யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் சனிக்கிழமை
2017-08-26




முதல் வாசகம்

உன்னைக் காக்கும் பொறுப்பினை உடைய ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே.
ரூத்து நூலிலிருந்து வாசகம் 2: 1-3, 8-11; 4: 13-17

நகோமிக்குப் போவாசு என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும் செல்வாக்கும் உடையவர்; எலிமலேக்கின் வழியில் உறவானவர். ரூத்து நகோமியிடம், ``நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண்கொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும்'' என்றார். அவரும், ``போய் வா, மகளே'' என்றார். ரூத்து ஒரு வயலுக்குப் போய், அறுவடையாள்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக, அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது. பிறகு, போவாசு ரூத்தை நோக்கி, ``பெண்ணே, நான் சொல்வதைக் கேள். இந்த வயலைத் தவிர வேறு எந்த வயலுக்கும் போய் நீ கதிர் பொறுக்க வேண்டாம். என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு. அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து, அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர்பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால், அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக்கொள்'' என்றார். ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, ``என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண்கொண்டு நோக்குகிறீர்? அயல் நாட்டுப் பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?'' என்று கேட்டார். போவாசு, ``உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்'' என்றார். இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று, அவரை மணந்துகொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்தபோது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, ``ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி! உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே; இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன் ஓங்கித் திகழுவதாக! புதுவாழ்வு உனக்கு அன்னவன் தருவான்; முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்; உன்பால் கொண்ட அன்பால், உனக்கு மைந்தர் எழுவரின் மேலாய் விளங்கும், மருமகள் அவனை ஈன்றவள் அன்றோ!'' என்று வாழ்த்தினார்கள். நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டார். அவரே அதைப் பேணி வளர்க்கும் தாயானார். சுற்றுப்புறப் பெண்கள். ``நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்'' என்று சொல்லி, அவனுக்கு `ஓபேது' என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.
திபா 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும்' என்றார்" (மத்தேயு 23:11)

பணிசெய்வதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர் இயேசு. அவர் பட்டங்களை எதிர்பார்த்துச் செயல்படவில்லை; பதவிகளைப் பெற வேண்டும் என்றோ, பிறர்மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றோ பிரும்பவுமில்லை. மாறாக, இயேசு தம்மை ஒரு தொண்டனாக அறிமுகப்படுத்தினார். எனவே, உண்மையான சிறப்பு நாம் பிறருக்குத் தொண்டாற்றுவதிலிருந்து பிறக்கவேண்டும். ரபி (போதகர்), தந்தை, ஆசிரியர் போன்ற பட்டங்கள் தம்மிலே தவறு என இயேசு கூறவில்லை. ஆனால் இத்தகைய பெயர்களைச் சொல்லி மக்கள் நம்மை அழைக்கிறார்கள் என்பதால் தற்பெருமை கொள்வதோ அதனால் பிற மனிதரைவிடவும் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதுவதோ தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசு விடுத்த எச்சரிக்கை திருச்சபைக்கும் திருச்சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்போருக்கும் தனிப்பட்ட விதத்தில் பொருந்தும். மத்தேயு காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ சமூகம் இதை அறிந்திருந்தது.

இன்றைய திருச்சபையும் பணிசெய்யும் சமூகமாகத் திகழவேண்டும். திருச்சபை பல பணிகளை ஆற்றுவது உண்மைதான். என்றாலும் அப்பணிகளில் ஈடுபடும்போது இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்றவேண்டும். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருப்பதை அறிவித்த இயேசு அந்த ஆட்சியில் நாம் புக வேண்டும் என்றால் பணிசெய்யும் மனநிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என நம்மிடம் கேட்கின்றார்,

மன்றாட்டு:

இறைவா, பிறருக்குப் பணியாற்றும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.