யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வியாழக்கிழமை
2017-09-28




முதல் வாசகம்

என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்.''
இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 1: 1-8

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி: ``படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா? ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: `உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் விதைத்தது மிகுதி. அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவு அடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான். உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். `எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்;
திருப்பாடல்கள் 149: 1-2. 3-4. 5-6, 9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏரோது இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.. ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஏரோது இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக்கா 9:9)

இங்கே வருகின்ற ஏரோது வரலாற்றில் ''பெரிய ஏரோது'' என அழைக்கப்படுகின்ற மன்னன் அல்ல. மாறாக, அந்த மன்னனின் ஒரு மகனாகிய ''அந்திப்பா'' என்பவன். இவன் ஒரு ''குறுநில மன்னன்'' என லூக்கா குறிப்பிடுகிறார். பெரிய ஏரோதின் சாவுக்குப் பின் அவனுடைய அரசு பிளவுண்டது. அதில் கலிலேயா மற்றும் பெரேயா அடங்கிய பகுதி அந்திப்பாவுக்கு அளிக்கப்பட்டது. கலிலேயாவில்தான் இயேசுவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. அந்திப்பா தன் ஒன்றுவிட்ட சகோதரனான பிலிப்புவின் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டதைத் திருமுழுக்கு யோவான் கண்டித்தார். எனவே, அவன் அவரைக் கொன்றுபோட்டான். இயேசு மக்களுக்குக் கடவுளின் பெயரால் போதிக்கிறார் எனவும் புதுமைகள் பல நிகழ்த்துகிறார் எனவும் கேள்விப்பட்ட அந்திப்பா ஏரோது ''இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக் 9:9).

இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட பல மக்கள் அவரைக் ''காண'' விரும்பினார்கள். ஏரோதுவும் அவரைக் ''காண'' விரும்பினான். ஆனால் ஏரோது நேர்மையான உள்ளத்தோடு இயேசுவைக் காண விரும்பவில்லை. ஏற்கெனவே திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்ட ஏரோது இப்போது இயேசுவையும் ''காண'' விரும்பினான் என்றால் அது நல்ல எண்ணத்தோடு நிகழ்ந்ததல்ல என நாம் அறிந்துகொள்ளலாம். இயேசுவும் திருமுழுக்கு யோவானைப் போல ''கடவுளின் ஆட்சி'' பற்றிப் பேசினார். மக்கள் பலர் அவரை நாடிச் சென்றனர். ஆக, இயேசுவும் தனக்கு ஓர் எதிரியாக மாறிவிடுவாரோ என ஏரோது ஐயமுற்றதற்கு ஆதாரம் இருந்தது. எனவே, ஏரோது இயேசுவையும் ஒழித்துக் கட்டலாமா என சிந்தித்திருக்க வேண்டும். இன்று வாழ்கின்ற நாம் இயேசுவைத் தேடுகின்றோமா? அவரைக் காண விரும்புகின்றோமா? எதற்காக அவரைக் காண விரும்புகிறோம்? ஏற்கெனவே இயேசுவிடம் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் இயேசுவைக் ''காண'' விரும்புவதும் அவரைத் ''தேடுவதும்'' ஒரே ஒரு நோக்கத்திற்காகவே இருக்கும். அதாவது அவர்கள் இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து, அவரை இன்னும் அதிக ஆர்வத்தோடு பின்செல்ல விரும்புகிறார்கள். ஆனால் நேர்மையற்ற உள்ளத்தோடும் குறைகாண்கின்ற மன நிலையோடும் இயேசுவைத் ''தேடிய'' ஏரோதுவின் மன நிலை இன்றைய உலகில் நிலவத்தான் செய்கிறது. இயேசுவின் போதனைக்கு ஏற்ப வாழ்கின்ற மக்கள் பலர் உலகின்; பல பகுதிகளில் துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அரசியல் ஆதாயம் தேடுகின்ற சில சந்தர்ப்ப வாதிகள் இந்திய நாட்டில் கிறிஸ்தவ நம்பிக்கை வளர்வதைக் கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு, வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை நாமறிவோம். இயேசுவின் போதனையை நாம் மன உறுதியோடு கடைப்பிடித்து வாழ்வதே இந்த எதிர்ப்புகளுக்கு நாம் அளிக்கும் பதிலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை அன்பு செய்கின்ற உம்மையும் உம் திருமகனையும் தேடுவதில் நாங்கள் ஒருநாளும் ஓய்ந்துவிடாதிருக்க அருள்தாரும்.