யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2017-03-23




முதல் வாசகம்

என் குரலுக்குச் செவி கொடுங்கள்: அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன்
எரேமியா நூலிலிருந்து வாசகம் 7:23-28

23 ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவி கொடுங்கள்: அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.24 அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை: கவனிக்கவும் இல்லை: பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்: முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.25 உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.26 அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை: கவனிக்கவில்லை: முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.27 நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்: அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்: அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள்.28 தங்களின் கடவுளாகிய ஆணடவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்
திருப்பாடல்கள் 95:1-2, 6-9

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.


நற்செய்திக்கு முன் வசனம்

தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:14-23

14 ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.15 அவர்களுள் சிலர், ' பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ' என்றனர்.16 வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.17 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: ' தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.18 சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே,19 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.20 நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!21 வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.22 அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.23 ' என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

".. ..உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்"

கேட்பதற்கு கடினமாக இருக்கிறதல்லவா! ஆம். தண்டனையை யாரும் விரும்புவதில்லை. அதிலும் தன்னை அன்பு செய்தவரே, தண்டனை வழங்குவதை தாங்க முடியுமா? எனக்கும் உங்களுக்கும் வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம்.நீதியுள்ள தேவனுக்கு யாராயினும் நீதியின்படி வெகுமதியோ தண்டனையோ வழங்குவது முறையே. கப்பர்நாகும், இயேசுவின் சொந்த ஊர் என்று சிறப்புப் பெயர்பெற்றது.(மத்9:1) அற்புதமான போதனைகள், அதிசய நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்றது இங்குதான்.இயேசு அதிக நேரம், நாட்கள் தங்கிய நகரம் கப்பர்நாகும்.பெரிய மனிதர்கள் பேதுரு, அந்திரேயா பெத்சாயிதாவைச் சார்ந்தவர்கள். இத்தகு பெருமைமிகு கப்பர்நாகுமுக்கு ஐயோ கேடு என்று இயேசு சொல்வது நம் சிந்தனைக்குறியது. அவ்வாரே, பெத்சாயிதா இயேசு தனித்திருப்பதற்கு தேர்வு செய்த நகரம்.(லூக்9 :10) பார்வையற்ற மனிதனுக்கு (மாற்8:22) பார்வை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி நடந்தது இப் பெத்சாயிதா நகரிலே. இத்தனை பெருமைக்குறிய பெத்சாயிதா, கப்பர்நாகும் நகர்கள் இயேசுவின் கண்டனத்துக்குள்ளாவதற்குக் காரணம், அவர்களின் சிறுபிள்ளைத்தனம்.சலுகைகள், நன்மைகள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு, அவரையே குறை சொல்லத்தொடங்கினர்.மெய்ஞானம் இழந்து தற்பெருமையில் தன்னை இழந்து பாவத்தில் மூழ்கியது.எப்பொழுது பிறரை குறை சொல்ல தொடங்குகிறோமோ, அப்போதே நம் அழிவுக்கு அடித்தளம் அமைக்கிறோம். இதையே இயேசு இங்கே சுட்டிக் காட்டுகிறார்.நாம் நமதாக்குவோம்.

மன்றாட்டு:

கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கின்ற கட்டளைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தைத் தந்தருளும். அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.