வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்கிறிஸ்துவின் உயிர்ப்பு திருவிழிப்பு திருவழிபாடு

கிறிஸ்துவின் உயிர்ப்பு திருவிழிப்பு திருவழிபாட்டை ஏப்ரல் 15, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் இரவு 8.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயலத்தில் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்ட இத்திருவழிபாட்டில், முதலில் ஒளி வழிபாட்டில், புதுத்தீயை மந்திரித்தார் திருத்தந்தை. பின்னர், பாஸ்கா திரி ஏற்றி, அத்திரியுடன் பசிலிக்காவுக்குள் பவனியுடன் வந்தார் திருத்தந்தை. பின்னர், பாஸ்கா புகழுரை பாடப்பட்டது. பின்னர் இறைவார்த்தை வழிபாட்டோடு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இதில், திருத்தந்தை வழங்கிய மறையுரையில், எங்கெல்லாம் கல்லறையும், சாவும் உறுதியாக நிலைபெற்றுள்ளதோ, அங்கெல்லாம், ஆண்டவர் உயிர் வாழ்கிறார் என்ற செய்தியைப் பறைசாற்றச் செல்வோம். தங்கள் நம்பிக்கை, கனவு, மாண்பு அனைத்தையும் புதைத்துவிட்ட மனிதர்களில், கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழ விழைகிறார். இந்த நம்பிக்கை வழியில் நம்மை அழைத்துச் செல்லும் தூய ஆவியாருக்கு, நாம் அனுமதி தர மறுத்தால், நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்தப் புதிய உதயத்தால், வியப்புற்று மகிழ்வதற்கு நம்மையே கையளிப்போம். அவரது அன்பும், கனிவும் நம்மை வழிநடத்த அனுமதிப்போம் என்று உரைத்தார். இத்திருப்பலியின், திருமுழுக்கு வழிபாட்டில், இரண்டு இத்தாலியச் சிறார், சீனாவைச் சேர்ந்த Jiana Chiara Xu, மலேசியாவைச் சேர்ந்த Wong Wee Vern, இன்னும். மால்ட்டா, அல்பேனியா, அமெரிக்க ஐக்கிய நாடு, செக் குடியரசு, இஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 பேருக்குத் திருமுழுக்கு அளித்து, உறுதிபூசுதல் அருளடையாளங்களையும் வழங்கினார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் நடைபெற்ற இத்திருவிழிப்பு வழிபாட்டின் இறுதியில் எல்லாருக்கும் தனது ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏப்ரல் 16, இஞ்ஞாயிறன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தனது 90வது பிறந்த நாளைச் சிறப்பித்தார். திருத்தந்தை அவர்களை வாழ்த்தி அவருக்காகச் செபிப்போம். 2013ம் ஆண்டில் பாப்பிறை தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அகிலத் திருஅவையையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எளிமையும், தாழ்மையும் கொண்டவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருஅவையின் 600 வருட வரலாற்றில், பாப்பிறை தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முதல் திருத்தந்தை இவர். இவரின் 90வது பிறந்த நாள், இத்திங்களன்று எளிமையான முறையில் சிறப்பிக்கப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, இத்தாலியின் அசிசி நகரில் கட்டப்பட்டுள்ள புதிய திருத்தலத்திற்குத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். இப்புதிய திருத்தலம், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் அடிச்சுவசுகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை திருஅவைக்கு நினைவுபடுத்துகின்றது. இப்புனிதர் உலகமயமானப் பொருள்களைக் களைந்துவிட்டு, நற்செய்தியின் விழுமியங்களை அணிந்துகொள்ள வேண்டுமென்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றார். நம்மையே களைந்து, ஏழைகளாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவையில் இருப்போருக்கு உதவி, ஏழைகளோடு வாழ்வதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-17 01:26:44]


முன்னாள் திருத்தந்தைக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை

புனித வியாழன் காலை, புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தின் 10 பங்குகளில் பணியாற்றும் அருள்பணியாளர்களுடன் மதிய உணவருந்தினார். திருப்பீட உயர் அதிகாரியான, பேராயர் Angelo Becciu அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மதிய உணவின்போது, பங்கு அருள்பணியாளர்கள் பகிர்ந்துகொண்ட பிரச்சனைகளுக்கு, சகோதர உணர்வுடன் செவிமடுத்தத் திருத்தந்தை, தன் பணி வாழ்வில் சந்தித்தப் பிரச்சனைகளை அவர்களுடன் பகிர்ந்து, ஆலோசனைகள் வழங்கினார். புனித வியாழன் பிற்பகலில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தங்கியிருக்கும் "Mater Ecclesiae" இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தார். மேலும், குறிப்பாக, ஏப்ரல் 16, உயிர்ப்புப் பெருவிழாவன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் 90வது பிறந்தநாளைச் சிறப்பிக்கவிருப்பதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-15 00:31:22]


பாத்திமா நூற்றாண்டு விழா - வத்திக்கான் சிறப்புத் தபால் தலை

1917ம் ஆண்டு, பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சியளித்த புதுமை நிகழ்வின் முதல் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், மே மாதம் 13ம் தேதி சிறப்பைக்கப்படுவதையொட்டி, மே மாதம் 4ம் தேதி, வத்திக்கான் நாடு, ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிடவுள்ளது. 1917ம் ஆண்டு, மே மாதம் முதல், அக்டோபர் மாதம் முடிய பாத்திமா நகரில் அன்னை மரியா, ஆடு மேய்க்கும் சிறார் மூவருக்குத் தோன்றிய காட்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்தத் தபால் தலையை Stefano Morri என்பவர் வடிவமைத்துள்ளார். மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 16ம் தேதி, தன் 90வது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, அவரது நினைவாக, மற்றொரு தபால் தலை, மே 4ம் தேதி வெளியிடப்படுகிறது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முதல் நாளன்று, புனித பேதுரு பசிலிக்காவில் திறக்கப்பட்ட புனிதக் கதவருகே, முன்னாள் திருத்தந்தையும், தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒருவரையொருவர் அணைத்தபடி நிற்கும் காட்சியை, Daniela Longo என்ற ஓவியர், இந்தத் தபால் உரையில் வடிவமைத்துள்ளார். புனிதர்கள் பேதுரு, மற்றும் பவுல் இருவரும் உரோம் நகரில் கி.பி. 67ம் ஆண்டு மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என்ற மரபையொட்டி, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 1950ம் ஆண்டு நிறைவின் நினைவாக, இவ்விரு புனிதர்களின் உருவங்கள் பதிக்கப்பட்ட இரு தபால் தலைகள், மே மாதம் 4ம் தேதி வெளியாகின்றன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-13 13:22:42]


தவக்காலச் சிந்தனை - சீடரின் காலடிகளைக் கழுவுதல்

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்”என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை”என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை”என்றார். தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் “உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை”என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் என்றார் (யோவா.13,1-15.). [2017-04-13 13:15:25]


தவக்காலச் சிந்தனை : அன்பை வெளிப்படுத்துவோம்

இயேசு கிறிஸ்து, சிலுவையிலே தன் உயிரை தியாகம் செய்து, நம்மீது கொண்ட அன்பினை வெளிக்காட்டியதை தியானிக்கின்ற இந்த தவக்காலத்திலே, நாமும் ஒருவரொருவரோடு கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றோம். நம்மில் பலருக்கு, பிறர் மீது அன்பு இல்லாமல் இல்லை. மாறாக, அந்த அன்பினை வெளிப்படுத்தத் தெரிவதில்லை. வெளிப்படுத்தாத அன்பு, இறந்த அன்பிற்கு சமம். நாம் பிறர்மீது கொண்டுள்ள அன்பினை, பல வழிகளில் வெளிப்படுத்தலாம். பிறரை பார்க்கும்பொழுது, முகம் மலர்ந்து, புன்னகை செய்வது, மனதிற்கு மகிழ்வுதரும் வார்த்தைகளை பகிர்ந்துகொள்வது, தேவைகளை உணர்ந்து சிறு சிறு உதவிகள் செய்வது, பிரச்சனைகளில் இருக்கும் பொழுது ஆறுதலாக இருப்பது, என, ஆயிரமாயிரம் வழிகள் இருக்கின்றன. அன்பு வெளிப்படும்பொழுது, அங்கே, ஒரு பரஸ்பர வளர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது. எனவே, பிறர்மீதுள்ள அன்பினை, நமது சிறு சிறு செயல்கள்மூலம் வெளிப்படுத்துவோம். ஆனந்தத்தை நமது வாழ்வில் அதிகரிப்போம். (அ.சகோ. செலூக்காஸ் சே.ச.) (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-10 21:44:26]


எகிப்து தாக்குதலுக்கு உலக திருஅவைகள் கண்டனம்

இதற்கிடையே, எகிப்து கிறிஸ்தவக் கோவில்கள்மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தக்குதல்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது இந்திய தலத்திருஅவை. இத்தகைய வன்முறைச் செயல்கள், எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோதர் மஸ்கரீனஸ் அவர்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவில்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, எகிப்தில், மூன்று மாதங்கள், அவசர கால நிலையை, அரசுத் தலைவர் அறிவித்துள்ளதை வரவேற்கும் அதேவேளை, இத்தகையக் கொடும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைப்பதாகவும் ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், WCC எனும் உலக கிறிஸ்தவ சபைகளின் அவையும், எகிப்து தாக்குதல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தவிர, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இங்கிலாந்து கத்தோலிக்க தலைவர்கள், ஜெர்மன் ஆயர் பேரவை என பல்வேறு தலத்திருஅவைகளும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-10 21:28:36]


திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 90வது பிறந்த நாள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 90வது பிறந்த நாளையொட்டி, ஜோசப் ராட்சிங்கர்-16ம் பெனடிக்ட் நிறுவனம், உரோம் நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்நிறுவனத்தின் தலைவராகிய இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார். பிறந்த நாளன்றே திருமுழுக்கும் பெற்றார். அந்த நாள் அவ்வாண்டில் புனித சனிக்கிழமையாக இருந்தது. திருஅவையின் மிக முக்கிய திருவழிபாட்டுக் காலத்தில் தான் பிறந்ததற்கு நன்றியோடு இருப்பதாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் "Milestones" என்ற தனது நூலில் எழுதியுள்ளார். எனது வாழ்வு பாஸ்கா பேருண்மையில் மூழ்கியுள்ளது, இதைவிட பெரிய ஆசீர்வாதம் வேறு எதுவும் எனக்கு இருக்க முடியாது எனவும் அந்நூலில் எழுதியுள்ளார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவ்வாண்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு ஞாயிறன்று இத்திருத்தந்தையின் 90வது பிறந்த நாள் வருகின்றது என்றும், ஏனைய பிறந்த நாள்களைப் போலவே இப்பிறந்த நாளும் மிக எளிமையாகச் சிறப்பிக்கப்படும் என்றும், இவர், பெரிய விழாக்களை விரும்புவதில்லை என்றும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செயலராகப் பணியாற்றிய, பேராயர் Georg Ganswein அவர்கள் கூறினார். "ராட்சிங்கர் விருது" பெற்ற 13 இறையியலாளர்களால் எழுதப்பட்ட "Festschrift" என்ற நூல், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படும். திருத்தந்தையின் விருதுவாக்கான, உண்மையின் இணைப் பணியாளர்கள் என்பது இந்நூலின் பொருளாகும். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-10 21:17:32]


எகிப்து கோவில் மீது தாக்குதல் குறித்து திருத்தந்தை கவலை

எகிப்தில் Tanta நகர் காப்டிக் கிறிஸ்தவ கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். குருத்தோலை திருவிழா திருப்பலிக்குப்பின் நண்பகல் மூவேளை செபத்தை விசுவாசிகளோடு இணைந்து செபிப்பதற்குமுன்னர் உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதல் குறித்து, தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாகவும், அச்சம், வன்முறை, மரணம் போன்றவற்றை விதைப்பவர்களும், ஆயுதக் கடத்தல்களில் ஈடுபடுபவர்களும், மனம் மாறவேண்டும் என செபிப்பதாகவும் தெரிவித்தார். குருத்தோலை திருவிழாவைச் சிறப்பிக்க, ஞாயிறன்று எகிப்தின் Tanta நகர் காப்டிக் கிறிஸ்தவக் கோவிலில் விசுவாசிகள் கூடியிருந்தபோது, குண்டு ஒன்று வெடித்து 27 பேரின் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. சிறிது நேர இடைவெளியில், அலெக்சாந்திரியாவின் கிறிஸ்தவக் கோவிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விரு வெடிகுண்டு விபத்துக்களிலும் 44 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. இம்மாதம் 28, 29 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் மேற்கொள்ளும் திருப்பயணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை திருப்பீடம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுவீடன் தலைநகர் இஸ்டாக்ஹோமில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற கனரக வாகன தாக்குதல் குறித்தும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-10 21:06:55]


இளையோருடன், திருத்தந்தை மேற்கொள்ளும் திருவிழிப்பு வழிபாடு

ஏப்ரல் 9, குருத்தோலை ஞாயிறன்று கொண்டாடப்படும் 32வது உலக இளையோர் நாளுக்கு முந்திய நாள், சனிக்கிழமை, உரோம் மறைமாவட்டம், மற்றும், இலாசியோ பகுதி மறைமாவட்டங்களைச் சேர்ந்த இளையோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவிழிப்பு வழிபாட்டை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவிருக்கும் இந்த திருவிழிப்பு வழிபாடு, இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கும், 2019ம் ஆண்டு, பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கும் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் திருத்தூதர்களில், மிக இளையவரும், இயேசுவால் அன்பு செய்யப்பட்டவருமான புனித யோவான், இத்திருவிழிப்பு வழிபாட்டின் மையப்பொருளாகவும், அடையாளமாகவும் இருப்பார். ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்பு குழுவும், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையும் இணைந்து, இந்த திருவிழிப்பு வழிபாட்டை நடத்துகின்றன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-07 01:17:22]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்