வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


தூய யோசவ்வாஸ் சிற்றாலய திறப்பு விழா

தூய யோசவ்வாஸ் சிற்றாலயம் ஒன்று செட்டிக்குள பங்கில் அமைக்கப்பட்டு எதிர்வரும் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 7:45 மணியளவில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கின்சிலி சுவாமிபிள்ளை ஆண்டகை அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு விசேட திருப்பலியும் இடம் பெற உள்ளது.
புனித யோசவ்வாஸ் அடிகளாரின் பெயரில் அமைக்கப்படும் இந்த சிற்றாலயமானது செட்டிக்குள பங்கில் வண பிதா ஜெயபாலன் அடிகளாரின் நெறிப்படுத்தலின் கீழ் பங்கு மக்கள், மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பான முறையிலும், இறைமக்கள் வேண்டுதல் செய்யக்கூடிய இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆலயத்தை அமைக்க உதவி புரிந்த சகல நல் உள்ளங்களுக்கும் ஆயர், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள், கத்தோலிக்க ஒன்றியம் சார்பான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்
இதே வேளை சிற்றாலய திறப்பு விழா நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொண்டு இறை ஆசீர் பெற்றிட பங்கு தந்தை வண பிதா ஜெயபாலன்.குரூஸ் அடிகளாரும், பங்கு மேய்ப்பு பணி சபை, பங்கு மக்கள் இனைந்து அழைத்து நிற்கின்றார்கள் [2017-01-11 23:28:43]


இலங்கை சலேசிய மாகாணத்திற்கு இன்னுமொரு புதிய குரு

இன்று இலங்கை வாழ் சலேசியர்கள் அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள், எல்லாம் வல்ல இறைவன் அருளால், சலேசிய சபையைச் சேர்ந்த திருத்தொண்டர். நதீப் பெர்னாண்டோ sdb அவர்கள் அனுராதபுர மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய நோபெட் அந்திராதி ஆண்டகை அவர்களால் 2017 ம் ஆண்டு 8ம் திகதி தை மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 : 30 மணியளவில் சிலாப மறைமாவட்ட, கோட்டபிட்டி பங்கின் புனித அந்தோனியார் ஆலயத்தில் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.
புதிய குருவுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அருட் தந்தையின் பணி சிறக்கவும், இறைவனின் ஆசீர் இவரோடு என்றும் இருக்கவும் இவருக்காக செபிப்பதோடு, எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றோம். இவர் தனது முதல் நன்றித்திருப்பலியை கருக்குப்பனை புனித அந்தோனியார் ஆலயத்தில் 22 / 01 / 2017 ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்புக்கொடுப்பார். [2017-01-07 12:31:22]


அருட்சகோதரிகளுக்கான நித்திய வாக்குத்தத்த நிகழ்வு 28.12.2016

Sisters of servants of god அருட்சகோதரிகளுக்கான நித்திய வாக்குத்தத்த நிகழ்விம் திருப்பலியும் இன்று 28.12.2016 இன்று சிறுகன்டல் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கின்சிலிசுவாமிபிள்ளை ஆண்டகை அவர்களினால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வண பிதா விக்டர்.சோசை மற்றும் குருக்கள் கன்னியர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். நித்திய வாக்குதத்தம் பெற்ற அருட்சகோதரிகளுக்கு ஆயர்,குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், பொதுநிலை தலைவர்கள், கத்தோலிக்க ஒன்றியம், இறைமக்கள் சார்பான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம் [2016-12-29 20:51:33]


வேறுபாடுகள் இல்லாமல் இன்றைய தினம் நாங்கள் மகிழ்கின்றோம் -ஜோசப் ஆண்டகை

பல்வேறு காரணங்களினால் பிளவுபட்டுள்ள மக்களை கிறிஸ்துவின் பிறப்பு ஒன்று சேர்த்துள்ளது என அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் விடுதலையும் நத்தார் வழிபாடுகளும் இன்று(25) காலை சிறப்பாக நடைபெற்ற போது ஆயரினால் வழங்கப்பட்ட நற்செய்தியிலேயே இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் கூறுகையில், எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் போது அழும். அதே போன்று ஜேசு பாலகரும் பிறக்கும் போது அழுதார். அந்த அழுகை உலகையே விழித்தெழச் செய்தது. இந்தக் குழந்தையின் பிறப்பு வரலாற்றையே மாற்றியமைத்தது. மனிதர்கள் மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மிருக குணத்தில் இருந்து மனிதர்களை மாற்றுவதற்காக ஜேசு பிறப்பெடுத்தார். அவரது பிறப்பு உலகத்தையே மகிழச் செய்தது. அதனால்தான் நாங்களும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றோம். அவரைச் சந்தித்தவர்கள் மாற்றம் பெற்று புதிய வாழ்வு பெற்றார்கள். யேசுவின் பிறப்பு எமக்கு மூன்று பாடங்களை கற்றுத் தருகின்றது. கடவுள் மனிதனோடு இருக்க விரும்பினார். கடவுள் மனிதனோடு வாழ விரும்பினார். மனிதனது வேதனைகளை அனுபவிக்க விரும்பினார். இந்த வாழ்வில் நாங்கள் வேரூன்ற வேண்டும். இந்த வாழ்வு கடவுளின் கொடை. இந்த வாழ்வில் தோல்வியை நினைத்து வேதனையடைக் கூடாது. நம்பிக்கையிழக்கக் கூடாது. அவர் எம்முடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் வேரூன்ற வேண்டும். ஜேசு பாலகனின் வருகையினால் பிரிவினைகள் அகன்றன. மனிதர்களிடையே சாதி, மத, இன, பிரதேசம் உட்பட பல்வேறு வகையிலான வேறுபாடுகளினால் நாங்கள் பிரிந்துள்ளோம். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு எங்களை ஒன்று சேர்க்கின்றது. நாங்கள் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள். பாவம் செய்ததன் காரணமாக கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இந்தப் பிளவு ஏற்பட்டது. அதன் காரணமாகவே தனது மகனை அனுப்பி இரண்டு பேரையும் இணைக்க விரும்பினார். அந்த இணைப்பாளராகவே ஜேசு கிறிஸ்து இருக்கின்றார். எங்களுக்கிடையில் இனி வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்ற வேறுபாடுகள் இல்லை. செல்வந்தன், பிச்சைக்காரன் என்ற வேறுபாடுகள் இல்லை. சாதி, இன, மத வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் இன்றைய தினம் நாங்கள் ஒரே கடவுளை வணங்குகின்றோம். இந்த திருவிழா கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரிய விழா அல்ல. உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏதோ ஒரு வகையில் கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாக இருக்கலாம். கிறிஸ்தவர்களாக இருக்கலாம். பௌத்தர்களாக இருக்கலாம். இஸ்லாமியர்களாக இருக்கலாம். இந்துக்களாக இருக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றனர். அவர் அனைவரையும் வாழ வைக்க வந்த தெய்வம் எனத் தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன், மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன், எகட் கரிதாஸ் அமைப்பின் பணிப்பாளர் அருட் தந்தை டிலிமா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சிறைக்கைதிகள் கலந்துகொண்ட விசேட நத்தார் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன் மறை உரைகளும் நத்தார் செய்திகளும் வாசிக்கப்பட்டன. அத்துடன் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு சிறு குற்றங்களுக்காக தண்டப் பணம் செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டிருந்த மூன்று சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. [2016-12-25 13:11:21]


யாழ்.மரியன்னை தேவாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட நத்தார் பண்டிகை

இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் ஆராதனை யாழ்.மரியன்னை (பெரிய கோவில்) தேவாலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ்,மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாச ஆண்டகையின் தலைமையில் விஷேட ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. [2016-12-25 13:09:07]


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கச்சதீவில் இலங்கை அரசாங்கத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இன்று விமர்சையாக இடம்பெற்றது.

யாழ்.மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஐன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரட்ண ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். காலையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் தேவாலயத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். கடந்த மே மாதம் புதிய தேவாலயத்துக்கான அடிக்கல் உத்தியோகபூர்வமாக நாட்டப்பட்டதுடன் 7.5 மில்லியன் ரூபா செலவில் தேவாலய நிர்மாணம் இடம்பெற்றுள்ளது. இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான தமிழக பக்தர்களும், பெருந்திரளான யாழ்ப்பாணம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். [2016-12-24 01:47:35]


யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் பண்டிகை

யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் பண்டிகை நிகழ்வு வெகு கோலாகலமாக இடம்பெற்றது யாழ் மறை மாவட்டத்தின் அனுசரணையுடன் யாழ் படைகளின் கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நத்தார் பண்டிகை நிகழ்வு 20/12/2016 அன்று இரவு யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், இந்திய துணை துாதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் நத்தார் கீதங்களும் இசைக்கப்பட்டன. அத்துடன் பிரதானமாக அமைக்கப்பட்ட இயேசு பாலகனின் பிறப்பை எடுத்துக்கூறும் நத்தார் குடில் விருந்தினர்களினால் ஒளியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. [2016-12-24 01:42:32]


வவுனியாவில் திருச்சொரூபம் புனரமைக்கப்பட்டது

வவுனியா இறம்பைக்குளம் புனித யோசவாஸ் வீதியில் அமைந்துள்ள புனித யோசவாஸ் திருச்சொரூபம் சில நாட்களுக்கு முன் சிலரினால் தாக்கப்பட்டு சேதமாக்கப் பட்ட நிலையில் தற்போது சேதமடைந்த புனித யோசவாஸ் திருச்சொரூபம் புனரமைக்கப்பட்டு அதே இடத்தில வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ். சத்தியராஜ் அவர்கள் தெரிவிக்கையில். ஆலய சொரூபத்தினை சேதப்படுத்தியவர்கள் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் புனித யோசவாஸ் திருச்சொரூபம் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். [2016-12-24 01:39:22]


குருத்துவ திருநிலைப்படுத்தல் விசேட திருப்பலி திருச்சடங்கு

குருத்துவ திருநிலைப்படுத்தல் விசேட திருப்பலி திருச்சடங்கு இன்று மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர் அன்ரனி டிலிமா,, பெரியகல்லாறு தூய அருளானந்தர் ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர் இருதயநாதன் ஜெமில்டன் , சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர் ஜோசெப் நிகஸ்டன் ஆகிய மூன்று அருட்சகோதரர்களை அருட்தந்தையர்களாக குருத்துவ திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி திருச்சடங்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இன்று மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , அருட்தந்தையர்களாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்சகோதரர்களின் பெற்றோர்கள் , குடும்ப உறுப்பினர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த விசேட திருப்பலியை சிறப்பித்தனர் . [2016-12-20 21:07:32]


கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்ற கிறிஸ்மஸ் ஒளிவிழா நிகழ்வு...15.12.2016

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்ற கிறிஸ்மஸ் ஒளிவிழா நிகழ்வானது இன்று காலை 10.00மணியளவில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் 80வது பிறந்த தினத்தை நினைவு கூரும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கின்சிலி சுவாமிபிள்ளை அவர்களுக்கு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு பாடல்களும் இசைக்கப்பட்டது. அத்தோடு இந்த ஒளிவிழா நிகழ்வில் மறைமாவட்டத்தை சேர்ந்த குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் அனைவரும் இனைந்து சிறப்பித்ததோடு பல கிறிஸ்மஸ் நிகழ்வுகளையும், கறோல் பாடல்களையும் இசைத்து மிகிழ்ந்துள்ளார்கள். இதே வேளை ஆயர் அவர்கள் அனைத்து குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கான தனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். [2016-12-20 21:06:41]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்