வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்அருள்பணியாளரைத் தாக்கியவர் கைது செய்யப்பட வேண்டும்

வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில், பெரிய கோடரி போன்ற ஆயுதத்தால் அருள்பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அருள்பணியாளரைத் தாக்கியவர் கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் அம்மாநில கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

இத்தாக்குதல் கிறிஸ்தவ சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தெரிவித்த, Tezpur ஆயர் Michael Akasius Toppo அவர்கள், இந்தப் பகுதியில் இப்படி நடந்திருப்பது இதுவே முதன்முறை என்றும் கூறினார். ஜூன் 19, கடந்த ஞாயிறன்று, Tezpur மறைமாவட்டத்தின் Bhirobkhund பங்குக்குரு Sushil John Soren அவர்கள், தனது இடத்திற்கு அருகிலுள்ள மாணவர் விடுதியில் செப வழிபாடு நடத்தித் திரும்பியபோது, ஒரு மர்ம மனிதர் அவரைப் பின்தொடர்ந்து, பெரியதொரு கத்தியால் தாக்கினார். தனது தலையைப் பாதுகாக்க முயற்சித்த அருள்பணி Sushil அவர்களின் இரு கைகளும் பலத்த காயமடைந்துள்ளன. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்றும், தாக்கியவரை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார் ஆயர் Toppo. மேலும், இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் Theodore Mascarenhas அவர்களும், கடவுளின் மனிதரைத் தாக்கியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-06-26 18:53:31]


பிஜேபி எம்.பி குற்றசாட்டுக்கு அன்னை தெரேசா சபையினர் கண்டனம்

நொபெல் விருது பெற்ற அன்னை தெரேசா, இந்தியாவை கிறிஸ்தவமயமாக்குவதற்கு இடம்பெற்ற சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தார் என, பாரதீய ஜனதா எம்.பி யோகி ஆதித்யநாத் அவர்கள் கூறியிருப்பதற்கு, அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் நிர்வாகிகள் தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம், கோரக் பூரில் நடைபெற்ற Ram Katha நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யோகி ஆதித்யநாத் அவர்கள், இந்தியாவைக் கிறிஸ்தவமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அன்னை தெரேசா இருந்தார். இதனால் அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா உள்பட வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதம் வளர்ந்தது, வடகிழக்கின் நிலையை நீங்கள் அனைவரும் அறியாதிருக்கிறீர்கள் எனக் கூறினார். பாரதீய ஜனதா எம்.பி-யின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அன்னை தெரேசா நிறுவிய சபையினர், தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூகப்பணி மற்றும் உலக அமைதிக்காக நொபெல் விருது பெற்ற அன்னை தெரேசாவை, பாஜகவினர் திட்டமிட்டு இழிவுபடுத்தவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அன்னை தெரேசா அவர்கள், சமூகப் பணிகள் ஆற்றியதன் வழியாக மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்தார் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த ஆண்டு கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், வருகிற செப்டம்பர் 4ம் தேதி வத்திக்கானில் புனிதராக அறிவிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம் : Agencies/தினத்தந்தி / வத்திக்கான் வானொலி) [2016-06-26 18:49:08]


தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் 1951ம் ஆண்டில் 4.7 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இந்தியாவிலுள்ள மொத்த கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் தமிழகத்தில் உள்ளனர் என்றும், 2011ம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பில், தமிழகத்தில் 44 இலட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள், இது அம்மாநிலத்தின் 7 கோடியே 21 இலட்சத்து 20 ஆயிரம் மக்களில் 6.12 விழுக்காடு என்றும் கொள்கை ஆய்வு மையத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் 61 இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்றும், இந்தியாவிலுள்ள 2 கோடியே 80 இலட்சம் மொத்த கிறிஸ்தவர்களில் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் தமிழகத்திலும், கேரளாவிலும் உள்ளனர் என்றும் அந்த ஆய்வு மையத்தின் புள்ளி விபரம் கூறுகிறது. சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஊட்டி, கோயம்புத்தூர், சிவகங்கை, தமிழகத்தில், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

(ஆதாரம் : swarajyamag / வத்திக்கான் வானொலி) [2016-06-26 18:42:48]


இந்தியத் துறவிகள் யூபிலி ஆண்டில் இரக்கத்தின் 40 பணிகள்

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், செபம் செய்தல் அல்லது கருத்தரங்கில் கலந்துகொள்தல் போன்றவற்றில் மட்டும் நின்றுவிடாமல், ஏழைகள் மற்றும் துன்புறும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டில் இந்தியத் துறவறத்தாரின் பணிகள் பற்றி பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, இந்திய துறவு சபைகளின் தேசியச் செயலர் அருள்பணி ஜோ மன்னத் அவர்கள், இந்தியத் துறவு சபைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களைப் பரிந்துரை செய்து, அவற்றை, யூபிலி ஆண்டு முடிந்த பின்னரும் செயல்படுத்த உறுதி எடுத்துள்ளன என்று கூறினார்.

திருத்தந்தையின் அழைப்பிற்கிணங்கி, பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த நாற்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களும், சொந்த வாழ்விலும், ஐரோப்பிய ஒன்றிய அளவிலும் செயல்படுத்த தீர்மானித்துள்ளனர் துறவிகள். மன்னிப்பு, ஒப்புரவு, இரத்த தானம், உறுப்பு தானம், நோயாளர் சந்திப்பு, வயது முதிர்ந்தோர், கைதிகள் சந்திப்பு போன்ற பல திட்டங்கள் இதில் உள்ளன.

(ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2016-06-26 18:36:09]


காபூலில் கடத்தப்பட்டுள்ள இந்திய தன்னார்வலர்க்காகச் செபம்

ஆப்கானிஸ்தானின் காபூலில் மர்ம மனிதர்களால் கடத்தப்பட்டுள்ள இந்திய கத்தோலிக்கத் தன்னார்வலப் பணியாளர் ஜூடித் டி சூசா அவர்கள், விரைவில் பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட்டு, வீடு திரும்ப வேண்டுமென்று செபிப்பதாகத் தெரிவித்தார் கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா.

ஆப்கானிஸ்தானில், இஸ்லாம் மற்றும் அந்நாட்டின் உறுதியான குலமுதுவர் மரபுகளுக்கு எதிராக நடைபெறும் சில நடவடிக்கைகள் பற்றியும், பெண்களின் பங்கு குறித்தும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு, Agha Khan என்ற தன்னார்வ அமைப்பில் இணைந்து பணியாற்றிய நாற்பது வயது நிரம்பிய ஜூடித் டி சூசா அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்.

துன்பநிலைகளில் வாழும் பலரின் வாழ்வை முன்னேற்றுவதில் ஈடுபட்டுவந்த இந்தக் கத்தோலிக்கப் பணியாளர் விடுவிக்கப்பட செபிக்கவும், அவரின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவும் வேண்டுமெனக் கேட்டுள்ளார் பேராயர் தாமஸ் டி சூசா. இதற்கிடையே, ஜூடித் டி சூசா அவர்களின் விடுதலைக்காக, இந்திய அதிகாரிகள் முயற்சித்து வருவதாக, காபூலிலுள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-06-26 18:29:05]


சீரோ மலபார் திருஅவையில் முதல் திருமணமான தியாக்கோன்

சீரோ மலபார் வழிபாட்டுமுறை திருஅவையில் முதல் முறையாக, திருமணமான ஒருவரை, நிரந்தரத் தியாக்கோனாக அங்கீகரித்துள்ளார் திருஅவைத் தலைவர் கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி. நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாகிய ஜாய்ஸ் ஜேம்ஸ் என்பவர், ஜூன் 06,திங்களன்று நடைபெற்ற திருவழிபாட்டில் நிரந்தரத் தியாக்கோனாக உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜாய்ஸ் ஜேம்ஸ் அவர்கள், இந்தியாவிலும், இலண்டனிலும் ஐந்து ஆண்டுகள் குருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இவர், உஜ்ஜய்ன் சீரோ மலபார் திருவையில் பணியாற்றுவார். சீரோ மலபார் திருஅவையில், இதற்கு முன்னதாக, பொதுநிலையினர் நிரந்தரத் தியாக்கோன்களாக அங்கீகாரம் பெற்றிருந்த போதிலும், இத்திருஅவை, தனிப்பட்ட திருஅவையாக மாறிய பின்னர், திருமணமான ஒருவர் நிரந்தரத் தியாக்கோனாக மாறியிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது. இதனை ஒரு வரலாற்று நிகழ்வாகவும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

(ஆதாரம் : New Indian Express / வத்திக்கான் வானொலி) [2016-06-26 18:00:57]


கத்தோலிக்கர், நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு வீடுகள்

நேபாளத்தில், ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால், போதுமான குடியிருப்புக்கள் இன்றி இன்னும் மக்கள் துன்புறும்வேளை, பெங்களூருவைச் சேர்ந்த கத்தோலிக்கர் 450 தற்காலிகக் குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

கிளேரிசியன், நார்பெர்ட்டைன் சபைகளின் அருள்பணியாளர்கள் மற்றும் பல்வேறு பொதுநிலை கத்தோலிக்கக் கழகங்கள் இணைந்து, நேபாள பெங்களூரு பராமரிப்பு நிதி என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, தேவையில் இருப்பவர்க்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு நிதி சேகரித்தனர். இந்நிதி அமைப்புக்கு, பல்வேறு துறவு சபைகளும், தன்னார்வ நிறுவனங்களும் நிதியுதவி செய்தன. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அருள்பணியாளர்களும், தன்னார்வலர்களும் கட்டுமானப் பணிகளில் உதவி வருகின்றனர்.

காத்மண்டு புறநகர்ப் பகுதியிலுள்ள Budaneelkantaவில், தொழுநோயாளர்க்கு ஐம்பது தற்காலிகக் குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர். அடுத்த கட்டமாக, அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் உள்ளனர். நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில், கடந்த ஓராண்டில் 450 தற்காலிகக் குடியிருப்புக்களை இவர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-06-05 01:05:58]


ஆயர் செபஸ்தியான் : பெரிய மாற்றத்திற்கு நல்ல தொடக்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு மாதகாலமாக நடைபெற்ற கும்பமேளா இந்துமத சிறப்பு விழாவில், முன்னாள் தீண்டத்தகாதவர்களும், உயர்தரப்பு இந்து மதத்தினரும் ஒன்றாகக் கலந்துகொண்டது, இந்திய சமுதாயம் சிறந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் காட்டுகின்றது என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22 ம் தேதி, உஜ்ஜய்னில், Kshipra நதிக்கரையில் இந்துமதத் துறவிகள் நீராடத் தொடங்கியதிலிருந்து தொடங்கிய கும்பமேளா விழா, மே 21ம் தேதி, இந்துமதத் துறவிகள் நீராடியதோடு நிறைவடைந்தது. இவ்விழா நாள்களில், அரசுடன் சேர்ந்து, நலவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த உஜ்ஜய்ன் மறைமாவட்ட ஆயர் செபஸ்டியான் வடக்கெல் அவர்கள் இவ்விழா பற்றிக் கூறியபோது, உயர் வகுப்பினரோடு, முன்னாளில் ஒதுக்கப்பட்டவர்களும் சேர்ந்து நீராடியது, பெரிய மாற்றத்திற்கு நல்ல தொடக்கம் என்றார்.

ஆலயங்கள், சமய நிகழ்வுகள் அல்லது சமயக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தடை செய்யப்பட்டிருந்த வகுப்பைச் சேர்ந்த 200 பெண்கள், இவ்வாண்டு கும்பமேளா விழாவில் நீராடினர்.
(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலிஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-06-05 01:01:48]


பழங்குடியினரிடையே மதுப்பழக்கத்தை ஒழிக்க திருஅவை முயற்சி

இந்தியாவின் பழங்குடி இனத்தவர்கள், தங்கள் திருவிழாக் காலங்களில் மது அருந்துவது தவறில்லை, ஆனால், மதுவுக்கு அடிமையாவதே எதிர்க்கப்படுகிறது என இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி இனத்தவருள் 60 விழுக்காட்டினர், மதுவுக்கு அடிமையாக உள்ள நிலையில், இது குறித்து கவலையை வெளியிட்ட கும்லா ஆயர் Paul Alois Lakra, பழங்குடி இன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, திருவிழாக் காலங்களில் மது அருந்துவது தவறல்ல, ஆனால் குடும்பங்கள் பாதிக்கப்படும் வகையில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆயர் Lakra மேலும் கூறுகையில், பழங்குடி இன மதங்களின் தலைவர்களும் தற்போது, இந்த மதுப் பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2016-06-05 00:59:06]


இந்து இளைஞருக்கு, கத்தோலிக்க ஆயர் சிறுநீரகம் தானம்

கேரளாவின் பாலை மறைமாவட்ட துணை ஆயர் ஜேக்கப் முரிக்கன் அவர்கள், தனது ஒரு சிறுநீரகத்தை, ஓர் ஏழை இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருக்குத் தானம் செய்யத் தீர்மானித்துள்ளார் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறியது.

52 வயது நிரம்பிய கத்தோலிக்க ஆயர் முரிக்கன் அவர்கள், முப்பது வயது நிரம்பிய E. Sooraj என்பவருக்குத் தனது ஒரு சிறுநீரகத்தைத் தானம் செய்வதற்குரிய மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தையும் முடித்துள்ளார். கொச்சி மருத்துவமனையில் ஜூன் 01, இப்புதனன்று சிறுநீரகத் தானம் அறுவை சிகிச்சை நடைபெற முடிவெடுக்கப்பட்டது. ஆர்யா வைத்திய சாலையில் வேலைசெய்யும் Sooraj என்பவர், தனது தாய் மற்றும் மனைவியைப் பராமரிக்கும் கடமையைக் கொண்டுள்ளார். இவர் ஒருவரே அவரின் குடும்பத்தில் வேலை செய்பவர்.

(ஆதாரம் : Times of India / வத்திக்கான் வானொலி) [2016-06-05 00:55:56]