யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-01-22

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 9:1-4,பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:10-13,17,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 4:12-23)




இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' 
எனப் பறைசாற்றத் தொடங்கினார். இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' 
எனப் பறைசாற்றத் தொடங்கினார்.


திருப்பலி முன்னுரை

அழைக்கப்பட்டவர்களே,

பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவரது மகிழ்ச்சியில் ஒருமித்து பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கை நிறைவேற்றும் விதமாக, சாவின் நிழல் சூழ்ந்தவர்கள் மேல் சுடர் ஒளியாக உதித்தவர் நம் ஆண்டவர் இயேசு. பாவத்தளையால் கட்டுண்ட மக்களுக்கு சிலுவை மரணத்தால் அருள் வாழ்வை வழங்க வந்தவர் அவரே. மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களை மனிதரைப் பிடிப்பவர்களாக மாற்றும் வல்லமையை இயேசுவிடம் காண்கிறோம். விண்ணரசின் நற்செய்தியைப் பறைசாற்றி, மக்களின் நோய் நொடிகளை குணப்படுத்திய இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்ற வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

பிற இனத்தார் வாழும் கலிலேயாவில் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 9:1-4

முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்: பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்: அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்: அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்: கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 27: 1,4, 13-14
பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு.

ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்சவேண்டும்?ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி:

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண் டவரின் அழகை நான் காண வேண்டும். அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி:

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன் னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மன உறுதிகொள். உன் உள்ளம் வலிமை பெறட்டும். ஆண்டவருக்காகக் காத்திரு.பல்லவி:

இரண்டாம் வாசகம்

நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:10-13,17

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் கேபாவைச் சார்ந்துள்ளேன் " என்றோ, "நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன் " என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 4:12-23

அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: " செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. " அதுமுதல் இயேசு, " மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது " எனப் பறைசாற்றத் தொடங்கினார்.இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, " என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் " என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்: அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்: விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பணியாற்ற அழைப்பவரே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், உம்மை அறியாத மக்களுக்கும் நற்செய்தி பணியாற்ற துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. பேரன்பு நிறைந்த தந்தையே!

உமது திருச்சட்டத்தை எம் உள்ளத்தில் இருத்தி, உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்து, அன்பு நிறைந்த சமுதாயமாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மேன்மையையும், மாட்சியையும் வழங்கும் தந்தையே இறைவா!

நாங்கள் ஒவ்வொருவரும் மனவுறுதியோடும், உள வலிமையோடும் உமது திட்டங்கள் நிறைவேறும் எனக் காத்திருந்து. ஒத்த கருத்துடையவர்களாய், எம்மிடையே உள்ள பிளவுகளைத் தவிர்த்து. ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டவர்களாய் நாம் வாழ எமக்கு ஆற்றல் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. கட்டுகளைத் தகர்ப்பவரே இறைவா,

பாவம், தீமை, நோய் ஆகியவற்றின் கட்டுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உமது அருள் நலன்களால் புதுவாழ்வு தந்து, உமது மீட்பின் மகிழ்ச்சியைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5.எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை உணர்ந்திடவும், தெளிவற்று திகைத்து நிற்பவர் தெளிவு பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன் வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. வலிமையும் வாழ்வுமான தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் உமது அழைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு, உமது வழிகளைப் பின்பற்றி வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து அவர்களைப் புனிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றத் தொடங்கினார்'' (மத்தேயு 4:17)

இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம் பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய பணி அவர் உரைக்கின்ற சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார். அதாவது, ''மனம் மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' (மத் 4:7) என்னும் அறிவிப்பு இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக் குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் விண் என்றாலே கடவுளைக் குறிக்கும் சொல் ஆயிற்று. ஆக, கடவுளின் ஆட்சி நெருங்கி வந்துவிட்டது என இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார்.

மக்கள் தம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கடவுளின் பார்வையைப் பெற வேண்டும், கடவுளின் திருவுளம் யாதென அறிந்துணர்ந்து அதைத் தம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் - இதுதான் இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த நற்செய்தியின் சாரம். மனம் மாற வேண்டும் என்றால் மனித சிந்தனை நன்னெறிக்கு ஏற்ப அமைய வேண்டும் எனப் பொருள்படும். சிந்தனை நலமாக மாறும்போது அதிலிருந்து பிறக்கின்ற செயல் நலமாக இருக்கும். செயல் நலமாகும்போது அது பிறருக்கு நலம் பயக்கும். மனம் உள்ளிருந்து செயலாற்றும் சக்தி. எனவே மனம் மாறும்போது நம்மில் உள்ளார்ந்த மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்; உள்ளம் கடவுளிடம் திரும்பவேண்டும்; தீமையை எண்ணுகின்ற போக்கு மறைந்து நன்மையை நாடுகின்ற வேட்கை வளர வேண்டும். இவ்வாறு நாம் மனம் மாறினால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க கடவுள் நமக்கு அருள்வார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தைப் புதுப்பித்து உம்மை நாடிவர அருள்தாரும்.