வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்



இரயில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை கோரும் டெல்லி பேராயர்

சனவரி 22, ஞாயிறன்று, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள Vizianagram மாவட்டத்தில் இடம்பெற்ற உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், டெல்லி பேராயர் அனில் கூட்டோ.

39 பேரின் உயிர்களை பலிவாங்கியுள்ள இந்த இரயில் விபத்து குறித்து கவலையை வெளியிட்ட அதேவேளை, இந்தியாவில் அடிக்கடி இரயில் விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதை தடுப்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார் பேராயர். தற்காலிக அரசியல் மற்றும் ஏனைய இலாபங்களை கருத்தில் கொள்ளாமல், மக்களின் பாதுகாப்பிற்கு அரசுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார் பேராயர் கூட்டோ.

பல கோடி ரூபாய்களை செலவழித்து அதி விரைவு இரயில் திட்டத்தைக் கொணர முயலும் மத்திய அரசு, இப்போது பயன்படுத்தப்படும் தண்டவாளங்களின் பாதுகாப்பை பலப்படுத்த தவறுவதேன் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ள டெல்லி பேராயர் கூட்டோ அவர்கள், கடந்த ஓராண்டிலேயே இந்தியாவில் பல இரயில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:26:27]


அருள்பணி டாமின் விடுதலைக்காக இந்திய திருஅவை செபம்

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஏமன் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சலேசிய சபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக இந்திய மறைமாவட்டங்களில், கடந்த வார இறுதியில் சிறப்பு செப வழிபாடுகள் இடம்பெற்றன.

மகராஷ்டிராவின் Bandra கோவிலில் இடம்பெற்ற செப வழிபாட்டில், பிற கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்களும் கலந்துகொண்டனர். இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட வட இந்திய கிறிஸ்தவ சபையின், அதாவது ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் போதகர் தாமஸ் ஜேக்கப் பேசுகையில், அருள்பணி டாம் அவர்களின் பாதுகாப்பான விடுதலைக்கும், அவரை கடத்தி வைத்திருப்போரின் மனமாற்றத்திற்கும் செபிப்பதாக உரைத்தார். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், இந்தியா முழுவதும் கத்தோலிக்கர்களால், அருள்பணி டாமின் விடுதலைக்காக செப வழிபாடு நடத்தப்பட்டது.

திருவனந்தபுரத்தின் புனித மரியன்னை பேராலயத்தில் நடந்த செப வழிபாட்டில், விசுவாசிகள் அனைவரும் மெழுகுதிரிகளை தாங்கியவர்களாக இரவு கண்விழிப்பு செபத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 மாதங்களாக கடத்தி வைக்கப்பட்டிருக்கும் சலேசிய சபை அருள்பணி டாம் அவர்களின் விடுதலைக்காக, திருத்தந்தையும் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.

(ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:22:30]


ஒடிசா மறைசாட்சிகள் விரைவில் புனிதர்கள்

ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில், கிறிஸ்தவர்க்கெதிராய் நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட நூறு கிறிஸ்தவ மறைசாட்சிகளை புனிதர்களாக அறிவிப்பதற்குரிய நடைமுறைகளைத் தொடங்குவதற்கு, திருப்பீடம் இசைவு தெரிவித்திருப்பதாக, கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் அறிவித்தார்.

இது குறித்து, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்களிடம், தான் பேசியது பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கிறிஸ்துவை மறுதலிப்பதற்குப் பதிலாக, இத்தனை பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்திருப்பது, பெரும் மகிழ்வைத் தருகின்றது என்று கூறினார். மேலும், ஒடிசாவில் சிந்தப்பட்ட இரத்தம், எல்லாக் கிறிஸ்தவ சபையினரது இரத்தம் என்பதால், அம்மாநிலத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, கிறிஸ்தவர்கள் மத்தியில், எதார்த்தமான வாழ்வாக உள்ளது என்று, கட்டக் புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் தெரிவித்தார். உலகக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்துவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் பற்றிப் பேசிய பேராயர் பார்வா அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமையான வன்முறை, கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:18:38]


மும்பையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டிற்கு அழைப்பு

சனவரி 20, வெள்ளியன்று, கத்தோலிக்கரும், பெந்தகோஸ்து சபையினரும் இணைந்து, மும்பை உயர் மறை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டை நடத்தினர் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு மடலில், லூத்தரன் சீர்திருத்த அமைப்பு, இவ்வாண்டு சிறப்பிக்கும் 500ம் ஆண்டு நிறைவை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்கரும், பெந்தகோஸ்து சபையினரும் இணைந்து நடத்தும் செப வழிபாட்டை, மும்பை, தாதரில் அமைந்துள்ள மீட்பின் அன்னை ஆலயத்தில் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார் என்றும், இதையொத்த முயற்சிகள், மும்பை உயர் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்கு கோவில்களில் நடைபெற்றன என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில், அமைதி, நீதி ஆகியவற்றை வளர்ப்பது கிறிஸ்தவ சமுதாயத்தின் முதல் கடமை என்றும், இதற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு பெரும் உந்துசக்தியாக அமையும் என்றும், கிறிஸ்தவ உலக அவையின் தலைவர், சஜன் ஜார்ஜ் அவர்கள் கூறியுள்ளார். கிறிஸ்தவர்களிடையே நிலவும் பிரிவுகளை, இந்து அடிப்படைவாதக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுத்த ஜார்ஜ் அவர்கள், கிறிஸ்தவ சமுதாயம் இணைந்து, கல்வி, நலவாழ்வு ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றமுடியும் என்று கூறினார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:05:43]


அருள்பணி டாம் விடுதலைக்காக ஒரு நாள் செப முயற்சிகள்

சனவரி 21, சனிக்கிழமை, மற்றும் 22, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் இந்திய தலத்திருஅவையைச் சார்ந்த அனைவரும், அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக ஒரு நாள் செப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் விண்ணப்ப மடல் ஒன்றை அனுப்பியதற்கு இணங்க மக்கள் அனைவரும் செபித்தனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க பங்கு கோவில்களிலும் இந்த சிறப்பு கருத்துக்காக மக்கள் கூடிவந்து செபிக்குமாறு கர்தினால் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார். 2016ம் ஆண்டு, மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டின் ஏடன் நகரில் பிணைக் கைதியாகக் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி டாம் அவர்கள், கடந்த 10 மாதங்களாக கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியிருப்பது வேதனை தருகிறது என்று, கர்தினால் கிளீமிஸ் அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார். அருள்பணி டாம் அவர்களின் விடுதலை குறித்து பேச, தான் பிரதமரை நேரில் சந்திக்க விண்ணப்பித்துள்ளதாக, கர்தினால் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

(ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி) [2017-01-28 20:53:48]


இந்திய கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து உழைக்க தீர்மானம்

இந்தியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைச் சமாளிக்கவும், இந்தியாவின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.

சனவரி 18, புதனன்று துவங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரக் கொண்டாட்டங்களுக்கு முன்னர், மத்திய பிரதேசத்தின் டமோ எனுமிடத்தில் கூடிய 3,600 இந்திய கிறிஸ்தவத் தலைவர்களும், 260 வெளிநாட்டு கிறிஸ்தவத் தலைவர்களும், விவாதித்ததில், இந்தியாவில் அனைத்து கிறிஸ்தவ சபைகளும், தங்களின் வளங்களைப் பகிர்ந்துகொண்டு ஒன்றிணைந்து உழைக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ள கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒன்றிணைந்த பணி இன்றியமையாதது என்றார் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிறிஸ்தவப் போதகர் R.D. Lall.

கோவில்கள் தாக்கப்படுவது, மத போதகர்கள் அச்சுறுத்தப்படுவது, மற்றும், கிராமப்புற கிறிஸ்தவர்கள் மதம்மாற கட்டாயப்படுத்தப்படுவது போன்ற அண்மைக்கால நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய கிறிஸ்தவ சபைகள், தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்து, தங்கள் திறமைகளையும் வளங்களையும் பகிர்ந்துகொள்வதே கிறிஸ்தவ சபைகளுக்கும் சமூகங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர் இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டத்தில் கலந்துகொண்டோர். மறைப்பணிகளுக்கான இந்த அனைத்துலக கூட்டம், தற்போது 19வது ஆண்டாக இடம்பெற்றது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-01-28 20:12:05]


சீரோ-மலபார் சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்திற்கு துணை ஆயர்

கேரளாவின் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி தாமஸ் தரயில் (Thomas Tharayil) அவர்களை, அவ்வழிபாட்டுமுறை ஆயர்கள் மாமன்றம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடு, கடந்த 14 ஆம் தேதி சனிக்கிழமையன்று தேர்ந்தெடுத்துள்ளது.

1972ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி சங்கனாச்சேரியில் பிறந்த புதிய ஆயர், தாமஸ் தரயில் அவர்கள், 2000மாம் ஆண்டில், அருள்பணியாளராக, திருப்பொழிவு செய்யப்பட்டார். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், உளவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், பல்வேறு இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கின்றார். Danahalaya பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக இந்நாள்வரை பணியாற்றி வந்தார், சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர் தாமஸ் தரயில்.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-01-28 19:56:00]


நேபாளத்திற்கு இந்திய கத்தோலிக்க துறவு சபை உதவி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நேபாளத்தில் ஒன்பதாயிரம் பேரின் உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சியால் அழிவுக்குள்ளான கட்டடங்களை மீண்டும் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர் இந்திய கிளரேசியன் துறவு சபையினர்.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், முதல் கட்டமாக, ஒரு பள்ளியையும், அறுபது நிரந்தர வீடுகளையும் கட்டத் துவங்கியுள்ளனர் கிளரேசியன் துறவு சபையினர். 'நேபாளத்திற்கான பெங்களூரின் அக்கறை' என்ற தலைப்பில் நான்கு கிளரேசியன் துறவு சபை அருள்பணியாளர்களால், பல்சமய உதவியுடன் துவக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, இஸ்பெயின் நாட்டின் கிளரேசியன் துறவுசபை பெருமளவான உதவியைச் செய்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன், அதாவது, கடந்த டிசம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ள கல்விக்கூடமும், வீடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-01-28 19:45:26]


அருள்சகோதரியின் பாலியல் வழக்கின் தீர்ப்பு மாபெரும் அநீதி

இந்தியாவின் சட்டிஸ்கார் மாநிலத்தில், ஒரு கத்தோலிக்க அருள்சகோதரியை, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டிருப்பது, மாபெரும் அநீதியான செயல் என, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர், தனது வன்மையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஓர் அருள்சகோதரியின் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இரு குற்றவாளிகள், விடுதலை செய்யப்பட்டிருப்பது, அர்ப்பணிக்கப்பட்ட அருள்சகோதரிகளுக்கு மட்டுமல்ல, இத்தகைய பாலியல் கொடுமையால் துன்புறும் அனைத்துப் பெண்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதி எனக் குறை கூறினார், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ். அமலமரி சலேசிய மறைப்பணியாளர் சபையைச் சேர்ந்த, 48 வயது நிரம்பிய ஓர் அருள்சகோதரியை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின்பேரில், கைது செய்யப்பட்டிருந்த, 19 வயது நிரம்பிய Dinesh Dhurv, 25 வயது நிரம்பிய Jitendra Pathak ஆகிய இருவரையும், போதிய ஆதாரங்கள் இல்லையென்று சொல்லி, சட்டிஸ்கார் நீதிமன்றம், சனவரி 05, வியாழனன்று விடுதலை செய்தது.

இது குறித்து, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவரும், மும்பை பேராயருமான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இக்குற்றவாளிகள், கடும் சமூகத் தீமைகளுக்குக் காரணமாவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-01-28 19:29:56]


அருள்பணி டாம் விடுதலைக்கு, இந்தியாவில் செப நாள்

ஏமன் நாட்டில் கடத்தப்பட்டுள்ள அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்கென சனவரி 1ம் தேதி, புத்தாண்டு நாளன்று, கேரள தலத்திருஅவை ஒருநாள் செப வழிபாடுகளை மேற்கொண்டது என்று UCAN செய்தி கூறுகிறது.

கொச்சின் நகரில் நடைபெற்ற செப வழிபாட்டை, சீரோ மலபார் கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி அவர்கள் முன்னின்று நடத்தினார். மேலும், சனவரி 4, புதனன்று பெங்களூரு சலேசிய குழுமங்கள், ஒரு நாள் செப முயற்சிகளை மேற்கொண்டன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. சனவரி 4ம் தேதி, செபமும் உண்ணாநோன்பும் மேற்கொண்டு, நற்கருணை ஆராதனையும் நடத்துமாறு, பெங்களூரு சலேசியத் தலைவர், அருள்பணி Joyce Thonikuzhiyil அவர்கள் விண்ணப்பித்தார் என்று, இந்தியச் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே, தன் விடுதலைக்கு இந்திய அரசும், திருஅவையும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, அருள்பணி டாம் அவர்கள் பதிவு செய்திருந்த விண்ணப்பம், ஒரு காணொளியாக, டிசம்பர் 26ம் தேதி வெளியானது.

அருள்பணி டாம் அவர்களை விடுவிக்கக் கோரி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 10ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது விண்ணப்பித்தார் என்பது, குறிப்பிடத்தக்கது. அவரைக் கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தெளிவில்லாததாலும், ஏமன் நாட்டில் நிலையான ஆட்சி இல்லாததாலும், அருள்பணி டாம் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த முடியவில்லை என்று, இந்திய அரசின் தரப்பில் கூறப்படுகிறது. ஏமன் நாட்டின், ஏடன் நகரில், மார்ச் 4ம் தேதி அருள்பணி டாம் அவர்கள் கடத்தப்பட்டு, சனவரி 4ம் தேதியோடு, பத்து மாதங்கள் நிறைவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி) [2017-01-28 18:59:15]