வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


மன்னார் வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா

மன்னார் - தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம் பெறவுள்ளது. மன்னார் மறைமாவட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதுடன், இவ்விழாவின் சிறப்பு திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலமையில் குருக்கள் இணைந்து திருப்பலி ஒப்பு கொடுக்கப்படும். அத்துடன், நடைபெற உள்ள வேதசாட்சிகள் திருவிழாவிற்கு மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் இருந்தும் இறைமக்கள் வருகை தந்து இறையாசீரை பெற்றுச் செல்லுமாறு மன்னார் மறைமாவட்டம் சார்பாக அழைத்து நிற்கின்றோம். மேலும், போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம். இதே வேளை இந்த திருவிழா திருப்பலியின் போது அங்காங்கே விளையாட்டு வினோதப் பொருட்கள் விற்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே இறையாசீர் பெற்றுச்செல்ல இறைமக்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். [2017-01-26 23:14:39]


சில்லாலையில் துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சில்லாலையில் துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலத்திற்கான அடிக்கலினை யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நாட்டிவைத்தார் .
துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலம் அமைப்பது தொடர்பில் யாழ் மறைமாவட்டம் குழு அமைத்து ஆலோசனை மேற்கொண்டதற்கு அமைவாக துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலம் சில்லாலையில் அமைப்பது என்ற தீர்மானத்தை எடுத்தது இதற்கமைவாக சில்லாலை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி எமில் போல் அடிகளாரிடம் இதற்கான முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அருட்பணி எமில் போல் அடிகளார் சில்லாலை பங்குமக்களுடன் கலந்துரையாடி அதற்கான பணியில் முழுமுச்சுடன் ஈடுபட்டார் .
இதனைத் தொடர்ந்து புதிய பங்குத்தந்தையாக பொறுப்பேடுத்த அருட்பணி அகஸ்ரின் அடிகளார் யாத்திரைத்தலத்திற்கான பணியினை வேகப்படுத்தியதன் காரணமாக நேற்று திங்கட்கிழமை 16.01.2017 மாலை யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை யாத்திரைத்தலத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார் இதற்கு முன்னதாக 15.01.2017 யாத்திரைத்தலத்திற்கான துய யோசவ்வாஸ் திருச்சொருபத்தை துய கதிரை அன்னை ஆலயத்தில் இருந்து ஆலய பங்குத்தந்தை அருட்பணி அகஸ்ரின்அடிகளார் தலைமையில் பவனியாக புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளாரால் நற்கருணை வழிபாட்டும் திருப்பலியும் ஓப்புக்கொடுக்கப்பட்டு திருச்சொருபம் ஸ்தாபிக்கப்பட்டது.
துய யோசவ்வாஸ் சில்லாலையில் 06.06.1687 முதல்25.12.1689 வரை இருந்து தன்னலமற்ர சேவைசெய்துள்ளார் இதற்கு அமைவாகவே இங்கு யாத்திரைத்தலம் அமைவதுபொருத்தம் என்பதால் ஆலயம் அமைக்கப்படவுள்ளது. 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் துய யோசவ்வாஸ் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டு 2015ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார் சில்லாலை துய கதிரை அன்னை ஆலயத்தில் துய யோசவ் வாஸ் அடிகளார்காலத்தில் இருந்து பணிபுரிந்த இடத்தில் துய யோசவ் வாஸ் சிற்ராலயம் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி நேசன் அடிகளாரால் அடிக்கல் நாட்டப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜனவரி13ஆம் திகதி முன்னாள் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது இதேவேளை துய யோசவ்வாசின் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகம் துய கதிரை ஆலயத்தில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி யேசுரட்ணம் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் துய யோசவ்வாசின் வாழ்கை வரலாறு தொடர்பான அருங்காட்சியகம் சில்லாலையிலேதான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. [2017-01-19 22:39:37]


திரு . ஜே. ஹென்றி ரெத்னராஜா அவர்களின் தொகுப்பில் உருவான "இலங்கையின் முதல் புனிதர் தூய ஜோசப்வாஸ்"

திரு . ஜே. ஹென்றி ரெத்னராஜா அவர்களின் தொகுப்பில் உருவான "இலங்கையின் முதல் புனிதர் தூய ஜோசப்வாஸ்"என்னும் வரலாற்று நூல் 15.01.2017 அன்று தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியானது பங்குத்தந்தை அருட்தந்தை.ஜி.அலக்ஸ் றொபட் அடிகளாருடன் இணைந்து மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை.ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களுக்கு கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. [2017-01-15 13:49:46]


இன்று இலங்கை வாழ் அமலமரித் தியாகிகள் சபையினர் (யாழ் மாகாணம்) அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள்

இன்று இலங்கை வாழ் அமலமரித் தியாகிகள் சபையினர் (யாழ் மாகாணம்) அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள், எல்லாம் வல்ல இறைவன் அருளால், அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர். கீதபொன்கலன் பீ ட் சுஜாகரன் அமதி அவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் 2017 ம் ஆண்டு 17ம் திகதி தை மாதம் வியாழக்கிழமை காலை 9 : 30 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் குருத்துவ அருட்பொழிவு செய்யப்படஉள்ளார். புதிய குருவுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அருட் தந்தையின் பணி சிறக்கவும், இறைவனின் ஆசீர் இவரோடு என்றும் இருக்கவும் இவருக்காக செபிப்பதோடு, எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றோம். இவர் தனது முதல் நன்றித்திருப்பலியை முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 21 / 01 / 2017 சனிக்கிழமை ஒப்புக்கொடுப்பார். [2017-01-15 13:47:26]


இலங்கை நல்லிணக்க ஆலோசனை குழு பரிந்துரைக்கு வரவேற்பு

சன.12,2017. இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரிப்பதற்கு, வெளிநாட்டு நீதிபதி ஒருவரையாவது நியமிக்க வேண்டுமென்ற ஒரு குழுவின் பரிந்துரையை வரவேற்றுள்ளார், திரிகோணமலை ஆயர் நோயெல் இம்மானுவேல். இலங்கையில் நல்லிணக்க வழிமுறைகள் குறித்த ஆலோசனைக்கு அரசால் நியமிக்கப்பட்ட குழு, இம்மாதம் 3ம் தேதி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சாமவீரா அவர்களிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரிப்பதற்கு, குறைந்தது ஒரு வெளிநாட்டு நீதிபதியையாவது நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து, கருத்து தெரிவித்த ஆயர் இம்மானுவேல் அவர்கள், வெளிநாட்டு நீதிபதிகளின் இருப்பு, சரியானது என்றும், இலங்கையில், போர்க்காலக் குற்றங்களுக்குச் சாட்சி சொல்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார். விசாரணையின்போது, இலங்கை நீதிபதிகள் இருந்தால், உள்ளூர் அதிகாரிகள், அவர்களை வசப்படுத்தி, தங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றால்போல், அறிக்கைகளை எழுத வைப்பார்கள் எனவும், ஆயர் இம்மானுவேல் அவர்கள், கூறியுள்ளார் மேலும், உலகத் தமிழர் பேரவையும், நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனை குழுவின் விரிவான அறிக்கையை வரவேற்றுள்ளதோடு, அவ்வறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி [2017-01-12 23:25:54]


தூய யோசவ்வாஸ் சிற்றாலய திறப்பு விழா

தூய யோசவ்வாஸ் சிற்றாலயம் ஒன்று செட்டிக்குள பங்கில் அமைக்கப்பட்டு எதிர்வரும் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 7:45 மணியளவில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கின்சிலி சுவாமிபிள்ளை ஆண்டகை அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு விசேட திருப்பலியும் இடம் பெற உள்ளது.
புனித யோசவ்வாஸ் அடிகளாரின் பெயரில் அமைக்கப்படும் இந்த சிற்றாலயமானது செட்டிக்குள பங்கில் வண பிதா ஜெயபாலன் அடிகளாரின் நெறிப்படுத்தலின் கீழ் பங்கு மக்கள், மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பான முறையிலும், இறைமக்கள் வேண்டுதல் செய்யக்கூடிய இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆலயத்தை அமைக்க உதவி புரிந்த சகல நல் உள்ளங்களுக்கும் ஆயர், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள், கத்தோலிக்க ஒன்றியம் சார்பான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்
இதே வேளை சிற்றாலய திறப்பு விழா நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொண்டு இறை ஆசீர் பெற்றிட பங்கு தந்தை வண பிதா ஜெயபாலன்.குரூஸ் அடிகளாரும், பங்கு மேய்ப்பு பணி சபை, பங்கு மக்கள் இனைந்து அழைத்து நிற்கின்றார்கள் [2017-01-11 23:28:43]


இலங்கை சலேசிய மாகாணத்திற்கு இன்னுமொரு புதிய குரு

இன்று இலங்கை வாழ் சலேசியர்கள் அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள், எல்லாம் வல்ல இறைவன் அருளால், சலேசிய சபையைச் சேர்ந்த திருத்தொண்டர். நதீப் பெர்னாண்டோ sdb அவர்கள் அனுராதபுர மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய நோபெட் அந்திராதி ஆண்டகை அவர்களால் 2017 ம் ஆண்டு 8ம் திகதி தை மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 : 30 மணியளவில் சிலாப மறைமாவட்ட, கோட்டபிட்டி பங்கின் புனித அந்தோனியார் ஆலயத்தில் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.
புதிய குருவுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அருட் தந்தையின் பணி சிறக்கவும், இறைவனின் ஆசீர் இவரோடு என்றும் இருக்கவும் இவருக்காக செபிப்பதோடு, எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றோம். இவர் தனது முதல் நன்றித்திருப்பலியை கருக்குப்பனை புனித அந்தோனியார் ஆலயத்தில் 22 / 01 / 2017 ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்புக்கொடுப்பார். [2017-01-07 12:31:22]


அருட்சகோதரிகளுக்கான நித்திய வாக்குத்தத்த நிகழ்வு 28.12.2016

Sisters of servants of god அருட்சகோதரிகளுக்கான நித்திய வாக்குத்தத்த நிகழ்விம் திருப்பலியும் இன்று 28.12.2016 இன்று சிறுகன்டல் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கின்சிலிசுவாமிபிள்ளை ஆண்டகை அவர்களினால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வண பிதா விக்டர்.சோசை மற்றும் குருக்கள் கன்னியர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். நித்திய வாக்குதத்தம் பெற்ற அருட்சகோதரிகளுக்கு ஆயர்,குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், பொதுநிலை தலைவர்கள், கத்தோலிக்க ஒன்றியம், இறைமக்கள் சார்பான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம் [2016-12-29 20:51:33]


வேறுபாடுகள் இல்லாமல் இன்றைய தினம் நாங்கள் மகிழ்கின்றோம் -ஜோசப் ஆண்டகை

பல்வேறு காரணங்களினால் பிளவுபட்டுள்ள மக்களை கிறிஸ்துவின் பிறப்பு ஒன்று சேர்த்துள்ளது என அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் விடுதலையும் நத்தார் வழிபாடுகளும் இன்று(25) காலை சிறப்பாக நடைபெற்ற போது ஆயரினால் வழங்கப்பட்ட நற்செய்தியிலேயே இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் கூறுகையில், எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் போது அழும். அதே போன்று ஜேசு பாலகரும் பிறக்கும் போது அழுதார். அந்த அழுகை உலகையே விழித்தெழச் செய்தது. இந்தக் குழந்தையின் பிறப்பு வரலாற்றையே மாற்றியமைத்தது. மனிதர்கள் மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மிருக குணத்தில் இருந்து மனிதர்களை மாற்றுவதற்காக ஜேசு பிறப்பெடுத்தார். அவரது பிறப்பு உலகத்தையே மகிழச் செய்தது. அதனால்தான் நாங்களும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றோம். அவரைச் சந்தித்தவர்கள் மாற்றம் பெற்று புதிய வாழ்வு பெற்றார்கள். யேசுவின் பிறப்பு எமக்கு மூன்று பாடங்களை கற்றுத் தருகின்றது. கடவுள் மனிதனோடு இருக்க விரும்பினார். கடவுள் மனிதனோடு வாழ விரும்பினார். மனிதனது வேதனைகளை அனுபவிக்க விரும்பினார். இந்த வாழ்வில் நாங்கள் வேரூன்ற வேண்டும். இந்த வாழ்வு கடவுளின் கொடை. இந்த வாழ்வில் தோல்வியை நினைத்து வேதனையடைக் கூடாது. நம்பிக்கையிழக்கக் கூடாது. அவர் எம்முடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் வேரூன்ற வேண்டும். ஜேசு பாலகனின் வருகையினால் பிரிவினைகள் அகன்றன. மனிதர்களிடையே சாதி, மத, இன, பிரதேசம் உட்பட பல்வேறு வகையிலான வேறுபாடுகளினால் நாங்கள் பிரிந்துள்ளோம். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு எங்களை ஒன்று சேர்க்கின்றது. நாங்கள் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள். பாவம் செய்ததன் காரணமாக கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இந்தப் பிளவு ஏற்பட்டது. அதன் காரணமாகவே தனது மகனை அனுப்பி இரண்டு பேரையும் இணைக்க விரும்பினார். அந்த இணைப்பாளராகவே ஜேசு கிறிஸ்து இருக்கின்றார். எங்களுக்கிடையில் இனி வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்ற வேறுபாடுகள் இல்லை. செல்வந்தன், பிச்சைக்காரன் என்ற வேறுபாடுகள் இல்லை. சாதி, இன, மத வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் இன்றைய தினம் நாங்கள் ஒரே கடவுளை வணங்குகின்றோம். இந்த திருவிழா கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரிய விழா அல்ல. உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏதோ ஒரு வகையில் கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாக இருக்கலாம். கிறிஸ்தவர்களாக இருக்கலாம். பௌத்தர்களாக இருக்கலாம். இஸ்லாமியர்களாக இருக்கலாம். இந்துக்களாக இருக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றனர். அவர் அனைவரையும் வாழ வைக்க வந்த தெய்வம் எனத் தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன், மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன், எகட் கரிதாஸ் அமைப்பின் பணிப்பாளர் அருட் தந்தை டிலிமா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சிறைக்கைதிகள் கலந்துகொண்ட விசேட நத்தார் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன் மறை உரைகளும் நத்தார் செய்திகளும் வாசிக்கப்பட்டன. அத்துடன் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு சிறு குற்றங்களுக்காக தண்டப் பணம் செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டிருந்த மூன்று சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. [2016-12-25 13:11:21]


யாழ்.மரியன்னை தேவாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட நத்தார் பண்டிகை

இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் ஆராதனை யாழ்.மரியன்னை (பெரிய கோவில்) தேவாலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ்,மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாச ஆண்டகையின் தலைமையில் விஷேட ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. [2016-12-25 13:09:07]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்