிற்காகதான். ‘கடுமையா உழைக்கணும்: நல்லா சாப்பிடனும்: நிம்மதியா வாழணும்’ என்பதுதான் பெரும்பாலானவருடைய பிறவி நோக்கமாக இருக்கிறது.

அன்றாட வாழ்க்கையில் பசியின் கொடுமை மிகவும் கோரமானது. குப்பைத் தொட்டியில் கிடைக்கும் எச்சில் இலைகளைப் பொறுக்கி நாய்களோடும் பன்றிகளோடும் போட்டிப்போட்டுக்கொண்டு அரக்க பறக்க உண்ணும் மனநோயாளிகளைப் பார்க்கிறபோதெல்லாம் உங்கள் மனம் வெடித்திருக்கலாம். பசி கொடுமையானது. ஆகையால் ‘பசிவந்தால் பத்தும் பறந்தும் போகும்’ என்றனர் நம் முன்னோர்.

‘மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்து சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்’ என்று பசியினால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாக விளக்குகிறது ஒரு பழம்பாடல். அன்பு, அறிவு, ஆற்றல், கல்வி, மானம், குலம், தானம், தவம், முயற்சி, உபசரணை என பத்தும் பசி வரும்போது ஓடி ஒளிகிறது.

ஆனால் இன்றைய உலகில் வயிறு பசித்து சாப்பிடாமல், நேரம் பார்த்து கால அட்டவணைப்படி, சாப்பிடுபவர்கள்தான் இன்று அதிகம் உள்ளனர். ‘உணவுத் திருவிழா’ நடத்துகிற நிலை ஒருபுறம்: மறுபுறம், ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடையில் வரிசையில் கால்கடுக்க நிற்கிற வறுமை நிலை.

இன்றைய நற்செய்தி ஆண்டவருடைய பரிவையும் பசியைப் போக்கிய விதத்தையும் முன்வைக்கிறது. ஒருபுறம் உடல் வறுமை இருந்தாலும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் குறி;ப்பிடுவதுபோல இன்றைய உலகில் ‘ஆன்மீக வறுமை’யும் இருக்கிறது. அவர் ஆன்மீக வறுமை என்று குறிப்பிடுவது ‘உலகில் வாழும் ஒவ்வொருவரும் என் உடன்பிறப்பு என்ற மனநிலையின்றி அடுத்தவர்படுகின்ற துன்பத்தைப் பற்றி கவலைப்படாமல் வாழும் நிலையைத்தான் திருத்தந்தை ‘ஆன்மீக வறுமை’ என்று குறிப்பிடுகிறார். இன்றைய நற்செய்தி இயேசுவின் கரிசனையையும், மக்களின் வறுமையையும் வெளிப்படுத்தினாலும், எல்லாவற்றையும்விட அவர்களின் ஆன்மீக ஏக்கத்தையும் ஆழமாக வலியுறுத்துகிறது.

மக்களின் ஆன்மீக ஏக்கம்!

இன்றைய நற்செய்தியின் பின்புலம் பாலைவனம். பொதுவாக பாலைவனம் என்று சொன்னாலே வறுமைக்கும், துன்பத்திற்கும் பெயர்பெற்ற நிலப்பகுதி. அங்கே உணவு கிடைப்பது அவ்வளவு எளிதன்று: அதைவிட அங்கே உயிர்வாழ்வது மிக கடினம். அப்படியிருந்தும் ஐயாயிரத்திற்கும் மேலான மக்கள் அணிவகுத்துச் செல்கிறார்கள் என்றால்.. அதுவும் மிக தைரியமாக, ஐந்து அப்பம் இரண்டு மீன்களோடு செல்கிறார்கள் என்று சொன்னால் இங்கே கவனிக்கத்தக்கது அவர்களின் ஆன்மீகதாகமும் மனத்துணிவும்தான். இந்த தேடல் புனிதமானது. உடலுக்கு உணவிடுவதைவிட ஆன்மாவிற்கு உணவிடுவது அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்கள் இயேசுவிடம் எதையோ தேடிச் செல்கிறார்கள்? எவற்றையோ நாடிச் செல்கிறார்கள்.

அதுவும் திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்ட நிலையிலே மிகுந்த மனக்கலக்கத்திற்குள்ளானவராக, தனிமையை நாடிச் செல்கிற இயேசுவை, பாலைநிலத்திற்கே தேடிச் செல்கிறார்கள் என்றால் மக்களின் தேடல் உணவில் மட்டும் நிறைவடையவில்லை: ஆண்டவரின் அன்பிலும் கருணையிலும் நிறைவடைகிறது என்றுதான் அர்த்தம். ஆகையால்தான் என்னவோ, ஆண்டவர் பரிவுள்ளவராக, அவர்களின் தேவையறிந்து செயல்படுகிறார். இன்றைய நற்செய்தியை மேம்போக்காக படிக்கிறபோது, ஆண்டவர் செய்த உணவுப் புதுமை மட்டுமே வலியுறுத்துவோம். ஆனால், அதனைவிட பரிவுள்ளவராக, அங்கே நோயுற்றிருந்த ஆயிரக் கணக்கானோரை குணமாக்கினார் என்பது அவர் கொண்டிருந்த அன்பின் உச்சம். இப்படி முதலில் அவர்களின் ஆன்மீக தாகத்தை, ஏக்கத்தை நிறைவடையச் செய்கிறார். அதற்குப் பிறகுதான், உணவுத் தேவையைப் பற்றி கவலைப்படுகிறார். கவலைப்படுகிறார் என்று சொல்வதைவிட, திருத்தூதர்கள், அவர்களை ‘ஊர்களுக்கு அனுப்பிவிடும்’ என்று அன்புக் கட்டளைக் கொடுத்து கவலைப்பட வைக்கின்றனர். பின்னர்தான், பலுகி பெருக வைக்கிற புதுமை நடைபெறுகிறது.

சமூகப் பொறுப்பின்மை

இங்கே கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் சமூக பொறுப்பின்மை. இது திருத்தூதர்களைக் குற்றஞ்சாட்டுவதற்காக சொல்லவில்லை. மாறாக, அவர்களின் எதார்த்தமான மனநிலை சுட்டிக்காட்டப்படுகிறது. ‘ஐயோ! இவ்வளவு மக்கள் நம்பி வந்துவிட்டனரே! பாலைநிலமாயிற்றே! திரும்பிச் செல்லவும் இவர்களால் முடியாதே! வழியிலே எதுவேண்டுமானாலும் நடக்கலாமே என்ற பதற்றம் இவர்களிடம் இல்லை. மாறாக, ‘அனுப்பிவிடும்’ என்று இயேசுவுக்கே கட்டளையிடுகிற மனப்போக்கு காணப்படுகிறது. ஆகையால்தான், ஆண்டவரும் அவர்களுக்கும் சமூக பொறுப்பு வரவேண்டும்: தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்யவேண்டும் என்று தன் தலைமைத்துவுணர்வோடு ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று பொறுப்பைத் திணிக்கிறார்: கடமையாற்ற பணிக்கிறார். இதுதான் இன்றைய நற்செய்தியின் மையம்.

இப்போதுதான் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் வெளியே வருகிறது. இந்த ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்மையிலேயே இந்த பனிரெண்டு பேருக்கே போதாது என்பதை அவர்கள் அறிந்தார்களோ என்னவோ, இங்கேதான் தெய்வீக தலையீடு (புதுமை-னiஎiநெ iவெநசஎநவெழைn) நடைபெறுகிறது. ‘அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று ஆணையிடுகிறார் கிறிஸ்து. மக்களை அனுப்பிவைக்க நினைத்தவர்கள் ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் பதுக்க நினைத்தவர்கள், அவற்றை ஆண்டவரிடம் கொண்டுவருகிறார்கள். அருள்வளம் நிறைக்கிறது: பனிரெண்டு கூடைகள் நிறைய மீதியாகிறது. ஒருவேளை இந்த பனிரெண்டு பேரும் மக்களின் தேவையறிந்து மந்தையின் தேவையறிந்து, நல்ல ஆயனாக பொறுப்புணர்வோடு சமூகப் பணியாற்ற வேண்டும் என்று பனிரெண்டு கூடைகள் நிறைய ரொட்டித்துண்டுகள் மீந்தனவோ என்றும் இங்கே சிந்தித்தால் இறைவார்த்தை வளமுள்ளதாகும்.

ஆன்மீக வறுமை உடல் வறுமையை கொடியது. அடுத்தவரைப் பற்றி அக்கறையில்லாமல் நாம் வாழும்போது இறைவனின் தலையிடு இன்றியமையாததாகிறது. யாராவது எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று இறுமாந்திராமல் சமூகப் பொறுப்புணர்வோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். உண்டிக் கொடுத்தோர் உயிர்க்கொடுத்தோரே’ என்ற மணிமேகலையின் அட்சய பாத்திரம் நமதாக வேண்டும்.

சுயநலத்திலிருந்து

சுயநலத்திலிருந்து கடத்தல் மிக அவசியம். ஆசை அனைவரையும் கவர்ந்திழுக்கும் மாய வலை: இதில் விழுந்தவர் எழுவதில்லை: வலையும் கிழிவதில்லை: ஒட்டுமொத்தத்தில் விடுதலை என்பது இங்கு எப்போதும் இல்லை. ஒருவேளை ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆண்டவரிடம் கொடுக்காவிட்டாலும் ஆண்டவரால் நிச்சயம் அற்புதம் நிகழ்த்தமுடியும். பாலைவனச் சோதனையிலேயே கற்களை அப்பங்களாக மாற்றக்கூடிய ஆற்றல் அவரிடம் இருந்தததை நாம் அறிவோம். ஆனாலும்கூட இயேசு, ‘நீங்களே கொடுங்கள்’ என்று சொன்ன பிறகு, ‘இருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று பணிக்கிறார். திருத்தூதர்களும் தாங்கள் தங்களுக்கென்று கொண்டிருப்பதைக் கொண்டு வருகிறார்கள். இந்த கொணர்தல்தான் சுயநலத்திலிருந்து கடந்துவரும் விடுதலை வாழ்வு. இதுதான் நம்முன் உள்ள மாபெரும் சவாலும்கூட. திருப்பலியின் காணிக்கை பவனி வெறும் சடங்கு அல்ல. சவாலுக்கான களம் அது.

செயல்பாடு?

தாகமாயிருப்பவர்களையும், கையில் பணமில்லாதவர்களையும், இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் அழைத்து, ‘எனக்கு செவிகொடுங்கள்: என்னிடம் வாருங்கள், கேளுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்’ என்று பணிக்கிறார். ஏழை லாசர் உவமையில், செல்வந்தனின் சுயநலம் அவனுக்குத் தண்டனைத் தீர்;ப்பை பெற்றுத் தந்தது: அறிவற்ற செல்வன் உவமையில் செல்வந்தனின் சுயநலம் சாவைக் கொணர்ந்தது: அவர்களால் தப்பிக்க இயலவில்லை. (லூக் 16~19-31, 12~13-21 ). கடவுளின் அன்பிலிருந்து நாம் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் (இரண்டாம் வாசகம்) நாமும் சுயநலத்தைக் கடக்க வேண்டும். அதுதான் தனிமனித பாஸ்கா.

‘நீங்களே போய் அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்பதை ஆண்டவர் நமக்கு கட்டளையாக இன்றைய நற்செய்தியின் வழியாக கொடுத்திருக்கிறார். இதுதான் ஆன்மீக செல்வம். சமுதாய அக்கறையோடு, சுயநலம் கடந்து, இருப்பதை பகிர்ந்து, ஆன்மீக செல்வந்தர்களாக செயல்படுவதற்கான அழைப்பு. நாம் வாழ்வடைய இதுதான் தீர்;வு. அப்போதுதான் இறையருள் நம்மை செழுமைப்படுத்தும்: நாமும் மீதியை சேகரிக்க முடியும். செய்வோமா?

‘உன் வீட்டு சமையலின் வாசைன எவ்வளவு தொலைவுக்குப் பரவியிருக்கிறதோ அவ்வளவு தொலைவில் உள்ள அண்டைவீட்டுக்கும் விருந்துக்கு அழைப்பு கொடுத்தாகிவிட்டது என்று பொருள். எனவே அவர்களுக்கு உணவிடுவதும் உன் கடமையாகிறது’ நபிகள் நாயகம்