யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் திங்கட்கிழமை
2017-02-06

புனித கொன்சாலோ




முதல் வாசகம்

கடவுள் உரைத்தார்: அஃது அவ்வாறே ஆயிற்று.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1-19

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், ``ஒளி தோன்றுக!'' என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் `பகல்' என்றும் இருளுக்கு `இரவு' என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், ``நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்'' என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு `விண்ணுலகம்' என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், ``விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு `நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் `கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், ``புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், ``பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளி தர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளி தர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
திருப்பாடல் 104: 1-2. 5-6. 10-12. 24,35

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். பல்லவி

5 நீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது. 6 அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. பல்லவி

10 பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும். 12 நீரூற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன. பல்லவி

24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. 35உ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தொட்ட அனைவரும் நலமடைந்தனர் !

இயேசு நோயாளர்களைத் தொட்டுக் குணமாக்கிய நிகழ்ச்சிகள் பல. இயேசுவை மக்கள் தொட்டு நலம் பெற்ற நிகழ்ச்சிகளையும் நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் அவைகளில் ஒன்று. அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது நோயாளர்கள் தொட அனுமதிக்குமாறு அவர்கள் இயேசுவை வேண்டியதாக வாசிக்கிறோம். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர் என்றும் பார்க்கிறோம். இயேசுவை நாம் தொடவேண்டும். அப்போது நலம் அடைவோம்.

இயேசுவை எப்படித் தொடலாம்? ஒவ்வொரு முறையும் நாம் நற்கருணை பெறும்போதெல்லாம் நாம் அவரைத் தொடுகிறோம். அவரது உடலைத் தொடுகிறோம். நற்கருணை ஆற்றல் வாய்ந்த அருள்சாதனம். நற்கருணை பெற்றதால் நலமடைந்த எண்ணற்ற மக்கள் அதற்குச் சான்று பகர்கின்றனர். எனவே, நாம் தகுதியான உள்ளத்துடன் நற்கருணை அருள்சாதனம் பெற்று, இயேசுவைத் தொட்டு, நலம் அடைவோம். அவரைத் தொட்ட அனைவரும் நலம் அடைந்தனர். அந்த விசுவாசத்தை நாமும் பெறுவோம்.

மன்றாட்டு:

நலம் தரும் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் நாள்தோறும் நற்கருணையின் வடிவில் எழுந்து வருவதற்காகவும், உம்மை நாங்கள் தொட அனுமதிப்பதற்காகவும் நன்றி கூறுகிறோம். உமது திருவுடல் எங்களுக்கு உடலிலும், உள்ளத்திலும், ஆன்மாவிலும் நலம் தருவதாக. ஆமென்.