யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 7வது வாரம் திங்கட்கிழமை
2017-05-29




முதல் வாசகம்

"நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?" என்று கேட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19;1-8

1 அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, 2 அவர்களை நோக்கி, "நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்றார்கள். 3 "அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?" எனப் பவுல் கேட்க, அவர்கள், "நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்" என்றார்கள். 4 அப்பொழுது பவுல், "யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்" என்றார். 5 இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். 6 பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்பேச்சு பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். 7 அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். 8 பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சிபற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்
திருப்பாடல்கள் 68;1-6

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;பல்லவி

2 புகை அடித்துச் செல்லப்படுவது போல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போலக் கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.பல்லவி

4 கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்; மேகங்கள்மீது வருகிறவரை வாழ்த்திப் பாடுங்கள்; 'ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்; அவர்முன் களிகூருங்கள்.பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

>யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16;29-33

29 அக்காலத்தில் சீடர்கள்,யேசுவிடம் "இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். 30 உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்" என்றார்கள். 31 இயேசு அவர்களைப் பார்த்து, "இப்போது நம்புகிறீர்களா! 32 இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். 33 என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்' என்றார்'' (யோவான் 16:33)

தந்தை வகுத்த திட்டத்தின்படியே இயேசு துன்பங்கள் அனுபவித்து, சாவுக்கு உள்ளாகி, உயிர்பெற்று எழுவார் என்னும் செய்தியை அவருடைய சீடர்கள் புரிந்துகொள்ள இயலாமல் திணறினார்கள். இயேசு அவர்களுக்கு மீண்டும் மீண்டும் தம் இறுதி நாள்கள் பற்றிக் கூறியதாக நற்செய்தி ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இயேசுவிடம் நம்பிக்கை கொள்ள நாம் பெறுகின்ற அழைப்பு நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, கடவுளின் அழைப்பு நம் இதயத்தை இதமாகத் தொட்டு நம் கவனத்தை ஈர்க்கிறது. அக்குரலை அமுக்கிவிடுகின்ற பல்வேறு குரல்கள் உண்டு. ஆனால் கடவுளின் அருள்துணையோடு நாம் அவருடைய வார்த்தையை நம் இதயத்தின் ஆழத்தில் கேட்கலாம். அக்குரல் நம்மை இனிமையாக அழைப்பதை உணரலாம். அவ்வாறு நாம் கடவுளின் குரலைக் கேட்டு, அதற்குப் பதில் தர முன்வரும்போது நம் உள்ளத்தில் அச்சம் என்பதற்கே இடமில்லை. ''துணிவுடன் இருங்கள்'' (யோவா 16:33) என்று இயேசு தம் சீடரை நோக்கிக் கூறிய சொற்கள் நம் இதயத்திலும் இன்று ஒலிக்கின்றன. நாமும் அச்சத்திற்கு இடம் கொடுக்காமல் இயேசுவின் வல்லமையால் தாங்கப்பட வேண்டும். அவர் ''உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டதால்'' (யோவா 16:33) நாமும் அந்த வெற்றியில் பங்கேற்போம்.

ஆறுதல் தருகின்ற இச்சொற்களைக் கூறிய இயேசு தம் சீடர்கள் துன்பங்களைச் சந்திப்பார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். ''உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு'' (யோவா16:33). இங்கே குறிக்கப்படுகின்ற துன்பம் இயேசுவை எதிர்க்கின்ற சக்திகள் நம்மைத் தாக்குவதைக் குறிக்கின்றது. இயேசுவை எதிர்த்தவர்கள் அவரே கடவுளிடமிருந்து வந்த மீட்பர் என்பதைக் காணத் தவறிவிட்டார்கள். அதுபோலவே இன்றைய உலகிலும் இயேசுவின் நற்செய்தியை எதிர்த்துநிற்போர் உண்டு. இயேசுவின் வழியாகக் கடவுள் உலகுக்கு வழங்கிய நற்செய்தியை வெறுப்போர் உண்டு. ஏன், இயேசுவின் சீடர்கள் என்று பெருமைப்படுவோர் கூட சில வேளைகளில் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படுவதுண்டு. துன்பங்கள் தம்மை எதிர்த்துவந்தாலும் மன உறுதியை இழந்துவிடாமல் செயல்படுவோரே இயேசுவின் உண்மையான சீடர் எனலாம். இவ்வாறு இயேசுவில் நாம் நிலையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, துன்பங்களைக் கண்டு நாங்கள் அஞ்சாமல் உம் துணையை நாடி வாழ்ந்திட அருள்தாரும்.