யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் வியாழக்கிழமை
2017-06-15




முதல் வாசகம்

"இருளிலிருந்து ஒளி தோன்றுக!" என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்
புனித பவுல் 2கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3;15,4;1,3-6

சகோதர சகோதரிகளே இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் 1 கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம்.உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது. 3 நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. 4 இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காணமுடிவதில்லை. 5 நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப்பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. 6 "இருளிலிருந்து ஒளி தோன்றுக!" என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
திருப்பாடல்கள் 85;9-13

9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.பல்லவி

11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்.பல்லவி

13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். .பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 5;20-26

அக்காலத்தில் யேசு தம் சீடர்களுக்கு கூறியதாவது மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். 21 "கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உங்கள் நெறி உயர்ந்திருக்கட்டும் !

“மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட, உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்” என்னும் ஆண்டவரின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் வாழ்வு முறை சாதாரண மக்களைவிட, மேலானதாக, கடினமானதாக இருந்தது. லூக் 18ல் வருகிற உவமையில் பரிசேயன் வாரத்தில் இரு நாள்கள் நோன்பிருப்பதாகவும், வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியைக் காணிக்கையாகக் கொடுப்பதாகவும் பார்க்கிறோம். எனவே, இறைப்பற்று, சட்டங்களைப் பின்பற்றுவதில் அவர்கள் பிரமாணிக்கமுள்ளவர்களாக இருந்தனர். ஆனால், ஆண்டவர் இயேசுவே சுட்டிக்காட்டியதுபோல, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் போல, வெளிப்பார்வைக்கு நேர்மையாளர்களாகவும், உள்ளே முரண்பாடுகள் நிறைந்தவர்களாகவும் விளங்கினர். இறையன்பில் சிறந்து விளங்கினர், ஆனால், பிறரன்பு இல்லாமல் வாழ்ந்தவனர். எனவேதான், அவர்களின் ‘நெறியைவிட, உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்’ என்று இயேசு கூறும்பொழுது, அவர்களின் நல்லவற்றை எடுத்துக்கொண்டு, அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து வாழுங்கள் என்று அழைக்கிறார். ஆகவே, நாம் செப வாழ்விலும், பணி வாழ்விலும் அர்ப்பணத்தோடு வாழும்போது, நமது வாழ்வு இயேசுவின் எதிர்பார்ப்புக்கேற்றவாறு அமையும்.

மன்றாட்டு:

ஆவியைத் தருபவரான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் தந்த அழைப்;பை ஏற்று, எங்கள் வாழ்வு பரிசேயர், மறைநூல் அறிஞரின் வாழ்வைவிட மேலானதாக அமைய அருள்தாரும். ஆமென்.