இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் ஞாயிறு

கடவுளை அடைய என்ன வழி

சாலமோன் ஞான நூல் 9: 13-18
பிலமோன் 9-10, 12-17
லூக்கா நற்செய்தி 14: 25-33

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் ஞாயிறைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய திருப்பலியில் மூன்று வாசகங்களும் நாம் எப்படி இறைவனை அடைய முடியும் என்பதற்கு நமக்கு வழிகளைக் கற்றுக் கொடுக்கின்றது

நாம் கடவுளை மனித அறிவைக் கொண்டு அல்ல. மாறாக கடவுளின் ஞானத்தின் மூலம் அவரைக் கண்டுகொள்ள முடியும் என்று முதல் வாசகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது வாசகம் நாம் கடவுளை பிறரை அன்பு செய்வதன் மூலமாக அடைய முடியும் என்பதை செல்வந்தர் பிலமோன் தன்னுடைய அடிமை ஒனேசிமுஸ்சை ஏற்றுக்கொள்வதன் வழியாகக் காட்டுகிறார். மூன்றாவதாக இன்றைய நற்செய்தி வாசகம் நாம் கடவுளை இவ்வுலக ஆசைகளைத் தவிர்ப்பதன் மூலமாக குறிப்பாக நமது உறவுகள் மீதுள்ள பற்றுருதி, பொருளாசை, அடைய முடியும் என்பதை நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

முதல் வாசகத்தில் சாலமோன் தன் இறையனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் கடவுளைத் தன் சொந்த அறிவால் அல்லது இவ்வுலக ஞானத்தால் அறிந்துகொள்ளவில்லை. மாறாக கடவுள் தந்த ஞானத்தால் அவரை முழுமையாக அறிந்துகொள்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் கடவுளை மறந்து, அவரை விட்டு வெகுதொலைவில் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் கிரேக்கத் தத்துவங்கள் மக்கள் மனங்களை ஆட்டிப்படைத்தது. மக்கள் இவ்வுலக அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். இவ்வுலக அறிவைக் கொண்டு கடவுளை அடைய நினைத்தார்கள். ஆனால் இவ்வுலக ஞானம் குறுகியது, நிரந்தரமற்றது என்பதை முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

இன்றைய உலகில் நாம் கடவுளைத் தேடுகிறோமா? நமது வீடுகளில் கடவுளை வாசலில் வைத்துவிட்டு, நம்முடைய உள்ளறைகளை இவ்வுலகப் பொருள்களைக் கொண்டு அலங்கரிக்கிறோம். அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அவைகளை மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கிறோம். ஆனால் என்றாகிலும் வாசலில் உள்ள கடவுள் படத்தை சுத்தம் செய்ய நினைத்திருப்போமா. ஏன் அதைத்தான் உற்று நோக்கியிருப்போமா? இன்றைய அறிவியல் உலகில் நாம் கடவுளை நம்புவதில்லை. கடவுளை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. காரணம் நாம் பொருள்களுக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வுலகப் பொருட்களும், செல்வங்களும் நம்மையும் நம் மனங்களையும் ஆட்டிப் படைக்கின்றது.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் வாழும் நாம் வாழ்வை சுலபமாக நினைத்து வாழ ஆரம்பித்து விட்டோம். ஜாலியான வாழ்க்கை, வசதியான வாழ்க்கையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். எனவே நாம் பணத்தை சம்பாதிப்பதிலும், பரபரப்பான வாழ்க்கை வாழ்வதிலும் தான் முழுமையான கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரைப் பார்த்து ஏன் நீங்கள் ஞாயிறு திருப்பலிக்கு வருவதில்லை என்று கேட்டதற்கு அவர் எனக்கு கொடுத்த பதில் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர் சொன்னார் நாம் ஒவ்வொரு ஞாயிறு காலை 7 மணிக்கு யோகா வகுப்பிற்குச் செல்கிறேன். எனவே எனக்கு திருப்பலிக்குச் செல்ல நேரம் இல்லை. ஆம் இன்றைக்கு பல கத்தோலிக்க கிறிஸ்தவருடைய வாழ்வில் கடவுள் கடைசி இடத்தில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இது மிகவும் கவலையை அளிக்கிறது. இன்று நாம் கடவுளைத் தேடாமல் நம்முடைய சுகங்களைத் தேடுவதால் நாம் பிறரோடு நமக்குள்ள உறவைப்பற்றி கவலை கொள்வதில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருவதில்லை. இதைத்தான் ஒரு புதுக்கவிஞன் இப்படி எழுதுகின்றான்.
"அரிது அரிது அன்பில்லா உலகமும் செல்போனில்லா பெண்ணும் காண்பது அரிது”. நாம் அன்புள்ள வாழ்க்கை வாழுகின்றோமா என்று எண்ணிப்பார்ப்போம்.

என்னப்பா, உன் புது மனைவி அன்பு எப்படி இருக்காங்க? அவளா நல்லாத்தான் இருக்கா. பேருதான் அன்பு. அவ செய்ரது எல்லாம் வம்பாதான் இருக்குது. அன்பு செய்ய முதலில் என்ன வேண்டும்? நம்மிடத்திலே மற்றவர்களைப்பற்றிய நல்ல எண்ணங்களும், ஊக்கமூட்டும் மற்றும் பணிவான வார்த்தைகளும் இருக்க வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்காமல் அதை நமதாக்க வேண்டும். நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கின்றது. எனவே நாம் அந்த அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் போது அது நமக்குத் திரும்பக் கிடைக்கிறது.அன்பைப் பற்றி புனித சின்னப்பர் 1 கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம் 13 ம் அதிகாரத்தில் அழகாக எடுத்துரைக்கின்றார். அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. எனவே நாம் பிறரை அன்பு செய்யும் போது கடவுளை நிச்சயமாகக் காண முடியும். கடவுள் அன்பையும் நம் வாழ்வில் உணர முடியும்.

இப்பொழுது நாம் இறைவனைத் தேடவில்லை என்றால் எப்போது நாம் தேடப்போகிறோம்? நாளை என்பது கானல் நீர். நேற்று என்பது முடிந்து விட்ட காசோலை. இன்று என்பது நம் கையில் இப்போதுள்ள காசோலை. பயன்படுத்திடுவோம் பாசமுள்ள கடவுளை நம் வாழ்வில் அடைந்திட. நேசிப்போம் பிறரை நோக்கிடுவார் கடவுள் நம்மை தினமும். ஆண்டவர் என்றும் உங்களை ஆசீர்வதித்துக் காப்பாராக. ஆமென்.