வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்ஹாம்பர்க் ஜி20 உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி

உலகில் எவரையும் ஒதுக்கி விடாமல், அனைத்து மக்களையும் உள்ளடக்கி இடம்பெறும், வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வடிவமைப்பதற்கு, பன்னாட்டு சமுதாயம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டுமென்று, தன் நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஜெர்மனியின் ஹாம்பர்க் (Hamburg) நகரில், ஜூலை 07, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள ஜி20 (G20) நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறப்பு உணர்வு, நீதி மற்றும், அமைதி நிறைந்த சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவும், நான்கு செயல்திட்டங்களைப் பரிந்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆயுத மோதல்களால் ஏற்படும் ஏழ்மை மற்றும், குடிபெயர்தல் பற்றி, கவலையுடன் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தென் சூடான், ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி நாடுகள், சாட் ஏரிப் பகுதி, ஏமன் ஆகிய நாடுகளில் ஏறத்தாழ முப்பது இலட்சம் மக்கள் உணவு மற்றும், தண்ணீரின்றி துன்புறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் இடம்பெற்றுவரும் பயனற்ற கொலைகள் பற்றியும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தற்போது உலகில் நிலவும் ஆயுதப் போட்டியையும், போர்களையும், போர்களில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதையும் தவிர்த்தால், 2030ம் ஆண்டுக்குள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடைய முடியும் என்றும் கூறியுள்ளார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2009ம் ஆண்டில், இலண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் விடுத்திருந்த எச்சரிக்கையையும் கோடிட்டுக் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாட்டில் கலந்துகொள்வோர் குறைவான நாடுகளின் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், உலகளாவிய உற்பத்தியில் 90 விழுக்காட்டை, அந்நாடுகள் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். ஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, ஜூலை 08, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும். இம்மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் ஜெர்மன் நாட்டு சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் (Angela Merkel) அவர்களுக்கு, இச்செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 1999ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஜி20 அமைப்பில், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, பிரான்ஸ், சீனா, கானடா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும், ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-08 02:05:24]


"திருத்தந்தையிடம் சொல்லுங்கள்!" – இளையோர் வலைத்தளம்

2018ம் ஆண்டு, இளையோரை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிக்கும் வண்ணம், சுவிட்சர்லாந்து ஆயர்கள், வலைத்தள கருத்துக்கணிப்பு ஒன்றை, ஜூலை 6, இவ்வியாழனன்று துவக்கியுள்ளனர். "திருத்தந்தையிடம் சொல்லுங்கள்!" ("Tell the Pope!") என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைத்தள முயற்சியில் பங்கேற்க, 16 வயது முதல் 29 வயது முடிய உள்ள அனைத்து இளையோரும் அழைக்கப்பட்டுள்ளனர். கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவரும், திருத்தந்தையிடம் கேட்க விழையும் கேள்விகள், மற்றும் அவருக்குக் கூறவிழையும் பரிந்துரைகள் ஆகியவற்றை, இவ்வாண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு, சுவிட்சர்லாந்து ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், 20 கேள்விகள் அடங்கிய கருத்துக்கணிப்பு ஒன்றும் இவ்வலைத்தளத்தில் உள்ளது என்றும், இங்கு பதியப்படும் கருத்துக்கள் திரட்டப்பட்டு வத்திக்கானுக்கு அனுப்பப்படும் என்றும் ஆயர்கள் அறிவித்துள்ளனர். மேலும், 2018ம் ஆண்டின் துவக்கத்தில், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் இளையோருக்கென, Fribourg எனும் நகரில், மாநாடு ஒன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில், 15வது உலக ஆயர்கள் மாமன்றம், "இளையோர், நம்பிக்கை, அழைப்பைத் தேர்ந்து தெளிதல்" என்ற மையக்கருத்துடன் நடைபெறவுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-06 21:52:35]


புனித திருத்தந்தையின் தகவல் தொடர்பு அதிகாரி மரணம்

ருப்பீடத் தகவல் தொடர்புத்துறை தலைமை அதிகாரியாக, 22 ஆண்டுகள் பணியாற்றி, 2006ம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஹுவாக்கின் நவாரோ-வால்ஸ் (Joaquín Navarro-Valls) அவர்கள், இப்புதனன்று உரோம் நகரில் காலமானார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் 1984ம் ஆண்டு திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், அத்திருத்தந்தையின் பெரும்பாலானப் பயணங்களிலும், உடன் சென்றுள்ளதுடன், பல்வேறு அனைத்துலக கருத்தரங்குகளில் பங்குபெறும் திருப்பீடப்பிரதிநிதிகள் குழுவிலும் பங்குபெற்றுள்ளார். தன் 80ம் வயதில் மரணமடைந்துள்ள முன்னாள் திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகத் தலைவர் நவாரோ-வால்ஸ் குறித்து கருத்து தெரிவித்த இயேசு சபை அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், நவாரோ வால்ஸ் அவர்களின் அறிவுத்திறன், செய்திகளை வழங்கும்விதம், நல்லுறவைப் பேணும் நிலை, பன்மொழித்திறன் ஆகியவற்றால் தான் கவரப்பட்டதாகவும், அவரைத் தொடர்ந்து அந்த பணியை தான் ஏற்றபோது அவரையே எடுத்துக்காட்டாகக் கொண்டதாகவும் கூறினார். 2006ம் ஆண்டு, நவாரோ வால்ஸ் ஓய்வுபெற்றபோது, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், கடந்த ஆண்டுவரை அப்பதவியை வகித்ததுடன், வத்திக்கான் வானொலியின் பொதுமேலாளராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1936ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டில் பிறந்து மருத்துவப் படிப்பை முடித்து, திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி, இப்புதனன்று மரணமடந்த நவாரோ வால்ஸ் குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்ட தற்போதைய திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரி Greg Burke அவர்கள், தன் தொழிலில் மிக மேன்மையானவராகவும், அதேவேளை, மிக உன்னத கிறிஸ்தவராகவும் நவாரோ வால்ஸ் வாழ்ந்தார் என்று கூறினார். முன்னாள் திருப்பீட தகவல் தொடர்புத்துறை தலைமை அதிகாரி நவராரோ வால்ஸின் அடக்கத் திருப்பலி, இவ்வெள்ளியன்று உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு, உரோம் நகர் புனித யூஜின் பசிலிக்காவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-06 21:45:45]


கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகியிருப்பவர்களுக்காக செபம்

இயேசு கிறிஸ்துவே நம் மகிழ்வு என்பதையும், அவரின் அன்பு மாறாதது மற்றும், குறையாதது என்பதையும், நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார். கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகியிருப்பவர்களுக்காகச் செபிப்போம் என்ற தலைப்பில், தனது ஜூலை மாதச் செபக் கருத்து பற்றி, காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவர், கவலையாக இருக்கின்றார் என்றால், அவர், இயேசுவிடமிருந்து விலகியிருக்கின்றார் என்று அர்த்தம் எனக் கூறியுள்ளார். ஆயினும், கிறிஸ்துவைவிட்டு விலகியிருப்பவர்களை நாம் கைவிடக் கூடாது என்றும், நம் சொற்கள், இன்னும், சிறப்பாக, நம் மகிழ்வான சாட்சிய வாழ்வு மற்றும், நம் சுதந்திரத்தோடு, கிறிஸ்தவ நம்பிக்கையை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகியிருப்பவர்களுக்காகச் செபிப்போம் எனவும், நம் செபங்கள் மற்றும், நற்செய்திக்குச் சான்று பகர்வதன் வழியாக, கிறிஸ்தவ வாழ்வின் அழகை, அவர்கள் மீண்டும் கண்டுகொள்வார்களாக எனவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-05 11:27:08]


சீர்திருத்த சபைகளின் அவையும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளும்

யார் மீட்படையக்கூடும் என்பதைக் கூறும் ஏற்புடைமை கொள்கையில், கத்தோலிக்கர், லூத்தரன் மற்றும் மெத்தடிஸ்ட் அவைகளிடையே இதுவரை நிலவிவந்த கருத்து ஒருங்கிணைப்பில், உலக சீர்திருத்த சபைகளின் அவையும் இப்புதனன்று இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு, கிறிஸ்தவ முழு ஒன்றிப்பை நோக்கியப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கருதப்படும் என்று கூறப்படுகிறது. 1517ம் ஆண்டு மார்ட்டின் லூத்தர், பாவ மன்னிப்பு முறைகளுக்கு எதிராக தன் குரலை எழுப்பிய ஜெர்மனியின் விட்டன்பர்க்கில், ஜூலை 5, இப்புதனன்று இடம்பெற உள்ள கூட்டத்தில், உலக கிறிஸ்தவ சீர்திருத்த சபைகளின் அவை, ஒன்றிப்பை நோக்கிய தன் இசைவைத் தர முன்வந்துள்ளது. சீர்திருத்த சபைகளுக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையே நிலவும் சில முரண்பாடுகள் இதன் வழியாக நீக்கப்பட்டு, பிற கிறிஸ்தவ சபைகளுக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையே துவக்கப்பட்டுள்ள ஒன்றிப்பு முயற்சிகள் வேகம் பெறும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு என்பது வெறும் வெளி அடையாளமாக இல்லாமல், ஒருமைப்பாட்டில் இணைந்து உழைத்து, நற்செய்திக்கு ஒன்றிணைந்த சாட்சியை வழங்குவதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-04 00:58:31]


உலக உணவு தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் திருத்தந்தை

இவ்வாண்டு அக்டோபர் 16ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள, FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்று உரையாற்றுவார் என அறிவித்தார், கர்தினால் பியெத்ரோ பரோலின். உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் 40வது பொது அவைக்கூட்டத்தில், திருத்தந்தையின் செய்தியை வாசித்தளித்தபின், இத்தகவலை வெளியிட்ட திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், ‘புலம்பெயர்தலின் வருங்காலத்தை மாற்றியமைத்தல்' என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படும் உலக உணவு நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, FAO தலைமையக நிகழ்ச்சிகளில் திருத்தந்தை கலந்துகொள்வார் என்றார். FAO நிறுவனத்தின் பொது இயக்குனர் José Graziano da Silva அவர்கள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை, அத்தலைமையகத்திற்கு வர உள்ளதாக, மேலும் கூறினார், கர்தினால் பரோலின். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-04 00:35:34]


கடவுள் நம் எல்லாரிடமும் ஒப்படைத்துள்ள அன்பின் கடமை

“மனித வாழ்வை, எல்லாவற்றுக்கும் மேலாக, அவ்வாழ்வு நோயால் காயப்படுத்தப்பட்டுள்ளபோது, அதைப் பாதுகாக்க வேண்டியது, கடவுள் நம் எல்லாரிடமும் ஒப்படைத்துள்ள அன்பின் கடமை” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் இலண்டன் Great Ormond Street சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, அபூர்வ நோயால் துன்புறும், Charlie Gard என்ற பத்து மாத ஆண் குழந்தையின் வாழ்வை நீடிக்கும் கருவிகளை அகற்றி விடுவதற்கு, நீதிமன்றம் தீர்மானித்துள்ளவேளை, மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தனது டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இக்குழந்தையின் பெற்றோரான Chris Gard, Connie Yates ஆகிய இருவரும், தங்களின் மகனுக்குச் சிகிச்சையளிக்க அமெரிக்க ஐக்கிய நாடு செல்ல விரும்பியும், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஜூன் 30, இவ்வெள்ளியன்று, உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்படவிருந்த நிலையில், பெற்றோர் தங்கள் மகனுடன், சற்று அதிக நேரம் செலவழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. பிறப்பிலேயே அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை Charlie, தன் தோள்களையும், கால்களையும் அசைக்க முடியாமலும், தானாக மூச்சு விடவோ அல்லது உணவு உண்ணவோ முடியாமலும் உள்ளான் எனச் சொல்லப்படுகின்றது மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருத்தந்தை நிறைவேற்றும் காலைத் திருப்பலிகள், இந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இடம் பெறாது என்றும், இது, செப்டம்பர் பாதியிலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரைகள், ஜூலை மாதத்தில் இடம்பெறாது என்றும், அவை ஆகஸ்டில் மீண்டும் தொடங்கும் என்றும், ஞாயிறு மூவேளை செப உரைகள் வழக்கம்போல் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி) [2017-07-03 02:47:10]


பாசமுள்ள பார்வையில் – மேன்மையான விருந்தோம்பல்

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார். அவர் தம் கணவனை நோக்கி, "நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்" என்றார். (அரசர்கள் 2ம் நூல் 4: 8-10) சூனேம் நகரப் பெண், மாடியில் அறையைக் கட்டி, அதில் இறைவாக்கினரைத் தங்கவைத்ததைக் குறித்து, விவிலிய ஆய்வாளர், அருள்பணி இயேசு கருணா அவர்கள் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் அழகானவை: மாடியறை நிறைவான தனிமையை நமக்கு தருகிறது. தெருவில் போவோர், வருவோர், மாடியறையைத் தட்டுவில்லை. மாடியறையில் பக்கத்துவீட்டுக்காரர்கள் தொல்லையில்லை. மாடிவீடு நம்மை மேலே உயர்த்தி வைப்பதால், நாம் எல்லாரையும் விட பெரியவர் என்ற பெருமித உணர்வை நமக்குத் தருவதோடு, நம்மைக் கடவுளுக்கும் நெருக்கமாக்குகிறது. இன்னும் முக்கியமாக, மாடியறைக்கான வழி, வீட்டுக்குள்ளே இருப்பதால், மாடியறைக்கான உரிமை, வீட்டு உரிமையாளர்களுக்கும், மிக நெருக்கமானவர்களுக்கும் தவிர, வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சூனேம் நகரத்துப் பெண், தன்னிடம் இருந்த மிகச் சிறந்ததை இறைவாக்கினர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் என்பதை உணர்கிறோம். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-03 02:41:01]


திருத்தந்தையின் பாசமுள்ள ஆதரவுக்கு தென் சூடான் நன்றி

ஆயுத மோதல்களால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள, தென் சூடான் மக்கள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் பாசத்திற்கும், ஆதரவுக்கும், அந்நாட்டு ஆயர்கள் சார்பில், நன்றி தெரிவித்துள்ளார், தென் சூடான் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர், Edward Hiiboro Kussala. தென் சூடானின் தற்போதைய சூழலால், அந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலா நிலையில், ‘தென் சூடானுக்குத் திருத்தந்தை’ என்ற பெயரில், கடந்த ஜூன் மாதத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டுக்கு உதவிகள் வழங்கியுள்ளார். தென் சூடான் மக்கள் மீது, திருத்தந்தை காட்டிவரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள ஆயர், Kussala அவர்கள், திருத்தந்தை வழங்கியுள்ள, ஐந்து இலட்சம் டாலர் நிதியுதவியைப் பெறுவதில் தாங்கள் மிகவும் மகிழ்வதாகவும், இந்த ஆப்ரிக்க நாட்டிற்கு, திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது பற்றி மீண்டும் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் வழியாக, தென் சூடானுக்குத் திருத்தந்தையின் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. தென் சூடானில், ஏறக்குறைய இருபது இலட்சம் பேர், பசியினால் வாடுகின்றனர் என, ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. (ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி) [2017-07-03 02:35:27]


பாசமுள்ளப் பார்வையில்…............, : பாசம் என்பது பகிர்வது

அந்த அம்மாவுக்கு 70 வயதிருக்கலாம், கைவிடப்பட்ட சிறார்களுக்கான காப்பகத்தில் ஆயாவாக வேலை செய்து வருகிறார்கள். அனைத்துச் சிறார்களும், பாட்டி, பாட்டி என்று அந்த அம்மாவையேச் சுற்றி சுற்றி வருவார்கள். குழந்தைகளுக்கு எந்த உதவி என்றாலும், முகம் சுழிக்காமல் முன்வந்து செய்வதில், அந்த தாய்க்கு அலாதி இன்பம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், அந்தkd காப்பகத்தில் வேலை செய்யும் அந்த தாயின் பூர்வீகம் குறித்து யாருக்கும் தெரியாது. அவரை யாரும் பார்க்க வந்ததும் இல்லை. அவருடன் பணிபுரியும் ஒருவரைப் பார்க்க ஒரு நாள், நடுத்தர வயதுடைய ஒரு மனிதர் வந்திருந்தார். தான் பார்க்க வந்தவரைச் சந்தித்துவிட்டு, வெளியே செல்லும்போது தற்செயலாக இந்த அம்மையாரைப் பார்க்க நேர்ந்த அவர், அப்படியே அதிர்ச்சிக்குள்ளானார். ‘என்ன அம்மா, நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள், எவ்வளவு பெரிய கார் கம்பெனியின் முதலாளியம்மா நீங்க. நான் உங்க கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்தபோது, உங்களைப் பார்த்திருக்கிறேன். இன்னும் அந்தkd கம்பெனி, கொடி கட்டிப் பறக்கும்போது, உங்களுக்கு ஏனம்மா இந்த நிலைமை. உங்க பையனுடைய பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு அங்கேயே இருந்திருக்கலாமே?’ என்றார் அந்த மனிதர். 'உண்மைதான். எனக்கும் வயதாகிவிட்டது, பையனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டேன். நான் அந்த வீட்டில் இருப்பதில் என் மருமகளுக்கு விருப்பமில்லை. செல்லம் கொடுத்து குழந்தைகளைக் கெடுத்து விடுவேனாம். ஊட்டியிலுள்ள தனி பங்களாவில் இருக்கச் சொன்னார்கள். சேர்ந்திருப்பது அவர்களுக்குச் சுமை. தனியாக இருப்பது எனக்குச் சுமை. அது மட்டுமல்லாமல், பாசத்தைப் பகிர்ந்துகொள்ள இதுதான் சிறந்த இடம் எனக் கண்டேன். பூவுக்குத் தேனும், மேகத்திற்கு மழையும், சிமென்ட் தொட்டிகளுக்கு நீரும், எந்தப் பயனையும் தருவதில்லை. ஏனெனில், அவை மற்றவர்களுக்காக அங்கு சேமித்து வைக்கப்படுகின்றன. அதுபோல்தான், ஒரு தாயின் பாசமும். இங்கே குழந்தைகளுடன், குழந்தைகளுக்காக வேலை செய்து அவர்கள் உணவையே உண்டு, அவர்களைப் பேரப்பிள்ளைகளாக வளர்த்தெடுப்பதில் கிட்டும் இன்பம், வேறு எங்கும் இல்லை. ஒதுக்கப்பட்ட எந்தத் தாய்க்கும் இப்படியொரு வடிகால் தேவை. அது விளைநிலத்திற்கு பாய்ச்சப்பட்டு பயன் தரட்டும்,’ என சிரித்துக்கொண்டேச் சொல்லி முடித்தார் அந்த தாய். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-01 01:20:41]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்