வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்ஆசிய ஆன்மீகத்தின் அடிப்படை, அகிம்சை - கர்தினால் கிரேசியஸ்

"ஆசிய ஆன்மீகத்தின் அடிப்படையாக விளங்குவது, வன்முறையற்ற அகிம்சை நிலை" என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

அகிம்சையை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள உலக அமைதி நாள் செய்தி குறித்து, தன் கருத்துக்களை ஆசிய செய்திக்கு அளித்துள்ள மும்பை பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அமைதியின் அடித்தளமாக சமுதாய நீதி விளங்கவேண்டும் என்று கூறியுள்ளார். தன் அமைதி நாள் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாகாத்மா காந்தி, கான் அப்துல் காபர் கான் (Khan Abdul Ghaffar Khan), அன்னை தெரேசா ஆகியோரைச் சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பது, ஆசியர்களுக்கு, குறிப்பாக, இந்தியர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகிம்சையின் திருத்தூதராக விளங்கிய காந்தியடிகள், மற்றும், மதம், இனம், மொழி என்ற அனைத்து பிரிவுகளையும் தாண்டி, பிறரன்பு என்ற உன்னத உண்மையை உலகறியச் செய்த, அன்னை தெரேசா ஆகியோர் வாழ்ந்த இந்தியா, இன்று, உலகமயமாதல் என்ற வழிமுறையில் தடம் மாறி, தவிப்பதையும் காண முடிகிறது என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-01-28 18:47:15]


கோவாவில் 'அன்னை தெரேசா அகில உலக திரைப்பட விழா'

'அன்னை தெரேசா அகில உலக திரைப்பட விழா' இந்தியாவின் கோவா நகரில் சனவரி 5ம் தேதி முதல் ஆறு நாட்களுக்கு, கோவா தலத்திருஅவையால் ஏற்பாடு செய்யப்பட்டு திரையிடப்பட்டது.

அன்னையின் வாழ்வு, பணிகள் ஆகியவற்றை வெளிச்சத்திற்குக் கொணர்வதன் வழியே ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைவர் என்ற நோக்கத்துடன் இந்த திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று, கோவா உயர் மறைமாவட்ட செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்ட "In the name of God's poor" என்ற திரைப்படம் இந்த ஆறு நாள் விழாவைத் துவக்கி வைத்தது என்றும், இதைத் தொடர்ந்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட "All for God's Love", "Nirmal Hriday" ஆகிய திரைப்படங்களும், பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட "Mother Teresa and Me", மற்றும், இஸ்பெயின் நாட்டில் உருவாக்கப்பட்ட "The Fifth World" என்ற திரைப்படங்களும் திரையிடப்பட்டன என்றும், UCAN செய்தி கூறுகிறது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-01-28 18:34:53]


இந்திய கத்தோலிக்கக் காரித்தாஸ், புற்றுநோயுற்றோருக்கு உதவிகள்

இந்திய ஆயர் பேரவையின் சமுதாயக் கரமாகச் செயலாற்றும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, வரும் தவக்காலத்தில், புற்றுநோய் தடுப்பு, புற்றுநோயுற்றோருக்கு உதவிகள் என்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

"வாழ்வுக்கு ஆம் என்றும், புற்றுநோய்க்கு இல்லை என்றும் சொல்லுங்கள்" என்ற மையக்கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வு முயற்சியால், வாழ்வை ஆதரித்து வளர்க்க முடிவு செய்துள்ளோம் என்று, காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி பிரடெரிக் டிசூசா அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; இவர்களில் 5,56,400 பேர் இறந்துவிடுகின்றனர் என்றும், தற்போது இந்தியாவில் ஏறத்தாழ 25 இலட்சம் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது.

புற்று நோயுற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் ஒரு முயற்சி, 2014ம் ஆண்டு, கேரள மாநிலத்தில் துவக்கப்பட்டு, அது நல்ல பலன்களை அளித்து வருவதால், அதே திட்டத்தை, இந்தியாவின் பல மாநிலங்களிலும் துவங்க, 2017ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, அருள்பணி பிரடெரிக் டிசூசா அவர்கள் தெரிவித்தார். 1962ம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட காரித்தாஸ் அமைப்பின் வழியே இதுவரை, 23,000த்திற்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், இவற்றில், தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நலம் தொடர்பான திட்டங்கள் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-01-28 18:28:27]


கடத்தப்பட்ட அருள்பணியாளர் டாம் உதவிக்கு விண்ணப்பம்

ஏமனில், கடந்த மார்ச் 4ம் தேதி, ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் கடத்தப்பட்ட, இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், தனது விடுதலைக்காக, திருத்தந்தை பிரான்சிஸ், இந்திய அரசு மற்றும், உலகளாவிய கத்தோலிக்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல மாதங்களாக எந்தச் செய்தியும் வெளிவராத நிலையில், கடத்தல்காரர்கள், அண்மையில் வலைத்தளத்தில், வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், அருள்பணியாளர் உழுன்னலில் அவர்கள், தான் விடுதலை செய்யப்பட உதவுமாறு விண்ணப்பித்துள்ளார். தனக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதால், உடனடியாக உதவுங்கள் எனவும், அந்தக் காணொளியில், அருள்பணி உழுன்னலில் அவர்கள், கூறியுள்ளார். நான் கடத்தப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன, என்னைக் கடத்தியவர்கள், எனது விடுதலைக்காக, இந்திய அரசோடு பலமுறை தொடர்பு கொண்டனர், ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கின்றது எனவும், அச்செய்தியில், அருள்பணி உழுன்னலில் அவர்கள், கூறியுள்ளார்.

இதற்கிடையே, அருள்பணி உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக, உள்ளூர் மற்றும் அப்பகுதி அதிகாரிகளுடன், இந்திய மத்திய அரசு, தொடர்ந்து தொடர்புகொண்டு வருவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், கடந்த ஏப்ரல் 10ம் தேதி, மூவேளை செப உரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணி உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏடனில், பிறரன்பு மறைப்பணியாளர் சகோதரிகள் சபை நடத்திய முதியோர் இல்லத்தை, ஆயுதம் தாங்கியவர்கள் நடத்திய தாக்குதலின்போது, அருள்பணி உழுன்னலில் அவர்கள் கடத்தப்பட்டார்.

(ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி) [2017-01-28 18:23:51]


இந்தியாவில் வறட்சியால் வாடுவோருக்கு திருஅவை உதவி

இந்தியாவின் 29 மாநிலங்களில் பத்து மாநிலங்கள், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, திருஅவை நிறுவனங்கள், வறட்சியால் துன்புறும் விவசாயிகளுக்கு வழங்கிவரும் உதவிகளை, தீவிரப்படுத்தியுள்ளன என்று, UCA செய்தி ஒன்று கூறுகிறது.

நாட்டில், வறட்சிநிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், ஆறுகள் வற்றியுள்ளதால், மக்கள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து குடியேறுவதாகவும், இந்திய ஆயர் பேரவை பேச்சாளர் அருள்பணி ஞானப்பிரகாஷ் தோப்னோ அவர்கள் கூறினார். வறட்சியும், அதிகப்படியான வெப்பமும், 33 கோடிக்கு மேற்பட்ட மக்களை பாதித்துள்ளன என்றும், விவசாயம் பொய்த்துப் போய்விட்டதால், கடந்த சனவரியிலிருந்து, நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றும், அருள்பணி தோப்னோ அவர்கள் கூறினார்.

மேலும், கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்த ஆண்டு, இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதென, அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, விழுப்புரம் அருகே, நெல் வியாபாரி ஒருவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தினச் செய்திகள் கூறுகின்றன. நெல் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என, அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

(ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி) [2017-01-28 18:17:36]


அனைத்து மத விழாக்களையும் ஒரே நாளில் கொண்டாடிய வாரணாசி

இந்துக்களின் புனித நகரான வாரணாசியில் ஒன்று கூடிய இந்து, இஸ்லாம், சீக்கிய, ஜெயின் மற்றும் கிறிஸ்தவப் பிரதிநிதிகள், தங்கள் மத விழாக்களை ஒன்று கூடி ஒரே நாளில் சிறப்பித்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இயேசுவின் பிறப்பையும், மிலாடி நபியையும், 10வது சீக்கிய குருவின் பிறப்பையும், 23வது ஜெயின் குருவின் பிறப்பையும், இந்து அறுவடைத் திருவிழாவையும் இணைந்து கொண்டாடிய இந்த ஐந்து மதங்களின் பிரதிநிதிகள், மதங்களிடையே ஒத்துழைப்புக்கும், அமைதிக்கும், இணக்க வாழ்வுக்கும் இத்தகையக் கொண்டாட்டங்கள் உதவுகின்றன என்றனர். இந்த பல்சமயக் கூட்டத்தில் அனைத்து மதங்களின் பாடல்களுடன், கிறிஸ்மஸ் கீதங்களும் இசைக்கப்பட்டன.

அன்பின் துணைகொண்டு இவ்வுலகையே ஒப்புரவாக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தருவதே கிறிஸ்மஸ் விழாவின் நோக்கம் என, இக்கூட்டத்தில் உரை வழங்கினார், கத்தோலிக்கர்கள் சார்பில் பங்குபெற்ற அருள்பணி அனில்தேவ். அனைவரும் ஒன்றிணைந்து இணக்க வாழ்வை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவம், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து மதத்தினராலும் வலியுறுத்தப்பட்டது.

(ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி) [2016-12-26 20:01:13]


தெலுங்கானா மாநிலத்தில் கிறிஸ்தவ பவன்

தெலுங்கானா மாநில அரசு, விஜயவாடா நகரில் ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், ஆலயங்கள் தாக்கப்படுவதையும், அவை அவமரியாதை செய்யப்படுவதையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக, உறுதியளித்தார்.

தெலுங்கானா மாநில அரசு, சமயச் சார்பற்றது என்பதால், தனது மாநிலத்தில், கிறிஸ்தவர்கள், பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டுமென்று கூறிய கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், மாநிலத்திலுள்ள அனைத்து இனப் பிரிவினர் மத்தியில், நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு, தன்னை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். அம்மாநில கிறிஸ்தவ சபைகளுக்கென, நடத்தப்பட்ட இவ்விழாவில் பேசிய கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், Nagoleவில், 2 ஏக்கர் பரப்பில் கிறிஸ்தவ பவன் ஒன்று அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். இக்கிறிஸ்மஸ் விழாவில், பல அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், டிசம்பர் 27, வருகிற செவ்வாயன்று, அனைத்து கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

(ஆதாரம் : Ind.Sec. / வத்திக்கான் வானொலி) [2016-12-26 19:53:06]


கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒடிசா முதலமைச்சர் உறுதி

ஒடிசா தலைநகர் கட்டக்-புவனேஷ்வரில் நடந்த கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள், அம்மாநில கிறிஸ்தவ சமுதாயத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.

கட்டக்-புவனேஷ்வர் நகரிலுள்ள புனித வின்சென்ட் பேராலயத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பட்நாயக் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, கிறிஸ்தவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் பாராட்டினார். ஒடிசாவில், கிறிஸ்தவர்களின் இருப்பு நன்றாகவே உணரப்படுகின்றது எனவும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறிய பட்நாயக் அவர்கள், கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு உறுதியளித்தார்.

பட்நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-12-26 19:12:45]


அமைதியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைச் சிறப்பிக்க கிறிஸ்தவர்கள் ஆவல்

மோதல்கள் நிறைந்த ஒடிசா மாநிலத்தில், அமைதியான மற்றும் மகிழ்வான கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க, கிறிஸ்தவர்கள் விரும்புகின்றனர் என்று, அம்மாநில தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாண்டின் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு செய்தி வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், ஒடிசாவில் நடந்த கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகளின் நினைவு, இன்னும் மறையாமல் இருந்தபோதிலும், அம்மாநிலத்தில், 2016ம் ஆண்டில், இறையழைத்தல்கள் அதிகரித்துள்ளன என்று கூறினார். ஒடிசாவில், கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒருமைப்பாட்டுணர்வு அதிகரித்துள்ளது என்றும், கொல்கத்தா அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில், ஒரு சாலைக்கு, அன்னை தெரேசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார், பேராயர் பார்வா.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றன எனினும், மறைசாட்சிகளின் இரத்தம், திருஅவையின் வித்து என்பதற்கேற்ப, தலத்திருஅவை வளர்ந்து வருகிறது என்றும், கூறியுள்ளார் பேராயர் பார்வா. 2017ம் ஆண்டு, எல்லாருக்கும், புனிதம், அமைதி, மகிழ்வு மற்றும், வளமை நிரம்பிய ஆண்டாக அமைவதற்கு, தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார், கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-12-26 19:09:37]


டீஹார் சிறையில் கைதிகளுக்கு கிறிஸ்மஸ் விழா

இந்தியச் சிறைச்சாலைப் பணி என்ற கத்தோலிக்க அமைப்பு, இந்தியாவின் மிகப்பெரும் சிறையான, டீஹார் சிறையில் கைதிகளுக்கு கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியக் கத்தோலிக்கச் சிறைப்பணி அமைப்பு, கடந்த 10 நாட்களாக, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள சிறைகளில், கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக, இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள்பணி சவரிராஜ் அவர்கள், UCA செய்தியிடம் கூறினார். சிறைக் கைதிகளும் சமுதாயத்தின் அங்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று, அருள்பணி சவரிராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்திய ஆயர் பேரவையின் ஓர் அங்கமாக செயலாற்றும் இந்திய கத்தோலிக்க சிறைப்பணி அமைப்பில், அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள், இளையோர் உட்பட, 6000த்திற்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றுகின்றனர் என்றும், இவர்கள், இந்தியாவின் 800 சிறைகளில், பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர் என்றும், UCA செய்தி கூறுகிறது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-12-26 18:56:24]