ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
என்னைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?
பாகம் -ஐந்து

என்னைப் பற்றி நான் என்ன தெரிந்து கொள்ளவேண்டும்? காலையில் எழுகின்றேன், பகல் முழுவதும் உழைக்கின்றேன், இரவு படுக்கைக்கு செல்கின்றேன். குடும்பத்திற்காக உழைப்பதற்கே நேரம் போதவில்லை, இதில் என்னைப்பற்றி நான் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன். எனது பிள்ளைகளின் வளர்ச்சி தான் என் வளர்ச்சி. அதற்காக என்னைப் பற்றி நான் ஏன் கவலைபட்டு என் நேரத்தை செலவிட வேண்டும் என்று அறிவு பூர்வமாக பதிலளிப்பது போல் சில நேரங்களில் நாம் நினைக்கின்றோம். ஆனால் இது சரியான பதில் தானா? என்று இறைவார்த்தை பின்னணியில் யோசிப்போம்.

மாற்கு நற்செய்தி 12: 29-34 „அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்! உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழுமனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. "உன்மீது நீ அன்புகூருவது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூருவாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும், எரிபலிகளையும், வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார்." யேசுவிடம் பாராட்டு பெற்ற மறைநூல் அறிஞர், அவர் தந்த பதிலுக்கே அவர் இறையாட்சிக்கு தொலைவில் இல்லை என்று இயேசு கூறினார். இன்னும் அவர் அந்த வார்த்தைகளை வாழ்ந்து காட்டியிருந்தால் இறையாட்சிக்கு சொந்தமாகியிருப்பார். தன்னிடம் அன்புகொள்வதும் இறையாட்சியின் அடிப்படை பண்புகளில் ஒன்று என்பது தான் உண்மை. ஆனால் பல நேரங்களில் தன்னிடம் அன்புகொள்வது சுயநலம் என்று நினைகின்றனர். தன்னை அன்பு செய்வது சுயநலம் அல்ல; தன்னை மட்டுமே அன்பு செய்வதுதான் சுயநலம். அதுமட்டுமல்ல தன்னை அன்பு செய்யத்தெரியாமல் எப்படி தனது பிள்ளையை அன்பு செய்யமுடியும் அல்லது பிள்ளைக்காக தியாகம் செய்யமுடியும். நமது சாட்சிய வாழ்வில் நம்மை நாமே அன்புசெய்யத் தெரியாமல் அடுத்து இருப்பவரை மட்டும் எப்படி அன்பு செய்யமுடியும்.

மனிதனை அடிப்படையில் மூன்று அம்சங்களாக பிரிக்கின்றனர்: உடல், அறிவு மற்றும் மனம் (ஆன்மா). இந்த மூன்று அடிப்படை அம்சங்களையும் சற்று புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். நமது உடல் இறைவன் நமக்கு தந்த மிகப்பெரிய பரிசு. மனித உடலின் அவசியத்தை நாம் உணர்ந்து கொண்டுள்ளதை விட கடவுள் அதிகம் உணர்ந்துள்ளார். அதனால் தான் நம் அனைவரையும் மீட்க மனித உடல் எடுத்து குழந்தையாக பிறந்தார், மனிதஉடலில் பாடுபட்டு, மனித உடலோடு உயிர்த்தெழுந்தார். இந்த மனித உடலை செயல்பட வைக்க நமக்கு அறிவு தேவைப்படுகிறது. மனித அறிவு நமது உடல் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுகின்றது. ஆனால் நமது அறிவால் வழிநடத்தப்படும் உடல் செயல்பாடுகள் சில நேரங்களில் நம்மை வெற்றிக்கும் அழைத்து செல்கிறது, சில நேரங்களில் தோல்விக்கும் அழைத்து செல்கிறது. நமது அறிவை வழிநடத்த இறைவன் கொடுத்த ஆற்றல் தான் மனம் (ஆன்மா). நமது மனம் (ஆன்மா) நமது அறிவு மற்றும் உடல் இணைந்து செயல்படும் போதுதான் அது ஒரு செயலாக மாறுகிறது. அதைதான் மனிதசெயல் என்று நாம் அங்கீகாரம் செய்கின்றோம். சாட்சிய வாழ்வுக்கு இந்த மூன்று அம்சங்களும் இணைந்து செயல்படவேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பது மனிதசெயல்பாடுகளில் சுயநலம் கலந்துள்ளது, போட்டி பொறாமை கலந்துள்ளது, சோம்பேறித்தனம் கலந்துள்ளது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்த மூன்று அம்சங்களில் ஏற்படும் முரன்பாடு தான். சில நேரங்களில் நாம் உடல் சார்ந்த முடிவுகளை பின்பற்றுகின்றோம், சில நேரங்களில் அறிவு சார்ந்த முடிவுகளை பின்பற்றுகின்றோம், சில நேரங்களில் மனம் (ஆன்மா) சார்ந்த முடிவுகளை பின்பற்றுகின்றோம். எதை சார்ந்து நாம் முடிவு எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல, மாறாக எடுத்த முடிவை நமது உடல், அறிவு மற்றும் மனம் (ஆன்மா) இணைந்து செயல்படுத்துகின்றதா என்பது தான் மிகவும் அவசியம். சாட்சிய வாழ்வின் அடிப்படை அம்சமும் அதுதான். நமது செயல்பாடுகளில் கவனம் செலுத்தத்துவோம். கிறிஸ்துவின் சாட்சிகளாக நமது பயணத்தை தொடருவோம்.
[2014-04-08 22:05:00]


எழுத்துருவாக்கம்:

Pater.John Sowri Charles ocd
Karmeliten Kloster
Würzburg
Germany.