வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்பாசமுள்ள பார்வையில் : ஒளியின் அன்னைமரியா,எகிப்து

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலுள்ள புகழ்பெற்ற மாவட்டம் El Zeitoun. இது, 1968ம் ஆண்டுமுதல் 1971ம் ஆண்டுவரை இடம்பெற்ற அன்னைமரியா காட்சிகளுக்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது. புனித யோசேப்பும், மரியாவும், குழந்தை இயேசுவும் பெத்லகேமிலிருந்து வெளியேறி எகிப்துக்குச் சென்ற வேளையில், திருக்குடும்பமாக அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக, பாரம்பரியம் சொல்கிறது. இவ்வாலயமும் திருக்குடும்பத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காப்டிக் கிறிஸ்தவ சபைக்குரிய இவ்வாலயத்தில் 1968ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மாலை தொடங்கி, ஓராண்டுக்கு மேலாக இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு வடிவங்களில் காட்சியளித்திருக்கிறார் அன்னைமரியா. இக்காட்சிகள் ஒளியால் நிறைந்திருந்ததால் இவ்வன்னை, ஒளியின் அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார். இக்காட்சிகளை எகிப்து நாட்டவர், மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என இலட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர், முஸ்லிம்கள், யூதர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் என பல்வேறு மக்கள் இக்காட்சிகளுக்குச் சாட்சி பகர்ந்துள்ளனர். நோயுற்றோர் குணமடைந்துள்ளனர், மத நம்பிக்கையற்ற பலர் மனமாறியுள்ளனர். இக்காட்சி 1971ம் ஆண்டுவரை நீடித்தது. ஏறக்குறைய 2,50,000 பேர் இக்காட்சிகளைப் பார்த்ததாகச் சொல்லப்படுகின்றது. அண்மைய வன்முறைகளால் காயப்பட்டு, அமைதியிழந்து தவிக்கும் எகிப்து நாட்டிற்கு, அமைதியின் தூதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், ஒளியின் அன்னை மரியா அவருக்கும், எகிப்து மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பையும், அமைதியையும் வழங்குவாராக! (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-01 01:16:23]


பாகிஸ்தான் பள்ளிகள், சிறைகளைப் போல் தோற்றமளிக்கின்றன

பாகிஸ்தானில் உள்ள பல பள்ளிகள், அண்மையக் காலங்களில், சிறைகளைப் போல் தோற்றமளிக்கின்றன என்று இலாகூர் பேராயர், செபாஸ்டின் ஷா அவர்கள், CNS கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். பாகிஸ்தானில் தொடர்ந்துவரும் வன்முறைகளுக்குப் பதிலளிக்கும் வண்ணம், பள்ளிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற புதிய விதி முறைகளுக்கு ஏற்ப, பள்ளிகளின் சுற்றுச் சுவர்களை இன்னும் உயரமாக்குதல், கண்காணிப்பு காமராக்கள், காவல் ஏற்பாடுகள் என்று, பள்ளியின் நிர்வாகிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்று பேராயர் ஷா அவர்கள் சுட்டிக்காட்டினார். பள்ளிக்குள் நுழையும் மாணவ, மாணவியர், பல அடுக்கு பாதுகாவல் ஏற்பாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், அவர்கள் ஒரு சிறைக்குள் செல்லும் அனுபவத்தைப் பெறுகின்றனர் என்று, பேராயர் ஷா அவர்கள் கவலை வெளியிட்டார். கடந்த ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலாகூர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து, இவ்வாண்டு, புனித வாரம் முழுவதும், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி, காவல் துறையும், அந்தந்த ஆலய நிர்வாகிகளும் பல அடுக்கு பாதுகாவல் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று, பேராயர் ஷா அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார். (ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி) [2017-05-01 01:10:48]


'இரக்கத்தின் முகம்' ஆவணப்படம் வெளியீடு

இறை இரக்கம் என்பது வெறும் பக்தி முயற்சி அல்ல; மாறாக, அது, இவ்வுலகில் இன்றும் வாழும் உண்மை என்றும், இவ்வுலகை மாற்றும் வலிமை பெற்றது என்றும் Knights of Columbus அமைப்பின் தலைவர், Carl Anderson அவர்கள், ஒரு திரைப்பட வெளியீட்டு நிகழ்வில் கூறினார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. 'The Face of Mercy' அதாவது, 'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில், Knights of Columbus அமைப்பினர் உருவாக்கியுள்ள ஒரு மணிநேர ஆவணப்படம், அண்மையில் வெளியிடப்பட்ட வேளையில், Anderson அவர்கள் இவ்வாறு கூறினார். கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி, 2004ம் ஆண்டு வெளியான, 'The Passion of the Christ' என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில், இயேசுவின் பாத்திரமேற்று நடித்த, Jim Caviezel என்ற நடிகர், இந்த ஆவணப்படத்தின் தொகுப்புரையை, பின்னணியில் வழங்கியுள்ளார். இறை இரக்க பக்தியின் வரலாறு, இறையியல் இவற்றுடன், தனிப்பட்டவர்கள் வாழ்வில் இறை இரக்கம் ஆற்றிய நன்மைகள் குறித்த சாட்சியப் பகிர்வுகள் இத்திரைப்படத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ருவாண்டா நாட்டில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த Immaculée Ilibagiza என்ற பெண், தன் குடும்பத்தினரைக் கொலை செய்தவர்களை எவ்வாறு மன்னித்தார் என்பதும், நியூ யார்க் நகரில் நிகழ்ந்த ஒரு துப்பாக்கிச் சூட்டினால், தன் உடலில், இடுப்புக்குக் கீழ் செயலற்று, சக்கர நாற்காலியில் வாழும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்நகரில் சமாதானத்தைக் கொணர எவ்வாறு முயற்சிகள் மேற்கொள்கிறார் என்பதும் இத்திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளன. அதே வண்ணம், ஓர் இளம் கைம்பெண், தன் கணவரைக் கொன்றவர்களை எவ்விதம் மன்னித்துள்ளார் என்பதும், அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் ஒருவர், வீடற்றவர்களுக்கு பணியாற்றுவதும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. (ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி) [2017-04-27 01:48:49]


கிறிஸ்தவரும், புத்த மதத்தினரும் அகிம்சா பாதையை ஊக்குவிக்க..

இவ்வுலகில், அமைதி மற்றும், வன்முறையற்ற அகிம்சா கலாச்சாரத்தை கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும் ஒன்றிணைந்து ஊக்குவிக்குமாறு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கேட்டுக்கொண்டுள்ளது. புத்தர் பிறந்த நாள் கொண்டாட்டமான வேசாக் (Vesakh) விழாவை முன்னிட்டு, “கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும் : வன்முறையற்ற பாதையில் ஒன்றிணைந்து நடக்க..” என்ற தலைப்பில், உலகின் புத்த மதத்தினருக்கு செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இயேசு கிறிஸ்துவும், புத்தரும், அகிம்சையை ஊக்குவித்து, அமைதி ஆர்வலர்களாகச் செயல்பட்டவர்கள் எனக் கூறியுள்ளது. இயேசு வன்முறை நிறைந்த காலத்தில் வாழ்ந்தார் எனினும், வன்முறையும், அமைதியும் சந்திக்கும் உண்மையான போர்க்களம் மனித இதயம், ஏனென்றால், மனித இதயத்திற்குள்ளே தீய எண்ணங்கள் பிறக்கின்றன, அந்த இதயத்திலிருந்தே தீய எண்ணங்கள் வெளியாகின்றன என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதை, அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது அத்திருப்பீட அவை. புத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தர் அவர்களும், அகிம்சை மற்றும், அமைதிச் செய்தியை அறிவித்தார் என்றும், ஒருவர் போரில், ஆயிரம் மனிதர்களை, ஆயிரம் முறைகள் வெல்லலாம், ஆயினும், தன்னையே வெல்தல், மற்றவரை வெல்வதைவிட பெரியது என்றும், புத்தர் கூறியுள்ளதை நினைவுபடுத்தியுள்ளது அச்செய்தி. நம் இரு மதங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் அதேவேளை, வன்முறை மனித இதயத்திலிருந்து பிறக்கின்றது என்பதையும், தனிப்பட்டவர்களின் தீமைகள் அமைப்புமுறை தீமைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதையும் நாம் ஏற்கின்றோம் எனவும் அச்செய்தி கூறுகிறது. நம் குடும்பங்களிலும், சமூக, அரசியல், பொது மற்றும் சமய நிறுவனங்களிலும், வன்முறைப் புறக்கணிக்கப்பட்டும், மனிதர் மதிக்கப்பட்டும் வாழப்படுகின்ற ஒரு புதிய வாழ்வுமுறையை வளர்ப்பதற்கு உயிரூட்டத்துடன் நம்மை அர்ப்பணிப்போம் என்றும், புத்த மதத்தினருக்கென வெளியிடப்பட்டுள்ள அச்செய்தி அழைப்பு விடுத்துள்ளது. திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot, MCCJ ஆகிய இருவரும், அச்செய்தியில் கையெழுத்திட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளில் சிறப்பிக்கப்படும் வேசாக் விழா, லூனார் நாட்காட்டியை வைத்து, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாள்களில் சிறப்பிக்கப்படுகின்றது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-24 16:41:59]


பாசமுள்ள பார்வையில் - தகுதி கருதி வருவது, இரக்கம் அல்ல

பேரரசன் நெப்போலியனிடம் ஒருநாள், வயதான ஒரு தாய், கலங்கிய கண்களுடன் வந்து சேர்ந்தார். படைவீரனான தன் மகன் மீது, பேரரசன் நெப்போலியன் கருணை காட்டவேண்டும் என்று அவ்வீரனின் தாய் மன்றாடினார். பேரரசன் அத்தாயிடம், "உங்கள் மகன் இரண்டாம் முறையாக மிகப்பெரியத் தவறு செய்துள்ளான். எனவே, அவனுக்கு மரண தண்டனை தருவதே நீதி," என்று கூறினார். அத்தாய் உடனே, பேரரசன்முன் மண்டியிட்டு, "நான் உங்களிடம் கேட்பது, நீதியல்ல அரசே! நான் கேட்பது, இரக்கமே!" என்று கூறினார். உடனே பேரரசன், தாயிடம், "அவன் இரக்கம் பெறுவதற்குத் தகுதியற்றவன்" என்று கூறினார். அத்தாய் மன்னரிடம், "தகுதி கருதி வருவது இரக்கம் அல்ல. தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், வெளிப்படுவதுதான் இரக்கம். அந்த இரக்கத்தையே நான் உங்களிடம் கேட்கிறேன்!" என்று மன்றாடினார். சிறிது நேர அமைதிக்குப் பின், பேரரசன் நெப்போலியன் அத்தாயிடம், "நீங்கள் கேட்ட இரக்கத்தை தருகிறேன். உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள்!" என்று கூறினார். தகுதி, தரம் பார்க்காமல், தயக்கம் ஏதுமில்லாமல், இரவெல்லாம் இறங்கிவரும் பனிபோல, நம் உள்ளங்களை நனைப்பதே இரக்கம். அதிலும் சிறப்பாக, தகுதியற்றவர்களை, தவறி வீழ்ந்தவர்களைத் தேடி, மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து வருவதே, இறை இரக்கத்தின் இலக்கணம். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-23 01:01:05]


திருத்தந்தையின் நம்பிக்கை தரும் டுவிட்டர் செய்திகள்

"நமது அவலம், பலவீனம் இவற்றின் மிகத் தாழ்ந்த நிலையை நாம் அடைந்துவிடும் வேளையில், நாம் மீண்டும் எழுந்துவர, உயிர்த்த கிறிஸ்து, சக்தியைத் தருகிறார்" என்ற நம்பிக்கைச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 21, வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், இவ்வியாழனன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "கிறிஸ்து உயிர்த்துவிட்டதால், நம் வாழ்வில் நிகழும் மிக எதிர்மறையான நிகழ்வுகளையும், புதிய இதயத்துடன், புதிய கண்களுடன் நம்மால் காண முடியும்" என்ற சொற்கள் இடம்பெற்றன. புனித வாரத்திலும், உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் நாள்களிலும், கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பு இவை நமக்குத் தரும் நம்பிக்கையைக் குறித்து, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் அமைந்து வந்துள்ளன. @pontifex என்ற முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகள், இதுவரை 1.168 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது என்பதும், இச்செய்திகளைத் தொடர்வோரின் எண்ணிக்கை, 1,05,96,831 என்பதும் குறிப்பிடத்தக்கன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-23 00:42:45]


பாத்திமா திருத்தலத்தில் மே 13ம் தேதி புனிதர் பட்ட விழா

பாத்திமா நகரில் அன்னை மரியா தோன்றியதன் முதல் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க, அங்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 13ம் தேதி, இடையர்களான பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜெசிந்தா மார்த்தோ என்ற இருவரையும், அத்திருத்தலத்தில் புனிதர்களாக உயர்த்துவார். ஏப்ரல் 20, இவ்வியாழன் காலை வத்திக்கானில் நடைபெற்ற கர்தினால்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் இறுதியில், திருத்தந்தை இத்தகவலை வெளியிட்டார். இடையர்களான பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா இருவரின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை, மார்ச் மாதம் 23ம் தேதி, திருத்தந்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, இந்த நூற்றாண்டு விழா, புனிதர் பட்ட விழாவாகவும் உருவெடுத்துள்ளது. 10 வயது நிறைந்த பிரான்சிஸ்கோவும், 9 வயது நிறைந்த ஜசிந்தாவும் புனிதர்களாக உயர்த்தப்படும்போது, கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரைத் துறந்த குழந்தை மறைசாட்சிகள் அல்லாமல், திருஅவையில், மிகக் குறைந்த வயதில் புனிதர் பட்டம் பெற்றவர்கள் என்ற பெருமையை இவர்கள் இருவரும் பெறுவர். இவ்விருவரையும், 2000ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால், அருளாளர்களாக உயர்த்தினார். மேலும், மறைசாட்சிகளாக உயிர் துறந்த அருளாளர்களான, அருள்பணியாளர்கள் Andrea de Soveral, Ambrose Francesco Ferro, பொதுநிலையினரான Matteo Moreira மற்றும் 27 தோழர்களும், இறை ஆயனின் புதல்வியர் சபையை நிறுவிய அருள்பணியாளர் Faustino Míguez, கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் Angelo da Acri என்ற இரு அருளாளர்களும், அக்டோபர் 15, ஞாயிறன்று, புனிதர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-21 03:14:53]


பாசமுள்ள பார்வையில்.. தாயன்புக்கு நிகரான அன்பு உளதோ?

அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தன் கணவர் ராஜனிடம், அந்த முதியோர் இல்லத்தில் இருந்து வந்திருந்த கடிதத்தை நீட்டி, உங்களை நாளைக்கு அங்கு வரச் சொல்லியிருக்கிறார்கள், அங்கே போய்விட்டுத் திரும்பும்போது, அங்கிருக்கும் உங்கள் அம்மாவையும் கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள் என எச்சரித்தார் ராஜாத்தி. சென்ற மாதம் தானே அம்மாவைப் பார்த்து வந்தேன், அதற்குள் என்ன அவசரமோ என்று, அம்மாவைப் பற்றிய இனம்புரியாத பயம் ஏற்பட்டது ராஜனுக்கு. அதேநேரம் அவருக்கு, மனைவி மீது கோபம் கோபமாயும் வந்தது. மறுநாள் காலை அம்மாவைப் பார்க்க முதியோர் இல்லம் சென்ற ராஜனிடம், அவ்வில்லத் தலைவர், சார், உங்கள் அம்மா, இந்தக் கவரை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று அதைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தபோது ராஜன் பெயருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஒரு கடிதமும் இருந்தன. அதை வாசித்த ராஜன் அதிர்ந்து போனார். அன்பு மகனுக்கு, உன் தந்தை இறந்தபோது, உன்னை நான் சுமையாக அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் உடல் உழைப்பைத் தர முடியவில்லை. நீ கஷ்டப்படுவதைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. இந்த நிலையில் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். அப்போது செல்வந்தர் ஒருவருக்கு, அவசரமாக சிறுநீரகம் தேவைப்பட்டது. அதனால் எனது சிறுநீரகத்தை விற்று அந்தப் பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன். கடனையெல்லாம் அடைத்துவிட்டு என் பேத்தியை நன்கு படிக்க வை! அவள் நாளை, உன்னையும், உன் மனைவியையும் காப்பாத்துவாள். நீங்கள் எல்லாரும் நல்லாயிருக்க வேண்டுமென நான் அந்தக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்! நான் போகிறேன்... இப்படிக்கு உன் அன்பு அம்மா! இது கதையல்ல, உண்மையில் நடந்தது. பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. அன்பு என்பது, அன்னையிடம் மட்டுமே எல்லாக் காலங்களிலும் அமுதமாய் கிடைக்கும். தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்க வேண்டாமே. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-20 01:26:23]


ஏப்ரல் 19, 16ம் பெனடிக்ட், திருஅவையின் தலைவரான நாள்

தன் 90 வருட வாழ்வில், நெருக்கடிகளும், இன்னல்கள் நிறைந்த நேரங்களும் இருந்தாலும், அவற்றிலிருந்து இறைவன் தன்னைக் காத்ததற்காக, அவருக்கு தன் நன்றியைக் கூறுவதாக, முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் கூறினார். ஏப்ரல் 16, ஞாயிறன்று, தன் 90வது பிறந்தநாளை நிறைவு செய்த முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 17 இத்திங்களன்று தான் தங்கியிருக்கும் இல்லத்தில் அமைதியான முறையில் தன் பிறந்தநாளைக் கொண்டாடியவேளையில், தன் நன்றி உணர்வுகளை, சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். முன்னாள் திருத்தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, அவர் பிறந்த பவேரியா பகுதியிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு நன்றி கூறிய 16ம் பெனடிக்ட் அவர்கள், பவேரியா பகுதியை இறைவன் மிக அழகாகப் படைத்ததோடு, அங்கு கிறிஸ்தவ விசுவாசத்தை விதைத்ததால், தான் அந்த விசுவாசத்தில் வளர முடிந்தது என்று கூறினார். 2005ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதி, கர்தினால் ஜோசப் இராட்ஸிங்கர் அவர்கள், கர்தினால்களின் 'கான்கிளேவ்' அவையால் தேர்தெடுக்கப்பட்டதையடுத்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளின் 12வது ஆண்டை, இப்புதனன்று சிறப்பித்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-20 01:14:54]


பாசமுள்ள பார்வையில்.. வெற்றிகளின் அன்னை

எவ்வளவு பெரிய இருட்டாக இருந்தாலும், கிழக்கு அதை கிழிக்காமல் விடாது. கல்லறை இருட்டைக் கிழித்து, கிழக்கின் விளக்காக கிளர்ந்து எழுந்துள்ளார் கிறிஸ்து. சாவுக்குச் சாவுமணி அடித்து, சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? என்று சிந்தை மகிழ, விந்தை நிகழ, கல்லறைக் கூட்டை உடைத்து, வீர முழக்கத்துடன் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார் கிறிஸ்து. வெற்றி நாயகன் இயேசுவின் தாயாம் அன்னை மரியாவும், வெற்றிகளின் அன்னையே. ஜெகத்தை வென்ற ஜெகனின் தாயாம் அன்னை மரியா ஜெக மாதா, வெற்றிகளின் மாதா. அன்னை மரியாவை, வெற்றிகளின் அன்னை என்று அழைப்பதற்கு ஒரு வரலாறும் உள்ளது. 16ம் நூற்றாண்டில், முஸ்லிம்கள், இஸ்பெயின் நாட்டின் பெரும் பகுதியை ஆக்ரமித்து, கிறிஸ்தவ ஐரோப்பாவின் பெரும் பகுதியை அச்சுறுத்தினர். இந்த அச்சுறுத்தல், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே Ionian கடல் பகுதியில், Lepanto என்ற இடத்தில் நடந்த சண்டை உண்மையாக்கியது. இந்த ஆபத்தை உணர்ந்த அப்போதைய திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவர்களையும், செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார். கிறிஸ்தவர்கள் எல்லாரும் அன்னை மரியாவை நோக்கி உருக்கமாக செபமாலைச் செபித்தனர். கிறிஸ்தவ ஐரோப்பிய படைகள், போரில் வெற்றியும் பெற்றன. இது நடந்தது 1571ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள். இதனால், திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அன்னை மரியாவை வெற்றியின் அன்னை எனவும், அக்டோபர் 7ம் தேதி செபமாலை அன்னை விழா எனவும் அறிவித்தார். அன்னை மரியா தம் மகன் இயேசுவிடம், நம் எல்லாருக்காகவும் எப்போதும் பரிந்து பேசி வருகிறார். வெற்றியின் அன்னை மரியாவை நம்பிக்கையுடன் நாமும் நாடுவோம். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-04-17 17:46:22]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்