யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-11-19

(இன்றைய வாசகங்கள்: நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31,திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1),திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30)




விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது. விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது. விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது. விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது. உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.,


திருப்பலி முன்னுரை

''உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்... இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்'' (மத்தேயு 25:29)

திருமகன் இயேசுவில் அன்போடு இன்று ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன். இன்று பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு. நமக்கு ஆசி வழங்கி, நல் வாழ்வைக் காணும்படி செய்யும் நம் தந்தையாம் இறைவனின் திருப்பாதத்தில் ஒரே குடும்பமாக ஒன்று கூடியுள்ளோம்.

இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைத்துள்ளார். அழைத்த இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஏராளமான அருள்வரங்களை கொடுத்து, நமக்கு பல திறமைகளையும் கொடுத்துள்ளார். அந்த திறமைகளை நாம் மட்டும் அனுபவித்தால் போதாது. அதை மற்றவர்களுக்கு கொடுத்து, பகிர்ந்து பயனடைய வேண்டும். எனவே வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நமது திறமைகளை வெளிப்படுத்திடவும், அதை வளர்த்து கொள்ளவும் தூய ஆவியானவர் நமக்கு துணை புரிந்திடவும், இறைவனின் அருள் நம்மில் இருக்கவும் வேண்டுமென்று தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

திறமை வாய்ந்த பெண், தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

இரண்டாம் வாசகம்

திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1.எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா!

எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு விழிப்புடன் காத்திருந்து அவருடன் நிலைவாழ்விற்குச் செல்ல முன்மதி உடையவர்களாகத் தங்கள் வார்த்தைகளிலும், வாழ்விலும் ஒன்றிணைந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சீயோனிலிருந்து எமக்கு ஆசி வழங்கும் தந்தையே!

எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல்வாழ்வைக் காணும்படி செய்யும் தந்தையே!

குடும்ப அமைதி, உடல் நலம், வதிவிட அனுமதி, விடுதலை வாழ்வு, குழந்தைப்பேறு அகியவற்றிற்காக ஏங்கித் தவிக்கும் அனைவர் மீதும் கருணைகூந்து அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. கருணையின் தேவா!

எம் பங்கிலுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா!

எங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வெளியிடங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் எம் சகோதரச் சகோதரிகளை உம் திருமுன் நினைவுகூர்கிறோம். அங்கு அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் உமது உடனிருப்பை உணர்ந்து நல்வாழ்வு வாழ்ந்திடவும், பாச உணர்வுகளுடன் தங்கள் குடும்பங்களோடு ஒன்றிணைந்திருக்கத் தேவையான வரங்களை அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. கருணைத் திருவுருவே - காத்து நிற்கும் பேரருளே - எம் இறைவா!

இறைநம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, எதிர்நோக்கா பொழுதுகளில் இறப்பினைச் சந்திக்க நேர்ந்திருக்கும் எண்ணற்ற விசுவாசிகளுக்காக மன்றாடுவோம். கருணைத் திருவுருவே - காத்து நிற்கும் பேரருளே - எம் இறைவா! நரை திரை பருவங்களில் நலிவுற்று மரித்தவர்கள் - பிணிகளின் தாக்கத்தால் நம்மைப் பிரிந்து சென்றிருப்பவர்கள் எதிர்பாரா விபத்திற்கு இலக்காகி இறந்தவர்கள் - இத்தகு விசுவாசிகள் இறை இரக்கத்திற்கு உள்ளாகவும், இவர்களை வான்வீடு வரவேற்றுக் கொள்ளவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

7. எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா!

எங்கும் நல்ல மழையைக் கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதரச் சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

8. ‘உயிர்ப்பும், உயிரும் நானே; என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்” - இது நமதாண்டவர் இயேசு, தமது மேலோங்கிய பேரன்பால் நமக்குக் கூறும் ஆறுதல்மொழி மட்டுமல்ல இது - மீட்பை நாமனைவரும் கண்டடைய அவர் காட்டுகின்ற அருளின் வழியும் கூட.

இறைநம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, எதிர்நோக்கா பொழுதுகளில் இறப்பினைச் சந்திக்க நேர்ந்திருக்கும் எண்ணற்ற விசுவாசிகளுக்காக மன்றாடுவோம். கருணைத் திருவுருவே - காத்து நிற்கும் பேரருளே - எம் இறைவா! நரை திரை பருவங்களில் நலிவுற்று மரித்தவர்கள் - பிணிகளின் தாக்கத்தால் நம்மைப் பிரிந்து சென்றிருப்பவர்கள் எதிர்பாரா விபத்திற்கு இலக்காகி இறந்தவர்கள் - இத்தகு விசுவாசிகள் இறை இரக்கத்திற்கு உள்ளாகவும், இவர்களை வான்வீடு வரவேற்றுக் கொள்ளவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்'' (மத்தேயு 25:29)

பயன்படுத்தாத செல்வம் பாழாய்ப்போகும் என்னும் உண்மையை இயேசு நமக்குக் கற்பிக்கிறார். வெவ்வேறு அளவில் தாலந்துகளைப் பெற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் செல்வம் ஈட்டினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாலந்தைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்துவைத்தார். கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடைகள் பல. அவற்றை நாம் நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்ய முன்வரவேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற காலம் குறுகியது, நாம் பெற்றுள்ள கொடைகளும் சில இலட்சியங்களை அடைய வேண்டும் என நம் உள்ளத்தில் எழுகின்ற ஆர்வங்களும் எல்லைகளுக்கு உட்பட்டவை. இவற்றை அறிவோடு பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாகச் சிலர் தாம் பெற்ற கொடைகளை மனம்போன போக்கில் செலவழித்து வீணடிக்கிறார்கள்; வேறு சிலரோ தம் கொடைகளைப் பத்திரமாகப் பொதிந்துவைத்து யாருக்கும் பயன்படா வண்ணம் அழிந்துபட விட்டுவிடுகிறார்கள். இந்த இரு போக்குகளுமே தவறானவை. எதிர்காலத்தைப் பற்றி யாதொரு கவலையும் இல்லாமல் இருப்பதும் தவறு, எதிர்காலத்தில் என்ன நிகழ்ந்துவிடுமோ என்னும் அச்சத்தால் வாழ்க்கையை வீணடிப்பதும் தவறு.

வாழ்க்கையில் நம்மைத் தேடி வருகின்ற சவால்களை நாம் துணிவோடு சந்திக்க வேண்டும். நன்மை செய்வதில் ஈடுபாடு வேண்டும். இத்தகைய துணிச்சலான செயல்பாடு இல்லாத இடத்தில் இலட்சியங்கள் படிப்படியாக மடிந்துபோகும். எனவே, இயேசு அறிவிக்கின்ற நற்செய்தியை உள்வாங்கி அதன்படி நடக்க விரும்புவோரிடத்தில் துணிந்து செயல்படுகின்ற மன நிலை வளர வேண்டும். கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடைகளை நன்முறையில் செலவிட்டு உலகம் உய்ந்திட நம்மை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இயேசு நமக்கு விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பெற்ற கொடைகளை நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்வதில் எங்களை ஈடுபடுத்த அருள்தாரும்.