வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்ஆப்ரிக்கர்கள் தாக்கப்படுவதற்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

புதுடெல்லியில், ஆப்ரிக்கர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து, தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ள இந்திய ஆயர்கள், இது, இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில், ஆப்ரிக்கர்களும், எந்த ஒரு வெளிநாட்டவரும் நன்மதிப்புக்குரிய விருந்தாளிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள் என்றும், இதுவே இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறியுள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோதோர் மஸ்கரனாஸ். இந்தியர்களும் பிற நாடுகளில் குடியேற்றதாரர்களாக வாழ்கின்றனர் என்றும், இத்தகைய தாக்குதல்கள், எதிர்த் தாக்குதல்களுக்கு இட்டுச் செல்லும் என்றும், ஆயர் மஸ்கரனாஸ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம் 20ம் தேதி, புதுடெல்லியில், ரிக்ஷாவை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தில், காங்கோவைச் சேர்ந்த Masonda Ketada Olivier என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். இவர், புதுடெல்லியில், ஒரு தனியார் நிறுவனத்தில் ப்ரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவ்விவகாரம் தொடர்பாக, காங்கோ நாட்டில் வாழும் சில இந்தியர்களின் கடைகள் தாக்கப்பட்டன மற்றும் சிலர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரியில், டான்சானியா நாட்டு மாணவர் ஒருவர் பெங்களூருவில் கடுமையாய்த் தாக்கப்பட்டார்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-06-05 00:44:59]


வெடிபொருள் கிடங்கில் இறந்த வீரர்களுக்கு கர்தினால் அஞ்சலி

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புல்காவ் பகுதியில் உள்ள இராணுவத்தின் மத்திய வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உயிரிழந்த படை வீரர்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார், இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

இத்தீவிபத்தில் உயிரிழந்த நம் அன்புக்குரிய படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆன்மா நிறைசாந்தியடைவதற்கும், அவர்களின் குடும்பத்தினர், துணிவு, நம்பிக்கை மற்றும் வலிமையுடன் இத்துயரத்தை ஏற்பதற்கும், நாட்டின் நலனுக்காகவும் இறைவனிடம் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ். இந்திய இராணுவத்தின் புல்காவ் மத்திய வெடிபொருள் கிடங்கில் மே,31. செவ்வாய் அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், அதிகாரிகள் இருவர் உட்பட 17 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் பலத்த காயமடைந்தனர். அவ்விடத்திற்கு அருகில் வாழும் கிராமங்களிலிருந்து ஏறத்தாழ ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புல்காவ் கிடங்கு, இந்திய இராணுவத்தின் வெடிபொருள்கள் இருப்பு வைக்கப்படும் கிடங்குகளில், இந்தியாவில் பெரியதும், ஆசியாவிலே இரண்டாவது பெரியதுமாகும், புல்காவ் வெடிபொருள் கிடங்கில் 2010ம் ஆண்டிலும் இதேபோல் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அச்சமயத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-06-05 00:41:04]


அருளாளர் அன்னை தெரேசா பற்றிய புதிய நூல்

அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் எழுதியவைகளில் ஏற்கனவே வெளியிடப்படாதவை, வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “இரக்கத்திற்கு அழைப்பு : அன்புசெலுத்த இதயங்கள், பணியாற்ற கரங்கள்” என்ற தலைப்பில், அன்னை தெரேசா அவர்களின் எழுத்துக்கள் அடங்கிய புதிய நூல், வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி வெளியிடப்படும் என்று, Crown Publishing Group கூறியதாக, AP செய்தி நிறுவனத்திடம் அறிவித்துள்ளது.

அருளாளர் அன்னை தெரேசா அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு வேண்டுகையாளராகப் பணியாற்றிய அருள்பணி Brian Kolodiejchuk அவர்கள் எழுதிய இந்த நூல், இரக்கம் மற்றும் பரிவன்பு பற்றிய கட்டுரைகளையே கொண்டிருக்கும். 1997ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, தனது 87வது வயதில் இறந்த அருளாளர் அன்னை தெரேசா அவர்களை, வருகிற செப்டம்பர் 4ம் தேதி புனிதராக அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

(ஆதாரம் : Catholic Herald / வத்திக்கான் வானொலி) [2016-06-05 00:37:41]


அருள்சகோதரி Hermaneldeவுக்கு, ஜெர்மனியின் முக்கிய விருது

இந்தியாவில் ஏழைகளின் நலன் உயர, கடந்த ஐம்பது ஆண்டுகளாக உழைத்துவரும் அருள்சகோதரி Hermanelde Pulm அவர்களுக்கு, ஜெர்மன் அரசு The Cross of Merit என்ற விருதை வழங்கி பாராட்டியுள்ளது. ஜெர்மன் அரசுத்தலைவர் Joachim Gauck அவர்களின் பிரதிநிதியாக, மும்பை ஜெர்மன் துணைத் தூதரகத்தில், அதன் தலைவர் Michael Siebert அவர்கள், இவ்விருதை அருள்சகோதரி Hermanelde அவர்களுக்கு, மே,23. திங்களன்று வழங்கினார்.

மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள அந்தேரி தூய ஆவி மருத்துவமனையில், 1963ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார் ஜெர்மன் நாட்டு அருள்சகோதரி Hermanelde. 79 வயது நிரம்பிய அருள்சகோதரி Hermanelde அவர்கள், தூய ஆவியாரின் மறைபோதக சகோதரிகள் சபையைச் சேர்ந்தவர்.

ஜெர்மன் குடியரசின் மிக முக்கியமான இந்த "The Cross of Merit (Bundesverdienstkreuz)" விருது, நாட்டின் நலனுக்காக உழைக்கும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், இவ்விருது, நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பேரரசர்கள் மற்றும் அரசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(ஆதாரம் : AsiaNews/ வத்திக்கான் வானொலி) [2016-06-05 00:17:56]


72 தலித் கிறிஸ்தவர்க்கு விருதுகள்

ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களுக்கு, இந்தியத் திருஅவையில் போதுமான அளவில் உதவிகள் செய்யப்படவில்லை என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறினார்.

புதுடெல்லியில், கடந்த திங்களன்று நடைபெற்ற விழா ஒன்றில், 72 தலித் கிறிஸ்தவர்க்கு விருதுகள் வழங்கி அவர்களை ஊக்குவித்து உரையாற்றிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், பொருளாதார, சமூக மற்றும் சமயத் துறைகளில், தலித் மக்களுக்குப் போதுமான அளவில் உதவிகள் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இவ்விழாவில், தலித் கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த 72 தலித் கிறிஸ்தவர்க்கு, ஒரு சான்றிதழும், ஒரு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டன. இவ்விருது பெற்றவரில் ஒருவரான 30 வயது நிரம்பிய ஜூலியஸ், ஆங்கிலம், கணிதம் மற்றும் பிற திறமைகளை வளர்த்துக்கொள்ளும் விதத்தில், தலித் சிறார்க்குப் பயிற்சிகள் வழங்கியவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-06-05 00:02:24]


அன்னை தெரேசா புனிதர் பட்ட நிகழ்வில் முதலமைச்சர் மம்தா

வருகிற செப்டம்பர் 4ம் தேதி, வத்திக்கானில், அருளாளர் அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் திருப்பலியில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரேசா பிறரன்பு மறைப்பணியாளர் சபை சகோதரிகளின் அழைப்பின்பேரில், மம்தா பானர்ஜி அவர்கள், இம்முடிவை எடுத்துள்ளார். வருகிற செப்டம்பர் 4ம் தேதி காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், அருளாளர் அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுடன், அன்னை தெரேசா பிறரன்பு மறைப்பணியாளர் சபைத் தலைவர் அருள்சகோதரி பிரேமா, கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா, பல உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அன்னை தெரேசா தலைமை இல்லத்தோடு தொடர்புடைய தனிநபர்கள் என, ஒரு பிரநிதிகள் குழு இத்திருப்பலியில் கலந்துகொள்ளும். 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறந்த அன்னை தெரேசாவை, 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

(ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி) [2016-06-04 23:24:10]


கடத்தப்பட்ட அ.பணி தாமஸ் விரைவில் விடுதலை செய்யப்படுவார்

ஏமன் நாட்டில், கடந்த மார்ச் மாதத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய சலேசிய அருள்பணியாளர் தாமஸ் உழுன்னலில் (Thomas Uzhunnalil) அவர்கள், உயிரோடு இருக்கிறார் எனவும், அவர் விடுதலை செய்யப்படும் காலம் நெருங்கியுள்ளது எனவும், இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருள்பணி தாமஸ் அவர்கள், பாதுகாப்பாக உள்ளார் என்றும், அவரின் விடுதலையை உறுதிசெய்வதற்கு கடைசி முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்றும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் கூறியதாக, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

ஏமன் நாட்டின் ஏடன் நகரில், அன்னை தெரேசா சபையினர் நடத்திய வயதானவர் இல்லத்தில், கடந்த மார்ச் 4ம் தேதி, ஆயுதம் ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்ட அருள்பணி தாமஸ் உழுன்னலில் அவர்கள், ஐ.எஸ். இஸ்லாமிய அரசிடம் இல்லை, ஆனால், அவர், ஏமன் பகுதியில், அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிடும் புரட்சிக் குழுவிடம் உள்ளார், இது, Shiite Houthi புரட்சிக் குழுவாக இருக்கக்கூடும் என்று, ஆசியச் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தப் புரட்சிக்குழு, கடந்த ஓராண்டுக்கு மேலாக, ஏமன் அரசுக்கு எதிராகப் போராடி வருகிறது.

இதற்கிடையே, இந்த அருள்பணியாளர் விடுதலை செய்யப்படுவதற்கு, அதிகமான முயற்சிகளை எடுக்குமாறு, இந்திய ஆயர் பேரவை, அமைச்சர் சுவராஜ் அவர்களுக்கு, கடந்த மார்ச் 28ம் தேதி கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
(ஆதாரம் : EWTN / வத்திக்கான் வானொலி) [2016-06-04 23:17:16]


பள்ளி செல்லாத கிறிஸ்தவச் சிறார் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சி

இந்தியாவில், 2014ம் ஆண்டில், குறைந்தது 62 ஆயிரம் கிறிஸ்தவச் சிறார், பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருந்தனர் என்ற, அரசின் அண்மை வெளியீடு அதிர்ச்சி அளிக்கின்றது என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில், பல ஆண்டுகளாக, கிறிஸ்தவர்கள் கல்வித்துறையில் முன்னிலை வகித்துவரும்வேளை, பள்ளிக்குச் செல்லாத கிறிஸ்தவச் சிறாரின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகின்றது மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்று, அருள்பணி ஜோசப் மணிப்பாடம்(Joseph Manipadam) அவர்கள் கூறினார். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார ஆணையத்தின் செயலராகிய அருள்பணி மணிப்பாடம் அவர்கள் கூறுகையில், பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ள கிறிஸ்தவச் சிறாரில் அதிகமானவர்கள், பிற்படுத்தப்பட்ட இனத்தவர் என்று தெரிவித்தார்.

இந்தியாவில், 2014ம் ஆண்டில், 6 வயதுக்கும், 13 வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ 66 இலட்சம் மாணவர்கள், பள்ளிக்குச் செல்வதை இடையிலே நிறுத்தியிருந்தனர், இவர்களில் 45 இலட்சம் பேர், அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இச்சிறாரில், 62,698 மாணவர்கள், கிறிஸ்தவர்கள் என்று, இந்திய ஊடகம் ஒன்று, மே, 17. செவ்வாயன்று அறிவித்தது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-06-04 22:03:31]


கருணைக் கொலைக்கு இந்திய ஆயர்கள் எதிர்ப்பு

இந்தியாவில், கருணைக்கொலையைச் சட்டமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சித்துவரும்வேளை, இது மனித வாழ்வின் மாண்புக்கு எதிரானது என்று சொல்லி, அதற்கு தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.

கருணைக்கொலை குறித்த இந்தியக் கத்தோலிக்கரின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ள, இந்திய ஆயர்கள் பேரவையின் நலவாழ்வு ஆணையத்தின் செயலர் அருள்பணி Mathew Perumpil அவர்கள், அரசு, கருணைக்கொலையைச் சட்டமாக்கினால், மக்கள் மனம்போன போக்கில் செயல்படத் தொடங்குவார்கள் என்று எச்சரித்துள்ளார். கருணைக்கொலையின் நோக்கம் எதுவாக இருப்பினும், இது அறநெறிப்படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தெரிவித்தார் அருள்பணி Perumpil. இந்திய காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Frederick D’Souza அவர்களும், அரசு சட்டமாக்க முயற்சிக்கும் passive euthanasia, தனது விருப்பத்தை தெரிவிக்க இயலாத நிலையிலுள்ள ஒரு மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்று கூறினார்.

"Passive euthanasia" என்பது, ஒரு நோயாளிக்கு மரணத்தை வருவிக்கும் நோக்கத்தில், அவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விடுவதாகும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகங்கள் செயல்படாமல் இருக்கும் ஒரு நோயாளிக்கு, அவர் உயிர் வாழ்வதற்கு உதவும் டயாலிசிஸ் சிகிச்சைக் கருவியை மருத்துவர்கள் திட்டமிட்டு அகற்றிவிடுவதாகும்.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2016-06-04 21:58:57]


பாலியல் வன்முறை குறித்து இந்திய ஆயர் பேரவை கண்டனம்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், 28 வயது நிறைந்த ஜீஷா (Jisha) என்ற தலித் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு, இந்திய ஆயர் பேரவை தன் வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வாழும் எந்தப் பெண்ணும், அவர் வாழும் இல்லத்திலும் பாதுகாப்பின்றி வாழ்வதை இத்தகைய வன்கொடுமைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன என்று, இந்திய ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு கூறியுள்ளது.

வழக்கறிஞர் தொழிலுக்கென பயின்று வந்த ஜீஷா என்ற பெண், ஏப்ரல் 28ம் தேதி மாலை, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, 38 இடங்களில் உடலெங்கும் காயப்பட்டதால் மரணமடைந்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆணாதிக்கம் அதிகம் உள்ள இந்தியச் சமுதாயத்தில், கருவில் தோன்றியது முதல், பெண்களுக்கு எதிராக நிகழும் அநீதிகள், பெரும் அவமானத்தையும், துயரையும் வருவிக்கின்றன என்று, வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறை அறக்கட்டளையைச் சேர்ந்த, Pascoal Carvalho என்ற மருத்துவர் ஆசிய செய்தியிடம் கூறினார்.

2012ம் ஆண்டு, டில்லி மாநகரில், ஓடும் பேருந்தில், வன்முறை கும்பலால் பாலியல் கொடுமைகளை மேற்கொண்டு, உடலளவிலும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளான 'நிர்பயா' என்ற பெண்ணின் கொடூர மரணம், நாடு தழுவிய போராட்டங்களைக் கண்டன என்பது குறிப்பிடத் தக்கது.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-06-04 21:36:46]