யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் வியாழக்கிழமை
2017-10-05




முதல் வாசகம்

திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார்.
நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 1-4, 5-6, 7b-12

அந்நாள்களில் மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர். அவ்வாறே ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண்பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிகொடுத்தனர். திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி ``ஆமென்!ஆமென்!'' என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர். ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: ``இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்'' என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை'' என்று கூறினார். எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, ``அமைதியாய் இருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்'' எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள். எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.
திபா 19: 7. 8. 9. 10

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில் இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, `எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, 'நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்' என்றார்'' (லூக்கா 10:1-2,5-6)

இயேசுவின் பணியை ஆற்றுவதற்குச் சீடர்கள் தேவைப்பட்டார்கள். அவர் எழுபத்திரண்டு பேரை அனுப்பி இறையாட்சி பற்றிய நற்செய்தியை அவர்கள் அறிவிக்க வேண்டும் எனப் பணிக்கின்றார். அப்பணியை ஆற்றச் செல்வோர் எளிமையான முறையில் தோற்றமளிக்க வேண்டும் எனவும், ஒரு மாற்றுக் கலாச்சாரப் பாணியில் மக்கள் முன் செயல்பட வேண்டும் எனவும் ( (லூக் 10:4) இயேசு அறிவுறுத்துகிறார். மேலும் இயேசுவால் அனுப்பப்பட்ட தூதர்கள் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். ''ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல'' (லூக் 10:3) அவர்கள் செல்வார்கள். இவ்வாறு பணியாற்றும் போது அவர்கள் ''ஊர்களுக்கும்'' ''வீடுகளுக்கும்'' சென்று இறையாட்சி பற்றி அறிவிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் நிகழ்கின்ற பணி லூக்கா நற்செய்தியில் முதன்மை பெறுகிறது. வழியில் சந்திக்கின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் (லூக் 10:4) என்று கூறிய அதே இயேசு தாம் அனுப்பிய சீடர்கள் ''எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறும்படி'' கேட்கின்றார் (காண்க: லூக் 10:5). இங்கே குறிப்பிடப்படுகின்ற ''அமைதி'' என்னும் சொல் வழக்கமான வாழ்த்துச் சொல் மட்டுமல்ல. அமைதி என்பது சண்டை சச்சரவு இல்லாத நிலை என்பதும் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடுகின்ற ''அமைதியும்'' அவர் வழங்குகின்ற ''மீட்பும்'' ஒன்றே. கடவுள் தம் மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு முழு நலன் வழங்கி, அவர்களைக் கடவுளோடு உறவாடச் செய்கின்ற நிலையே ''அமைதி'' ஆகும். இத்தகைய நல்ல செய்தியை மக்கள் ஒன்றில் ஏற்பார்கள் அல்லது அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

இயேசு வழங்குகின்ற அமைதியும் நல வாழ்வும் மீட்பும் அவருடைய சீடர்கள் வழியாக மக்களுக்கு எப்போதும் பறைசாற்றப்படுகிறது. கடவுளின் கொடையை விரும்பி ஏற்போர் உள்ளத்தில் உண்மையான மாற்றம் நிகழும். அவர்களும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து மகிழ்ச்சியடைவார்கள். கடவுளின் கொடையை நன்மனத்தோடு ஏற்காத மனிதருக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. ''இந்த வீட்டுக்கு அமைதி'' என்பது ''இந்தக் குடும்பத்திற்கு அமைதி'' என்றே பொருள்படும். லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் ''குடும்பத் திருச்சபை'' அல்லது ''வீட்டுத் திருச்சபை'' என்னும் கருத்து முக்கியமானது. அதாவது, தொடக்க காலத் திருச்சபை நற்செய்திப் பணி ஆற்றியது தொழுகைக் கூடங்களிலோ கோவில்களிலோ அல்ல, மாறாக, வீடுகளில் மக்கள் கூடி வந்து, ஒரு குடும்பமாக இணைந்து, இறைவேண்டலில் ஈடுபட்டார்கள்; கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்தார்கள்; நற்கருணை விருந்தைக் கொண்டாடினார்கள்; அன்புப் பணி ஆற்றினார்கள். இன்றைய திருச்சபையும் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது போற்றற்குரியது. நற்செய்திப் பணியும் குடும்பச் சூழலில் நிகழும்போது அதிக பயன் நல்கும் என்பது அனுபவ உண்மை.

மன்றாட்டு:

இறைவா, உம் குடும்பத்தில் எங்களை உறுப்பினராக ஏற்ற உம் அரும் செயலை வியந்து உமக்கு நன்றி கூறுகிறோம்.