யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் வியாழக்கிழமை
2017-02-16




முதல் வாசகம்

என் உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 1-13

அந்நாள்களில் கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: ``பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள். மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்ததுபோல இவை எல்லாவற்றையும் தருகிறேன். இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள். உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன். ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார். நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்.'' கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: ``இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழி மரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.'' அப்பொழுது கடவுள், ``எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்கும் இடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
திருப்பாடல் 102: 15-17. 18, 20, 19. 28,22,21

5 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா'' என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்'' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், ``என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்று கடிந்துகொண்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வழியில் இயேசு தம் சீடரை நோக்கி, 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார்'' (மாற்கு 8:27)

இயேசு தம்மைப் பற்றியும் தம் பணி பற்றியும் தெளிவான பார்வை கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவருடைய சீடர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனை மற்றும் பணி பற்றியும் தெளிவான பார்வை கொண்டிருக்கவில்லை. எனவே, இயேசு அவர்களைப் பாhத்து, ''நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்ட கேள்விக்கு இரு பொருள்கள் இருந்தன. ஒன்று, இயேசு ஒருவிதத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துகிறார். அதாவது, பொது மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முதல் பொருள். அதே நேரத்தில் இயேசு தம் சீடர்கள் தம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என அறியவும் விரும்புகிறார்.

இன்று நம்மிடம் இயேசு கேட்கும் கேள்வியும் அதுவே. நாமும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பதில் அளிக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற தகவல்களின் அடிப்படையில் இயேசு பற்றிய சில வரலாற்றுச் செய்திகளை நாம் அறிகிறோம். ஆனால் இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இயேசுவை ஏற்பதால் நம் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? அவர் நம் வாழ்வுக்கு வழியாகவும் நம் மதிப்பீடுகளைப் புரட்டிப்போட்டு இறையாட்சியின் மதிப்பீடுகளை நாம் ஏற்று வாழ நம்மைத் தூண்டுபவராகவும் உள்ளார். எனவே இயேசுவை யார் என அடையாளம் காணவேண்டும் என்றால் இயேசுவின் மன நிலை நமது மன நிலையாக மாற வேண்டும்; இயேசுவின் வாழ்க்கைப் பாணி நமது வாழ்க்கைப் பாணியாக மாற வேண்டும். அப்போது நம் ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்விக்கு நம் வாழ்க்கையாலே பதிலளிக்க இயலும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை ஆழமாக அறிந்திட எங்களுக்கு அருள்தாரும்.