யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-01-10




முதல் வாசகம்

மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:5-12

5 வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை.6 இதற்குச் சான்றாக மறைநூலில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே: மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?7 ஆயினும் நீர் அவர்களை வானதூதரை விடச்சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்: மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றுக்கு மேலாக அவர்களை நியமித்தீர்.8 எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். அனைத்தையும் மனிதருக்கு அடிபணியச் செய்தார் என்பதால், எதையும் பணியாதிருக்க விட்டுவிடவில்லை எனலாம். எனினும், அனைத்தும் மனிதருக்கு இன்னும் அடிபணியக் காணோம்.9 நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.10 கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.11 தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.12 உமது பெயரை என் சகோதரர் சகோதரிகளுக்கு அறிவிப்பேன்: சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன் என்று கூறியுள்ளார் அன்றோ.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்
திருப்பாடல்கள் 8:1,4,5-8

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.

4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.

6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:21-28

21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25 ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஓய்வு நாள்களில் இயேசு (கப்பர்நாகும்) தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பித்துவந்தார்'' (மாற்கு 1:21)

இயேசு தலைசிறந்த ஆசிரியரும் போதகருமாக விளங்கினார். அவர் ஆற்றிய பணியில் முக்கியமான ஒன்று கற்பிக்கும் பணி என்றால் மிகையாகாது. முற்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கற்பித்ததுபோல, எசாயா போன்ற இறைவாக்கினர் போதித்ததுபோல, இயேசுவும் மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்குக் கடவுள் பற்றியும் கடவுளின் ஆட்சி பற்றியும் எடுத்துரைத்தார். இவ்வாறு போதிப்பதற்கு இயேசு தேர்ந்துகொண்ட இடம் யூதர்களின் ''தொழுகைக் கூடம்'' ஆகும். இத்தகைய தொழுகைக் கூடம் ஒன்று கப்பர்நாகும் ஊரில் இருந்தது. அவ்வூருக்கு இயேசு அடிக்கடி செல்வது வழக்கம். தற்கால அகழ்வாராய்ச்சியின் பயனாக அவ்வூர்த் தொழுகைக் கூடம் பற்றிய தடயங்கள் கிடைத்துள்ளன. இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் குழுமி வந்தனர். இயேசு ''மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்துவந்தார்'' (மாற் 1:22) என்னும் குறிப்பு கருதத்தக்கது. இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது என்பதன் பொருள் என்ன? இயேசு கடவுள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்த வேளையில் வெறும் சொற்களை மட்டும் பயன்படுத்தவில்லை. விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே எடுத்துக் கூறவும் இல்லை. மாறாக, தம் தந்தையாகிய கடவுளோடு தமக்கிருந்த நெருங்கிய உறவின் ஆழத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டார்.

கடவுளோடு நமக்கிருக்கும் உறவு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே, தாய்க்கும் சேய்க்கும் இடையே நிலவுகின்ற உறவுக்கு ஒப்பானது. நாம் கடவுளையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம். இயேசுவும் மக்களுக்குப் போதித்தபோது கடவுள் யார் என்பதைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு மாறாக, கடவுள் யார் என்பதை இயேசு தம் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். எனவே அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் ''அதிகாரம்'' இருந்தது. இயேசு கடவுளின் உறவை மனிதரோடு பகிர்ந்துகொண்டார். அந்த உறவை அனுபவித்தவர்கள் அவருடைய அதிகாரத்தையும் கண்டுகொண்டார்கள். இயேசு நம் ஆசிரியர் என்றால், அவரது பள்ளியில் பயில்கின்ற மாணவர் நாம் என்றால் அவரிடமிருந்த கற்றவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவின் போதனையை ஏற்க எங்கள் இதயங்களைத் திறந்தருளும்.