இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு

தாழ்ச்சி உள்ளவர்களாய் வாழ்வோம்

சீராக் ஞானநூல் 3: 1720, 28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லுக்காஸ் 14: 1, 7-14

கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே, இன்றைய வாசகங்கள் குறிப்பாக நற்செய்தி வாசகம் நமக்கு தாழ்ச்சியைப்பற்றி எடுத்துக்கூறுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்வில் உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் அவன் தாழ்ச்சி மனம் கொண்டவனாக திகழ வேண்டும். இதைப்பற்றி இயேசு போதிக்கையில், தன்னை உயர்த்தும் எவரும் தாழ்த்தப் படுவார். தன்னைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப் பெறுவார். இதை சீராக் ஞான ஆகமம் தெளிவாக எடுத்துரைக்கிறது. “நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.” (சீஞா. 3. 18)

ஆம் தாழ்ச்சி உள்ளம் கொண்டவர்களைக் கடவுள் உயர்த்துகிறார் என்பதற்கு எத்தனையோ சான்றுகளை நாம் காணலாம். “நான் ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்று மரியாள் வானதூதர் கபிரியேலிடம் கூறினாள். (லூக். 1:38). மேலும் மரியாளின் பாடலில் நாம் பார்க்கிறோம். தாழ்ந்தோரை உயர்த்தினார். பசித்தோரை நலன்களால் நிரப்பினார். தாழ்நிலை நின்ற இந்த அடிமையை கடைக்கண் நோக்கினார். இதோ இந்நாள் முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.

தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக புனித வின்செண்ட் தெ பவுல் திகழ்கின்றார். ஒருமுறை அவர் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். தாயொருத்தி அவரை அணுகி என் மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பார்க்கலாம் என்று பதில் கூறினார் வின்செண்ட். உடனே அந்தப் பெண்ணுக்கு கோபம் வந்தது. வேலை கொடுக்காமல் பார்க்கலாம் என்று அசால்ட்டாக பதில் கூறுகிறாயே என்று சொல்லி, மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து அவர் தலைமீது எறிந்தார். உடனே கல் தலையில் பட்டு, இரத்தம் வடியத் தொடங்கியது. ஆனால் அவர் அப்பெண்ணை ஒன்றும் செய்யாமல், சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, பாருங்கள் இப்பெண் தன்மகன் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறாள் என்று கூறினார்.

இதே போன்று இயேசு தான் காட்டிக் கொடுக்கப்பட்ட பின், பல துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளானார். அவரை அநியாயமாக குற்றம் சுமத்தி அவரை எள்ளி நகையாடி அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் ஆனால் இயேசு அத்தனை அவமானங்களையும், துன்பங்களையும், சாவையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். அவர் அவர்களுடைய அக்கிரமத்துக்காக அவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டினார். தாழ்ச்சியோடு அனைத்தையும் தாங்கிக்கொண்டார். இதைத்தான் புனித சின்னப்பர் தன்னுடைய கடிதத்தில் இவ்வாறாகக் கூறுகிறார். கடவுளின் சாயலில் விளங்கிய அவர் அடிமையின் கோலம் பூண்டு தன்னையே சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு தாழ்த்தினார். அவர் எந்த் அளவுக்குத் தன்னைத் தாழ்த்தினாரோ, கடவுள் அவரை அந்த அளவுக்கு மிகவும் உயர்த்தி அவரை மகிமைப்படுத்தினார். எனவே தான் தன்னுடைய சீடர்களுக்கு மிகவும் கண்டிப்பாகக் கூறினார். நீங்கள் இந்த உலக ஆட்சியாளர்களைப்போன்று இருக்கக கூடாது. அவர்கள் தங்கள் அதிகாரத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்று காட்டுகிறார்கள். ஆனால் உங்களுக்குள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் முதல்வனாக இருக்க விரும்புகிறவன் உங்கள் பணியாளனாக இருக்கட்டும். ஏனெனில் தன்னை உயர்த்துகிற எவரும் தாழ்த்தப் படுவார், தன்னைத் தாழ்த்துகிறவர் உயத்தப்படுவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

எனவே நாமும் தாழ்ச்சி என்னும் இந்த உயர்ந்த இரகசியத்தை நமதாக்கிக்கொண்டோமென்றால், மரியாவைப் போன்று இன்னும் எத்தனையோ புனிதர்களைப்போன்று ஆண்டவரால் உயர்ந்த நிலைக்கு மகிமைப்படுத்தப் படுவோம் என்பது உறுதியாகும். சொல்மொழி ஒன்று சொல்வார்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. செறுக்குடையோர் சிதறடிக்கப் படுவார்கள். தாழ்ச்சியுடையோர் கடவுளால் கண்ணோக்கபபடுவார்கள். தாழ்ந்து போவதால் நாம் எதையும் இழந்து போவதில்லை. ஆனால் நமது தற்பெறுமை, கர்வம், தான் என்னும் அகந்தை நம்மை தாழ்ந்து போக விடுவதில்லை. நாம் அனைவரும் இந்த தவறான உயர்ந்த எண்ணத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்றால், நாம் கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்களாய் அவருடைய அருளையும், ஆசீரையும் நிறையப்பெற்று, வாழ்வில் அவருக்குகந்தவர்களாக மாட்சி பெறுவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தாழ்ச்சியோடு வாழ்வோம் தரணியை ஆள்வோம்.