வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்



குடியேற்றதாரர்களை வரவேற்கும் பங்களூரு உயர்மறைமாவட்டம்

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்களுடன், ஆன்மீகக் கூட்டம் ஒன்றை ஏற்பாடுச் செய்துள்ளது, பங்களூரு உயர் மறைமாவட்டம்.

பெரும்பான்மை ஆப்ரிக்க குடியேற்றதாரர்கள் பேசும் பிரெஞ்ச் மொழியிலேயே ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்த திருவழிபாட்டுச் சடங்குகள் குறித்து எடுத்துரைத்த பங்களூரு உயர்மறைமாவட்ட பேராயர் Bernard Moras அவர்கள், குடியேற்றதாரர்களை வரவேற்பதும், அவர்களின் தேவைகளுக்கு செவிமடுப்பதும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முக்கியக் குறிக்கோள் என்றார்.

ஏழை நாடுகளிலிருந்து குடியேறியுள்ள மாணவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுவதற்கென பங்களூரு உயர்மறைமாவட்டம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் கூறினார் பேராயர் Moras. இந்த உயர் மறைமாவட்டத்தில், குடியேற்றதாரர்களுக்கு என ஓர் அவை உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2016-08-08 23:53:30]


கேரளாவில் கந்தமால் மறைசாட்சிகள் குறித்த ஆவணப்படம்

ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது தலத்திருஅவை. அரசின் இந்நடவடிக்கை குறித்து ஒடிசா தலத்திருஅவை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை மாதம் 8ம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 வயது சிறுமி உட்பட 5 கிராமத்தவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். மேலும், 2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக நடந்த வன்முறையில் உயிரிழந்த கிறிஸ்தவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று, ஜூலை 17, ஞாயிறன்று திருச்சூரில் திரையிடப்பட்டது. “அழிவுகளிலிருந்து குரல்:நீதியைத் தேடி கந்தமால்” என்ற தலைப்பிலான 90 நிமிட ஆவணப்படத்தை, கே.பி.சாசி அவர்கள் இயக்கியுள்ளார். இது, ஜூலை 17, ஞாயிறு முதல், கேரளாவின் பல பகுதிகளில் திரையிடப்படுகிறது .

2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் இந்துத் தீவிரவாதிகள் நடத்திய வன்முறையில், 350க்கும் மேலான ஆலயங்களும், 6,500க்கும் அதிகமான வீடுகளும் அழிக்கப்பட்டன. மேலும், 56 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தனர். 93க்கும் மேலான கிறிஸ்தவர்கள் இறந்தனர் மற்றும் 40க்கும் மேலான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்.

(ஆதாரம் : India Today / வத்திக்கான் வானொலி) [2016-08-08 23:49:40]


இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் பன்மைத்தன்மைக்குப் பாராட்டு

இந்தியாவில், பன்மைத்தன்மையைக் கொண்டு செயல்பட்டுவரும் கத்தோலிக்கத் திருஅவையைப் பாராட்டியுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் கர்தினால் திமோத்தி மைக்கிள் டோலன்.

கேரளாவுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் டோலன் அவர்கள், வன்முறை ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், ஒற்றுமை என்ற விழுமியத்தை திருஅவை கொண்டிருப்பது ஊக்கமூட்டுவதாய் உள்ளது என்று கூறினார். இறையடியார் மார் இவான்யோஸ் அவர்கள் மரணமடைந்ததன் 63ம் ஆண்டு நிறைவோடு தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கர்தினால் டோலன் அவர்கள் இவ்வாறு கூறினார். ஜாக்கபைட் கிறிஸ்தவ சபையிலிருந்து ஒரு குழுவினர், கத்தோலிக்கத் திருஅவையில் இணைவதற்கு உதவியவர் இறையடியார் மார் இவான்யோஸ்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளாவின் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறைத் திருஅவையின், புனித மரியா தலைமைப் பேராலயத்தில் கர்தினால் டோலன் அவர்களுடன், அத்திருஅவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், பத்து ஆயர்கள், இன்னும் ஏராளமான குருக்களும் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். இந்திய கத்தோலிக்கத் திருஅவையில் இலத்தீன், சீரோ-மலபார், சீரோ-மலங்கரா ஆகிய மூன்று வழிபாட்டுமுறைகள் உள்ளன.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-08-08 23:42:37]


உரையாடல் வழியாக தீர்க்கப்பட முடியாத விவகாரமே இல்லை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதி காக்கப்படுமாறு இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜூலை மாதத்தில், புரட்சிக்குழுத் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வன்முறையுடன்கூடிய எதிர்ப்புகள் இடம்பெறுவதால் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.

உரையாடல் வழியாக தீர்க்கப்பட முடியாத விவகாரமே உலகில் இல்லை என்றுரைத்துள்ள இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் தெயதோர் மஸ்கரேனஸ்(Theodore Mascarenhas) அவர்கள், வன்முறையிலிருந்து எந்த ஒரு தீர்வும் வெளிவராது என்றும் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினர் அனைவரும், உரையாடல் மற்றும் கலந்தாலோசனை வழியாக, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு மேலும் கேட்டுள்ளார் ஆயர் மஸ்கரேனஸ்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஜூலை மாதம் 8ம் தேதி இந்தியப் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி அப்துல் புர்ஹன் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்துல் புர்ஹன் வானி, 15 வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தார். இவர் அந்த அமைப்பின் தளபதியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்கள் மூலமாக படித்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஹிஸ்புல் அமைப்பிற்கு ஆள்சேர்த்தும் வந்தார் என்று கூறப்படுகிறது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-08-08 22:52:43]


அனைத்து மதங்களும் பங்குகொள்ளும் தேசிய கலந்துரையாடல் அவசியம்

மதத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்னர், அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய, தேசிய அளவிலான ஒரு கலந்துரையாடல் அவசியம் என, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் ஒவ்வொரு மதத்திற்கும் உரிய சட்டங்களுக்குப் பதிலாக, எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை அமைப்பதற்கு, இந்திய சட்டக் குழுவை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜூன் மாதத்தில் கேட்டுள்ளதையடுத்து இவ்வாறு கூறியுள்ளனர் கத்தோலிக்க ஆயர்கள்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தியாவின் ஒற்றுமை, குறையற்ற முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே பொதுவான சட்ட விதிமுறையைக் கொண்டுவருவது குறித்த அனைத்து விவாதங்களும், அரசியல் அமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரத்தின் அடிப்படையிலும், பல்வேறு மதத்தவரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாத வகையிலும் இடம்பெற வேண்டுமென்று கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

திருமணம், திருமண முறிவு, சொத்துரிமை, தத்து எடுத்தல் போன்ற விவகாரங்களில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் பார்சி மதத்தவர்க்கு வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால், சீக்கியர்கள், புத்தர்கள் மற்றும் ஜைனர்கள், இந்துக்களுக்குரிய சட்டங்களைப் பின்பற்றுகின்றனர். இந்தியாவில் அனைத்து குடிமக்களும், எந்த மதத்தையும் அறிக்கையிட்டு, அதனைப் பரப்புவதற்கு அரசியல் அமைப்பு அனுமதிக்கின்றது என்றும், இந்த அடிப்படை சுதந்திரத்தை எந்தச் சட்டமும் நீக்க முடியாது என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி [2016-08-08 22:39:26]


உலக இளையோர் தினத்திற்குப் புறப்படும் இந்திய இளையோர்

இந்தியாவிலிருந்து ஏறக்குறைய 150 இளம் கத்தோலிக்கர், கிராக்கோவ் உலக இளையோர் தினத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராகி வருகின்றனர் என்று, UCA செய்தி நிறுவனம் கூறியது. இந்திய இளையோரின் இப்பயணம் பற்றிக் கூறிய Shradha Kujur அவர்கள், இந்த உலக இளையோர் தினம் தொடங்குவதற்கு முன்னர் நடைபெறும் ஐந்து நாள் கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்வு, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்த அறிவை விரிவாக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் ஏற்பாட்டால் கிராக்கோவ் செல்லும் குழுவில், நூறு இளையோர், ஐம்பது ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஓர் ஆயர் என, 151 பேர் உள்ளனர். போலந்து செல்லும் இந்திய இளையோர், இந்த விழா நாள்களில், கிராக்கோவ் நகர் குடும்பங்களில் விருந்தினர்களாகத் தங்குவார்கள் என்றும், அந்நாள்களில் இந்தியக் கிறிஸ்தவப் பண்பை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள் என்றும் Kujur கூறினார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், 1985ம் ஆண்டில் உலக இளையோர் தினம் உருவாக்கப்பட்டது.

(ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி) [2016-08-08 22:34:54]


அமைதிப் பாலம் கட்டும் அவசியமானப் பணி - கர்தினால் கிரேசியஸ்

ஆசிய நாடுகளில் வாழும் அனைத்து மதத் தலைவர்களும் அமைதிப் பாலங்களைக் கட்டும் அவசியமானப் பணியில் ஈடுபடவேண்டும் என்று, கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய ஆயர் பேரவைகளின் தலைவரும், மும்பை பேராயருமான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இரமதான் மாத நோன்பினை நிறைவேற்றியுள்ள இஸ்லாமிய சமுதாயத்திற்கு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த வேளையில், இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற படுகொலையில் இறந்தோர், மற்றும் அவர்களது உறவினர்களை எண்ணி, ஆசியத் திருஅவை கண்ணீர் வடிக்கிறது என்று கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வன்முறைகள் பெருகி வரும் இவ்வுலகில், இறைவனின் அளவற்ற இரக்கத்தில் நம்பிக்கை வைக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள், ஆசியாவில் அதிக அளவில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அமைதியை விரும்பும் ஆசிய மக்கள், உறவுப் பாலங்களைக் கட்டுவதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-08-08 22:30:31]


அமைதிக்காக விண்ணப்பிப்பது நேர்மையானதாக இருக்க வேண்டும்

மோதல்களில் ஈடுபட்டுள்ள இருதரப்பினருக்கு இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் இடைநிலையாளர்கள், இருதரப்பினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தும்போது, அம்முயற்சி வெற்றியடையும் என, இந்திய திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

அமைதிக்காக விண்ணப்பிப்பது உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதை அதிகமாக விளம்பரப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றும், நல்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மக்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டுமென்றும் கூறிய பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முக்கிய கருவி செபம் என்றார். வடகிழக்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக வன்முறை மோதல்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு, 1996ம் ஆண்டிலிருந்து அமைதிப்பணிக் குழு வழியே தலத்திருஅவை முயற்சித்து வருவது பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மெகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில், பல ஆண்டுகளாக, வன்முறை மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 2014ம் ஆண்டில் 413 பேர் இறந்தனர். இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கடந்த மே மாதத்தில் பல்வேறு சமயக் குழுக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் மற்றும் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்தினர். இதில் பேராயர் மெனாம்பரம்பில் அவர்களும் கலந்துகொண்டார். பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள், மெகாலயாவின் ஜொவாய் அப்போஸ்தலிக்க நிர்வாகி மற்றும் அசாம் மாநிலத்தின் குவாஹாத்தியின் முன்னாள் பேராயருமாவார்.

(ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி) [2016-07-26 11:50:45]


கண் தானத்தை ஊக்குவிக்கும் கத்தோலிக்கர்

கண் தானத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கர்நாடக மாநிலத்தின் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில், “பார்வையற்ற நடை” என்ற ஒரு நடவடிக்கை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. Gowribidannur புனித Ann பள்ளி வளாகத்தில் ஜூன் 30. வியாழனன்று நடந்த இந்நிகழ்வில், ஏறக்குறைய 500 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். இருபது நிமிடங்கள் இடம்பெற்ற இந்நிகழ்வில், இவர்கள், துணிகளால் கண்களைக் கட்டிக்கொண்டு, ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்து நடந்தனர்.

பார்வையிழந்தவரின் நிலைகளை, அனுபவத்தால் உணர்ந்து அம்மக்களுக்கு உதவுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்று, அப்பள்ளி முதல்வர் அருள்சகோதரி ரெம்யா அவர்கள் கூறினார். மேலும், இந்தியாவில் கண் தானத்தை ஊக்குவித்து வரும் கிளேரிசியன் அருள்பணி ஜார்ஜ் கண்ணன்தானம் அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் 35 ஆயிரம் பேர் கண் தானம் வழங்க உறுதியளித்துள்ளனர் என்றார்.

உலகிலுள்ள 3 கோடியே 90 இலட்சம் பார்வையிழந்தவர்களில் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவுக்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் விழி வெண்படலம் மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆயினும், முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரையிலான விழி வெண்படலங்களே சேகரிக்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டில் 53 ஆயிரம் விழி வெண்படலங்கள் சேகரிக்கப்பட்டன. ஆயினும். 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே அவற்றை மாற்ற முடிந்தது. மற்றவை சேதமாயின அல்லது பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்தன. நாட்டில் 700க்கு அதிகமான கண் தான வங்கிகள் உள்ளன. இப்புள்ளி விபரங்களை அறிவித்தார் அருள்பணி கண்ணன்தானம்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-07-26 11:31:25]


கொல்கத்தா முன்னாள் பேராயர் ஹென்ரி டி சூசா மரணம்

கொல்கத்தாவின் முன்னாள் பேராயர் ஹென்ரி செபஸ்டியான் டி சூசா அவர்கள், தனது 90வது வயதில், ஜூன் 27,திங்களன்று காலமானார். இவர் 1986ம் ஆண்டு முதல், 2002ம் ஆண்டு வரை கொல்கத்தாவின் பேராயராகப் பணியாற்றினார்.

1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் மரணமடைந்தபோது, கொல்கத்தா பேராயராகப் பணியாற்றிய பேராயர் ஹென்ரி டி சூசா அவர்கள், பன்னாட்டு அளவில் மிகவும் பிரபலமானார். பின்னர், இவர், அன்னை தெரேசா அவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியதில் முக்கிய பங்காற்றினார். அன்னை தெரேசா அவர்கள், உலகில் கிறிஸ்துவின் முகம் என்று அடிக்கடி பாராட்டிப் பேசிய பேராயர் ஹென்ரி டி சூசா அவர்கள், மக்கள், இறையியல்பை புரிந்துகொள்வதற்கு, அன்னை தெரேசா அவர்கள் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் என்றும் கூறியுள்ளார்.

இந்திய ஆயர் பேரவைத் தலைவர், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் என, முக்கிய பொறுப்புக்களை வகித்த பேராயர் ஹென்ரி டி சூசா அவர்கள், கொல்கத்தா பேராயரான கர்தினால் லாரன்ஸ் பிக்காச்சி அவர்களுக்குப் பின்னர், 1986ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி, பேராயராகப் பணியைத் தொடங்கினார்.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2016-07-26 11:24:33]