யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் திங்கள்கிழமை
2017-06-12




முதல் வாசகம்

நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்
2கொரிந்தியர்1;1-7

1 கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது; 2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! 3 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். 4 கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. 5 கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்; அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம். 6 ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது. 7 நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கு
திருப்பாடல்கள் 34-1-8

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும் பல்லவி.

2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். பல்லவி

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.பல்லவி

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு5;1-12

1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். 2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை; 3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். 5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். 7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். 8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். 9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். 10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. 11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! 12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'...'' (மத்தேயு 5:1-3)

''மலைப் பொழிவு'' என்னும் பெயரில் வருகின்ற மத்தேயு நற்செய்திப் பகுதி (மத்தேயு அதி. 5-7) தனிச் சிறப்பு வாய்ந்தது. அதன் தொடக்கத்தில் நாம் காண்பது ''பேறுபெற்றோர்'' என இயேசு கூறுகின்ற சொற்றொடர்கள். ஒன்பது முறை இச்சொல் வருகிறது (மத் 5:3-12). இயேசு ''பேறுபெற்றோர்'' என வாழ்த்துகின்ற மனிதர் யார் என்னும் கேள்விக்குப் பதில் கூறுவதுபோல அமைந்திருப்பது முதல் கூற்று ஆகும்: ''ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'' (மத் 5:3). கடவுளாட்சியே மத்தேயு நற்செய்தியில் ''விண்ணரசு'' என அழைக்கப்படுகிறது. ''விண்'' என்னும் சொல் நாம் அண்ணாந்து பார்த்தால் தெரிகின்ற வானத்தைக் குறிப்பதில்லை; மாறாக, நம்மைக் கடந்து வாழ்கின்ற கடவுளைக் குறிக்கிறது. எனவே ''விண்ணரசு'' என்பது கடவுளின் ஆட்சி எனப் பொருள்படும். கடவுளின் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் ''ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருக்க வேண்டும்''. இங்கே ஏழையர் எனக் குறிக்கப்படுவோர் உலகச் செல்வங்கள் இல்லாமல் வறுமையில் வாடுவோர் மட்டுமல்ல. ஏழையர் என்போர் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிழைக்க வழியறியாமல் வாடுவோர், தங்கள் அன்றாட வாழ்க்கைக்குப் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோர், சமுதாயச் சம்பிரதாயங்களின் ஆதிக்கத்தின் காரணமாகக் கூனிக் குறுகி நிற்போர் போன்ற எண்ணிறந்த மக்களை உள்ளடக்குவர்.

இவ்வாறு பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்ற மக்கள் யாரிடம் அடைக்கலம் புகுவார்கள்? அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர் கடவுள் ஒருவரே. எனவே, ''ஏழையரின் மனநிலை'' நமதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் கடவுளை நம்பி வாழ வேண்டும். நம் சொந்த சக்தியால் பெரிதாக ஒன்றையும் நம்மால் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்து ஏற்று, நாம் கடவுளிடம் கையேந்தி நிற்க வேண்டும். அப்போது கடவுள் நம் கைகளை மட்டுமல்ல, நம் உள்ளத்தையும் வாழ்வையும் தம் கொடைகளால் நிரப்புவார். அவர் தருகின்ற உயர்ந்த கொடை அவருடைய வாழ்வில் நமக்குப் பங்களிப்பதே. இதையே நாம் ''விண்ணரசு'' என்கிறோம். கடவுளின் வாழ்வில் நாம் பங்கேற்கின்ற பேற்றினை இவ்வுலகிலேயே பெற்றுள்ளோம். இப்பேறு இறுதிக்காலத்தில் நிறைவாக மலரும். இயேசு நம்மைப் பேறுபேற்றோர் என வாழ்த்த வேண்டும் என்றால் நாம் அவர் எதிர்பார்க்கின்ற பண்புகளை நம் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும். கடவுளின் கொடையாக வருகின்ற ஆட்சியில் நாம் பங்கேற்க அழைக்கப்படுகிறோம். அந்த ஆட்சியை நமக்கு வழங்குகின்ற கடவுள் முன்னிலையில் நாம் ஏழையரின் உள்ளத்தோராக, கனிவுடையோராக, நீதி வேட்கை கொண்டோராக, இரக்கமுடையோராக, தூய்மையுடையோராக, அமைதியை நாடுவோராக, துன்பத்தின் நடுவிலும் கடவுளை நம்புவோராக வாழ்ந்திட வேண்டும் (மத் 5:3-12).

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சியில் நாங்கள் பங்கேற்று, பிறரையும் உம்மிடம் அழைத்துவர எங்களுக்கு அருள்தாரும்.