வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்பாசமுள்ள பார்வையில்.. மகனிடம் மன்னிப்பு கேட்ட தாய்

“மகனே, உன்னை எங்களால் காப்பாற்ற இயலவில்லை. இதற்காக நானும், உன் அப்பாவும் மிகவும் மனம் வருந்துகின்றோம், வேதனைப்படுகின்றோம், உன்னிடம் மன்னிப்புக் கேட்கின்றோம். மகனே, உனது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கிய நேரம் முதல், உன்னைக் காப்பாற்றுவதற்கு, எவ்வளவு முயற்சிகள் எடுக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகளையும், ஏறக்குறைய கடந்த 12 மாதங்களாக, எடுத்தோம். எல்லா முயற்சிகளுமே, மோசமாகவே எங்கள் வாழ்வில் நடந்தன. ஆனால், மகனே நீ எப்போதும் எங்களுக்கு மகனே. எங்களின் அழகான குட்டி மகன் இவ்வுலகைவிட்டுப் போகட்டும் எனச் சொல்வதைப் போன்ற கடினமான காரியம் வேறு எதுவும் இல்லை. நாங்கள் சொல்லவேண்டிய மிக கடினமான கூற்று இது”. இவ்வாறு, தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, பிரித்தானிய தாய் ஒருவர், அறிக்கை ஒன்றை, இவ்வாரத்தில் வெளியிட்டுள்ளார். இலண்டனில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டுக்கு (Charlie Gard), சிகிச்சைகள் வழங்கும் மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சையளிப்பது பலனற்றது எனக் கைவிரித்துவிட்டனர். இந்நிலையில், ஒரு மூன்றுமாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரிசோதனை முறையில் சிகிச்சையளிக்க பெற்றோர் விரும்பினர். ஆனால் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை. அமெரிக்க ஐக்கிய நாட்டு நரம்பியல் நிபுணர் ஒருவரும், குழந்தை சார்லிக்கு, பரிசோதனை முறையில் சிகிச்சையளிப்பது எவ்விதத்திலும் பயன்தாராது என அறிவித்துவிட்டார். இந்நிலையில், சார்லியின் பெற்றோர் (Chris Gard 32, Connie Yates 31), சட்டமுறைப்படி தாங்கள் எடுத்துவந்த நடவடிக்கையை, நிறுத்திக்கொள்வதாக இத்திங்களன்று அறிவித்தனர். அதன்பின் சார்லியின் அம்மா, தன் அன்பு மகனுக்குச் சொல்வதாக விடுத்த அறிக்கையில், தங்களின் இந்த முடிவுக்காக, மகனிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, உலகின் பல இடங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள், சார்லியின் பெற்றோருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-29 20:43:29]


கொலம்பியாவில் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை

கொலம்பியாவின் Puerto Valdiviaவின் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த அருள்பணியாளரின் Santa Rosa de Osos மறைமாவட்ட ஆயர் Jorge Alberto Ossa Soto அவர்கள், தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். ஜூலை 27, இவ்வியாழன் மற்றும், ஜூலை 28 இவ்வெள்ளி இரவுக்கும் இடையில் அருள்பணியாளர் Diomer Eliver Chavarría Pérez அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வன்முறை குறித்து ஆயர் பேரவை இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் Ossa Soto அவர்கள், அருள்பணியாளர் Pérez அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்துளார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் உள்நாட்டுச் சண்டை நடந்த, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அருள்பணியாளர்கள் அடிக்கடி கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-29 20:37:16]


குழந்தை சார்லியை இறைத்தந்தையிடம் ஒப்படைக்கின்றேன்

இலண்டனில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டு (Charlie Gard), ஜூலை 28, இவ்வெள்ளி மாலையில் உயிரிழந்ததையொட்டி, சார்லியின் பெற்றோருக்கும், அக்குழந்தையை அன்புகூர்ந்த எல்லாருக்கும் ஆறுதலாக, டுவிட்டரில், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அபூர்வ நோயால் தாக்கப்பட்டிருந்த சார்லிக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக, அவனின் பெற்றோர் நடத்திய நீண்ட கால சட்டமுறைப்படியான முயற்சிகளில், தனது ஆதரவைத் தெரிவித்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சார்லி இறந்த செய்தி பற்றி அறிந்தவுடன், குழந்தை சார்லியை இறைத்தந்தையிடம் ஒப்படைக்கின்றேன் எனவும், சார்லியின் பெற்றோர் மற்றும், அக்குழந்தையை அன்புகூர்ந்த எல்லாருக்காகவும் செபிப்பதாகவும், கூறியுள்ளார். மேலும், குழந்தை சார்லியின் மரணத்தை அறிவித்த அவனின் தாய் Connie Yates அவர்கள், "எங்களின் அழகான சிறிய மகன் இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டான், மகனே, சார்லி, உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்" எனக் கூறியுள்ளார். சார்லியின் இறப்பு செய்தியைத் தொடர்ந்து, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Gualtiero Bassetti உட்பட, பல சமய மற்றும், அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். சார்லியின் பெற்றோருக்கும், சார்லிக்கு நீண்ட காலமாக சிகிச்சை அளித்துவந்த இலண்டனின் Great Ormond Street மருத்துவமனைப் பணியாளர்களுக்கும், பிரித்தானிய கத்தோலிக்க சமூகத்தின் செபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், இங்கிலாந்து கர்தினால் நிக்கோல்ஸ். தங்கள் மகனின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு, எல்லா வழிகளிலும் விடாது முயற்சி செய்த, சார்லியின் பெற்றோரின் (Chris Gard 32, Connie Yates 31) துணிச்சலான சான்று வாழ்வைப் பாராட்டியுள்ளதோடு, தனது செபங்களையும் தெரிவித்துள்ளார், இத்தாலிய கர்தினால் Bassetti. உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்ட நிலையில், ஜூலை 27, இவ்வியாழனன்று, இறக்கும் நிலையிலுள்ளவர்களைப் பராமரிக்கும் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை சார்லி, இவ்வெள்ளி மாலையில் காலமானான். இலண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த Chris Gard தம்பதியருக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தான் சார்லி. அதற்கு அடுத்த மாதத்திலேயே இவனின் நோய் கண்டுபிடிக்கப்பட்டு, இலண்டன் Great Ormond Street மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சார்லி, பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ளதுடன், அவனுக்கு மூளைச் சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால், தன் தோள்களையும், கால்களையும் அசைக்க முடியாமலும், தானாக மூச்சு விடவோ அல்லது உணவு உண்ணவோ முடியாமலும் இருந்தான் சார்லி. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-29 20:31:21]


திருத்தந்தையின் 5ம் ஆண்டு தலைமைப்பணி நினைவுப் பதக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும் தலைமைப்பணியின் 5ம் ஆண்டை நினைவுகூரும் வகையில், வத்திக்கான் வடிவமைத்துள்ள பதக்கம் ஒன்று, ஜூலை 28 இவ்வெள்ளியன்று வெளியாகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என்ற மூன்று உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கங்கள், வத்திக்கானின் அனைத்து நூலகங்கள், மற்றும் நினைவுப்பொருள் மையங்களில் கிடைக்கும் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. மரியாஞ்செலா கிரிஷோட்டி (Mariangela Crisciotti) என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கத்தின் ஒரு புறம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணிக்கென தெரிவு செய்த இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தின் மறுபுறம், ஒரு மனிதர் தன் கரங்களை நீட்டி, மற்றொருவருக்கு உதவுவதுபோலும், அவருக்கு அருகே ஒரு பெண், குழந்தை ஒன்றை ஏந்தியிருப்பதுபோலும் சித்திரிக்கப்பட்டுள்ளது. உதவி பெறும் மனிதர் இயேசுவின் சாயலில் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இவ்வடிவத்தின் பின்னணியில், படகு ஒன்றும், "அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்" (மத். 25:35) என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான கடல்பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரைக் குறிக்கும் வண்ணம் இந்தப் பதக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கங்கள், 50 தங்கத்திலும், 1000 வெள்ளியிலும், 1500 வெண்கலத்திலும் வெளியாகின்றன என்று ZENIT கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறியுள்ளது. (ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி) [2017-07-29 00:54:32]


தாத்தா பாட்டியின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை

"ஒவ்வொரு சமூகத்தின் மிக அவசியத் தேவையாக இருக்கும், மனித, மற்றும் சமய பாரம்பரியத்தை, அடுத்தத் தலைமுறைக்கு வழங்க, ஒவ்வொரு குடும்பத்திலும், தாத்தாவும், பாட்டியும், முக்கியமாக விளங்குகின்றனர்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 26, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார். அன்னை மரியாவின் பெற்றோரும், இயேசுவின் தாத்தா, பாட்டியுமான புனிதர்கள் சுவக்கீம், அன்னா ஆகிய இரு புனிதர்களின் திருவிழா, ஜூலை 26ம் தேதி சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது. மேலும், புனிதர்கள் சுவக்கீம், அன்னா திருநாளையொட்டி, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் தலைமை அருள்பணியாளரான கர்தினால் ஆஞ்செலோ கோமாஸ்த்ரி, உலக ஆயர்கள் மாமன்ற செயலரான கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி ஆகியோர், வத்திக்கானில் அமைந்திருக்கும் பங்குக்கோவிலான, புனித அன்னா ஆலயத்தில், சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றினர். இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், மற்றும், 2019ம் ஆண்டு பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்காக, இந்தத் திருப்பலிகளின்போது சிறப்பான செபங்கள் கூறப்பட்டன என்று, புனித அன்னா பங்குக்கோவிலின் அறிக்கை கூறியுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-27 01:40:57]


பாலியல் தொழிலாளர் திருந்தி வாழ உதவும் அருள்சகோதரிக்கு...

பாலினத்தை மாற்றி வாழ்வதில் ஈர்ப்புடையவர்கள் ஈடுபட்டுவரும் பாலியல் தொழிலைக் கைவிடுவதற்கு, கடந்த 11 ஆண்டுகளாக உழைத்துவரும், ஓர் அடைப்பட்ட துறவு இல்லத்தின் அருள்சகோதரி ஒருவருக்கு, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அர்ஜென்டீனாவின் Neuquen என்ற நகரத்தில், கார்மேல் அடைப்பட்ட துறவு இல்லத்தில் வாழ்ந்துவரும் ஐம்பது வயது நிரம்பிய அருள்சகோதரி Monica Astorga அவர்கள், தனது துறவு இல்லத்திலிருந்து வெளியே செல்லாமல், இந்தச் சமூகநலப் பணியை ஆற்றி வருகின்றார். இச்சகோதரி ஆற்றிவரும் பணியை ஊக்குவித்து மின்னஞ்சல் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சகோதரியுடனும், அவரது துறவு இல்லத்துடனும், அவரோடு சமுகநலப் பணியாற்றும் எல்லாருடனும் தான் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாக எழுதியுள்ளார். இச்சகோதரி இணைந்து பணியாற்றும் குழு, Neuquen நகரத்தில், முன்னாள் பாலியல் தொழிலாளர் பெண்களுக்கென, 15 குடியிருப்புகள் கட்டும் திட்டம் மற்றும், வயதானவர்களுக்கென ஓர் இல்லம் திறப்பது குறித்து தான் கேள்விப்பட்டு, இச்செய்தியை அனுப்புவதாகவும், திருத்தந்தை அதில் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியின் ஒரு பகுதி, அர்ஜென்டீனாவின் Neuquen நகரத்தின், LmNeuquen.com என்ற வலைத்தள தினத்தாளில், இத்திங்களன்று வெளியானது. பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவர், ஒருசமயம், அருள்சகோதரி Monica Astorgaவின் கார்மேல் துறவு இல்லத்திற்குச் சென்று, தனது உழைப்பில் பத்தில் ஒரு பாகத்தைக் கொடுக்க விரும்பினார். அப்போது, அவரது தொழில் பற்றிக் கேட்டறிந்த அருள்சகோதரி Monica, அச்சிறுமியும், இன்னும், இவர் போன்று தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களும் திருந்தி வாழ உதவியிருக்கிறார். (ஆதாரம் : Zenit/வத்திக்கான் வானொலி) [2017-07-26 01:59:57]


பாசமுள்ள பார்வையில்...: மகளின் தாய்மையுணர்வு

பள்ளி முடிந்ததும் வேக வேகமாக ஓடினாள் அச்சிறுமி. 5ம் வகுப்புப் படிக்கும் அந்த 10 வயது சிறுமி, ஐந்தே நிமிடத்தில் வீட்டை அடைந்து, பாத்திரங்களை கழுவி, பின், தன் இரு தம்பிகளுக்கும் உடம்பைத் துடைத்து, தான் காலையில் செய்து வைத்துவிட்டுப்போன கேழ்வரகுக் கஞ்சியை குடிக்கக் கொடுத்தாள். இவள் தகப்பன் இவர்களை விட்டு விட்டுப்போய் 4 ஆண்டுகளாகிவிட்டன. கடந்த இரண்டாண்டுகளாக அம்மாவும் படுத்தப் படுக்கையாகிவிட்டார். அம்மாவின் அருகில் சென்றுப் பார்த்தார், அந்தச் சிறுமி. இவளைக் கை நீட்டி அருகே அழைத்து, அணைத்து, தலையை வருடிக் கொடுத்தார் அந்த தாய். தன் இயலாமையை எண்ணி, அந்த தாயும்தான் எத்தனை நாட்களுக்கு அழுது கொண்டிருப்பார். தனக்கிருக்கும் அந்த சிறு வயலை குத்தகைக்கு விட்டு, அதில் வரும் சிறு வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 'ஏனம்மா அழுகிறீர்கள்' என கேட்டாள் அந்த சிறுமி. 'இல்லையம்மா, இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்புக்களை சுமக்க வைத்துவிட்டேனே' என மேலும் கண்ணீர் விட்டார் அத்தாய். 'தாய்க்கும், தம்பிகளுக்கும் உதவுவது சுமையல்ல, அது சுகம்தான்' என, பெரிய மனுஷி போல் கூறிய அச்சிறுமி, தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள். இங்கு, தாய் மகளாவும், மகள் தாயாகவும் மாறிப்போனார்கள். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-24 01:32:09]


திருத்தந்தையின் உற்சாகமூட்டும் சொற்களுக்காக கொலம்பியா

கொலம்பிய நாட்டினர், நற்செய்தி அறிவிப்புப்பணியிலும், ஒப்புரவு முயற்சிகளிலும் ஈடுபடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Oscar Urbina Ortega. வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல், 11ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும், கொலம்பியத் திருத்தூதுப் பயணம் பற்றிய எதிர்பார்ப்புகளை, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த பேராயர் Urbina Ortega அவர்கள், கொலம்பிய மக்கள், கடந்தகால வாழ்வுக்கு மீண்டும் செல்லாமல் இருப்பதற்கும், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் உதவும் என்றும் கூறினார். கொலம்பியாவில், பல ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்குப் பின், 2016ம் ஆண்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, நாடு, புதிதாகப் பிறப்பெடுத்துள்ளது என்றும், இந்தப் புதிய பிறப்பில், நற்செய்தியின் ஒளியில் மக்கள் செல்வதற்கு, திருத்தந்தையின் வார்த்தைகள் உதவும் என்றும் கூறினார், பேராயர் Urbina Ortega. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போருக்குப் பின், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், ஒப்புரவைக் கொணரவுமான முயற்சிகள் கடினமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-22 20:49:15]


கால்களை இழந்த தொழிலாளியுடன் தொலைப்பேசியில் திருத்தந்தை

டீனா நாட்டின் புவெனஸ் அயிரஸ் நகரில் வாழும் Maximiliano Acuña என்ற தொழிலாளி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து வந்த தொலைப்பேசி அழைப்பால் ஆனந்த அதிர்ச்சியடைந்தார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. துப்புரவு தொழில் செய்யும் 33 வயது நிரம்பிய Maximiliano அவர்கள், மார்ச் 22ம் தேதி, குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியதால், அவர் தன் இரு கால்களையும் இழக்க வேண்டியதாயிற்று. புவெனஸ் அயிரஸ் நகர அதிகாரிகளில் ஒருவரான, Gustavo Vera அவர்கள், இந்த விபத்தைக் குறித்து திருத்தந்தைக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, திருத்தந்தை, Maximiliano அவர்களை, ஜூலை 18, இச்செவ்வாயன்று தொலைப்பேசியில் அழைத்துப் பேசினார். ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான Maximiliano அவர்கள், இந்த விபத்திற்குப்பின் 'கோமா' நிலையில் இருந்தார் என்றும், மூன்றாம் நாள் அவரே மீண்டும் சுயநினைவு அடைந்தார் என்றும் CNA செய்தி கூறுகிறது. திருத்தந்தையின் தொலைப்பேசி அழைப்பைக் குறித்து, அர்ஜென்டீனா தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பேட்டியளித்த Maximiliano அவர்கள், தான் காட்டிய நம்பிக்கையும், மன உறுதியும், ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். திருத்தந்தை தன்னை அழைத்தது, தனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்தது என்றும், தன் இரு கால்களையும் இழந்தபோதிலும், வேறு பல வழிகளில் இறைவன் தன் அன்பை தனக்கு வெளிப்படுத்தி வருகிறார் என்றும், Maximiliano அவர்கள் இப்பேட்டியில் குறிப்பிட்டார். (ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி) [2017-07-22 00:48:05]


"மாஃபியா கும்பல்களுக்குப் பலியானவர்களுக்காக செபிப்போம்"

குற்றங்களைத் திட்டமிட்டு நடத்திவரும் அமைப்புக்களான 'மாஃபியா' கும்பல்களால் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் வண்ணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 19, இப்புதனன்று ஒரு டுவிட்டர் செய்தியை, இத்தாலிய மொழியில் மட்டும் வெளியிட்டுள்ளார். "மாஃபியா கும்பல்களுக்குப் பலியானவர்களுக்காக நாம் செபிப்போம், ஊழலுக்கு எதிராக போராட்டங்களைத் தொடர்வதற்குத் தேவையான சக்தியைக் கேட்போம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளிவந்துள்ளன. இத்தாலியில், மாஃபியா கும்பல்களுக்கு எதிராகப் போராடிவந்த பவோலோ போர்செல்லினோ (Paolo Borsellino) என்ற நீதிபதி, மாஃபியா கும்பலின் வெடிகுண்டு தாக்குதலால், 1992ம் ஆண்டு, ஜூலை 19ம் தேதி கொல்லப்பட்டார். 1992ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி, ஞாயிறன்று, நீதிபதி போர்செல்லினோ அவர்கள், தன் அன்னையைச் சந்திக்கச் சென்ற வேளையில், அவரது அன்னை வாழ்ந்துவந்த இல்லத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிறைக்கப்பட்டிருந்த ஒரு கார், நீதிபதி அங்கு சென்று சேர்ந்ததும் வெடித்ததால், அவரும், உடன் சென்ற ஆறு பேரில், ஐவரும் கொல்லப்பட்டனர். நீதிபதி போர்செல்லினோ அவர்களுக்கு, அரச மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்த இத்தாலிய அரசு முன்வந்தபோதிலும், அதனை மறுத்து, அவரது குடும்பத்தினர், தனிப்பட்ட முறையில் நடத்திய அடக்கத் திருப்பலியில், 10,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அவரது மரணத்தின் 25ம் ஆண்டு நிறைவேறிய இப்புதனன்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, மாஃபியா கும்பல்களுக்கும், ஊழலுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-07-20 03:08:04]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்