யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-02-05

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம்.58:7-10,ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:1-5,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 5:13-16)




உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட் டார்: 
வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட் டார்: 
வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.


திருப்பலி முன்னுரை

அன்பர்களே,

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்து இயேசுவின் சீடர்களான நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உப்பைப் போன்று நாமும் மற்றவர்களின் வாழ்வில் சுவையூட்டுபவர்களாக திகழ இயேசு நம்மை அழைக்கிறார். இருளின் பிடியில் சிக்கித் தவிப்போருக்கு ஒளியாக சுடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பிறரது வாழ்வில் சுவை தரும் உப்பாகவும், சுடர் விடும் ஒளியாகவும் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

உன் ஒளி விடியல் போல் எழும்.
இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம்.58:7-10

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர் களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளா திருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும். விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். உன் நேர்மை உனக்கு முன் செல்லும். ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய். அவர் உனக்குப் பதிலளிப்பார். நீ கூக்குரல் இடுவாய். அவர் இதோ! நான் என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதை யும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 112: 4-9
ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.

இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர். அருளும் இரக்க மும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர். அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி

எந்நாளும் அவர்கள் அசைவுறார். நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ் வர். தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். பல்லவி

அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும். அவர்களை அச்சம் மேற்கொள்ளாது. அவர் கள் வாரி வழங்கினர். ஏழைகளுக்கு ஈந்தனர். அவர்களது நீதி என்றென்றும் நிலைத் திருக்கும். அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:1-5

சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில் வல்லமையே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட் டார்: வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 5:13-16

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர் கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடி யும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும். வேறு ஒன்றுக்கும் உத வாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிரு க்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை. மாறாக விள க்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற் செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஞானத்தின் ஊற்றே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. வழிகாட்டும் ஒளியே இறைவா,

உலகெங்கும் வாழும் பிற சமய மக்களிடம் உமது நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக செயல்படும் ஆவலை கிறிஸ்தவர்கள் அனைவரது உள்ளத்திலும் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. சுவையூட்டும் உப்பே இறைவா,

எம் நாட்டில் உம்மைப் புறக்கணித்து சுவையற்ற வாழ்வு வாழும் மக்களிடையே உமது நற்செய்தியை சுவையைப் பரப்பும் உப்பாக செயல்படும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடம் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. வல்லமையின் தந்தையே இறைவா!

பல்வேறு பணிப்பெறுப்புக்களைப் பெற்றுள்ள நாம் அவற்றின் மேன்மையை உணர்ந்து, தாழ்ச்சியோடும், பொது நலத்தையும், இறை மகிமையையும் கருத்திற்கொண்டு தூய உள்ளத்தோடு பணியாற்றுவதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. உலகின் ஒளியான தந்தையே இறைவா!

எமது இளைஞர்களுக்கு நீரே அனைத்து வழிகளிலும் தெளிவையும், நல்ல பண்புகளையும் கொடுத்து, அவர்கள் என்றும் உமக்குரியவர்களாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிநடாத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா!

உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ, ஆதிதிருச்சபை கொண்டு வந்த அர்த்தமுள்ள, கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 5:13-14)

''மலைப் பொழிவு'' என்னும் பகுதி மத்தேயு நற்செய்தியில் வருகின்ற இயேசு ஆற்றிய ஐந்து பெரிய போதனைப் பகுதிகளில் முதலாவதாகும் (அதி. 5-7). எஞ்சிய நான்கும் முறையே திருத்தூதுப் பொழிவு (அதி. 10), உவமைப் பொழிவு (அதி. 13), திருச்சபைப் பொழிவு (அதி. 18), நிறைவுகாலப் பொழிவு (அதி. 24-25) என அழைக்கப்படுகின்றன. இயேசு கடவுளாட்சி பற்றி வழங்கிய போதனைகளை மத்தேயு இவ்வாறு தொகுத்து வழங்கியுள்ளார். மலைப் பொழிவின்போது இயேசு தம் சீடரை நோக்கி, ''நீங்கள் மண்ணுலகிற்கு உப்பு...நீங்கள் உலகிற்கு ஒளி'' (மத் 5:13-14) என்று கூறுகிறார். ''உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'' என்னும் பழமொழிக்கு ஏற்ப, உப்பு உணவுக்குச் சுவை சேர்க்கிறது. பொருள்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கவும், தூய்மையாய் இருக்கவும் உப்பு பயன்படுகிறது (காண்க: யோபு 6:6; சிஞா 39:26; 2 அர 2:19-22). இஸ்ரயேல் மக்கள் நடுவே உடன்படிக்கை செய்யப்பட்டபோது உப்பு பயன்பட்டது (எண் 18:19; 2 குறி 13:5). வழிபாட்டின்போதும் உப்பு இடம்பெற்றது (விப 30:35; லேவி 2:13; எசே 43:24; எஸ் 4:14; திப 1:4). நிலம் செழிப்பாக இருக்க உப்பு அதில் உப்பு இருக்க வேண்டும். இயேசு உப்பு என்னும் உருவகத்தை எப்பொருளில் பயன்படுத்தினார்? சீடர்கள் உப்பைப் போல இந்த உலகிற்குச் சுவை கூட்ட வேண்டும். இவ்வாறு மக்கள் கடவுளின் அன்பைச் சுவைக்க முடியும். சீடர்கள் இவ்வுலகைத் தூய்மைப்படுத்தி, அது கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டும். உப்பு தன் காரத்தை இழந்துவிடக் கூடாது. அதுபோல சீடர்களும் துன்பங்களுக்கு நடுவே தங்கள் உள உறுதியை இழந்துவிடலாகாது (மத் 5:11-12).

சீடர்கள் ''உலகுக்கு ஒளி'' என இயேசு கூறுகிறார் (மத் 5:14). உரோமைப் பேரரசு தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய காலத்தில் உரோமை நகரம் ''உலகின் ஒளி'' என்று போற்றப்பட்டது. ஆனால் இயேசு தம் சீடர்கள் ஏழையரின் உள்ளத்தவராய், இரக்கப் பண்பு நிறைந்தவராய், பிறருக்கு உதவுகின்ற வேளையில் உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்று போதிக்கிறார். இத்தகைய ஒளி பிறருடைய வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும்; பிறரை அடக்கி ஆளுகின்ற போக்கு அங்கே இராது. இவ்வாறு, இயேசு தம் சீடர்கள் ''உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும்'' இருக்கும்படி அழைக்கிறார். உப்பும் ஒளியும் பிறருக்குப் பயன்படுகின்றன. உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு உணவுக்குச் சுவையூட்டும், ஆனால் தன்னையே கரைத்துவிடும். அதுபோல, விளக்குத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வீட்டிலிருக்கின்ற பொருள்கள் தெரியும் விதத்தில் ஒளிபரப்பும், ஆனால் தன்னை வெளிச்சமிட்டுக் காட்டாது. இவ்வாறு சீடர்களும் தாங்கள் புரிகின்ற நற்செயல்கள் வழியாகக் கடவுளுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமே ஒழிய, தம்மையே முன்னிறுத்தக் கூடாது. இயேசுவின் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்கள் இன்றைய உலகம் கடவுளின் அன்பைச் சுவைக்க உதவுகின்ற ''உப்பாக'' மாற வேண்டும்; உலக மக்கள் கடவுளை நோக்கி நடந்து செல்ல வழிகாட்டுகின்ற ''ஒளியாக'' விளங்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஒளியால் நாங்களும் ஒளிர்ந்திட அருள்தாரும்.