ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன?
பாகம் -ஆறு



என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன? இந்த கேள்விக்கு நம்மில் பலரும் பல்வேறு பதில்கள் தருகின்றோம். எ.கா: கடவுள் தான் என் வாழ்வின் ஆதாரம் எனது பெற்றோர் தான் என் வாழ்வின் ஆதாரம்: என் பிள்ளைகள் தான் எனக்கு ஆதாரம்: என் தன்னம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம்; இவ்வாறு பல்வேறு விளக்கங்களை நம் வாழ்வில் கேட்டிருக்கின்றோம் அல்லது நாமே தந்திருக்கின்றோம். ‘ஆதாரம்‘ என்ற தமிழ் வார்த்தைக்கு பொருள் காண முயற்சிப்போம். ஆதாரம் என்ற வார்த்தைக்கு ‘மூலம‘ என்று பொருள். ‘ஒரு மனிதனை செயல்பட வைக்கும் உந்து சக்தி‘ என்றும் பொருள் கொள்ளலாம். கிறிஸ்தவர்களாகிய நமக்கு வாழ்வின் ஆதாரம் யேசுவின் கல்வாரி பலியை எடுத்துகாட்டும் நற்கருணை தான். காரணம் யேசுவின் போதனை: வாழ்வுமுறை எல்லாவற்றையும் ஒரு சேர உணர்த்தும் அடையாளம் தான் நற்கருணை. நமது வீடுகளில் இருக்கும் பொருட்களை நாம் பார்க்கும் பொது அந்த பொருளை பெற நாம் செய்த முயற்சிகள்: தியாகங்கள் நமது மனக்கண் முன் தோன்றும். எந்தளவிற்கு நாம் அதிகமாக தியாகம் செய்துள்ளோமோ அந்தளவிற்கு அந்த பொருளோடு நமக்கு உள்ள தொடர்பை; ஈடுபாட்டை மற்றும் உறவை அந்த பொருள் பிரதிபலிக்கும். அந்த பொருள் நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிடும். இதன் பின்னனியில் பார்க்கும் போது நாம் செய்த தியாகம் விலைமதிப்பளிக்க முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. நற்கருணையும் இறைவன் நமக்காக செய்த தியாகத்தின் மொத்த வெளிப்பாடு. இந்த உலகம் உயர்வு பெற யேசு தன்னையே அற்பணித்து; சிலுவை சுமந்து; இரத்தும் சிந்தி; சிலுவை சாவு என்ற சாபத்தை வாழ்வின் ஆதாரமாக மாற்றிய மிகப்பெரிய அன்பின் பரிசு தான் நற்கருணை.

பழைய ஏற்பாட்டில் கடவுள் மீது கொண்ட அன்பை காட்ட தன் மகனை பலிகொடுக்க துணிந்தார் அபிரகாம். கடவுள் குறுக்கிட்டு ஆட்டை பலியிட பணித்தார். புதிய ஏற்பாட்டில் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக தன் மகனை மனிதர்கள் கையில் அர்ப்பணித்து தியாகத்தின் வழியாய் வாழ்வுக்காண வழிகளை நமக்கு காட்டினார் இறைவன். அன்பும் தியாகமும் எங்கு இணைகின்றதோ அங்கே வாழ்வுக்காண வழி பிறக்கின்றது. ஆம் நமது வாழ்வுக்கான மூலமாக; ஊற்றாக நற்கருணை அமைந்திருக்கின்றது. இந்த நற்கருணையை உலகிற்கு பிரசன்னபடுத்தும் மிகப்பெரிய கொண்டாட்டம் தான் திருப்பலி. இந்த அளவிற்கு மேன்மை கொண்ட திருப்பலியை புறக்கணிக்கும் மனப்பாண்மை இன்று அதிகரித்து வருகின்றது. ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்: வேலை காரணமாக திருப்பலியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு குறைவு. ஆனால் பிள்ளைகளை தவறாமல் திருப்பலிக்கு அனுப்பி வைப்பேன். தினமும் தவறாமல் வீட்டில் செபம் சொல்வோம். திருப்பலில் கலந்து கொள்வதைவிட ஏழைகளுக்கு உதவி செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். மேலும் கூறினார் ஏழைகளுக்காக பணிபுரிந்த கல்கத்தா அன்னை தெரெசாள் கூறியுள்ளார்: “பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்! பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்கு பதிலாக சேவை செய்யுங்கள் கடவுளே உங்கள் அருகே வருவார்“. அதை என் வாழ்வில் பின்பற்றி வருகின்றேன் என்றார். நான் குறுக்கிட்டு கூறினேன்: அதே கல்கத்தா அன்னை தெரெசாள் தான் தனது சகோதரிகளுக்கு “சேவை செய்ய செல்வதற்கு முன்பு காலையில் திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கெடுக்காமல் மக்கள் சேவைக்கு செல்ல கூடாது, மக்கள் சேவை முடித்து விட்டு மாலை இல்லம் திரும்பும் சகோதரிகள் ஒரு மணிநேரம் நற்கருணை முன்பு செபத்தில் செலவிட வேண்டும். காரணம் காலையில் நாம் கொண்டாடும் திருப்பலி தான் நாள் முழுவதும் நாம் செய்யும் சேவைக்கு வலிமை தருகிறது. மாலை நற்கருணை ஆராதனையில் நாள் முழுவதும் இறைவன் நமக்கு செய்த உதவிகளுக்கு நன்றி சொல்வது மிகவும் அவசியம்“ என்று தனது சபையின் சட்டபுத்தகத்தில் குறிபிட்டுள்ளார். அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன். நம்மில் சிலர் சில நேரங்களில் புனிதர்களின் போதனைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி புரிந்துகொள்ளும் மனப்பாண்மை சாட்சிய வாழ்வுக்கு ஆதாரமாக அமைந்திட முடியாது. அதுமட்டுமல்ல திருப்பலியை புறக்கணிக்கும் கிறிஸ்தவ வாழ்வு கண்டிப்பாக மாற்றம் பெற வேண்டும். ‘என் பிள்ளைகள் எனது தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை‘ என்று குறை கூறும் பெற்றோர்களே நாம் நமது வாழ்வின் ஆதாரமாகிய யேசுவின் கல்வாரி பலியை புரிந்துகொள்ளாமல் செயல்படுவதை நாம் மாற்றிக் கொள்ளாமல் பிள்ளைகளை குறை கூறுவது எப்படி சரியாக இருக்கமுடியும். சிறு வயது முதல் பிள்ளைகளிடம் எத்தகைய உணர்வுகளை நாம் வெளிபடுத்துகின்றோமோ அதைத்தான் பிள்ளைகள் நம்மிடம் வெளிபடுத்துவார்கள். நமது வாழ்வின் ஆதாரமாகிய திருப்பலியை நமது குடும்பத்தின் அனைத்து செயல்பாடுகளிலும்; நாம் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் மையமாக, ஆதாரமாக கொண்டு சாட்சிய வாழ்வை தொடருவோம்.
[2014-05-13 21:00:18]


எழுத்துருவாக்கம்:

Pater.John Sowri Charles ocd
Karmeliten Kloster
Würzburg
Germany.