யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2017-03-15




முதல் வாசகம்

ஆண்டவரே, என்னைக் கவனியும்
எரேமியா நூலிலிருந்து வாசகம் 18:18-20

18 அப்போது அவர்கள் வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம் என்றனர்.19 ஆண்டவரே, என்னைக் கவனியும்: என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.20 நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழிபறித்திருக்கின்றார்கள்: அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
திருப்பாடல்கள் 31:4-5, 13-15

4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.

13 பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள்.

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; 'நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.


நற்செய்திக்கு முன் வசனம்

மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:17-28

17 இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,18 ' இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.19 அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார் ' என்று அவர்களிடம் கூறினார்.20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.21 ' உமக்கு என்ன வேண்டும்? ' என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், ' நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும் ' என்று வேண்டினார்.22 அதற்கு இயேசு, ' நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? ' என்று கேட்டார். அவர்கள் ' எங்களால் இயலும் ' என்றார்கள்.23 அவர் அவர்களை நோக்கி, ' ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும் ' என்றார்.24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.25 இயேசு அவர்களை வரவழைத்து, ' பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் ' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்'' (மத்தேயு 20:28)

இயேசு துன்பங்கள் அனுபவித்து, சாவுக்குக் கையளிக்கப்பட்டார். தமக்கு என்ன நேரப்போகிறது என்பதை அவர் தம் சீடருக்குப் பலமுறை எடுத்துரைத்தது உண்டு. ஆனால் அவருடைய சீடர்களோ இயேசு கூறியதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை ஒரு மெசியா-அரசர் என்று பார்த்தார்கள். அவர் துன்புறும் மெசியா என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் துன்பத்தின் வழியாகவே நிறைவாழ்வை நாம் பெற முடியும் என்பதை இயேசு தம் வாழ்விலும் சாவிலும் தெளிவாகக் காட்டினார். அவருடைய வாழ்நாட்களில் அவருக்கு ஏற்பட்ட துன்பங்கள் பல உண்டு. அவற்றில் எல்லாம் மிகப்பெரிய துன்பம் அவருடைய உடலுக்கு ஏற்பட்ட வேதனை அல்ல, மாறாக, அவருடைய உள்ளத்தையும் இதயத்தையும் ஊடுருவிய துன்பங்களே அவை. இயேசுவின் உள்ளம் துயரத்தால் சோர்ந்திருந்ததை கெத்சமனித் தோட்டத்தில் ''இயேசு துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்'' (மத் 26:37) எனக் குறிப்பிடுகிறார் மத்தேயு.

இவ்வாறு துன்புற்று, சாவுக்குக் கையளிக்கப்பட்டு இயேசு இறந்தாலும் கடவுள் அவரைச் சாவிலிருந்து விடுவித்தார்; இயேசுவைப் புத்துயிர் பெற்றவராக உயிர்பெற்றெழவும் செய்தார். இயேசுவைப் பின்செல்வோரும் அவரைப் போல மக்களுக்குப் பணிசெய்வதில் ஈடுபடும்போது மக்கள் கடவுளின் அன்பை அனுபவித்து உணர்ந்து அறிந்துகொள்வார்கள். எனவே, இறையாட்சியில் நாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்னும் முறையற்ற வேண்டுகோளை இயேசுவிடம் கொண்டுசெல்வதே முறையல்ல என்பதை இயேசுவின் சொற்கள் காட்டுகின்றன. இயேசுவைப் பின்பற்றுவோர் தொண்டு ஆற்றுவதிலும் பிறருக்கு அன்புகாட்டி வாழ்வதிலும் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, கடவுளாட்சியின் பொருட்டு நாங்கள் துன்பத்தையும் தாங்கிக்கொள்கின்ற மனநிலையைத் தந்தருளும்.