யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-08-22

அரசியான தூயகன்னிமரியாளின் விழா




முதல் வாசகம்

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4, 6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பது போல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் ஊழியர், அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.
திருப்பாடல்கள் 113: 1-2. 3-4. 5-6. 7-8

1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடரிடம், 'செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது' என்றார்'' (மத்தேயு 19:23-24)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதைவிட செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என இயேசு கூறிய பின்னணி என்ன? இயேசுவை அண்டிவந்த செல்வர் ஓர் இளைஞர். ஏராளமான செல்வம் அவருக்கு இருந்தது; ஆனால் செல்வத்தின்மீது அவர் கொண்டிருந்த பற்று இயேசுவின் நற்செய்தியின்மேல் அவர் கொண்ட பற்றைவிட மிகமிக அதிகமாயிருந்தது. எனவே, அந்த இளைஞர் இயேசுவைப் பின்செல்லாமல் ''வருத்தத்தோடு வீடு திரும்பினார்''. அப்போது இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய அறிவுரைதான் செல்வர் இறையாட்சியில் புகுவது கடினம் என்பது. செல்வம் என்பது கடவுளுக்கு எதிரானதா, செல்வம் இல்லாமல் உலகில் நாம் நன்மை செய்ய முடியாதே என்றெல்லாம் சிலர் தடை எழுப்பலாம். செல்வம் தன்னிலேயே தீமையானது என இயேசு கூறவில்லை. மாறாக, செல்வத்தின்மீது மனிதர் அளவுமிஞ்சிய பற்றுக்கொண்டு, கடவுளையும் பிறரையும் அன்புசெய்ய மறந்துவிடும்போது, உண்மையான பற்றினைக் கைவிடும்போது செல்வம் தீங்கிழைக்கும் கருவியாகிவிடுகிறது. இந்நிலையில் பாலஸ்தீனப் பகுதிகளில் காணப்பட்ட பெரிய விலங்காகிய ஒட்டகம் மிகச் சிறிய ஊசியின் காதில் நுழைவது எப்படி இயலாத ஒன்றோ, அப்படியே செல்வத்தையே பற்றிக்கொண்டு கடவுளை மறந்துபோகின்றவர்களும் இறையாட்சியில் பங்கேற்க இயலாது என இயேசு அறிவுறுத்தினார்.

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது கடினம் என்னும் கூற்றை ஓர் உருவகமாகவும் பார்க்கலாம். அதாவது, பெரிய மதில்களால் சூழப்பட்ட நகரங்களில் பொதுமக்கள் நுழைவதற்கென பெரிய வாயில் அமைந்திருக்கும். இரவு வேளையில் பெரிய வாயிலை மூடிவிடுவார்கள். சிறிய வாயில் மட்டுமே திறந்திருக்கும். இதன் வழியே நுழைய வேண்டும் என்றால் குனிந்து, கவனமாகக் காலெடுத்து வைத்தால்தான் இயலும். இத்தகைய சிறிய நுழைவாயிலை ''ஊசியின் காது'' என அழைப்பதுண்டு. இவ்வாயிலில் பெரிய விலங்காகிய ஒட்டகம் நுழைய முற்பட்டால் முழங்காலில் அமர்ந்து, தலைகுனிந்து, தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும். இது நடைமுறையில் கடினமானதே. எப்படியாயினும், செல்வத்தைக் குவிப்பதால் விண்ணரசு செல்வோம் என நினைப்போர் உண்மையான செல்வம் கடவுளைப் பற்றிக்கொள்வதே என்பதை அறியாதவர்களே. நீதிமொழிகள் நூல் கூறுவதுபோல, ''முறைகேடாய் நடக்கும் செல்வரை விட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்'' (நீமொ 28:6).

மன்றாட்டு:

இறைவா, இறையாட்சி என்னும் செல்வத்தை நாங்கள் தேடிக் கண்டடையவும் உம் அன்பில் நிலைத்துநின்று வாழவும் எங்களுக்கு அருள்தாரும்.