இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








திருவுடல் திரு இரத்தப் பெருவிழா

இது விசுவாசத்தின் மறைபொருள்

இச 8:2,3,14-16
1கொரி 10:16,17
யோவா 6:51-58

‘நற்கருணை இயேசு கிறிஸ்துவை முழுமையாகவும், நிறைவாகவும், பிரசன்னப்படுத்தும் அருளடையாளம்: பிற பிரசன்னங்களைவிட நிறைவாக இயேசு கிறிஸ்துவை பிரசன்னப்படுத்துவது நற்கருணை. நற்கருணை முழுமையாக இயேசு கிறிஸ்துவை தன்னகத்தே கொண்டுள்ளது. நற்கருணையே எல்லா அருளடையாளங்களின் நோக்கமும் நிறைவுமாக அமைகின்றது (திருவழிபாடு 7, விசுவாசத்தின் மறைபொருள் 38).

இன்று ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைச் சிறப்பிக்கிறோம். ஆண்டவருடைய திருவுடல் திருஇரத்தப்பெருவிழா விசுவாசத்தின் மறைபொருளாக விளங்கும் நற்கருணையை திறந்த மனதுடன் ஆழமான விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு ஆண்டவருடைய திருப்பிரசன்னத்தை முழுமையாகப் புரிந்து வாழ அழைப்புவிடுக்கிறது. ‘இது விசுவாசத்தின் மறைபொருள்’ (அலளவநசரைஅ கனைநi) என்று திருப்பலியில் எழுந்தேற்றத்தின்போது நாம் அறிக்கையிடுவதை ஆழ்ந்து பொருளுணர்ந்து அறிக்கையிடவேண்டும். நற்கருணையைப்பற்றி குறிப்பிடும்போது அது புலப்படுத்தும், "3"> திருவிருந்து,(Communion) திருப்பலி, (Sacrifice), திருப்பிரசன்னம் (Presence)ஆகிய மூன்று கோட்பாடுகளை இறையியலாளர்கள் முன்வைப்பர். இவற்றுள் திருப்பிரசன்னம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் சொத்து திருப்பலி வழியாக கிடைக்கப்பெறும் ‘நற்கருணைப் பிரசன்னம்’ என்றால் அது மிகையன்று: திருவிருந்தாக தொடங்கிய நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னம் பற்றிய விசுவாசப்போதனை முதல் நூற்றாண்டிலேயே ஆதித்திருச்சபைக் கண்டுணர்ந்தது.
1264 ஆம் ஆண்டு திருத்தந்தையால் ‘டிரான்சித்தூருஸ்’ என்ற ஆணை வழியாக இன்று நாம் கொண்டாடும் ‘ இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அறிமுகப்படுத்தப்பட்டது.

நற்கருணைப் பிரசன்னம்

புனித ஜஸ்டின் (+155) தன் எழுத்துக்களில் இயேசுவின் நற்கருணைப் பிரசன்னத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘ஒவ்வொரு விசுவாசியும் எந்த உணவும் உண்பதற்கு முன் நற்கருணைப் பெற முயற்சிக்க வேண்டும்: விசுவாசத்தோடு அவர்கள் நற்கருணையை உண்டால் கொல்லும் நஞ்சு கூட அவர்களுக்கு தீங்கிழைக்காது’ என்று திருத்தூதர் மரபு எடுத்துரைக்கிறது. புனித அகுஸ்தினார், ‘கிறிஸ்துவின் திருவுடலை வணங்காமல் ஒருவர் அதனை உண்ணக்கூடாது’ என்று ஆணைப்பிறப்பிக்கிறார். என்கிறார். புனித சிரிலும் நற்கருணைப் பெறும்போது எப்படி மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று விவரிக்கிறார். இப்படித் திருச்சபை தொடக்கத்திலிருந்தே நற்கருணையைப் போற்றி வந்துள்ளது. நற்கருணை ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை வெளிப்படுத்தும் உன்னதமான அருளடையாளம். ஆகையால் கிறிஸ்தவர்களாகிய நாம் நற்கருணையை –நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை- முழுமையாக உணர்ந்து விசுவசித்து அதற்கேற்ப வாழ்ந்துகாட்ட வேண்டும்.
‘இது என் உடல்’ என்று சொன்ன ஆண்டவர் பொய் சொல்லமாட்டார்: ‘இது என் இரத்தம்’ என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். ஆகையால் இயேசு கிறிஸ்துவே ஏற்படுத்திய நற்கருணை அழியாச்சின்னமாக, அவருடைய திருப்பிரசன்னதை;தை வலிந்து எண்பிக்கும் அருட்சாதனமாக எந்நாளும் விளங்குகிறது. ‘உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்’(மத் 28:20) என்ற சொன்ன ஆண்டவர் நற்கருணை வாயிலாகவும் நம்மிடம் பிரசன்னமாகிறார். ஆகையால் திருப்பலியில் கலந்துகொள்ளும் குரு உட்பட ஒவ்வொருவரும் நற்கருணைமீது உரிய ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தி பங்கேற்க வேண்டும். இது விசுவாசத்தின் மறைபொருள்.
திரித்தெந்து திருச்சங்கம் (13 டிசம்பர் 1545 முதல் மார்ச் 1547) இதனையே வலியுறுத்துகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் உட்கருப்பொருள் மாற்றம் (வுசயளெரடிளவயவெயைவழைn) நிகழ்ந்து ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பிரசன்னம் உணரப்படுகிறது. நற்கருணைக்கு முன்பு செபிப்பதும், நோயில் இருப்போருக்கு வழியுணவாக நற்கருணையை வழங்குவதும், தொடக்கமுதல் இருந்து வரக்கூடிய பழக்கமாகும்.

5000த்திலிருந்து 11 வரை

ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் அற்புதம் செய்து ஐயாயிரம் பேரையும் (ஆண்கள் மட்டுமே கணக்கில் உள்ளது) வயிறார உண்ணச் செய்தபின் அண்டவர் கடல்;மீது நடக்கிறார். மீண்டும் அதே கரை அதே எண்ணிக்கையிலான மக்கள்: அப்போதுதான் ஆண்டவர் போதிக்க ஆரம்பிக்கிறார். யோவான் நற்செய்தி ஆறாம் அதிகாரம் முழுவதும் நற்கருணையைப் பற்றி ஆழமாக போதிக்கிறது. அங்கே ஆண்டவர் நற்கருணையைப் பற்றி தானே வானின்று இறங்கி வந்து உணவு என்பதைப் பற்றிப் போதிக்கிறார்.
முதன் முறையாக ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்று (6:35) இயேசு கூறுகிறார். முதன் முறை சொன்ன போது அங்கே முணு முணுப்பு எழுகிறது. ‘இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? என்று (6:41) அவருடைய குலம் கோத்திரம் குடும்பச்சூழ்நிலை அலசி ஆராயப்படுகிறது. அதவாது எடுத்த எடுப்பிலேயே இதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஐயாயிரம் பேர் குறைந்து ஆயிரம் பேராக நிற்கின்றனர்.
ஆனாலும் ஆண்டவர் இயேசு தன்னுடைய நற்கருணைப் பிரசன்னத்தை வலியுறுத்துவதிலிருந்து பின்வாங்க வில்லை: மீண்டும், ‘வாழ்வு தரும் உணவு நானே’ (6:48) என்று ஆணித்தரமாக சொல்கிறார். மிஞ்சியிருந்த ஆயிரத்தவரிடையே மீண்டும் அதே சலசலப்பு. ‘நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? என்று எதிர்க்கேள்வி எழும்புகிறது. முதன் முதலில் குடும்பத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார்கள்: இரண்டாவது சூழலில் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். ஆயிரத்தவர் நூறு பேராகின்றனர். ஆனாலும் ஆண்டவர் இந்த விசுவாசத்தின் மறைபொருளை விளக்காமல் விடப்போவதில்லை.
மீண்டும் மூன்றாவது முறையாக, விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே’ (6:58) என்று தன்னை அடையாளப்படுத்துகிறார். அதே எதிர்ப்பு அங்கே காணப்படுகிறது. ‘இதை ஏற்றுக்கொள்வது மிக் கடினம்: இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்று ஒட்டுமொத்த வெறுப்பை உமிழ்ந்து இருந்த நூறுபேரும் கலைந்து பத்துக்களாகி நிற்கின்றனர். ஆண்டவர் இயேசு வெளிப்படையாகவே,சீடர்களிடம் ‘நீங்கள் நம்புவதற்கு தடையாக இருக்கிறதா? என்று கேட்ட கேள்வி நம் காதில் எதிரொலிக்கவில்லையா?
மீண்டும் இயேசு போகாமல் மிஞ்சியிருந்த தம் பன்னிரண்டு சீடர்களிடம் ‘ நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (6:67)என்று ஒளிவு மறைவின்றி கேட்கிறார். அப்போதுதான் பேதுரு யாரிடம் போவோம்: வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் தானே உள்ளன என்று சரணடைகிறார்.மிஞ்சியிருந்த பன்னிரண்டு பேரும் நிலைத்திருக்கவி;ல்லை: ‘உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்’ (6:70) என்று ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார். அந்த அலகை யார்? என்பது நற்கருணையை இறுதி இராவுணவின் போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. நான் யாருக்கு அப்பத்துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன் தான் எனச் சொல்லி, அப்பத்துண்டைத் தோய்த்து .. .. யூதாசுக்குக் கொடுத்தார்: அவன் அப்பத்துண்டைப் பெற்றதும், சாத்தான் (அலகை) அவனுக்குள் நுழைந்தான்: .. வெளியே போனான்: அது இரவு நேரம். (யோவா 13:26, 27, 30) என்று இருளில் மறைந்த விசுவாசமில்லாத யூதாசை ....இப்படி 5000 பேரில் ஆரம்பித்து வெறும் 11 பேரில் வந்து நிற்கிறது. முதலாவதாக, ஒட்டுமொத்த மக்கட்கூட்டம் நிராகரித்தது: இரண்டாவதாக படித்த சமயத்தலைவர்கள் நிராகரித்தனர்: மூன்றாவதாக, பயிற்சிப்பெற்ற பனிரெண்டு சீடருள் ஒருவர் நிராகரித்தார். ஆனால் எம்மாவூஸ் அனுபவம் உட்பட உயிர்ப்பிற்குப் பிறகு ஒட்டுமொத்த திருச்சபையும் நற்கருணையால் வாழ்வு பெற்றது: வாழ்வளிக்கும் அருட்சாதனத்தை வழங்கிட கருவியுமானது.

விசுவாசத்தின் மறைபொருள்

‘இது விசுவாசத்தின் மறைபொருள்’ என்பது எத்துணை உண்மை. நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் உண்மையானது: உலகம் முடியும் வரை நிரந்தரமானது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஆயிரமாயிரம் அற்புதங்கள் இதனைப் புலப்படுத்துகிறது. ‘இது என் உடல்: இது என் இரத்தம்’ என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார். ஆகையால் விசுவாசத்தின் மறைபொருளான நற்கருணைப் பிரசன்னத்தை நாம் முழுமையாக விசுவசிக்க வேண்டும். நற்கருணை குறித்துக்காட்டும் ஒற்றுமை, அன்பு, வாழ்வு, மறையுடல், சமத்துவம் ... என ஒவ்வொரு மதிப்பீடுகளும் நற்கருணையில் ஆண்டவர் பிரசன்னாமாயிருக்கிறார் என்ற விசுவசிக்காத நிலையில் நம்மால் அவற்றைக் கடைபிடிப்பது இயலாத காரியம். அவற்றை செயல்படுத்தினாலும் அர்த்தமில்லை. ‘உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்: நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ (விப33:15-16) என்று முறையிட்ட மக்களுக்கு ‘உங்களோடு என்றும் இருப்பேன்’ (யோசுவா 3:7) என்ற வாக்குறுதியை இறைவன் தந்தார். அவருடைய பிரசன்னமே அனைத்தையும்விட மேலானது. இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர்நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைப்பார் (திவெ21:3,4). என்ற இறைவாக்கு நற்கருணையில் உண்மையாகிறது. ஆகையால் தான் ‘நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்: மருள வேண்டாம் (யோவா14:27) என்று சொன்ன இம்மானுவேல் உலகை வென்றுவிட்டேன்’ என்று சொல்லி அதற்கு சாட்சியாய் இந்த நற்கருணைப் பிரசன்னத்தை விட்டுச் சென்றிருக்கிறார். எனவே விசுவாசத்தின் மறைபொருளான நற்கருணைப் பிரசன்னத்தை நாம் விசுவசித்து வாழ்வோம்.

நற்கருணை மீது நாம் கொண்டிருக்கிற பிரசன்ன விசுவாசம் நம்முடைய அன்றாட பக்தி நடவடிக்கைகளில் வெளிப்பட வேண்டும்: நற்கருணை ஆண்டவரை தினமும் சந்திப்பதும், முடிந்த வரை அன்றாடம் திருப்பலியில் கலந்துகொள்வதும், நற்கருணை ஆராதனை, நற்கருணைச் சுற்றுப்பிரகாரம் ஆகியவற்றில் பங்கெடுப்பதும், நற்கருணை வாங்கிய பிறகு அவரோடு விசுவாசநிலையில் உரையாடுவதும், நற்கருணையைக் கைகளில் வாங்கும்போது கவனத்துடன் வாங்கி பராக்குக்கு இடம்கொடுக்காமல் உண்ணுவதும் உறவாடுவதும் ..என நம்முடைய விசுவாசம் வெளிப்பட வேண்டும்.
எல்லாவற்றைவிட கிறிஸ்துவின் திருவுடலாகிய நற்கருணைமீது அதன் பிரசன்னத்தின்மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையில் செயலாக்கம் பெற வேண்டும். நற்கருணை விசுவாசம் செயலாக்கம் பெறுவது ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரே குடும்பமாக ஒன்றித்து, ஒற்றுமையில் வளரும் போதுதான். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம், நமக்கு வலியுறுத்துகிறது. ‘நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்’ சிதைந்து கிடந்து கொரிந்து திருச்சபை, பிரிவினையில் வலிந்து நின்ற கொரிந்து திருச்சபை, ஒற்றுமையை வெளிப்படுத்தி நற்கருணையைச் செயலாக்கம் செய்தது. நாமும் பக்தி முயற்சியோடு நற்கருணையை சாதீயம் உட்பட அனைத்து பிரிவினைச் சக்திகளை அப்புறப்படுத்தி ஒரே உடலாய் ஒரே திருச்சபையாய் ஒன்றுபட்டு நிற்போம்.