ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









நாம் தேடுகிறவர் எங்கே?

காரிருளில் வாழ்ந்து வந்த மக்கள் போரொளியைக் காண்பர் என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இறைமகன் இயேசுவில் நிறைவேறிற்று. பல ஆண்டுகளாக அடிமைத்தனத்திலும், வறுமையிலும், வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்களின் அழுகுரலைக் கேட்ட கடவுள். என் மக்களின் விடுதலைக்காய் யாரை நான் அனுப்புவேன் என கடவுள் ஏங்கினார். எபிரேயர்க்கு எழுதிய திருமுகம்1:1ல் நாம் காண்பது போல, பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்வுறுதி நாள்களில் தம் மகன் – இயேசு – வழியாக நம்மிடம் பேசியுள்ளார். ஆம் விண்ணில் வாழும் கடவுள் காலம் கனிந்தபோது மண்ணில் வாழும் மனுக்குலத்தை மீட்க மனிதனார்.

கடலைநோக்கி நதிகள் செல்கின்றன
நதியை நோக்கி கடல் செலவதில்லை
கரும்பை நோக்கி எறும்புகள் செல்கின்றன
எறும்பை நோக்கி கரும்பு செல்வதில்லை
மலர்களை நோக்கி வண்டுகள் செல்கின்றன
வண்டுகளை நோக்கி மல்ர்கள் செல்வதில்லை

இதுவே இயற்கையின் நியதி. ஆனால் இவைகளையெல்லாம் படைத்த அந்த கடவுளை நோக்கி மனிதன் செல்ல வேண்டும். ஆனால் கடவுளே மனிதனைத் தேடி வந்தார்.. யோவான்1:1 – இல் வாசிப்பதுபோல. ஆதியிலே வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளோடு இருந்தது …… அந்த வார்த்தையே காலம் வந்துபொழுது மனிதரானார். விண்ணும் மண்ணும் கைகோர்த்த அந்த நாளைத்தான் நாம் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடுகிறோம். வார்த்தையாக இருந்த கடவுள் மனுக்குலத்தை மீட்க மனிதரானபிறகு “தம் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றுவதே என் உணவு “ என வாழ்ந்தார்.

மனிதனின் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், சோதனைகள், தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள் போன்ற இவைகளின் வலியை தானும் மனிதர் என்ற முறையில் அனுபவித்தார்.

எல்லாம் முடிந்து விட்டது என்று நம்பிக்கை இழந்த நிலையில் தம்மைத்தேடி வந்த மக்களுக்கு நம்பிக்கையின் நட்சத்திரமாகவும், உடல், உள்ள நோய்களால் வேதனைப்பட்ட மக்களுக்கு நோய் நீக்கும் மருத்துவராகவும், ஆயனில்லா ஆடுகள் போல் அலைந்த மக்களுக்கு நல்லாயனாகவும், வாழ்க்கை என்ற படகில் பயணமாகும்போது சந்திக்கும் சவால்கள், ஏமாற்றம், தடுமாற்றம் போன்ற பேரலைகளால் திசைமாறி, தடம்மாறிப் போகும்போது ‘நானே வாழ்வும் வழியும் ஒளியுமாய் இருக்கின்றேன் என்று நம்மை வழிநடத்திச் செல்லவே கடவுள் மனிதரானார். நம்மைப்போல எல்லா வேதனைகள் துன்பங்கள் வலிகளையும் சிலுவைப்பாடுகளின் வழியாக தாமும் அனுபவித்தார். இப்படிபட்ட இறைமகன் இயேசுவை நாம் எங்கே தேடுகிறோம்?

40 ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கானான் நாட்டிற்கு மோயீசன் வழியாக அழைத்துச் சென்ற அதே “யாவே” “கடவுள்தான் நாம் பிறந்து வளர்ந்த சொந்த இலங்கை நாட்டில், நிலமிழந்து, முகமிழந்து தம் சொந்தங்களை இழந்து அந்நியர்களாய் அகதிகளாய் வந்தபோது நம்மை வழிநடத்திய கடவுளை நாம் இப்பொழுது எங்கே தேடுகிறோம்?

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று எத்தனையோ மனிதர்கள் இயேசுவாக இருந்து நமக்கு உதவியவர்களை இப்பொழுது நாம் எங்கே தேடுகிறோம்?

நாம் கடந்து வந்த பாதைகளை, ஏறி வந்த படிக்கற்களை மறந்துவிட்டு இப்பொழுது எந்தப் பாதையில் யாரை? எதை? எங்கே தேடுகிறோம்? வறண்டு போன வாழ்வை வளப்படுத்திய கடவுள், நாம் உண்பதற்கு உணவும் உறங்க உறைவிடமும், அடைக்கலான் குருவிகளைகிய நமக்கு பாதுகாப்பும் கொடுத்த அந்த கடவுளை இப்பொழுது நாம் எங்கே எதில் தேடுகிறோம்?

அன்புச் சமூகமே! இன்று இங்கு, நாளை எங்கே என நிலையற்ற, கடவுள் நம்பிக்கை இல்லாத தன்மையில் வாழ ஆரம்பித்துவிட்டோம். விடுதலை தந்த யாவே கடவுளை மறந்த இஸ்ராயேல் மக்கள் பாகால் என்ற வேறொரு தெய்வத்தை தேடிச்சென்றார்கள். அங்கேயும் அவர்களுக்கு மன நிறைவு அமைதியைக் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அவர்கள் யாவே கடவுளிடம் திரும்பிவந்து கானான் நாட்டிற்கு சென்றார்கள்.

அதேபோல நாம் இன்று தாம் பெற்ற கிறிஸ்துவ விவாசத்தில் நம்பிக்கையை இழந்து பல ஜெபகூட்டங்கள், பிரிந்துபோன சபைகளைத் தேடி அழைகின்றோம். இம்மானுவேலாகிய இறைவன் நம்மோடு இருக்கும்போது ஏன் நாம் அங்கேயும் இங்கேயும் மனநிறைவு, அமைதியை அடையமுடியாமல் அழைகின்றோம? வாழ்வே மாயம், இந்தே வாழ்வே மாயம் என தங்களின் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு வேறு எங்கோ அந்த மகிழ்ச்சியைத் தேடிச் கொண்டிருக்கிறோம்?

யோவான் நற்செய்தி அதிகாரம் 15:11 ல் காண்பது போல் “நீங்கள் நிறைவாழ்வு பெற்று மகிழ்ச்சியைக் காணவும், அம்மகிழ்ச்சி உங்களில் நிறைவு பெறவுமே வந்தேன் “என்று கூறி நமக்கு இவ்வாழ்வைத் தந்த கடவுளை எங்கே தேடுகிறோம்? 2013 ஆண்டுகளுக்குமுன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த இயேசு இன்றும் ஏழைகளின் வாழ்வில் இறைவனைக் காண்பவரிடத்தில் அவர்களின் உள்ளத்தில் பிறந்து கொண்டிருக்கிறார்.

இம்மண்ணுலகில் அமைதியை கொண்டுவந்த இயேசுவை இன்று நம் இல்லத்தில் உள்ளத்தில் வரும்போது அவரை நாம் ஏற்கத் தயாரா? அன்று மூன்று அரசர்களும்- கஸ்பார், மெல்கியூர், பல்தசார், பொன் வெள்ளி தூபம் இவைகளைக் காணிக்கையாக்க தேடிச் சென்றார்கள். இன்ற நாம் எதைக் கொடுக்க அவரை எங்கே தேடுகிறோம்? தேடுவோம் அவரை நம் நல் மனங்களில், காண்போம் அவரை ஏழைகளில். அந்த இயேசுவை அடுத்தவரில் நம்மைப்போன்ற அந்நியர்களின் அன்பு உள்ளங்களில் தேடுவோம். உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 2014 வாழ்த்துக்கள்
[2013-12-30 15:31:42]


எழுத்துருவாக்கம்:

Fr.Amalrajh Arockiam
Nuth
Netherland