யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 7வது வாரம் சனிக்கிழமை
2017-06-03




முதல் வாசகம்

இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28;16-20,30-31

16 நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக் கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்துக் வந்தார். 17 மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, "சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைது செய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். 18 அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள். 19 யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், "சீசரே என்னை விசாரிக்க வேண்டும்" என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. 20 இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்" என்றார்30 பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று, 31 இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது;
திருப்பாடல்கள்11;4,-5,7

4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.பல்லவி

5 ஆண்டவர் நேர்மையாளரையும் வன்முறையில் "நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். 7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்றா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21;20-25

20அக்காலத்தில் பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, "ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? என்று கேட்டவர். 21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?" என்ற கேட்டார். 22 இயேசு அவரிடம், "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்றார். 23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?" என்றுதான் கூறினார். 24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். 25 இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்'' (யோவான் 21:25)

யோவான் நற்செய்தி நூலின் இறுதியில் காணப்படும் சொற்றொடர் இது: இயேசு செய்த அனைத்தையும் விரிவாக எழுதப் போனால் ''உலகமே கொள்ளாது'' (யோவா 21:23). இது ஒரு மிகைக் கூற்று என்பதில் ஐயமில்லை. ஆயினும், இங்கே இரு உண்மைகள் துலங்குவதை நாம் காண்கிறோம். முதலாவது, இயேசு பற்றிய செய்திகளை நமக்குத் தருகின்ற நற்செய்தி நூல்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகத் தொகுத்து, அவர் கூறியதையும் செய்ததையும் ஒன்றும் விடாமல் பட்டியலிட்டு, எப்போது எந்நிகழ்ச்சி நடந்தது எனப் பதிவு செய்த ''வரலாற்று ஏடுகள்'' அல்ல. மாறாக, நற்செய்தி நூல்களில் நாம் காண்பது இயேசுவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே. அவற்றையும் நற்செய்தி நூலாசிரியர்கள் இறையியல் பார்வையில் தொகுத்துள்ளனர். அதாவது, இயேசு கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டு வந்தார்; முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக முன்னறிவிக்கப்பட்ட மெசியாவாக இயேசு வந்தார்; கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை இயேசு அறிவித்தார்; அச்செய்தியை ஏற்று, மக்கள் மனம் மாறித் தம்மை ஏற்கவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்; கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து மீட்கிறார் என்பதன் அடையாளமாக இயேசு மக்களுக்கு நலமளித்தார்; கடவுளின் அன்பை இவ்வாறு மக்களோடு பகிர்ந்துகொண்டார்.

மேலும், இயேசு கடவுளை மனிதருக்கு வெளிப்படுத்தி, மனிதர் கடவுளையும் ஒருவர் ஒருவரையும் அன்புசெய்ய வேண்டும் என்னும் கட்டளையை அளித்தார். இறுதியாக, மனிதர் மட்டில் கடவுள் காட்டுகின்ற எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக இயேசு அவர்களுக்காகத் தம் உயிரையே கையளித்தார். இவ்வுலக சக்திகள் அவரை எதிர்த்து நின்று அவரைக் கொன்றுவிட்டதுபோலத் தோன்றினாலும் உண்மையிலேயே இயேசுவின் சாவு நம் வாழ்வுக்கு வழியாயிற்று. இறந்த இயேசுவைக் கடவுள் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்தார். உயிர்த்தெழுந்த இயேசு நம்மோடு தொடர்ந்து வாழ்ந்துவருகின்றார். இந்த இயேசுவைப் பற்றி அனைத்தையும் எழுதப்போனால் ''உலகமே கொள்ளாது'' (யோவா 21:25) என யோவான் கூறுவதில் அடங்கியுள்ள இரண்டாவது உண்மையை இங்கே காண்கிறோம். அதாவது, இயேசுவைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துவிட்டோம் என யாரும் கூற இயலாது. ஏனென்றால் அவரை அறிவது கடவுளை அறிவதற்கு இணையானது. ஆனால் கடவுளோ மனித அறிவைக் கடந்தவர். அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் சக்தி எல்லைக்கு உட்பட்ட மனித அறிவுக்கு இல்லை. எனவே, தோண்டத் தோண்ட ஊற்றெடுக்கின்ற நீரைப் போல நம் இதயத்தில் இயேசு பற்றிய அறிவு வளர வேண்டும்; அவர்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை தழைக்க வேண்டும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் கால வரலாறு இயேசு பற்றிய உண்மையை உலகுக்கு அறிவித்துக்கொண்டே இருக்கிறது.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை அறிந்து அன்புசெய்திட எங்கள் இதயங்களைப் புதுப்பித்தருளும்.