யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் சனிக்கிழமை
2017-10-21




முதல் வாசகம்

எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18

சகோதரர் சகோதரிகளே, உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் ``எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். ``உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்'' என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல்கள் 105: 6,7. 8-9. 42-43

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி

42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்' என்றார்'' (லூக்கா 12:10)

தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் என்னும் போதனை மத்தேயு நற்செய்தியிலும் மாற்கு நற்செய்தியிலும் உண்டு (காண்க: மத் 12:32; மாற் 3:28-29). தீய ஆவிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்த இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலின் சக்தியைக் கொண்டே அவ்வாறு செயல்பட்டார் என யூத மறைநூல் அறிஞர் குற்றம் சாட்டினர். இயேசுவிடம் கடவுளின் சக்தி துலங்குகிறது என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இத்தகைய மனப்பான்மைதான் ''தூய ஆவிக்கு எதிரான பாவம்'' என மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் உள்ளது. ஆனால் லூக்கா நற்செய்தியிலோ இப்போதனை இன்னொரு சூழலில் வழங்கப்படுகிறது. அதாவது, இயேசுவைப் பின்செல்கின்ற சீடர்கள் அவரைப் பற்றியும் அவர் அறிவித்த இறையாட்சி பற்றியும் எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எதிர்ப்புகள் எழக் கூடும். அந்த நேரங்களிலும் சீடர்கள் மன உறுதி தளர்ந்துவிடக் கூடாது.

துணிந்து நற்செய்தியை அறிவிப்போருக்குத் தூய ஆவியின் துணை எப்போதுமே இருக்கும். இந்தத் தூய ஆவி நம் உள்ளத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி எழுப்புகிறார்; நாம் நற்செய்தி வழியில் நடந்திட நமக்கு மன உறுதி தருகிறார்; நம் வாழ்க்கைச் சூழலில் நாம் தடைகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்க நமக்கு சக்தி வழங்குகின்றார். இந்தத் தூய ஆவியைப் பழித்துப் பேசுவோர் கடவுளின் செயல்பாட்டையே எதிர்ப்போர் ஆவர். எனவே, அவர்கள் உளமார மனம் வருந்தி, கடவுளின் பக்கம் திரும்பாவிட்டால் அவர்கள் கடவுளின் துணை தங்களுக்குத் தேவை இல்லை என முடிவுசெய்துவிட்டார்கள் எனவே நாம் கருத வேண்டும். எனவேதான் இயேசு ''தூய ஆவியைப் பழித்துரைப்போர் மன்னிப்புப் பெற மாட்டார்'' (லூக் 12:10) என்றுரைத்தார். நம் வாழ்விலும் தூய ஆவி வல்லமையோடு செயலாற்றுகின்றார். அவருடைய தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து, அவரால் வழிநடத்தப்பட நாம் திறந்த உளம் கொண்டவர்களாக மாறிட வேண்டும். ''தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம்'' (1 தெச 5:19) என்று பவுல் கூறுவது இவண் கருதத் தக்கது.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவியால் வழிநடத்தப்பட எங்களையே காணிக்கையாக்க அருள்தாரும்.