வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்கோவா உயர் மறைமாவட்டத்தில் பாத்திமா அன்னை விழா

பாத்திமாவில் அன்னை மரியா காட்சி கொடுத்த புதுமையின் 100ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, இந்தியாவின், கோவா-டாமன் உயர் மறைமாவட்டம், முனைப்புடன் ஏற்பாடுகளை செய்துவருவதாக அறிவித்துள்ளது.

1917ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி முடிய அன்னை மரியா ஐந்து முறை தோன்றியதைக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு மே மாதம் 13ம் தேதி முதல் கொண்டாட்டங்கள் துவங்கியது என்றும், குறிப்பாக, அன்னை மரியா தோன்றிய ஐந்து நாட்களில் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும், கோவா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Filipe Neri Ferrao அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

உண்மையான மனமாற்றம், செபம், மற்றும் தவ முயற்சிகளில் ஈடுபடுதல் என்று, அன்னை மரியா, பாத்திமா திருத்தலத்தில் வெளியிட்ட செய்திகளை மீண்டும் நடைமுறைப்படுத்த, இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்கள் உதவியாக இருக்கும் என்று பேராயர் Ferrao அவர்கள் எடுத்துரைத்தார். இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களையொட்டி, கோவா-டாமன் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கோவில்களிலும், மேமாதம் 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி முடிய செபமாலை பக்தி முயற்சி சிறப்பாக நடைபெறும் என்று நூற்றாண்டு விழா குழு அறிவித்துள்ளது.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-06-23 00:53:36]


உத்திரப்பிரதேசத்தில் சேதமாக்கப்பட்ட கல்லறைத் தோட்டம்

கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்ற பொய் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், கிறிஸ்தவக் கல்லறை தோட்டம் ஒன்று, வன்முறையாளர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

தலித் மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொணரவேண்டும் என்ற நோக்கத்துடன், உத்திப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வரால், 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'இந்து யுவவாஹினி' என்ற அமைப்பு, கிறிஸ்தவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள இராஜாப்பூர் அலகாபாத் கல்லறைத் தோட்டத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில், பல சிலுவைகள் பிடுங்கி எறியப்பட்டதுடன், 10க்கும் மேற்பட்ட கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்து யுவவாஹினி கூறிவரும் மதமாற்றக் குற்றச்சாட்டு எவ்வித ஆதாரமும் அற்றது என்று கூறும் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர், சஜன் கே. ஜார்ஜ் அவர்கள், கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளது, கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாகவும், இறந்தோர் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்று கவலையை வெளியிட்டார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-06-23 00:44:03]


குடும்பப் பணிகளில் ஈடுபட இந்திய ஆயர்களுக்கு அழைப்பு

குடும்பங்களுக்கென மேற்கொள்ளப்படும் பணிகளில், இந்திய ஆயர்கள், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் ஈடுபடுமாறு, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் போபால் நகரில் நடைபெறும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களின் 29வது நிறையமர்வு கூட்டத்தில், பிப்ரவரி 1,அன்று, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள் வழங்கிய மறையுரையில் இவ்வாறு விண்ணப்பித்தார். "அன்பின் மகிழ்வை நம் குடும்பங்களில் வளர்த்தல்" என்ற மையக் கருத்துடன் நடைபெற்றுவரும் இக்கருத்தரங்கில், குடும்பங்களைப் பேணி வளர்க்கும் பெற்றோரின் பணி மிகக் கடினமானது என்று எடுத்துரைத்தார். குடும்ப வாழ்வைக் குலைக்கும் வகையில், இன்று உலகெங்கும் கருத்தளவில் போர்கள் நிகழ்ந்து வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பால்திசேரி அவர்கள், குழந்தைகளோடு பெற்றோர் செலவழிக்கும் நேரமே அவர்களுக்கு வழங்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு என்று கூறினார்.

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவது பெற்றோரின் கடமை அல்ல என்று கூறிய கர்தினால் பால்திசேரி அவர்கள், தேவைப்படும் நேரத்தில் குழந்தைகளிடம் 'இல்லை' என்பதை கண்டிப்புடன் எடுத்துரைக்கவும் பெற்றோர் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிப்ரவரி 1ம் தேதி மாலையில், இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களுக்கென, புனித அன்னை தெரேசாவை மையப்படுத்தி ஒரு நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று CCBI செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-03-14 14:56:40]


ஒடிஸ்ஸாவின் லூர்து அன்னை திருத்தலம், அமைதிக்கு அடையாளம்

ஒடிஸ்ஸா மாநிலத்தின், தான்தோலிங்கி (Dantolingi) எனுமிடத்தில் அமைந்துள்ள, லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலம், ஒருமைப்பாட்டிற்கும், அமைதிக்கும் ஓர் அடையாளமாக இருப்பதாக அம்மாநில ஆளுநர், எஸ். சி. ஜமீர் அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

1917ம் ஆண்டு, பிரெஞ்சு மறைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் திருத்தலம், இவ்வாண்டு தன் முதல் நூற்றாண்டினைக் கொண்டாடும் வேளையில், பெப்ரவரி 11ம் தேதி நடைபெற்ற விழாவிற்கு, ஆளுநர் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார். பெர்ஹாம்பூர் ஆயர் சந்திர நாயக் அவர்களுக்கு, ஆளுநர் ஜமீர் அவர்கள் அனுப்பிய செய்தியில், இறைவன் அனைவர் மீதும் அன்பு கொள்கிறார், அந்த அன்பை, தன் அன்னையின் வழியே அவர் காட்டுகிறார் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

பிப்ரவரி 1, முதல் 9ம் தேதி முடிய இத்திருத்தலத்தில் நவநாள் செபங்களும், பிப்ரவரி 11, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, கட்டக் புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் தலைமையில், திருத்தலத்தின் நூற்றாண்டு விழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது என்றும் ஆசிய செய்தியில் குறிப்பிடுகின்றன.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-03-14 14:49:08]


இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம்

இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் 29வது நிறையமர்வு கூட்டத்தில், இந்தியாவில் பணியாற்றும் 130க்கும் மேற்பட்ட ஆயர்கள், மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் அமைந்துள்ள ஆஷா நிகேதன் வளாகத்தில் ஜனவரி 31, செவ்வாயன்று கலந்து கொண்டனர்.

வத்திக்கானில் நடைபெற்ற இரண்டு ஆயர்கள் மாமன்றத்தின் தொடர்ச்சியாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலின் தொடர்ச்சியாகவும் "நமது குடும்பங்களில் அன்பின் மகிழ்வை வளர்த்தல்" என்ற மையக் கருத்துடன், ஆயர்களின் கூட்டம் நடைபெற்றது என்று, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். வறுமை, கல்வி, வேலைவாய்ப்பு, அநீதிகள் என்ற பல பிரச்சனைகளைச் சந்திக்கும் இந்திய கத்தோலிக்க குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது குறித்து, ஆயர்களின் கூட்டம் கலந்து பேசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அமர்வில், புதிய ஆயர்களுக்கு, வரவேற்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பநல பணிக்குழுவின் தலைவர், ஆயர், லாரன்ஸ் பயஸ் அவர்கள், "இந்தியக் குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர் பேரவையில், 132 மறைமாவட்டங்களை சேர்ந்த 182 ஆயர்கள் உறுப்பினர்கள் என்பதும், இது, ஆசியாவிலேயே மிகப் பெரிய பேரவை என்பதும் குறிப்பிடத்தக்கன.

(ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி) [2017-03-14 14:42:40]


இரக்கம், கிறிஸ்தவ கலாச்சாரம் - கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்

இரக்கம் நம் விருப்பத் தேர்வு மட்டுமல்ல, அது, கிறிஸ்தவ கலாச்சாரம் என்று இந்திய கத்தோலிக்க இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

சனவரி 31, செவ்வாய் முதல் பிப்ரவரி 8, புதன் முடிய, மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்க இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் 29வது நிறையமர்வு கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய மும்பை பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார். குடும்பங்களை மையப்படுத்தி நடைபெறும் இக்கூட்டத்தின் துவக்கத் திருப்பலியில், நன்முறையில் வாழும் குடும்பங்களை, இன்னும் உன்னத நிலையில் வாழும்படி ஆயர்களாகிய நாம் ஊக்குவிக்கவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

உலகெங்கிலும் நிலவும் பல்வேறு மதிப்பீடுகளின் தாக்கங்களால், குடும்ப வாழ்வு சிதைந்து வருகிறது என்ற எச்சரிக்கையை விடுத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மாறிவரும் உலகின் போக்குகளுக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் தகுந்த வகையில் பதிலிருக்க, சரியான வழிகளைக் காட்டுவது அவசியம் என்று எடுத்துரைத்தார். உலகின் பல நாடுகளில், குடும்பங்கள் சந்திக்கும் அளவு பிரச்சனைகளை, ஆசிய குடும்பங்கள் சந்திப்பதில்லை என்றாலும், உலகப் போக்குகள் ஆசியாவிலும், இந்தியாவிலும் ஊடுருவி, அவை, குறிப்பாக, குடும்பங்களை அதிகம் பாதிக்கின்றன என்பதை உணரவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

(ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி) [2017-03-14 14:35:02]


'மெய்நிகர் உண்மை' உலகில் வாழும் இளையோருக்கு எச்சரிக்கை

'மெய்நிகர் உண்மை' (Virtual reality) என்ற உலகில் வாழும் இளையோர், நல்லவை, தீயவை இவற்றை பகுத்தறியும் அறிவுத்திறன் கொண்டிருக்கவும், தொழிநுட்பங்களுக்கு அடிமையாகாமல் இருக்கவும் வேண்டும் என்று பெங்களூரு பேராயர், பெர்னார்டு மொராஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

2018ம் ஆண்டு, இளையோரை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பேராயர் மொராஸ் அவர்கள், 'மெய்நிகர் உண்மை' உலகில் இளையோர் கட்டுண்டு போகாமல் இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களும், தொழில் நுட்பம் மிகுந்த தொடர்பு சாதனங்களும் பெருகியுள்ள இக்காலத்தில், உண்மையும் பொய்யும் எளிதாகக் கலக்கப்பட்டு, வேறுபாடின்றி நம்மை வந்தடைவதால், இளையோர் மிக விழிப்பாக செயல்படவேண்டும் என்று, பேராயர் மொராஸ் அவர்கள், தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தங்கள் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்துகொள்ளும் இளையோர், குறிப்பாக, இளம் பெண்கள், பல வழிகளில் துன்பங்களுக்கு உள்ளாவதை, பேராயரின் செய்தி சிறப்பாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:41:11]


இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையின் கூட்டம்

இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவை, சனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி முடிய, இந்தியாவின் போபால் நகரில், தன் 29வது நிறையமர்வு கூட்டத்தை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, "அன்பின் மகிழ்வை நம் குடும்பங்களில் வளர்த்தல்" என்பது மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் தொடர்ச்சியாகவும், 'அன்பின் மகிழ்வு' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மடலின் தொடர்ச்சியாகவும் நடைபெறும் இந்த பேரவைக் கூட்டத்தை, இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலரான கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி, இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவை குடும்பப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் லாரன்ஸ் பயஸ் உட்பட, பலர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 132 மறைமாவட்டங்களையும், 182 ஆயர்களையும் கொண்ட இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவை, ஆசியாவிலேயே மிகப்பெரிய பேரவை என்பதும், உலகிலேயே இது நான்காவது இடம் வகிக்கிறது என்றும், UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:38:27]


'ஜல்லிக்கட்டு' காப்பாற்றப்படவேண்டும் - மதுரை பேராயர்

தமிழர்களின் கலாச்சார அடையாளமான 'ஜல்லிக்கட்டு' விளையாட்டு காப்பாற்றப்படவேண்டும் என்றும், அதைத் தடுக்க நினைப்பது, தமிழர்களின் கலாச்சார உரிமையைப் பறிப்பதற்குச் சமம் என்றும் மதுரை பேராயர், ஆன்டனி பாப்புசாமி அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக தமிழகமெங்கும் இளையோர் மேற்கொண்ட ஓர் அறப்போராட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆயர்களின் தலைவராகிய பேராயர் பாப்புசாமி அவர்கள், இந்தப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒரு முயற்சி என்று கூறினார். இதற்கிடையே, இந்திய கத்தோலிக்க இளையோர் இயக்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட இளையோரின் ஊர்வலம் ஒன்று, மங்களூரு நகரில் நடைபெற்றது என்று பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 10,000த்திற்கும் அதிகமான இளையோர் பங்கேற்றனர். பன்முக கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்ட இந்தியாவில், அமைதியையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்க, இளையோரின் பங்கு என்ன என்பது, இந்த மாநாட்டின் மையக்கருத்தாக அமைந்தது.

(ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:33:02]


2017 பார்வை ஆண்டு, டெல்லி உயர்மறைமாவட்டம்

கண் தானம் பற்றிய விழிப்புணர்வை அனைத்துப் பங்குகளிலும், பள்ளிகளிலும் ஏற்படுத்தவும், கண்தானத்தை ஊக்குவிக்கவும், டெல்லி உயர்மறைமாவட்டம், 2017ம் ஆண்டை, பார்வை ஆண்டு என அறிவித்துள்ளது.

சனவரி 18ம் தேதி, டெல்லி உயர்மறைமாவட்டப் பேராயர் அனில் கூட்டோ அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட, ஏறக்குறைய நூறு அருள்பணியாளர்கள், தங்களின் கண்களைத் தானம் செய்யவும், அவ்வுயர்மறைமாவட்டத்திலுள்ள அனைத்து 65 பங்குகளிலும், 16 கத்தோலிக்கப் பள்ளிகளிலும் கண்தானத்தை ஊக்குவிக்கவும் உறுதி வழங்கினர்.

டெல்லி உயர்மறைமாவட்டத்தின் செத்னாலயா சமூகநலப் பணி மையம், இந்நடவடிக்கையை ஏற்று நடத்தும் எனவும், டெல்லி உயர்மறைமாவட்டம் நடத்தும் திருக்குடும்ப மருத்துவமனையில், கண் வங்கி தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், செத்னாலயா இயக்குனர், அருள்பணி சவரி ராஜ் அவர்கள் அறிவித்தார். இந்தப் பார்வை ஆண்டில், 300க்கும் மேற்பட்ட, கண் மாற்றுச் சிகிச்சை வழங்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக, அருள்பணி சவரி ராஜ் அவர்கள் மேலும் அறிவித்தார்.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2017-02-01 06:30:04]