வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்இறந்த குழந்தையை குப்பைகளில் போடுவது குற்றச் செயல்

மும்பையில், இறந்த பெண் குழந்தையின் உடலை, சாலையோரம் போட்டுச் சென்றுள்ள செயலுக்கு எதிரான, தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

மும்பையில், நவஜீவன் சமூகக் குடியிருப்புப் பகுதிக்கருகில், குப்பைகளுக்கு மத்தியில், புதிதாகப் பிறந்த, பெண் குழந்தையின் உடல், எலிகளால் கடித்துக் குதறப்பட்டு கிடந்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த மும்பை துணை ஆயர் தோமினிக் சாவியோ பெர்னான்டெஸ் அவர்கள், மனித சமுதாயம், இன்னும், இத்தகைய கொடூரக் குற்றங்களைப் புரிவது அதிர்ச்சியாக உள்ளது என்று கூறினார். தங்களின் குட்டிகளை எவ்வித ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாக்கும் விலங்குகளிடமிருந்து மனிதர்கள் பாடம் கற்றுக்கொள்வதற்கு நேரம் வந்துள்ளது என்று கூறிய, ஆயர் பெர்னான்டெஸ் அவர்கள், தனது குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் போடும் எந்த விலங்கு பற்றியும் நாம் கேள்விப்பட்டதே இல்லை, ஆனால், மனிதர்கள் அதைச் செய்கிறார்கள் என்று, கவலை தெரிவித்தார்.

இக்கால உலகில், சிறாரே, குறிப்பாக, சிறுமிகளே, மிகவும் ஆபத்தை எதிர்கொள்ளும் உயிர்களாக உள்ளனர் என்றும், இவர்கள், தாயின் வயிற்றிலே கொல்லப்படுகின்றனர் என்றும் கூறினார் ஆயர் பெர்னான்டெஸ். எலிகளால் கடித்துக் குதறப்பட்டு கிடந்த பெண் குழந்தையை, பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அக்குழந்தையின் தலையிலும், நெஞ்சிலும் எண்ணற்ற காயங்கள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

(ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:56:09]


ஜம்மு-காஷ்மீர் அமைதிக்கான முயற்சிகளுக்கு கத்தோலிக்கர் ஆதரவு

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அமைதியைக் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு, கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல, அரசியல், சமய மற்றும் சமூக நிறுவனங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

ஊரடங்குச் சட்டம், பதட்டநிலை, இராணுவ நடவடிக்கை போன்றவற்றை, நீண்ட காலமாக எதிர்கொண்டுவரும், ஜம்மு-காஷ்மீரின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, பிரிவினைவாத முஸ்லிம் தலைவர்கள் குழுவுடன் உரையாடலைத் தொடங்கியுள்ளது. இக்குழுவின் முயற்சியை வரவேற்றுப் பேசிய ஜம்மு-காஷ்மீர் மறைமாவட்டத்தின் அருள்பணி Prem Tigga அவர்கள், அப்பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், உரையாடலும், ஒப்புரவுமே, அமைதியைக் கொண்டு வருவதற்கு ஒரே வழி என்றும் கூறினார், அருள்பணி Tigga. தெற்கு காஷ்மீரில், கடந்த ஜூலை 8ம் தேதி, பிரிவினைவாத புரட்சித்தலைவர் Burhan Muzaffar, காவல்துறையால் கொல்லப்பட்டதையடுத்து, கிளம்பிய மோதல்களில், ஏறத்தாழ 90 பேர் இறந்துள்ளனர் மற்றும் 11 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். பிரிவினைவாத முஸ்லிம் தலைவர்கள் குழுவுடன், தற்போது பேச்சுவார்த்தை நடத்திவரும் இக்குழு பற்றித் தெரிவித்த, யஷ்வந்த் சின்ஹா அவர்கள், இக்குழு, அதிகாரப்பூர்வ குழு இல்லையென்றும், இது தனிப்பட்டவர்களின் விருப்பத்தால் அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:51:18]


சுற்றுச்சூழலைப் பாதிக்காத தீபாவளிக்குப் பரிந்துரை

தீபாவளித் திருவிழாவை, சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவிக்காமல் சிறப்பிக்க வேண்டுமென்று வலியுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, இந்திய கத்தோலிக்க நிறுவனங்கள்.

விளம்பரத் தட்டிகள், ஊர்வலங்கள், வீதி நாடகங்கள் போன்றவை வழியாக, காற்றை மாசுபடுத்தும் மற்றும் ஒலிப் பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் கொளுத்த வேண்டாமென்று, கத்தோலிக்க நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், பள்ளி மாணவர்கள், தங்கள் பகுதிகளில், “ஒளியேற்றுவோம், பட்டாசுகளைத் தவிர்ப்போம்” என்று அறிவித்து, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத தீபாவளியைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஜலந்தர் ஆயர் Franco Mulakkal. விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் ஏற்றுங்கள் என்று, பள்ளிச் சிறாரைக் கேட்டுக்கொண்டுள்ள ஆயர் Mulakkal அவர்கள், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் நலவாழ்வுக்கும், ஊறு விளைவிக்கும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாமெனக் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி உயர்மறைமாவட்ட, செத்னாலயா சமூகநலப்பணி மையமும், சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவிக்காத தீபாவளி பற்றிய தகவல்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலரும், Tarumitra தேசிய நிறுவனத்தை அமைத்தவருமான இயேசு சபை அருள்பணி Robert Athickal அவர்கள், இந்தியாவில், ஏறக்குறைய இரண்டு இலட்சம் மாணவர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:44:20]


இந்திய ஆயர்களின் தீபாவளி வாழ்த்து

நம் வானங்கள் பட்டாசு ஒளியாலும், நம் வீடுகள் சுடர்விடும் அழகான விளக்குகளாலும் ஒளிரும் இவ்வேளையில், நம் இதயங்கள், நன்மைத்தனத்தின் ஒளியால் நிரம்பட்டும் என்று, தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

அக்டோபர் 30, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தீபாவளியை முன்னிட்டு, உலகெங்கும் வாழ்கின்ற இந்து மதத்தவர்க்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஆயர்கள், ஊழல், வன்முறை மற்றும் பிரிவினைவாதச் சக்திகளிலிருந்து நம் நாடு விடுதலையடைவதாக என்றும் கூறியுள்ளனர். அக்டோபர் 27, வியாழனன்று, இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இந்தியாவிலும், உலகெங்கிலும், அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமையை, இத்திருவிழா கொண்டு வரட்டும் என்று, தாங்கள் செபிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இன்னல்கள் மற்றும் சவால்களின் மத்தியிலும்கூட, உண்மை, ஒளி மற்றும் வாழ்வுக்காக, நாம் உழைப்பதற்கு, தீபங்களின் இவ்விழா, நம் அனைவரின் இதயங்களையும் தூண்டுவதாக எனவும், இந்திய ஆயர்களின் செய்தி கூறுகிறது.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:41:09]


வடகிழக்கு இந்தியாவில், இறையழைத்தல்கள் அதிகரிப்பு

வடகிழக்கு இந்தியாவில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும், இறையழைத்தல்களும் அதிகரித்து வருகின்றன என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

வடகிழக்கு இந்தியாவின் 120 வருட கத்தோலிக்க மறைப்பணி பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட, குவாஹாட்டி முன்னாள் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் அவர்கள், வடகிழக்கு இந்தியாவில், கத்தோலிக்கம், இளமையான சமூகமாக இருந்தாலும், அது பலவழிகளில் வளர்ந்து வருகின்றது என்று தெரிவித்தார். வடகிழக்கு இந்தியாவில், கத்தோலிக்கரின் தலைமைத்துவம், வெளிநாட்டவரிலிருந்து இந்தியரின் கைக்கு வந்து, தற்போது, அது மண்ணின் புதல்வர்களிடம் சென்றுள்ளது என்றும் கூறினார் பேராயர் மேனம்பரம்பில்.

இந்தியாவில், வடகிழக்கு இந்தியக் கிறிஸ்தவர்கள், பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறார்கள் என்றும், 120 வருட வரலாற்றைக் கொண்ட இளம் கத்தோலிக்க சமூகத்தில், தற்போது, ஏறக்குறைய இருபது இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் பகிர்ந்துகொண்டார் பேராயர் மேனம்பரம்பில்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:37:16]


அன்னை தெரேசா இந்தியாவின் இதயத்தை வென்றவர்

கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்களுக்கு, மரியாதை செலுத்திய அதேவேளை, சமய நோக்கில் நடத்தப்படும் வன்முறையிலிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ளார் இந்திய மத்திய அமைச்சர் ஒருவர்.

அன்னை தெரேசா அவர்கள், புனிதராக உயர்த்தப்பட்ட நிகழ்வை, புதுடெல்லியில், கத்தோலிக்கத் தலைவர்கள் சிறப்பித்த நிகழ்வில், கலந்துகொண்டு பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், இந்திய நாட்டின் சார்பில், அன்னை தெரேசா அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று கூறினார். இந்தியாவில் சமயப் பாகுபாட்டிற்கு இடமில்லை என்றும், இந்தியா, சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகம், சகிப்புத்தன்மையின்றி, பல்வேறு மத மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழ்வது இயலாத காரியம் என்றும், சகிப்புத்தன்மையின்றி, அமைதியை அடைய முடியாது என்றும் கூறினார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அன்னை தெரேசா, அனைத்து இந்தியர்களுக்கும் அன்னை, இவர், இந்தியாவின் இதயத்தை வென்றவர் என்று மேலும் கூறினார் அமைச்சர் ராஜ்நாத் சிங். அக்.19, புதனன்று நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியே உட்பட, ஏறத்தாழ அறுபது ஆயர்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டனர். 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், 2.4 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 14 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:29:49]


புவனேஸ்வர் மருத்துவ மனை தீ விபத்திற்கு பேராயரின் இரங்கல்

புவனேஸ்வர் நகரின் SUM மருத்துவ மனையில் நிகழ்ந்த விபத்தால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கட்டக் புவனேஸ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள், தன் ஆழந்த வருத்தங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால், ஏற்கனவே மனமுடைத்திருக்கும் குடும்பத்தினருக்கு, அங்கு நடைபெறும் விபத்து இன்னும் பெரும் வேதனையைத் தருவது உறுதி என்று, பேராயர் பார்வா அவர்கள், தன் அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

1000 பேர் தங்கியுள்ள SUM என்ற தனியார் மருத்துவ மனையில், அக்.17, திங்கள் இரவு நடைபெற்ற ஒரு தீவிபத்தின் காரணமாக, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சுப் புகை பரவியதால், தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்தோர் உட்பட, 22 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. தீவிபத்தை தவிர்ப்பதற்கும், சமாளிப்பதற்கும், மருத்துவ மனைகளில் பின்பற்றப்பட வேண்டிய வழி முறைகள், SUM மருத்துவமனையில் பின்பற்றப்படவில்லை என்பதே இவ்விபத்தின் காரணம் என்று ஊடகங்கள் மேலும் கூறுகின்றன.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:24:43]


இந்திய பாகிஸ்தான் அமைதிக்காக இந்திய கத்தோலிக்கர்கள் செபம்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, மோதல் போக்குகள் அதிகரித்துவரும் சூழலில், இரு நாடுகளிடையே அமைதிக்காக கத்தோலிக்கத் தலைவர்கள் புது டெல்லியில் கூடிச் செபித்தனர்.

இந்தியா மிகத் தீவிர சவால்களை, குறிப்பாக, அதன் எல்லைப்புறங்களில் சந்தித்து வருவதாக உரைத்த இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தியாவின் அனைத்து 168 மறைமாவட்டங்களும், இரு நாடுகளின் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். பல்வேறு மொழிகளை, கலாச்சாரங்களை, உணவு முறைகளைக் கொண்டிருந்தாலும் ஒரே நாடு என்ற உணர்வுடன் சென்று கொண்டிருக்கும் இந்தியாவை, ஏனைய நாடுகளும் அமைதியின் நாடாக நோக்குவதாக உரைத்த Gurgaon ஆயர் ஜேக்கப் பர்னபாஸ் அவர்கள், இதே அமைதியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வோர் இந்தியரின் கடமையும், பொறுப்புணர்வுமாகும் என்றார்.

இதே அமைதி செப வழிபாட்டில் கலந்துகொண்ட இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் தியோடர் மஸ்கரினாஸ் அவர்கள், பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்நோக்கிவரும், இந்திய நாட்டிற்காகச் செபிக்க வேண்டியது, நம் ஒவ்வொருவரின் கடமை என்றார். காஷ்மீர் பகுதி குறித்த பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:19:23]


வாரணாசி நெரிசலில் உயிரிழந்த இந்து பக்தர்களுக்காக செபம்

இந்தியாவின் வாரணாசி நகரில் கூட்ட நெரிசலில் கடந்த அக்டோபர் 15, சனிக்கிழமையன்று 24 பேர் உயிரிழந்தது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார், மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

வாரணாசியில் பெருமெண்ணிக்கையில் கூடிய இந்துமத பக்தர்களிடையே, அவர்கள் கடந்துச் செல்லும் பாலம் ஒன்று உடைந்துக் கொண்டிருப்பதாக, வதந்தி ஒன்று பரவியதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 24பேர் இறந்தனர், எண்ணற்றோர் காயமடைந்தனர். இத்துயர நிகழ்வு குறித்து தன் கவலையை வெளியிட்ட, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், காயமுற்றவர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை, கத்தோலிக்க மருத்துவமனைகளும், பிறரன்பு இல்லங்களும் வழங்கும் என, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களுடனும், இத்துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடனும், இந்தியத் திருஅவை தன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாக அறிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வாரணாசி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக இந்திய திரு அவை, தொடர்ந்து செபிக்கும் எனவும் கூறினார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:14:59]


Jowai மறைமாவட்ட புதிய ஆயர் Victor Lyngdoh

இந்தியாவின் மேகாலயா மாநிலத்திலுள்ள Jowai மறைமாவட்டத்திற்கு, ஆயர் Victor Lyngdoh அவர்களை, புதிய ஆயராக, அக்டோபர் 15, சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாள்வரை, Nongstoin மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் Victor Lyngdoh அவர்கள், மேகாலயா மாநிலத்தின் Wallangல் 1956ம் ஆண்டு சனவரி 14ம் நாள் பிறந்தார். இவர், 1987ம் ஆண்டில், ஷில்லாங் உயர்மறைமாவட்டத்திற்கு, அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றார். 2006ம் ஆண்டு சனவரி 28ம் தேதி, Nongstoin ஆயராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது, Jowai ஆயராக, திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்திய ஆயர் பேரவையின் விவிலிய ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார் ஆயர் Victor Lyngdoh. மேலும், மேகாலயா மாநிலத்திலுள்ள Nongstoin மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, ஷில்லாங் பேராயர் Dominic Jala அவர்களையும் இதே நாளில் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2016-11-12 12:10:49]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்