வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்வின்சென்ட் தெ பவுல் துறவுக் குடும்பத்தினருக்கு செய்தி

வின்சென்ட் தெ பவுல் சபை தொடங்குவதற்குக் காரணமான தனிவரம் வழங்கப்பட்டதன் நானூறாம் ஆண்டை முன்னிட்டு, அத்துறவுக் குடும்பத்தினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மிக அதிகத் தேவையில் இருப்போருக்காக, புனித வின்சென்ட், பிறரன்பு சகோதரத்துவ சபைகளைத் தொடங்கினார் என்றும், ஏழைகளிடம் செல்லும்போது இயேசுவைச் சந்திக்கிறாய் என்ற இலக்குடன் இச்சபையினர் செயல்படுகின்றனர் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, 1617ம் ஆண்டில் சிறிய கடுகு விதையாக ஊன்றப்பட்ட இச்சபை, தற்போது மிகப்பெரிய மறைப்பணி சபையாக வளர்ந்துள்ளது என்றும் பாராட்டியுள்ளார். புனித வின்சென்ட் தன்னை ஒருபோதும் பெரிய ஆளாகக் கருதியது கிடையாது என்றும், அவரின் சான்றுபகரும் வாழ்வு, ஆண்டவரின் வார்த்தையையும், அவர் நம்மீது பதித்திருக்கும் கண்களையும், எப்போதும் வியப்போடு நோக்க வைக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். இதயத்தின் ஏழ்மைக்கும், எப்போதும் எதற்கும் தயாராக இருப்பதற்கும், தாழ்மையில் பணிவிற்கும், இப்புனிதர் நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்றும், பிறரன்பு என்பது, உண்மையில் கடந்தகால நற்செயல்களில் திருப்தியடையாமல், நிகழ்காலத்தில் அச்செயல்களை ஆற்றுவதற்கு நம்மைத் தூண்டுகின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார். பசித்திருப்பவர், தாகமாயிருப்பவர், அந்நியர், ஆடையின்றி இருப்பவர், மாண்பிழந்து நிற்பவர், நோயுற்றோர், கைதிகள், சந்தேகத்தில் வாழ்வோர், அறியாமையில் உழல்வோர், பாவத்தில் தொடர்ந்து நிலைத்திருப்போர், துன்புறுவோர், கோபப்படுவோர், எரிச்சலூட்டுவோர் போன்ற, சகோதர சகோதரிகளில் ஆண்டவர் இயேசுவைக் காண்பதற்கு, திருஅவைக்கும், வின்சென்ட் தெ பாவுல் சபையினருக்கும் ஆண்டவர் வரம் அருள்வாராக எனவும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். புனித வின்சென்ட் சபையின் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும், அருள்சகோதரர்களும் 86 நாடுகளில் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பதிலும், அருள்பணியாளர்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-27 21:37:20]


இறையன்பை மற்றவர்களும் அனுபவிக்க உதவும் நற்செயல்கள்

திருத்தந்தையின் சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிதி அமைப்பிற்கு பங்களிப்போரை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து, அவர்களுக்கு தன் ஊக்கத்தையும் நன்றியையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். ஒருவர் ஒருவரிடம் அன்புகூர்வதிலிருந்து பிறக்கும் இத்தகைய உதவிகள், இறையன்பை மற்றவர்களும் அனுபவிக்க உதவுகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை அன்புகூர்வதற்குரிய மனதைப் பெறுவதற்கு, செபம், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், மற்றும் திருப்பலியில் பங்குகொள்தல் அவசியம் எனவும் கூறினார். குழு உணர்வோடும், ஒருமைப்பாட்டுணர்வோடும் பணியாற்றும் இவ்வமைப்பு, சமூகத்தில் கத்தோலிக்கர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை ஒத்திருக்கிறது எனவும் பாராட்டினார் திருத்தந்தை. திருத்தந்தையின் சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு உதவிவரும் அமைப்பின் அங்கத்தினர்கள், உடன்பிறப்பு உணர்வு, மற்றும், பகிர்தலின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளார்கள் என மேலும் கூறினார் திருத்தந்தை. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-27 01:28:59]


இறையாட்சியில் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன

இறையரசில் வேலைவாய்ப்பற்றவர்கள் என்று எவரும் இல்லை, ஒவ்வொருவருக்கும் ஒரு பங்களிப்பு உள்ளது, அதன்படி, இறுதியில் இறைநீதியில் ஒவ்வொருவரும் ஊதியம் பெறுவர் என, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வேலையாட்களைப் பணிக்கு அழைத்து, மாலையில் வேலை முடியும்போது, ஒரு மணி நேரம் வேலை பார்த்தவர்களுக்கும், காலை முதல் வேலை பார்த்தவர்களுக்கும் சமமான ஊதியம் கொடுத்த இஞ்ஞாயிறின் உவமை குறித்து, தன் மூவேளை செப உரையில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாக இயேசு நமக்குக் கொணர்ந்த மீட்புக்கு நாம் தகுதியற்றவர்களாக இருந்தும், அது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இவ்வுவமை நமக்குச் சொல்லித் தருகிறது என்றார். இறைவனின் எண்ணங்களும் வழிகளும் நம் எண்ணங்களையும் வழிகளையும் ஒத்தவையல்ல என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையன்பின் தர்க்கவியல் குறித்து புரிந்துகொள்ள இவ்வுவமை அழைப்புவிடுக்கிறது என்றார். கடவுள் எவரையும் ஒதுக்கி வைப்பதில்லை, மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் முழுமையை அடைய வேண்டும் என்பதையே விரும்புகிறார் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oklahoma நகரில், இச்சனிக்கிழமையன்று அருளாளராக அறிவிக்கப்பட்ட அருள்பணி ஸ்டான்லி பிரான்சிஸ் ரோத்தர் அவர்கள் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-25 19:54:53]


பாசமுள்ள பார்வையில்: இரக்கத்தின் கன்னி மரியா

வெயில், மழை, காற்று, தூசி என்று பல்வேறுத் தாக்குதல்களிலிருந்து குழந்தையைக் காக்க, அன்னையர் பயன்படுத்தும் ஓர் அற்புதக் கேடயம், முந்தானை அல்லது, துப்பட்டா. அன்னையர் உடுத்தும் மேலாடைகள், குழந்தையின் கண்ணீரைத் துடைக்க, அல்லது, அடிபட்டக் குழந்தையின் காயத்தைக் கட்ட... என்று, பல வழிகளில் துயர் துடைக்கும்; பாதுகாப்பு வழங்கும். அன்னை மரியா, இதே பண்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உருவமே, இரக்கத்தின் கன்னி மரியா (The Virgin of Mercy). கன்னி மரியா தன் மேலாடையை, இருகரங்களாலும் விரித்தபடி நிற்க, அந்த மேலாடை தரும் பாதுகாப்பில், வறுமைப்பட்ட தொழிலாளிகள், குழந்தைகள், அருள் சகோதரிகள் என்று பல குழுவினர் அடைக்கலம் புகுந்திருப்பதுபோல், மரியாவின் உருவம் பல தோற்றங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டு முதல், இத்தாலி, இஸ்பெயின், இலத்தீன் அமெரிக்க நாடுகளில், மக்களிடையே பரவியுள்ள பக்தி முயற்சியாக இது இருந்து வருகிறது. இரக்கத்தின் கன்னி மரியாவின் திருநாள், செப்டம்பர் 24ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-24 19:08:21]


மெக்சிகோவுக்கு திருத்தந்தையின் பெயரால் நிதியுதவி

மெக்சிகோவின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1,50,000 டாலர்கள், அதாவது, 97,50,000 ரூபாயை, உடனடி உதவியாக, அனுப்பியுள்ளார். செப்டம்பர் 19, கடந்த செவ்வாயன்று மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 250க்கும் அதிகமானோர் இறந்துள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப்பணிகளுக்கு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, திருத்தந்தையின் பெயரால் உதவித் தொகையை அனுப்பியுள்ளது. மெக்சிகோவில், பாதிக்கப்பட்ட பல மறைமாவட்டங்களுக்கு, இந்த உதவித் தொகை அனுப்பப்பட்டுள்ளது என்றும், உலகெங்கும் உள்ள மறைமாவட்டங்கள் அனைத்திற்கும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி மெக்சிகோ நகரில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பதும், 32 ஆண்டுகளுக்குப் பின், இவ்வாண்டு, அதே செப்டம்பர் 19ம் தேதி, ரிக்டர் அளவில் 7.1 கொண்ட நிலநடுக்கத்தில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-24 00:46:27]


'உலக நாடுகளின் குடும்பத்தில் வத்திக்கான்’

மனித சமுதாயத்திற்கென திருப்பீடம் தன் அரசியல் வழிமுறைகள் வழியே சாதித்துள்ளவை குறித்து, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு நூலுக்கு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால், பியெத்ரோ பரோலின். 2002ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு முடிய, 14 ஆண்டுகள் ஐ.நா. அவையில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றிய பேராயர், சில்வானோ தொமாசி அவர்கள், 'உலக நாடுகளின் குடும்பத்தில் வத்திக்கான்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலின் வெளியீட்டு விழாவில், கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார். அரசியல் அரங்கத்தில், திருப்பீடத்தின் முக்கிய அக்கறைகளான, அமைதி, மனித உரிமைகள், வளர்ச்சி, புலம்பெயர்தல், கல்வி, தொழில், புதிய கண்டுபிடிப்புக்கள், தகவல் தொடர்பு, அனைத்துலக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்நூல் பேசுகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார். துவக்கத்திலிருந்தே, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக உழைத்துவரும் திருஅவை, பொதுநலனை மனதில் கொண்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இடையீட்டாளராகவும் செயல்பட்டு வந்துள்ளது என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார். வர்த்தக, இராணுவ, அல்லது, அரசியல் நலன்களைத் தேடிச்செல்லும் தேவை, திருப்பீடத்திற்கு இல்லை என்பதால், மனித சமுதாயத்தின் பொதுநலனுக்கு உழைப்பது, திருப்பீடத்திற்கு எளிதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-24 00:41:17]


இரக்கத்தின் வெள்ளி செயல்பாடுகளைத் தொடரும் திருத்தந்தை

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், சில வெள்ளிக்கிழமைகளில், இரக்கத்தின் செயல்பாடாக, பிறரன்பு இல்லங்களைச் சந்தித்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 22, இவ்வெள்ளியன்று, உரோம் நகரின் சாந்தா லூச்சியா (Santa Lucia) மருத்துவ மனைக்குச் சென்று, நோயாளிகளைச் சந்தித்தார். நரம்புத் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கிவரும் சாந்தா லூச்சியா மருத்துவ மறுவாழ்வு மையத்திற்கு, வெள்ளி மாலை சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மருத்துவ மனையின் தலைவர், மருத்துவர் Maria Adriana Amadito, பொது மேலாளர், மருத்துவர் Eduardo Alessi மற்றும், மருத்துவமனை பணியாளர்களால் வரவேற்கப்பட்டார். நரம்புத் தொடர்பு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பிரிவுக்கு முதலில் சென்று பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழந்தைகளுடன் சிறிது நேரம் சிரித்துப் பேசியபின், அங்கு குழுமியிருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மொழிகளை வழங்கினார். இதன் பின்னர், சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ள இளையோர் உட்பட, 15 வயதுமுதல், 25 வயது வரையுள்ள இளையோரின் பிரிவுக்குச் சென்று உரையாடியபின், அம்மருத்துவ மனையில் உள்ள சிற்றாலயத்திற்குச் சென்று செபித்தார். இறுதியில் அனைவரிடமும் விடைபெற்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திற்குத் திரும்பினார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-24 00:37:08]


சமூகத்தொடர்புத் துறையில் இயேசு சபையினரின் பங்களிப்பு

திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தில் இயேசு சபையினரின் பணி பங்களிப்பு குறித்த ஒப்பந்தம், இவ்வியாழனன்று திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்திற்கும் இயேசு சபையினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது. இவ்வாரம் திங்களன்று வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர், இயேசு சபை அருள்பணி Antonio Stefanizzi அவர்கள், தன் நூறாவது பிறந்தநாளைச் சிறப்பித்தது பற்றி இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ள திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தின் தலைவர், அருள்பணி தாரியோ எத்வார்தோ விகனோ அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது, வானொலியின் இயக்குனராக பணியாற்றிய அருள்பணி Stefanizzi அவர்கள், சமூகத்தொடர்பில் பயன்படுத்திய வழிமுறைகள், இத்துறை குறித்த திருப்பீடத்தின் மறுசீரமைப்புத் திட்டங்களின் மையமாக உள்ளன என கூறியுள்ளார். வத்திக்கான் வானொலியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இயேசு சபையினர் விலகியபின், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இயேசு சபையினருக்கும் திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்திற்கும் இடையே நிகழ்ந்த ஆழமான பேச்சுவார்த்தைகளின் பயனாக, இயேசு சபையினரின் ஒத்துழைப்பும் பணியும் இத்துறையில் தொடரும் முடிவு ஏற்பட்டுள்ளது என மேலும் உரைத்துள்ளார், அருள்பணி விகனோ. சமூகத் தொடர்புத் துறையில் இயேசு சபையினரின் பணி தொடர உள்ளது குறித்து கருத்து வெளியிட்ட இயேசு சபை பிரதிநிதி அருள்பணி Juan Antonio Guerroro Alves அவர்கள், திரு அவைக்குப் பணியாற்றும் தங்கள் அழைப்பிற்கு இணங்க, திருத்தந்தையின் மறு சீரமைப்புத் திட்டங்களுக்கு ஏற்றவகையில், சமூகத்டொடர்புத் துறையில் பணிகளைத் தொடர்வதில் மகிழ்கிறோம் என்று கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-23 00:12:05]


பாலியல் கொடுமை கிறிஸ்துவால் வெறுக்கப்பட்ட பாவம்

றுவர் சிறுமியருக்கு எதிராக திருஅவையின் பணியாளர்கள் விளைவித்த துன்பங்கள், தன்னை மிகவும் மனவேதனை அடையச் செய்துள்ளதாகவும், இதனால், திருஅவையும் அவமானம் அடைந்துள்ளதென்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். பாலியல் ரீதியாக சிறாருக்கு தீங்கிழைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஓர் சிறப்பு அவையின் உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார். பாலியல் வன்கொடுமை, கிறிஸ்துவால் பெரிதும் வெறுக்கப்பட்ட பாவம் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, இந்தக் கொடுமையை, திருஅவையிலிருந்து முற்றிலும் நீக்கும் பணி, ஒவ்வொரு தலத்திருஅவையிலும் துவங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருடன் தலத்திருஅவைகள் உரையாடல்களை மேற்கொண்டுள்ளது என்பதும், இந்தக் கொடுமையைத் தவிர்க்க, முழு நாள் செப, தவ முயற்சிகள் நடைபெற்றுவருவதும், இந்தத் தவறை சீர் செய்வதற்கு திருஅவை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்பதற்கு அடையாளங்கள் என்று, திருத்தந்தை சுட்டிக்காட்டினார். சிறாருக்கு எதிராக நிகழ்ந்துவரும் பாலியல் கொடுமைகளை அகற்ற கடந்த மூன்று ஆண்டுகளாக திருஅவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போற்றுதற்குரியன எனினும், இன்னும் இந்த விடயத்தில் பெரும் கவனமும், அக்கறையும், தீவிரமும் காட்டப்படவேண்டும் என்று கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-21 21:26:27]


திருத்தந்தையின் மறைக்கல்வி : இளையோருக்கோர் அழைப்பு

கோடைகாலம் முடிவடைந்து, குளிர்காலம், வழக்கத்திற்கு மாறாக, சிறிது முன்னதாகவே துவங்கிவிட்ட நிலையில், இப்புதனன்று, சூரியன் மிக பிரகாசமாக ஒளிவீச, தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 1மணி 30 நிமிடங்களுக்கு தன் மறைக்கல்வி உரையை, இளைய சமுதாயத்திற்குரிய ஒரு விண்ணப்பமாக முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர் நோக்கு, அதாவது, கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, நம்பிக்கையின் நற்பண்பு பற்றி எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து சிந்திப்போம். நான் நேரடியாக, முகத்திற்கு முகம் பார்த்து, குறிப்பாக இளைய சமுதாயத்திடம், வழி நடத்தல் மற்றும் ஊக்குவித்தல் குறித்து சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். முதன் முதலாக, இறைவன் உங்களை எங்கு நட்டுள்ளாரோ அந்த இடத்தில், நம்பிக்கையில் உறுதியாயிருங்கள், மனதை தளரவிடாதீர்கள். இறைவனின் தந்தைக்குரிய அக்கறையிலும், இயேசுவின் அன்பிலும், அனைத்தையும் மாற்றவும் புதுப்பிக்கவும் வல்ல‌ தூய ஆவியாரின் வல்லமையிலும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அனைத்தையும் பிளவுறச் செய்து, மக்களை கீழ்நோக்கித் தள்ளும் எதிர்மறைப் போக்கிற்கு உங்களை கையளிக்காதீர்கள். இறைத்திட்டத்திற்கு முற்றிலுமாக இயைந்தவகையில் இவ்வுலகை கட்டியெழுப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள். உங்களைச் சுற்றியிருக்கும் அழகு குறித்து உங்கள் கண்களை திறந்து வையுங்கள். விசுவாச விளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். இறைவன் கொடுத்திருக்கும் கொடைகளாம் உங்கள் மனம் மற்றும் இதயத்தைப் பயன்படுத்தி, நீதியிலும், சுதந்திரத்திலும், மாண்பிலும் மனிதகுலம் வளர உதவுங்கள். பாவத்தாலும், விரோத உணர்வுகளாலும், பிரிவினைகளாலும் காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, வெற்றிவாகை சூடியுள்ள இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, அன்பையும், இரக்கத்தையும் கொணர வேண்டும் என அழைக்கப்படுகிறோம். உங்களின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருங்கள். விழும்போதெல்லாம் எழுந்திருங்கள். நம்பிக்கை இழப்பிற்கு உள்ளாகாதீர்கள். ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமெனில், வாழுங்கள், அன்புகூருங்கள், மற்றும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்போருக்கு, இறையருளின் துணையுடன், நம்பிக்கையின் வழிகாட்டும் ஒளியாகச் செயல்படுங்கள். இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோவில் இச்செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன் ஆழ்ந்த அனுதாபத்தையும் அருகாமையையும், செப உறுதியையும் வெளியிட்டார். காயமுற்ற மக்களுக்கும், உயிரிழப்புக்களால் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கும், இறைவன் ஆறுதலை வழங்கவேண்டும் என செபிக்க அனைவருக்கும் அழைப்புவிடும் அதேவேளை, மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்காகவும் செபிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் விண்ணப்பித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானோலி) [2017-09-20 20:13:39]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்