வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்பாசமுள்ள பார்வையில்.. புறக்கணிப்பிலும் மகனை வாழ்த்திய தாய்

ஆப்ரிக்கத் தாய் ஒருவர் ஒருநாள், தனது குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அதிகாலையில், தண்ணீர் எடுக்கச் சென்றார். அந்நேரத்தில், அவரின் ஆறு வயது மகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தான். இருபது நிமிடங்கள் கழித்து தண்ணீருடன் திரும்பி வந்தபோது, குடிசை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அப்பெண்ணின் கணவரும் ஊர் மக்களும் செய்வதறியாது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் வீட்டின் உள்ளே தனது ஒரே மகன் தூங்குகிறான் என்பதை உணர்ந்த தாய், பற்றி எரிந்துகொண்டிருந்த வீட்டில் நுழைந்து மகனை தூக்கி வந்தார். மகனுக்கு இலேசான தீக்காயங்கள். ஆனால் தாயின் முகத்திலும், மற்ற பகுதிகளிலும் பலத்த தீக் காயங்கள். இந்நிலையில் தந்தை அவ்விருவரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். சிகிச்சை முடிந்து மகனை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தார் தாய். மகனும் நன்றாகப் படித்தான். உயர் படிப்புக்காக நகரத்திற்கு அனுப்பினார் தாய். படித்து பட்டம் பெற்ற மகன், அதன்பின் தாயைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவன் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினான். பலருக்கு அதில் அவன் வேலை கொடுத்தான். மகனின் இந்நிலை பற்றி அறிந்த தாய் பெருமிதம் அடைந்தார். ஒரு நாள், தீக்காயம் பட்ட தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு அவனைப் பார்க்கச் சென்றார் தாய். மகனின் நிறுவனத்தின் வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம், உங்கள் நிறுவனத் தலைவரைப் பார்க்க வந்துள்ளேன், நான் அவரின் தாய் என்றார். அந்தப் பெண்ணும், தலைவரின் அறைக்கு தகவல் சொல்லி அனுப்பினார். அப்போது அந்த மகன், எனக்கு அம்மா கிடையாது, அந்தப் பெண்ணை திருப்பி அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பினார். ஆனால், அந்நேரத்திலும் அத்தாய் சொன்னார் - நான் என் மகனை நினைத்து பெருமிதம் அடைகிறேன். இவன் இந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காகவே நான் உழைத்தேன் என்று. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-09 18:29:17]


உண்மையைத் தேடுவதில் அறிவியலும், மதமும் ஒன்றிணைந்துள்ளன

அறிவியலும், மதமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, ஆனால், விண்வெளியின் புதிரானவைகளை வெளிப்படுத்துவதில் இடம்பெறும், தொடர் தேடுதலில் இவையிரண்டும் ஒன்றிணைந்துள்ளன என, வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். "விண்வெளியில் கரும்புள்ளிகள், மற்றும், புவிஈர்ப்பு அலைகள்" குறித்து, காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தில் இச்செவ்வாயன்று தொடங்கிய நான்கு நாள் கருத்தரங்கு பற்றி, இத்திங்களன்று செய்தியாளர்களிடம் அறிவித்த, வத்திக்கான் வானியல் ஆய்வு மைய இயக்குனர் இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno அவர்கள், இவ்வாறு கூறினார். நன்மையைக் கொணரும் அறிவியலுக்கு, திருஅவை ஆதரவளிக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்கும், பல்வேறு கருத்துக்களைக் கொண்ட மக்களைச் சந்திப்பதற்கும், இக்கருத்தரங்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்று, அருள்சகோதரர் Consolmagno அவர்கள், மேலும் கூறினார். பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக் கொள்கை எனப்படும், பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய கொள்கைகளை விவரித்த தந்தையர்களில் ஒருவரான, பெல்ஜிய நாட்டின் பேரருள்திரு George Lemaitre அவர்களின் அறிவியல் மரபுகளும், இக்கருத்தரங்கில் நினைவுகூரப்படும் என்றும், அருள்சகோதரர் Consolmagno அவர்கள், கூறினார். மே 09, இச்செவ்வாயன்று தொடங்கிய இக்கருத்தரங்கு, மே,12, வருகிற வெள்ளியன்று நிறைவடையும். (ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி) [2017-05-09 18:20:42]


பாசமுள்ள பார்வையில்.. உயிரைப் பணயம் வைத்த அன்னை

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா தெய்ஸ் (Christina Gillin-Theiss) என்ற அன்னை ஒருவருக்கு, இரண்டு வயதில் Tristin என்ற மகனும், நான்கு வயதில் Brandon என்ற மகனும் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டின் கோடையில் ஒருநாள், அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள சிங்கர் (Singer) தீவில், பெருங்கடல் பவளப்பாறை (Ocean Reef Park) பூங்கா அருகிலுள்ள கடற்கரைக்கு, தன் மகன்கள் மற்றும், நண்பர் ஒருவருடன் சென்றார். அந்தக் கடற்கரைப் பகுதி, தடுப்புச்சுவர் இல்லாத, பாதுகாப்பு குறைவான இடம். அவர்கள் நால்வரும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் இரு சிறுவர்கள், ஒருவர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு மிதந்துகொண்டிருந்ததைக் கண்டார், தாய் கிறிஸ்டினா. அவ்விரு சிறுவரின் தலைகள் மட்டுமே வெளியே தெரிந்தன. அப்போது நடக்கவிருந்த ஆபத்தை உணர்ந்த கிறிஸ்டினா, தன் இரு மகன்களையும் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் குதித்து, அவ்விரு சிறாரையும் உயிரோடு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். இவ்வளவுக்கும் கிறிஸ்டினாவுக்கு நன்றாக நீந்தத் தெரியாது. ஆயினும், இவர், தன் உயிரைப் பணயம் வைத்து, அதேநேரம், தன் பிள்ளைகள் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டுள்ளார். 36 வயது நிரம்பிய தாய் கிறிஸ்டினா, அச்சமின்றி துணிச்சலுடன் செயல்பட்டதைக் கவுரவித்து விருது வழங்கியுள்ளது, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம். கடந்த ஆண்டில் Palm கடற்கரையில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 120 பேருக்கு இந்த விருதை வழங்குகிறது. இவ்விருது, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரின் கையொப்பமிட்ட ஒரு உயரிய தேசியச் சான்றிதழாகும். மே 08, உலக செஞ்சிலுவை, செம்பிறை தினம். இந்நாளில் இரத்த தானம் ஊக்குவிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டில் இத்தினம் முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. போரில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்கென, முதல் உலகப் போருக்குப் பின்னர், சுவிட்சர்லாந்து நாட்டு Henry Dunant அவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார். இவரின் பிறந்த நாளான மே 8ம் தேதி இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. *நெஞ்சினில் ஈரம், கண்களில் கருணை, கைகளில் ஆதரவு, சொல்லில் கனிவு, இந்தப் பண்புகளையெல்லாம் கொண்ட எல்லையற்ற அன்புக் கடல் அன்னை. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-08 19:29:42]


போர்த்துக்கீசிய பாப்பிறை கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை

இயேசுவின் அன்பில் உயர்வதற்கு உதவும் வகையில், நம் கரங்களைப் பற்றி வழிநடத்தும் அன்னை மரியாவின் கரங்களில் நம்மை ஒப்படைப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள்பணி பயிற்சி பெறும் மாணவர்களிடம் உரையாற்றினார். உரோம் நகரிலுள்ள போர்த்துக்கீசிய பாப்பிறை அருள்பணி பயிற்சிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இவ்வாரத்தின் இறுதியில் போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகருக்கு திருப்பயணம் மேற்கொள்ளும் தருணத்தில் இந்த சந்திப்பு நிகழ்வது, முக்கியத்துவம் நிறைந்தது என்று கூறினார். அருளாளர்கள் பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா, இறையடியார் லூசியா போன்றோரின் விசுவாச வாழ்வைப் பின்பற்றி, அருள்பணியாளர்கள், இறைவனிடம் தங்களையே ஒப்படைக்க வேண்டும் என்ற அழைப்பையும், திருத்தந்தை முன்வைத்தார். ஒவ்வோர் அருள் பணியாளரும் தன் கிறிஸ்தவ, குருத்துவ மேய்ப்புப்பணி மற்றும் கலாச்சார பயிற்சியில் சோர்வின்றி ஈடுபடவேண்டும் என்று, அருள்பணி பயிற்சி பெறும் மாணவர்களிடம் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிமையாக இருக்கவும், அதேவேளை, அஞ்சா நெஞ்சுடன் செயலாற்றவும் அன்னை மரியிடமிருந்து கற்றுக்கொள்வோமாக என்று கூறினார். ~(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-08 19:23:39]


உண்மையின் முகத்தை காண குருத்துவ மாணவருக்கு அழைப்பு

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பாதையில் பயிற்சியளிப்பது என்பது, ஆண்டவர் இயேசுவோடு ஆள்-ஆள் உறவு கொள்வதை மையப்படுத்தி, ஒருவரின் ஒருங்கிணைந்த நல்லிணக்க வாழ்வை வளர்ப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய குருத்துவ கல்லூரி மாணவர்களிடம் கூறினார். இத்தாலியின் Posillipo பாப்பிறை குருத்துவப் பயிற்சி கல்லூரியின் 120 பேரை, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, இப்பாப்பிறை பயிற்சி கல்லூரி, 1912ம் ஆண்டில், புனித திருத்தந்தை பத்தாம் பத்திநாதரின் விருப்பத்தின்பேரில் ஆரம்பிக்கப்பட்டு, அதை நிர்வகிக்கும் பணி இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார். இயேசு சபையை தோற்றுவித்த புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக மரபில், வருங்கால அருள்பணியாளர்களை உருவாக்கும் பொறுப்பிலுள்ள, இக்கல்லூரியின் பயிற்சியாளர்களுக்கு மூன்று முக்கிய கருத்துக்களைக் கோடிட்டுக் காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பாதையில் பயிற்சியளிப்பது என்பது, ஒருவரின் ஒருங்கிணைந்த நல்லிணக்க வாழ்வை இயேசுவோடு உள்ள உறவில் வளர்ப்பது, குருத்துவ வாழ்வை தேர்ந்து தெளிவது, ஆண்டவருக்கும், மக்களுக்கும், மேலும் அதிகமாகத் தன்னையே கையளிப்பதில், இறையாட்சியின் கூறுகளுக்குத் திறந்த உள்ளம் கொண்டிருப்பது என, மூன்று கருத்துக்கள் பற்றி விரிவாகப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆண்டவரோடு உள்ள உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவேளை, இறையழைப்புப் பயணம் முழுவதும், தூய பேதுரு மற்றும், முதல் சீடர்கள் போன்று, ஆண்டவரோடு அன்பு மற்றும், நட்பும் கொண்ட உரையாடலாக இருக்க வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை. அருள்பணியாளரின் திருப்பணியைச் சுட்டிக்காட்டும் அழைப்பு, புதிய பெயரையும் உள்ளடக்கியுள்ளது எனவும், எதனையும் பெயர் சொல்லி அழைத்தல், தன்னறிவுக்கு முதல் படி எனவும், இதன் வழியாக, நம் வாழ்வில் இறை விருப்பத்தை அறிந்துகொள்கிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை. பொருள்களைப் பெயர் சொல்லி அழைக்கவும், வாழ்வில் உண்மையின் முகத்தை நோக்கவும், பிறருக்கு, குறிப்பாக, பயிற்சியாளர்களிடம் ஒளிவு மறைவின்றி உண்மையாய் இருக்கவும், உலகப்போக்குச் சோதனையிலிருந்து விலகி வாழவும் குருத்துவ மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-07 00:45:20]


பாசமுள்ள பார்வையில்: தாய்மை உள்ளம் கொண்ட தலைவன்

மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள், நீண்ட தூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். “வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை” என்று கூறியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். சூழ இருந்த வீரர்கள், தாய்மை உள்ளம் கொண்ட தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி, ஆர்ப்பரித்தனர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-07 00:39:13]


பாசமுள்ள பார்வையில் - தாய் சொல்லின் வல்லமை

வெளியூரில் வேலை தேடப் புறப்பட்ட தன் ஒரே மகனை ஆசீர்வதித்து, வழிப்பயணத்துக்காக மகனின் பையில் சில ரொட்டித் துண்டுகளை வைத்தார் அம்மா. பிறகு மகனிடம், அன்பு மகனே, இந்த ரொட்டித் துண்டுகளை உனக்காக மட்டுமே என நீ வைத்துக் கொள்ளாதே. பசி என்று யார் உன்னிடத்தில் வந்தாலும், அவர்களுக்கு நீ இவற்றில் சிறிது கொடு. அவை ஒருபோதும் குறையாது. நீ இந்த ரொட்டித் துண்டுகளை யாருக்கும் கொடுக்காமல், நீ மட்டும் எப்போது உண்கிறாயோ, அப்போது இவை வேகமாகக் குறைந்து விடும் என்ற அறிவுரையையும் சொன்னார் அம்மா. ஆகட்டும் எனச் சொல்லிப் புறப்பட்டான் மகன். வழியில் பசிக்கின்றது என்று யார் வந்தாலும், அவன் தன்னிடம் இருந்த ரொட்டித் துண்டுகளைப் பகிர்ந்து கொடுத்து உண்டான். இதனால் அவனிடம் இருந்த ரொட்டித் துண்டுகள் குறையாமல் பெருகிக் கொண்டே இருந்தன. இதற்கிடையில், அந்நாட்டு அரசர் தனது மகளுக்கு வரன் தேடினார். தன்னிடம் இருந்த பொன் நகைகளை எல்லாம் ஒரு பெரிய தராசின் ஒரு தட்டில் வைத்து, இன்னொரு தட்டில் அதற்கீடாக பொன் நகைகளை வைப்பவருக்கு, தனது மகளை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். அரசரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பக்கத்து நாடுகளின் இளவரசர்கள் எல்லாம் தங்களிடம் இருந்த பொன் நகைகளை, தராசின் அடுத்த தட்டில் வைத்தார்கள். ஆனால் யாருடைய பொன் நகைகளும், அரசர் வைத்த நகைகளுக்குச் சரிசமமாக இல்லை. இதனால் கவலையடைந்த இளவரசி, அரண்மனைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரைக்குப் போனார். அங்கே, வேலை தேடிவந்த அந்த இளைஞன், தன்னிடம் இருந்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னிடமிருந்த ரொட்டித் துண்டுகளை இளவரசிக்குப் பகிர்ந்து கொடுத்து உண்டான். அவளும் அதை அன்போடு வாங்கிச் சாப்பிட்டார். அடுத்த நாள் பொழுது விடிந்தபோது இளைஞன், ஆற்றங்கரையை விட்டு சந்தைவெளிக்குச் சென்றான். அப்போது அரசரின் அந்த அறிவிப்பு பற்றிக் கேள்விப்பட்டான். அரசரிடம் சென்று, தானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதாகச் சொன்னான் இளைஞன். அவனின் நிலையைப் பார்த்து சற்றுத் தயங்கிய அரசர், பின் போட்டிக்குச் சம்மதித்தார். அந்தத் தராசின் அடுத்த தட்டில், தான் வைத்திருந்த ரொட்டித் துண்டுகளில் ஒன்றை எடுத்து வைத்தான் இளைஞன். சிறிது நேரத்தில் அந்த ரொட்டித்துண்டு பொன் நகையாக மாறியது. அதோடு, அது அரசர் வைத்த பொன் நகைகளின் எடையை விடவும் அதிகமாக இருந்தது. இதைப் பார்த்த எல்லாருக்கும் வியப்பு. அப்போது, அந்த இளைஞன், “இது சாதாரண ரொட்டி துண்டு கிடையாது, பசியாய் இருப்பவர்க்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாத ரொட்டித்துண்டு, அதனால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது”என்றான். அந்த இளைஞனுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுத்தார் அரசர். அன்றிலிருந்து பசியாய் வந்த அந்நாட்டு மக்களின் தேவைகளையும் நிறைவேற்றினார் அரசர். தன் பிள்ளைகளை நற்பண்புகளில் வளர்ப்பவர் தாய் (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-05 19:35:24]


எகிப்து திருப்பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை

"நாம், மென்மை உள்ளமும், பணிவும் கொண்டவர்களாக, வறியோரைப் பேணுவதில் தனி கவனம் செலுத்துவோமாக" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், இப்புதனன்று பதிவு செய்திருந்தார். மேலும், இப்புதன் மறைக்கல்வி உரைக்கு வருகை தந்திருந்த எகிப்து நாட்டு திருப்பயணிகளுக்கு தனிப்பட்ட வாழ்த்துக்களை திருத்தந்தை தெரிவித்தார். அரேபிய மொழி பேசும் திருப்பயணிகளை, குறிப்பாக, எகிப்திலிருந்தும், மத்தியக் கிழக்கு பகுதியிலிருந்தும் வருகை தந்துள்ள திருப்பயணிகளை வாழ்த்துவதாக, திருத்தந்தை இத்தாலிய மொழியில் கூறியதை, ஒருவர் அரேபிய மொழியில் மொழிபெயர்த்தார். தன் திருத்தூதுப் பயணத்தை சாத்தியமாக்கிய எகிப்து மக்களுக்கு தன் தனிப்பட்ட நன்றிகள் என்று திருத்தந்தை கூறிய வேளையில், “ùm el dùgna”, அதாவது, 'உலகின் தாய்' என்று எகிப்து நாட்டை அரேபிய மொழியில் குறிப்பிட்டார். புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், இளையோர், நோயுற்றோர் மற்றும் புதிதாக திருமணம் செய்துகொண்டோர் இவர்களை குறிப்பிட்டு வாழ்த்தியபின், நாம் துவங்கியுள்ள மரியன்னையின் வணக்க மாதமான மே மாதத்தில், எளிமையான, அதே வேளையில் சக்திமிகுந்த செபமாலையை செபிக்கும்படி இளையோரிடம் சிறப்பு வேண்டுகோளை விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-05 19:28:09]


கத்தோலிக்க இயக்கத்தின் 150ம் ஆண்டு நிறைவில் திருத்தந்தை

வாழ்க்கைப் பாதையில் முன்னோக்கிய பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், சமுதாயத்தின் விளிம்புகளைத் தேடிச் செல்லவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு காலை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் உரையாற்றினார். கத்தோலிக்க இயக்கம் என்றழைக்கப்படும் Catholic Action கழகத்தின் 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, உரோம் நகருக்கு வருகை தந்திருந்த 70,000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, இஞ்ஞாயிறு காலை புனித பேதுரு வளாகத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இக்கழகம், கத்தோலிக்கத் திருஅவைக்கு இதுவரை ஆற்றி வந்துள்ள பணிகளைப் பாராட்டி, நன்றி கூறினார். இத்தாலிய கத்தோலிக்க இயக்கத்தின் தூண்களாக விளங்கிய Giuseppe Toniolo, Armida Barelli, Piergiorgio Frassati, Antonietta Meo, Teresio Olivelli, Vittorio Bachelet, ஆகியோரை குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு நம்மைத் தூண்டவேண்டும் என்று கூறினார். தாங்கள் கடந்து வந்துள்ள வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்த்து திருப்தி அடைவதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து செல்லவேண்டிய பாதையை முன்னோக்கிப் பார்க்குமாறு இக்கழகத்தின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை. கத்தோலிக்க இயக்கத்தின் இளையோரை, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, தூய ஆவியாரின் சக்தியைப் பெற்றவர்களாய், சமுதாயத்தின் விளிம்புகளில் ஒடுக்கப்பட்டோர் நடுவே அவர்கள் பணியாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 1867ம் ஆண்டு, Mario Fani, Giovanni Acquaderni என்ற இருவரால் 'இத்தாலிய கத்தோலிக்க இளையோர் சங்கம்' என்ற பெயரில் நிறுவப்பட்ட முயற்சி, இன்று வலிமை மிக்க கத்தோலிக்க இயக்கமாக பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-03 00:36:11]


பாசமுள்ள பார்வையில்: மரணத்திலும் துணைவரும் அன்னை

சாலமோன் ரோசன்பெர்க் (Solomon Rosenberg), அவரது மனைவி, இரு மகன்கள், வயது முதிர்ந்த பெற்றோர் என, ஆறு பேரும் நாத்சி வதைமுகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகாம் அதிகாரிகள் அவர்களுக்கு விதித்திருந்த ஒரே சட்டம்: "வேலை செய்ய முடியும்வரை வாழலாம்; இல்லையேல், சாகலாம்". சாலமோனின் பெற்றோரால் ஒரு வாரம் வேலை செய்யமுடிந்தது. பின்னர், அவர்கள் இருவரும் நச்சுவாயு உலைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். சாலமோனின் முதல் மகன், யோசுவா, நல்ல உடல்நலமும், வலிமையும் பெற்றிருந்தான். ஆனால், இளைய மகன் தாவீதோ, உடல்நலம் குன்றியிருந்தான். எனவே, தாவீதை, அவர்கள், எந்நேரமும் இழுத்துச் செல்லக்கூடும் என்ற அச்சம், அக்குடும்பத்தை ஆட்டிப்படைத்தது. ஒவ்வொருநாளும் மாலையில், சாலமோன், முகாமுக்குத் திரும்பியதும், தன் மனைவியும், இரு குழந்தைகளும் வேலையிலிருந்து உயிரோடு திரும்பியிருந்தால், நால்வரும் சேர்ந்து, இறைவனுக்கு நன்றி கூறி செபித்தனர். ஒருநாள் மாலை, சாலமோன், வேலையிலிருந்து திரும்பியபோது, முகாமில், மூத்த மகன் யோசுவா மட்டும், அழுதபடியே அமர்ந்திருந்ததைக் கண்டார். நடந்ததென்ன என்று கேட்ட தந்தையிடம், "தாவீது, வேலை செய்யமுடியாமல் போனதால், அவனை இழுத்துச்சென்றனர்" என்று சொன்னான், யோசுவா. "அம்மா எங்கே?" என்று அவர் கேட்டபோது, "தாவீதை அவர்கள் இழுத்துச் சென்றபோது, அவன் பயத்தில் அலறினான். உடனே அம்மா, அவனருகே சென்று, 'தாவீது, பயப்படாதே. என் கரங்களைப் பிடித்துக்கொள்' என்று சொல்லி, அவர்களும் தாவீதுடன் நச்சுவாயு உலைக்குள் போனார்கள்" என்று, யோசுவா கண்ணீரோடு கூறி முடித்தான். மரணத்திலும் துணைவரும் துணிவு, அன்னையருக்கு உண்டு. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-05-03 00:27:35]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்