யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
2017-10-01

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 18:25-28,பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9 ,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32)




வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்


திருப்பலி முன்னுரை

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும். உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! நல்லவரும், நேர்மையுள்ளவரும், பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றவரும், எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றவருமான நம் இறைத் தந்தையின் திரு நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

நமது ஆன்மிக வாழ்வை ஆய்வு செய்து பார்ப்பதற்கான சில வினாக்களை இன்றைய இறைவார்த்தைகள் முன்வைத்து நிற்கின்றன.

1. கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா?

2. அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?

3. எவர் தந்தையின் விருப்பப்படி செயல்படுபவர்?

4. கடவுளின்; வழியா நேர்மையற்றது? என்பவையே அவ் ஆன்மிக வினாக்களாகும்.

இதற்கு நான் கொடுக்கக் கூடிய பதில் என்ன? கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே நம்மிலும் இருக்கவேண்டும்! எனவே, ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து கடவுளின் மகிழ்ச்சியை நிறைவாக்கி, கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தராது, மனத் தாழ்மையோடு மற்றவர்களை நம்மிலும் உயர்ந்தவராகக் கருதி, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

பொல்லார் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 18:25-28

ஆண்டவர் கூறுவது: "தலைவரின் வழி செம்மையானதாக இல்லை " என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி: அவர்கள் சாகமாட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; -பல்லவி

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11

சகோதரர் சகோதரிகளே! கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்: தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர் " என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32

அக்காலத்தில் இயேசு கூறியது: "இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், "மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் " என்றார். அவர் மறுமொழியாக, "நான் போக விரும்பவில்லை " என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, "நான் போகிறேன் ஐயா! " என்றார்: ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? " என்று கேட்டார். அவர்கள் "மூத்தவரே " என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், "வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை: அவரை நம்பவுமில்லை " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பெரிதும் போற்றுதலுக்கு உரிய அன்புத் தந்தையே எம் இறைவா!

உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே! என்பதனைத் தங்கள் மனங்களில் நிலைநிறுத்தி, இயேசுவின் நற்செய்திக்கு ஏற்பப் பணிகள் செய்து தம் வாழ்வை உமக்காக அர்பணிக்கத் தேவையான அன்பு, நீதி, தாராளக் குணம் ஆகியவற்றை நிறைவாய் பெற்ற தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்ற தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாமும், ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து உம்முடைய மகிழ்ச்சியை நிறைவாக்கி, கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தராது, மனத் தாழ்மையோடு மற்றவர்களை எம்மிலும் உயர்ந்தவராகக் கருதி, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொண்டு வாழுவதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் மீட்பராம் தந்தையே இறைவா!

தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுள்ள அனைவரும் உம் பாதைகளான: அன்பு, தாழ்ச்சி, பிறர் நலம், இரக்கம், சமநீதி போன்ற நற்பண்புகளை அறியச்செய்து, உமது உண்மை நெறியில் அவர்களை நடத்தி அவர்களுக்கு தலைமைத்துவத்தின் உண்மைத் தன்மையைக் கற்பித்தருளு வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கமும் கனிவும் நிறைந்த அன்புத் தந்தையே எம் இறைவா!

எம் குடும்பங்களில் அனைவரும் “உமது எண்ணங்கள் வேறு! எங்கள் எண்ணங்கள் வேறு” என்பதைத் தெளிவாய் உணர்ந்து, உமது எதிராய் முணுமுணுக்காமல் உமது உயரிய அன்பையும், நீதியையும் உணர்ந்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்கள் வானகத்தந்தையே, எம் இறைவா!

உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களாலும், பூமி அதிர்ச்சியலும் மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. சமூக மாற்றித்தின் நாயகனே எம் இறைவா!

எம் நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள் ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்துதால், நல்ல வழியில் அழைத்துச் செல்லும் தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. ஆதரித்தாளும் எம் இறைவா,

எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

சொன்னது ஒன்று... செய்தது இன்னொன்று !

இயேசுவின் படைப்பாற்றலில் வெளியான அற்புதமான இன்னொரு உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். மூத்த மகன் போகவிரும்பவில்லை என்று சொன்னான். பின்னர் மனந்திருந்தி வேலைக்குச் சென்றான். இளையவனோ போகிறேன் என்று சொன்னான். ஆனால், போகவில்லை. கேட்போரின் வாயிலிருந்தே மூத்த மகனே தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் என்னும் பதிலை இயேசு வரவழைத்தார்.

திருப்பலியிலும், வழிபாடுகளிலும், இறைவார்த்தையிலும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் விழிப்பூட்டும் ஓர் உவமையாக இது அமைகின்றது. நம்மைப் போன்றவர்கள் அந்த மூத்த மகனைப் போல அல்ல, இளைய மகனைப் போலவே செயல்படுகிறோம். இறைவனின் திருவுளத்தை நிறைவோற்றுவோம் என்று வாயால், மனதால் உறுதி கொள்கிறோம். ஆனால், சொன்னதுபோல, செயல்படுவதில்லை. மனித பலவீனத்தால், ஆர்வக்குறைவால், அ;ல்லது சோதனைகளின் சோர்வால் தடம் புரண்டுவிடுகிறோம். எனவே, ஆலயத்துக்கே வராதவர்கள், வழிபாடுகளில் ஆர்வம் காட்டாதவர்கள், இறைவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்--- ஆனால், இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் குறைந்தவர்களே என்பது புலப்படுகிறது. எனவே, நாம் விழிப்பாயிருப்போம். நம் செயல்கள் நம் எண்ணங்கள், சொற்களுக்கிசைய அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.

மன்றாட்டு:

உண்மையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் சொல்லுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வை எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எப்போதும்; இறைத்தந்தைக்குப் பிரியமானவர்களாக வாழும் அருளைத் தந்தருளும். ஆமென்.