வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்தவக்காலச் சிந்தனை : சிலுவை வழி

பாடுகளின்றி பலன்கள் இல்லை என்பது நம் எல்லாருக்கும் தெரிந்தது. இறைவழி சென்று, மனமாற்றம் கண்டு நடப்போரின் வாழ்க்கை, எளிதாக இருப்பதில்லை. இதுவரை வராத சோதனைகள், தேடிப்பிடித்து, நம்மிடம் அண்டி வருவது போன்று, நம் வாழ்வு பயணிக்கும். எனக்கு ஏன் இந்தச் சோதனை என்ற கேள்விகளும் நம்மிடம் தோன்றும். பழைய வாழ்வுக்குச் சென்றிட மனம் துடிக்கும். இறைவழி இடுக்கண் நிறைந்ததே. பலர் கல்லெறிய தயாராக இருப்பார்கள். ஏளன பேச்சுக்களும், சிரிப்புக்களும், நம்மை நோக்கி வரும். ஒன்றை மனதில் கொள்வோம். இக்கட்டான சூழ்நிலையில், நாம் தனிமையில் இல்லை. இறைவன் நம்மோடு துணை நிற்கிறார். மகிமை நிறைந்த உயிர்ப்பின் வாழ்வுக்கு பாடுகளின் பயணமே சிறந்த வழி. நம் பாடுகளிலும் இறைவன் நம் பக்கம் இருக்கிறார். சிலுவை வழியே மீட்பின் வழி என நமக்கு உணர்த்தும் இறை இயேசுவின் அரவணைப்பில், மீட்பின் வழி செல்வோம். யாவே என் பக்கம் இருக்கும்போது யாருக்கும் அஞ்சேன் என்று கூறும் இறைவாக்கினர் எரேமியாவைப்போல, இடர் வரினும் துயர் வரினும் இறைவன் என்னை கரம் பிடித்து தாங்குகிறார் என்பதை மனதில் கொள்வோம். சிலுவையின் வழியில், தவறி விழும்போது, மீண்டும் நடந்திட, தொடர்ந்து பயணித்திட, இத்தவக்காலம் நம்மை வழிநடத்தட்டும். சிலுவையின் வழியே உயிர்ப்பின் வெற்றி! (அ.சகோ.இராஜ சேகரன் சே.ச.) (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-07 01:08:40]


ஆர்ஜென்டீனா வெள்ளம் குறித்து திருத்தந்தையின் அனுதாப மடல்

அண்மைய மழை, வெள்ளம் இவற்றின் காரணமாக, பெரும் துன்பங்களைச் சந்தித்து வரும் ஆர்ஜென்டீனா மக்களுடன் தான் செபத்தில் இணைந்திருப்பதை அவர்களுக்குக் கூறுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு மடல் வழியே பேராயர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். பெரும் மழை, வெள்ளம், ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஆறுதலும், உறுதியும் வழங்கும் வண்ணம், திருத்தந்தை எழுதியுள்ள இம்மடல், ஆர்ஜென்டீனா ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் José María Arancedo அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, பல்வேறு தியாகங்கள் புரிந்து, அரும்பாடுபட்டு கட்டியெழுப்பிய வீடுகள், நிலங்கள், உடைமைகள் அனைத்தையும் வெள்ளத்தால் இழக்க நேரிடுகையில் உருவாகும் வலியை தான் உணர்வதாக, திருத்தந்தை, இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டோருக்குப் பணிபுரியும் அரசுத் துறையினர், பிறரன்பு அமைப்பினர், தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் தான் பாராட்டுவதாகவும், அவர்களுக்கு தன் ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை தன் மடலில் கூறியுள்ளார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-07 00:59:44]


தவக்காலச் சிந்தனை: உண்மை தரும் விடுதலை

‘உண்மை விடுவிக்கும்’ என்பது யாவரும் அறிந்ததே. வாழ்வின் எந்நிலையிலும், நாம் உண்மையின் பக்கம் இருக்கும்போது, துன்ப துயரங்கள் வந்தாலும், இறுதியில், நம்மை விடுவிப்பது இந்த உண்மையே. உண்மை, நம்மை, தண்டனையிலிருந்து மட்டுமின்றி, பாவத்திலிருந்தும் விடுவிக்கிறது. இயேசுவும் இன்று இதையே வலியுறுத்துகின்றார். இது, ஆன்மீக விடுதலை. பழி பாவ கண்டனத்திலிருந்து நம்மை விடுவிப்பது, இந்த உண்மை. எவ்வாறு இதை கைக்கொள்வது? முதலில், நாம் நமக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். நம் மனசாட்சிக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில், நமது இரட்டை வேடம் நம்மிடமிருந்து துவங்குகிறது. உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும் சமூகத்தில், 'மனசாட்சிக்கு உண்மையாக நட' எனக்கூறுவது, கேலிக்கூத்தாகிறது. கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்த காலம் போய் இன்று, CCTV கேமராக்களுக்கு பயப்படும் காலம் என மாறி விட்டது. அரசியல் இலாபங்களுக்காக, மனசாட்சியை மழுங்கடிக்கும் அரசியல்வாதிகளால், இன்று தமிழகம் சந்திக்கும் சவால்கள், இதற்கு ஒரு சாட்சி. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களை, வெறும் அரசியல் இலாபத்திற்காகத் திணிக்க முற்படும் இன்றைய அவல நிலையில், உண்மையில், விடுதலை என்பது, புரியாத புதிர்தான். நமக்கும் பிறருக்கும் உண்மையாக இருக்கும்போது, வாழ்வில், புதுமைகள் வழி ஆண்டவர் அருள் வழங்குவார். உண்மை, நம்மிலும் நம்மை ஆள்வோரிடத்திலும் உயிர் பெற்றிட, இத்தவக்காலத்தில் வேண்டுவோம். மனதின் உண்மையே, மானுடத்தின் நன்மை. -அருள் சகோதரர் இராசசேகரன் சே.ச. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-05 01:11:45]


புதுப்பிறப்பை நோக்கிய நம்பிக்கையின் காலம், தவக்காலம்

"உலக நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், நிலக்கண்ணிவெடிகளற்ற ஓர் உலகைக் கட்டியெழுப்புவதற்குரிய நம் அர்ப்பணத்தை மீண்டும் புதுப்பிப்போம்" என இச்செவ்வாய்க் கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இத்திங்களன்று, தன் டுவிட்டர் பக்கத்தில், தவக்காலம் குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை. 'தவக்காலம் என்பது நம்பிக்கையின் காலம். ஏனெனில் இறைவனின் அன்பின் வழியாக நாம், ஆவியில் புதிதாகப் பிறப்பதற்கு, இக்காலம், நம்மை இட்டுச்செல்கிறது’ என, தன் திங்கள் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-05 00:52:33]


இயேசுவோடு இணைந்திருக்கும்போது, இதயங்களில் மகழ்ச்சி தங்கும்

'இறைவன் நம்மருகே இருந்து நம்மீது அக்கறைக் கொண்டு செயல்படுகிறார் என்பதை, தூய ஆவியார் நம் இதயங்களில் குடியிருக்கும்போது, நமக்குப் புரியவைக்கிறார்' என இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை. @pontifex என்ற முகவரியில் திருத்தந்தை உருவாக்கிய இச்செய்தி, வழக்கமான 9 மொழிகளில் வெளியானது. மேலும், ஞாயிறு மாலை, 8.30 மணியளவில், வெளியிட்ட பிறிதொரு டுவிட்டர் செய்தியில், 'இயேசுவோடு நாம் இணைந்திருக்கும்போது, நம் இதயங்களில் மகழ்ச்சி தங்கும், நம்பிக்கை மீண்டும் பிறக்கும், வேதனை என்பது அமைதியாக மாறும், அச்சம் என்பது உறுதியான நம்பிக்கையாக உருவெடுக்கும், சோதனை என்பது அன்பை வழங்குவதாகவும் மாறும்' என எழுதியுள்ளார், திருத்தந்தை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கார்பி மக்கள் நடுவே மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, வத்திக்கானுக்குத் திரும்பியபின், கார்பி மக்களை மனதில் கொண்டு, வழங்கிய இச்செய்தி, இத்தாலிய மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-03 22:55:14]


தவக்காலச் சிந்தனை.. மனங்கள் உயரட்டும்

போதும் என்ற மனமே பொன் போன்றது என்ற சொல் வழக்கு, நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தும், நம் மனங்களில் திருப்தி என்பது, பல நேரங்களில் நமக்கு கைகூடாத ஒன்றாகிறது. புலம்பல் ஆகமங்கள் நம் வாழ்வில், அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இஸ்ரயேல் மக்களும், பாலை நிலத்தில், புலம்பினார்கள். இறைவனின் வியத்தகு செயல்களை மறந்து, அர்த்தமற்ற சுக போக வாழ்க்கைக்காக புலம்பி, தங்களை அழிவுக்கு இட்டுச்சென்றார்கள். நமது மனங்களில், எழும் புலம்பல்களை உற்று கவனிப்போம். எதிர்பார்ப்புகள் அதிகமானால், ஏமாற்றங்கள் அதிகமாகும். நன்றி மறந்திடும் நிலையும், தன்னலம் பேணும் வாழ்வு முறையும், திருப்தியடையா மனமும், புலம்பல்களின் ஊற்றுகள். உயர்த்தப்பட்ட வெண்கல சிலையால் நலமடைந்த இஸ்ரயேல் மக்கள்போல, நம் மனங்கள் உயர்த்தப்படட்டும். சிற்றின்ப நாட்டங்களிலிருந்து, உயர்வான எண்ணங்களோடு நம் மனங்கள் உயர்த்தப்படட்டும். நாம் உயர்வடைவதோடு அல்லாமல், நம்மை காண்போரும், நம்மோடு பழகுவோரும், தங்கள் வாழ்வை உயர்த்திக்கொள்ளட்டும். மேன்மையான, உயர்ந்த எண்ணங்களை கொண்ட மனதில், புலம்பல்களுக்கு இடமும், நேரமும் இருப்பதில்லை. உயர்ந்த, நேரிய, எண்ணம் கொண்ட மனங்களை ஆண்டவர் உயர்த்துகிறார். மனங்கள் உயர்ந்தால், புலம்பல் குறையும். (அ.சகோ.இராஜ சேகரன் சே.ச.) (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-03 22:47:24]


மனித வர்த்தகம், உலகின் மிகப்பெரும் அவமானம்

மக்களை வர்த்தகப் பொருள்களாகக் கடத்துவதும், இது, மிகப்பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகத் திகழ்வதும், இன்றைய உலகின் மிகப்பெரும் அவமானமாக உள்ளது என்ற திருத்தந்தையின் செய்தியை, வியன்னா கருத்தரங்கில் வாசித்தளித்தார், திருப்பீடத்தின் உயர் அதிகாரி, இயேசு சபை அருள்பணி, மைக்கில் செர்னி (Michael Czerny). ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் நேரடிச் செயலர், அருள்பணி செர்னி அவர்கள், மனித கடத்தல் குறித்து, வியன்னாவில் இடம்பெறும் 17வது கருத்தரங்கில் திருத்தந்தையின் செய்தியை வழங்கினார். 'குழந்தைகளை வர்த்தகப் பொருள்களாகக் கடத்துதல்' குறித்து விவாதிக்கும் இக்கருத்தரங்கில், இத்திங்களன்று உரையாற்றிய அருள்பணி செர்னி அவர்கள், குழந்தைகளை வர்த்தகப் பொருள்களாக கடத்தும் நிலை என்பது, ஒருவிதமான அடிமைத்தனம் மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு எதிரான, பெரும் குற்றமும், மனித உரிமை மீறலுமாகும் என்று, தன் செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளதை எடுத்துரைத்தார். குழந்தைகளின் நலன் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசுகளிடையே ஒன்றிணைந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பல இலட்சக்கணக்கான மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, சட்ட, மற்றும், சமூக முயற்சிகளை ஒருங்கிணைப்பதும் அவசியம் என்பதையும் வியன்னா கருத்தரங்கிற்கு வழங்கப்பட்ட திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-03 22:41:20]


தவக்காலச் சிந்தனை- கடவுள் கைபட்டால், உயிர்பெறும் புதுமைகள்

இயேசு, இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய புதுமை, ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருஅவை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். அடுத்த நாள், அடுத்த மணி நேரம், உயிருடன் இருப்போமா என்ற கேள்வி, ஆதி கிறிஸ்தவர்களின் கழுத்தைச் சுற்றிக்கொண்ட ஒரு கருநாகத்தைப் போல், எப்போதும் இவர்களை நெருக்கிக்கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்ட தங்களையும், தங்கள் திருஅவையையும், இறைவன், உயிருடன் வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வளர்க்க, இயேசு, இலாசரை உயிருடன் கொணர்ந்த புதுமை உதவியது. இதே எண்ணங்களை, இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில், ஒவ்வொரு நாளும், இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை, கடவுள், மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று, இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகிறார். இறைவாக்கினர் எசேக்கியேல் 37: 12-14 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன்... என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, எதுவாக இருந்தாலும், கடவுள் கைபட்டால், புதுமைகளாய் உயிர்பெறும். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-02 11:06:12]


தவக்காலச் சிந்தனை - விமர்சனம்

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், பிறரின் விமர்சனத்திலிருந்து தப்புவதில்லை என்பது எதார்த்தம். சிலவேளைகளில் நம்மைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பயந்து, நமது முயற்சிகளை முடக்கிக்கொள்கின்றோம். இது நமது திறமைகளையும் ஆற்றல்களையும் சிறைபிடித்து விடுகின்றது. எனவே, பெரும்பாலான நேரங்களில் நம்மைப் பற்றிய விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதாக நினைத்துக்கொண்டு, வாழ்வின் எதார்த்தங்களைச் சந்திக்கும் மனத்துணிவை இழந்து விடுகின்றோம். இவை நமது நற்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றன. தன்னைப்பற்றிய விமர்சனங்களை எதிர்கொண்டு, தனது இலக்கினை அடைந்த இயேசு கிறிஸ்து போன்று, இந்த தவக்காலத்திலே நம்மைப் பற்றி கூறப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வோம். நாம் செய்யும் நற்செயல்களை, தொடர்ந்து செய்துகொண்டேயிருப்போம். முதலில் நம்மை விமர்சித்தவர்கள் காலப்போக்கில் நம்மை புரிந்துகொண்டு நமது செயல்களை ஆதரிப்பார்கள் என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-01 00:52:26]


கடந்தகால நினைவுகளைத் தூய்மைப்படுத்த திருத்தந்தையின் அழைப்பு

லூத்தர் கொணர்ந்த சீர்திருத்தங்களைப் பற்றி பேசுவதற்கு, திருப்பீடம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து வந்துள்ளது, தூய ஆவியாரின் செயலே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதிநிதிகளிடம் கூறினார். "லூத்தர்: 500 ஆண்டுகளுக்குப் பின்னர்" என்ற தலைப்பில், திருப்பீட வரலாற்றியல் கழகம், உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, மார்ச் 31, இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தின் கிளமெந்தினா அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, இத்தகைய இணைந்த முயற்சியை மனதாரப் பாராட்டினார். அண்மையக் காலம் வரை, இத்தகையதொரு சந்திப்பை எண்ணிப்பார்க்கவும் இயலாமல் இருந்த ஓர் இறுக்கமான சூழலைவிட்டு வெளியேறி, கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், தூய ஆவியாரின் துணையோடு, பயணிக்கும் புதிய வழி, இறைவன் தந்த வரம் என்று திருத்தந்தை இச்சந்திப்பில் கூறினார். சீர்திருத்த இயக்கம் துவங்கிய 500ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு, லூத்தரன் சபையினரும், கத்தோலிக்கரும் இணைந்து 'மோதலிலிருந்து ஒன்றிப்புக்கு' என்ற தலைப்பை மையக்கருத்தாகத் தெரிவு செய்ததையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார். கடந்தகாலத்தை மாற்றமுடியாது என்பதை அனைவரும் அறிவோம் என்று குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக மேகொள்ளப்பட்டு வரும் ஒன்றிப்பு முயற்சியில், நம் கடந்த கால நினைவுகளைத் தூய்மைப்படுத்த, இறைவனின் துணை நமக்குத் தேவை என்று எடுத்துரைத்தார். வரலாற்றின் பல சூழல்களில், பல்வேறு காரணங்களுக்காக கிறிஸ்தவ சமுதாயத்தில் உருவான பிரிவுகள் அனைத்தையும் வென்று, நாம் நம்பிக்கையின் மக்களாக இவ்வுலகிற்கு சான்று பகரவேண்டும் என்று, திருத்தந்தை, தன் உரையின் இறுதியில் வலியுறுத்தினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-01 00:46:39]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்