வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்இந்தியாவின் அமைதிக்காக சிறப்பு செப நாள் அக்டோபர் 16

இந்தியாவின் எல்லைகளில் பதட்டநிலைகள் சூழ்ந்துள்ள இவ்வேளையில், நாட்டின் அமைதிக்காக, சிறப்பான திருவழிபாடுகளை நடத்திச் செபிக்குமாறு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு விழாக்களின் மாதம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கர்தினால், இவ்வாண்டில் இவ்விழாக்கள், நாட்டின் எல்லைகளில் பதட்டம் ஏற்பட்டுள்ள சூழலில் சிறப்பிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி, அக்டோபர் 4, கிறிஸ்தவர்க்கு புனித பிரான்சிஸ் அசிசியார் விழா, அக்டோபர் 11, இந்துக்களுக்கு தசரா, அக்டோபர் 12, முஸ்லிம்களுக்கு முகரம், அக்டோபர் 20, சீக்கியர்க்கு, குருநானக் ஜெயந்தி, அக்டோபர் 30 தீபாவளி என்று, அக்டோபர் விழா நாள்களைக் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் பொதுநிலை விசுவாசிகள் என, அனைவரும், அக்டோபர் 16ம் தேதியன்று, நாட்டின் அமைதி மற்றும் நல்வாழ்வுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுள்ளார், கர்தினால் கிளீமிஸ். கர்தினால் கிளீமிஸ் அவர்கள் விடுத்த அறிக்கையின்படி அக்டோபர் 16ம் தேதி ஞாயிறன்று, சிறப்பான திருவழிபாடுகள் மற்றும் செபங்கள் செய்து, நாட்டிற்காகவும், அதன் தலைவர்கள் மற்றும் மக்களுக்காகச் செபித்தனர்.

(ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:04:38]


ஜம்மு-காஷ்மீரில் கண் வங்கி தொடங்க திருஅவை முயற்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கென, முதலில், கண் வங்கி தொடங்குவதற்கு அரசின் அனுமதியைக் கோரியுள்ளது, அம்மாநில கத்தோலிக்க மறைமாவட்டம்.

ஜம்மு-காஷ்மீர் மாநில நலவாழ்வு மையத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது குறித்து தெரிவித்த, ஜம்மு-காஷ்மீர் மறைமாவட்ட நலப்பணி மைய இயக்குனர் அருள்பணி Shaiju Chacko அவர்கள், தேவையான அனுமதி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கத்தோலிக்கர் சிறுபான்மையினராக இருந்தாலும், இனம், மதம் என்ற வேறுபாடின்றி, துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கே, திருஅவை முன்னுரிமை கொடுக்கின்றது என்று, அருள்பணி Chacko அவர்கள் மேலும் கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஏறக்குறைய 800 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், ஏறக்குறைய 250 பேர் கண்பார்வையை இழந்துள்ளனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர் என்றும் அருள்பணி Chacko அவர்கள் கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையில், ஏறத்தாழ 11,000 பேர் காயமடைந்துள்ளனர், மற்றும், குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-11-04 16:25:41]


காஷ்மீரில் அமைதிக்காக செபிப்போம் - கர்தினால் கிரேசியஸ்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளையொட்டி, அமைதிக்காக நாம் செபிக்கும் வேளையில், குறிப்பாக, காஷ்மீர் பகுதியில் அமைதி திரும்ப சிறப்பாக செபிப்போம் என்று இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவத்திற்கும், பிரிவினைக் குழுவினருக்கும் இடையே நிலவிவரும் மோதல்கள், இந்திய, பாகிஸ்தான் மோதலாக உருவானால், அது இரு நாட்டு மக்களுக்கும் பெரும் ஆபத்து என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்களும், பரிதாபாத் பேராயர், Kuriakose Bharanikulangara அவர்களும் இணைந்து கூறியுள்ளனர். காஷ்மீர் பிரச்சனை, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஒரு மோதலாக மாறும்போது, இருவரிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதால், மக்களின் பாதுகாப்பு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று பேராயர், Bharanikulangara அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 90 நாட்களாக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில், பொதுமக்களும், இராணுவத்தினரும் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர் என்றும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், இளையோரின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஆசிய செய்தி கூறுகிறது.
(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-11-01 21:31:10]


திருத்தந்தையின் வருகை குறித்து இந்திய கத்தோலிக்கர் மகிழ்ச்சி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவுக்கு வருகை தருவது குறித்து அண்மையில் அவர் வெளியிட்டுள்ள விருப்பம், இந்திய கத்தோலிக்க சமுதாயத்தை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால், Baselios Mar Cleemis அவர்கள் இந்திய ஊடகத்தினரிடம் கூறினார்.

இந்திய ஆயர்கள், கடந்த ஆண்டிலிருந்தே திருத்தந்தையை அழைத்து வந்துள்ளனர் என்றும், தற்போது அவர் தன் விருப்பத்தைத் தெரிவித்திருப்பதால், இனி அதிகாரப்பூர்வ வழிமுறைகளை இந்திய அரசுடன் இணைந்து மேற்கொள்வோம் என்றும் கர்தினால் Cleemis அவர்கள் கூறியுள்ளார். இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பு வத்திக்கானை அடைந்ததும், இரு தரப்பினரும் கலந்துபேசியபின், இந்தப் பயணத்தின் விவரங்கள் வெளியிடப்படும் என்று, கர்தினால் Cleemis அவர்கள் எடுத்துரைத்தார்.

1964ம் ஆண்டு, மும்பை நகரில் இடம்பெற்ற 38வது அகில உலக திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல், இந்தியாவில் காலடி பதித்த முதல் திருத்தந்தை என்றும், அவரைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், 1986 மற்றும் 1999 ஆகிய இரு ஆண்டுகளில், இந்தியாவுக்கு இருமுறை வந்துள்ளார் என்றும் UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-11-01 21:08:49]


இந்திய அரசு புனித அன்னை தெரேசாவுக்கு மரியாதை

கொல்கத்தா அன்னை தெரேசா அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டதை முன்னிட்டு இடம்பெற்ற பாராட்டு விழாவில், இந்திய, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, புனித அன்னை தெரேசாவின் இரக்கப் பணிகளைப் புகழ்ந்து பேசினர்.

காந்திஜி பிறந்த அக்டோபர் 2ம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, கொல்கத்தா நேத்தாஜி அரங்கத்தில் நடந்த விழாத் திருப்பலியில் மறையுரையாற்றிய, திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள், புனித தெரேசா, பரிவிரக்கத்தின் எடுத்துக்காட்டு என்று கூறினார். இத்திருப்பலியில், இந்திய துணை அரசுத்தலைவர் முகமது ஹமீது அன்சாரி உட்பட மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள், மேற்கு வங்காள மாநில அரசின் உயர்மட்ட அதிகாரிகள் என, பலர் கலந்துகொண்டனர்.

மேலும், கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றிய இத்திருப்பலியில், இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், கர்தினால்கள் ஜார்ஜ் அலெஞ்ச்சேரி, டெலஸ்போர் டோப்போ உட்பட 49 ஆயர்கள், 500 அருள்பணியாளர்கள், ஏறக்குறைய ஆயிரம் அருள்சகோதரிகள் மற்றும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பொதுநிலை விசுவாசிகளும் கலந்து கொண்டனர். புனித அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையில், தற்போது ஏறக்குறைய 5,500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள், 139 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

(ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி) [2016-11-01 20:39:14]


இந்தியாவில் 'கல்வியைக் காவிமயமாக்கும்' முயற்சிக்கு எதிர்ப்பு

இந்தியாவின் கல்விக் கொள்கையில் மாற்றங்களைக் கொணர்வதற்கு முயலும் மத்திய அரசு, அந்த முயற்சியில் கிறிஸ்தவ பிரதிநிதிகளைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைமைச் செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள் கூறினார்.

இந்தியாவில் 'கல்வியைக் காவிமயமாக்கும்' முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டுமென்ற கோரிக்கையுடன், கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் குழுவொன்று, மனிதவள அமைச்சர், பிரகாஷ் ஜவடேக்கர் (Prakash Javadekar) அவர்களை, அண்மையில் சந்தித்தது. இப்பிரதிநிதிகள் குழுவில் ஒருவரான ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், சமமான வாய்ப்புக்களை தன் சட்டத்தில் கொண்டுள்ள இந்திய சட்டங்களை, கல்வித் துறை மதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் 15 பிரதமர்களில், 9 பேரும், 13 அரசுத் தலைவர்களில், 11 பேரும், கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பயின்றவர்கள் என்பதால், இந்திய முன்னேற்றத்திற்கு, கிறிஸ்தவ கல்வி நிலையங்களும் அதேவண்ணம், இஸ்லாமிய கல்வி நிலையங்களும் ஆற்றியுள்ள பங்கை மறக்க இயலாது என்று, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

(ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2016-11-01 20:34:37]


புனித அன்னை தெரேசாவுக்கு தலாய் லாமா பாராட்டு மடல்

அன்பை நடைமுறைப்படுத்துவதில், அன்னை தெரேசா தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா அவர்கள் கூறியுள்ளார்.

அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட தருணத்தையொட்டி, பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் சபையின் தற்போதையத் தலைவரான அருள் சகோதரி பிரேமா அவர்களுக்கு, திபெத்திய புத்த மதத் தலைவர், தலாய் லாமா அவர்கள் அனுப்பிய ஒரு மடலில் இவ்வாறு கூறியுள்ளார். 1988ம் ஆண்டு, தான் அன்னையை இங்கிலாந்தில் சந்தித்ததை தன் மடலில் நினைவு கூர்ந்துள்ள தலாய் லாமா அவர்கள், எடுத்துக்காட்டான வாழ்வு வாழும் ஒருவரைத் தான் சந்தித்துள்ளோம் என்பதை இச்சந்திப்பில் தன்னால் உடனே உணர முடிந்தது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, தான் கொல்கத்தா சென்று, அன்னையின் துறவு சபை சகோதரிகள் ஆற்றும் பணிகளைப் பார்த்தபோது, அன்னை காட்டிய பிறரன்பு வழி இன்னும் தொடரப்படுவதை அறிந்து மகிழ்ந்ததாக தலாய் லாமா அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.
(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-11-01 20:28:57]


புனித அன்னை தெரேசாவைப் பற்றி, பூனே ஆயர் தாமஸ் தாப்ரே

மதம் என்பது, கண்களுக்குத் தெரியாத ஒரு கருத்து அல்ல, அது, நம்பிக்கையின் விளைவாக, கண்கூடாக வெளிப்படும் செயல்களில் அடங்கியுள்ளது என்பதை, புனித அன்னை தெரேசா உணர்த்திச் சென்றார் என்று, பூனே ஆயர் தாமஸ் தாப்ரே (Thomas Dabre) அவர்கள் கூறினார்.

ஏறத்தாழ 60 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றி, தன்னை ஓர் இந்தியராகவே மாற்றிக்கொண்ட அன்னை தெரேசா அவர்களைச் சந்தித்த அனைவரும், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ஆயர் தாப்ரே அவர்கள், தான் இப்புனிதரைச் சந்தித்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார். பாரத இரத்னா, அமைதியின் நொபெல் பரிசு போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், எளிமையின் ஓர் இலக்கணமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன என்று, ஆயர் தாப்ரே அவர்கள், எடுத்துரைத்தார்.

அவரது பணியின் வழியாக மக்களை மதமாற்றம் செய்தார் என்ற தவறான செய்திகளை பரப்பி வரும் அரசியல்வாதிகளுக்கு பதில் தரும் வகையில், பல்சமய உரையாடல் என்ற உயரிய விழுமியத்திற்கு அவர் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று ஆயர் தாப்ரே அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-11-01 20:23:08]


புனித அன்னை தெரேசா குறித்த ஒரிசா முதல்வரின் புகழஞ்சலி

அன்னை தெரேசாவின் இரக்கம் எனும் புத்தகத்தின் பக்கங்களை திறந்து, மனிதர் ஒவ்வொருவரின் மாண்புக்காக ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார், ஒரிசா முதல்வர், நவீன் பட்நாயக்.

அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்ட அதே நாளில், புபனேஸ்வரின் பேராயர் இல்லத்திற்கு முன்னே உள்ள சாலையை, புனித அன்னை தெரேசா சாலை என பெயரிட்டு திறந்து வைத்த முதல்வர் பட்நாயக் அவர்கள், 1929ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இந்த அல்பேனிய துறவி அன்னை தெரேசா அவர்கள், ஏழைகளுக்கும், உதவித் தேவைப்படுவோருக்கும், மரணத் தறுவாயில் இருப்போருக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன் இந்தியாவைத் தேர்ந்துகொண்டார் என்றுரைத்தார்.

இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய கட்டாக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், புனித அன்னை தெரேசாவின் வாழ்வுச் சம்பவங்கள் பலவற்றை எடுத்துரைத்ததுடன், இக்காலத்தை அன்னை தெரேசாவின் நூற்றாண்டு என குறிப்பிட்டார். கிறிஸ்தவர்கள் மீது பெருமளவான தாக்குதல்களை சந்தித்துள்ள ஒரிசா மாநிலத்தில் அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபை சகோதரிகள், உதவித் தேவைப்படும் மக்களுக்கென 18 பிறரன்பு இல்லங்கள் வழியாக சேவையாற்றி வருகின்றனர்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-11-01 20:19:30]


அனைத்துத் துறையினராலும் அங்கீகரிக்கப்பட்டவர் அன்னை தெரேசா

நொபெல் அமைதி விருது வழியாக உலக சமுதாயத்தாலும், பாரத ரத்னா விருது மூலம் இந்திய அரசாலும் கௌரவிக்கப்பட்டுள்ள அன்னை தெரேசா, தற்போது தன் விசுவாசத்திற்காக புனிதராக உயர்த்தப்பட்டுள்ளது, அனைத்துத் துறையிலும் அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை காட்டுவதாக உள்ளது என்றார், இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.

அன்னை தெரேசாவின் சமூகப் பணிகளில் நம்பிக்கைக் கொண்டோருக்கும், அவரின் விசுவாச வாழ்வில் நம்பிக்கைக் கொண்டோருக்கும் இந்த புனிதர் பட்டமளிப்பு, முக்கியத்துவம் நிறைந்த ஒன்று என CNA செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் எடுத்துரைத்த கர்தினால் கிளீமிஸ் அவர்கள், புனித அன்னை தெரேசா, ஏழைகளுக்குப் பணிபுரிவதோடு தன் சேவையை நிறுத்திவிடவில்லை, மாறாக, ஏழைகளுக்கு ஆற்றவேண்டியப் பணியில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் வலியுறுத்தினார் என்று கூறினார். அன்னையின் கைகளில், ஆயுதங்களை விட வலிமையான ஒரு கருவியை அனைவரும் பார்த்தனர், அதுவே இறைவனின் அன்பும் கருணையும் எனவும் கூறினார் கர்தினால் கிளீமிஸ்.

புனித அன்னை தெரேசா பராமரித்த ஏழைகளிலும் நோயாளிகளிலும், அவர், மதம், இனம், மொழி என எந்த பாகுபாட்டையும் காணவில்லை என்ற கர்தினால், அதே செய்தியுடனேயே இன்றும் திருஅவை இந்தியாவில் தன் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுகின்றது என்று கூறினார். இரக்கம் என்பது நம் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு வருகிறது, ஏனெனில் இரக்கம் தேவைப்படாத மனிதர் என்று எவரும் இல்லை, இறைவனின் கொடையாகிய இரக்கமே நம் ஒவ்வொருவரையும் ஆறுதல்படுத்தி நமக்குப் பலத்தை வழங்குகிறது என மேலும் கூறினார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் கிளீமிஸ்.

(ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி) [2016-11-01 20:13:03]