யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் புதன்கிழமை
2017-10-25




முதல் வாசகம்

நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்;
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18

சகோதரர் சகோதரிகளே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள். பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது. எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள். முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.
திருப்பாடல்கள் 124: 1-3. 4-6. 7-8

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. -பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' (லூக்கா 12:48)

திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். அப்போது வீட்டுப் பணியாளர்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும் கதவைத் திறந்து அவரை வரவேற்று, அவருக்குப் பணிவிடை செய்வதே முறை. ஆனால் வீட்டுத் தலைவரே பணியாளரைப் பந்தியில் அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்தால் அது ஆச்சரியமான செயல்தான். இவ்வாறு ஓர் உவமையை இயேசு கூறியதும் பேதுரு அந்த உவமையில் வருகின்ற பணியாளர் யார் என்றொரு கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு இயேசு அளித்த பதில், ''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' என்பதே. கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்திச் செல்கின்ற பணி வீட்டுப் பொறுப்பாளராகிய பேதுரு போன்ற திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமக்குக் கொடுக்கப்பட்ட சலுகை, பதவி, அந்தஸ்து ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, தமக்கென்று ஆதாயம் தேடுகிறவர்களாக அன்றைய திருத்தூதர்களோ இன்றைய திருச்சபைத் தலைவர்களோ செயல்படலாகாது என இயேசு விளக்கிச் சொல்கின்றார்.

கடவுள் நமக்குத் தருகின்ற திறமைகளும் பொறுப்புகளும் பிறருடைய நலனுக்குப் பயன்பட வேண்டும். கடவுளிடமிருந்து வருகின்ற கொடைகள் நமக்குத் தரப்படவேண்டும் என நாம் உரிமை கொண்டாடுவது சரியல்ல. ஏனென்றால் நாம் உரிமையாளர் அல்ல, மாறாக, பொறுப்பாளர் மட்டுமே. பொறுப்பாளராகிய நாம் உரிமையாளராகிய கடவுளுக்குக் கடன்பட்டவர்கள்; எனவே, நம்மிடம் தரப்பட்ட பொறுப்பை நாம் எவ்வாறு செயல்படுத்தினோம் என்பது குறித்துக் கடவுளின் முன்னிலையில் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். ஆக, மிகுதியாகப் பொறுப்புப் பெற்றவர்களிடமிருந்து மிகுதியாக எதிர்பார்க்கப்படும் என இயேசு கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தும். கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பொறுப்பு நாம் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதும் அனைவரும் கடவுளைக் கண்டடைய நாம் வழியாக வேண்டும் என்பதுமே. கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதை அவருக்கு அளிக்க நாம் தயாரா?

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை நன்றியோடும் கடமையுணர்வோடும் செயல்படுத்த அருள்தாரும்.