வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : விழிப்புடன் காத்திருத்தல்

உரோம் நகரில் குளிர் காலம் துவங்கிவிட்டது என்பதை நினைவூட்டும் விதமாக அவ்வப்போது, குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தாலும், பகலில் சிறிது நேரம் இதமான வெப்பம் இருந்து ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு சூழலில், இதமான தட்பவெப்ப நிலையில் திருப்பயணிகள் கூட்டம் உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் நிரம்பி வழிய, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையின்போது, முதலில் லூக்கா நற்செய்தி 12ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. 'விழிப்பாயிருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றோர்' என்ற, இந்த பகுதியின் அடிப்படையில் தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு சகோதர சகோதரிகளே! விழிப்புடன் காத்திருக்கும் நிலை என நம்மால் அழைக்கவல்ல நம்பிக்கையின் பரிமாணம் குறித்து இன்று உங்களுடன் உரையாட நான் ஆவல் கொள்கிறேன். விளக்குகள் எரிந்துகொண்டிருக்க, தங்கள் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, தலைவர் வீடு திரும்பும்வரை கண்விழித்துக் காத்திருக்கும் பணியாளர்கள்போல், தம் சீடர்கள் இருக்கவேண்டும் என இயேசு கூறுவதை லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் காண்கிறோம் (லூக். 12:35-36). ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம், எப்போதும் விழிப்புடன் ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். அவ்வாறு திரும்பி வரும்போது, ஆண்டவர் அனைத்திலும் அனைத்துமாக இருப்பார்(1கொரி.15:28). ஒவ்வொரு நாளையும் இறைவனின் கொடையாக வரவேற்கவும், அந்நாளின் நற்செயல்களை இறைவனுக்கு காணிக்கையாக்கி வாழவும் உதவும் வகையில், ஒவ்வொரு நாளும் இறைவனைக் குறித்து விழிப்பாயிருக்கும் புது வாய்ப்பு நமக்கு வழங்கப்படுகிறது. நம்முடைய வாழ்நாள்கள் சலிப்புடையவைகளாக இருக்கும்போதும், பல்வேறு துன்பங்களை எதிர்கொள்ளும்போதும், இறையருள் குறித்து நாம் மறந்துவிடாமல் இருக்கவேண்டுமெனில், நம் விழிப்பு நிலைக்கு, பொறுமை என்பது அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. ஏனெனில், விடியல் தரும் மகிழ்வை மறக்க வைக்கும் அளவுக்கு, எந்த இரவும் தொடர்ந்துகொண்டேயிருப்பதில்லை. கிறிஸ்தவர்களாகிய நமக்கு உறுதியாகத் தெரியும், கிறிஸ்து மறுபடியும் வருவார் என்று. நாம் எவ்வளவுதான் துன்பங்களை அனுபவித்தாலும், வாழ்விற்கு நோக்கமும், ஆழமான அர்த்தமும் உள்ளது, மற்றும், இரக்கமுள்ள இறைவன் இறுதியில் நம்மை வாழ்த்தி வரவேற்பார். இவ்வாறு, நம் வருங்காலம் என்பது நம் கைகளால் ஆற்றும் செயல்களால் மட்டுமல்ல, கடவுளின் பராமரிப்பால் வழிநடத்தப்படுகின்றது என்பதை உணர்ந்தவர்களாய், நம் வரலாற்றையும், வாழ்வையும் நம்பிக்கையுடனும், பற்றுறுதியுடனும் நாம் நோக்க முடியும். 'ஆண்டவராகிய இயேசுவே வாரும்'(தி.வெளி.22:20), என முதல் சீடர்கள் உரைத்ததுபோல், அதே வார்த்தைகளை நாம் தினமும் உச்சரிப்போம். நம்முடைய மிகவும் துன்பகரமான வேளைகளில்,' இதோ நான் விரைவில் வருகிறேன்' (தி.வெளி.22:7) என இயேசு கூறும் ஆறுதல் பதில்மொழிகளை செவிமடுப்போம். இவ்வாறு, இவ்வார புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்தியா உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி [2017-10-11 19:11:52]


பார்வையற்றவர்க்கு திருத்தந்தை செபம், ஒருமைப்பாடு

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, உலகிலுள்ள பார்வையற்ற மக்களுக்குத் தனது செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிப்பதாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். அக்டோபர் 12, இவ்வியாழனன்று உலக பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, பார்வையற்றவர்கள் மற்றும், பார்வைத் திறனற்றவர்களுடன் தனது தோழமையுணர்வை வெளிப்படுத்தினார். இன்னும், பிரேசில் நாட்டின் அப்பரெசிதாவில் அன்னை மரியா காட்சியளித்ததன் முன்னூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்பரெசிதா தேசிய திருத்தலத்தில், அக்டோபர் 10, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள மூன்று நாள் கொண்டாட்டங்களில், தனது பிரிதிநிதியாக கலந்துகொள்கின்ற, திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை மற்றும், ஆயர்கள் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் வழியாக, இச்செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-11 19:01:27]


இந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்

இந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவையின் பாதை, தனித்துவிடப்பட்ட மற்றும், பிரிவினை கொண்டதாக இல்லாமல், மதிப்பும், ஒத்துழைப்பும் கொண்டதாக இருக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்திய ஆயர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் இச்செவ்வாயன்று உருவாக்கப்பட்டுள்ள மற்றும், விரிவாக்கப்பட்டுள்ள புதிய மறைமாவட்டங்களில், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் விசுவாசிகளுக்கு மேய்ப்புப்பணியாற்றுவதற்கு, கீழை வழிபாட்டுமுறை பேராயத்திற்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை எழுதியுள்ள ஒரு நீண்ட கடிதத்தில், இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்தியாவில் இலத்தீன் வழிபாட்டுமுறையின் மறைமாவட்டங்களில் வாழ்கின்ற, சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் விசுவாசிகளின் மேய்ப்புப்பணி தேவைகள் நிறைவேற்றப்படுவது தொடர்பாக, முந்தைய திருத்தந்தையர் 16ம் பெனடிக்ட், புனித 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் செயல்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார். சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சமூகங்கள் விழாக்கள் கொண்டாடவும், மற்ற நிகழ்வுகளை நடத்தவும், இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை, தனது கட்டடங்களைக் கொடுத்து உதவுமாறும், இவ்விரு வழிபாட்டுமுறைகளுக்கு இடையே ஒத்துழைப்பும், நல்லிணக்கமும் தொடர்ந்து நிலவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவை, திருத்தூதர் புனித தோமையாரின் போதனையால் வளர்ந்து, பின் கல்தேய மற்றும் அந்தியோக்கிய திருஅவைகளின் மரபுகளால் வளர்ந்தது என்பதையும், பின் 16ம் நூற்றாண்டிலிருந்து இலத்தீன் வழிபாட்டுமுறை மறைபோதகர்களின் முயற்சிகள் வழியாக, திருஅவை பரவியது என்பதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-11 01:26:11]


திருத்தந்தை : அமைதியைத் தேடுதல், எல்லைகளற்ற பணி

“அமைதியைத் தேடுதல் என்பது, வரையறையற்ற மற்றும் எல்லைகளற்ற ஒரு பணியாகும், இப்பணி, ஒருபோதும் நிறைவுறாத மற்றும், அனைத்து மக்களின் அர்ப்பணத்தையும், பொறுப்பையும் வலியுறுத்துவதாகும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று வெளியாயின. மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், ஒருவர் கசப்புணர்வை அனுபவிக்கையில், நன்மைக்காக இன்றும் பணியாற்றிக்கொண்டிருக்கும் மக்களில் நம்பிக்கை வைக்க வேண்டும், அவர்களின் தாழ்ச்சியில், புதிய உலகின் விதை உள்ளது என்ற வார்த்தைகள் வெளியாயின. இன்னும், திருவழிபாட்டு ஆண்டின் 28ம் ஞாயிறாகிய அக்டோபர் 15ம் தேதி காலை பத்து மணி 15 நிமிடங்களுக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்நிலை அறிவிப்பு திருப்பலியைத் தொடங்குவார். முத்திப்பேறுபெற்றவர்களான, ANDREA DE SOVERAL, AMBROGIO FRANCESCO FERRO, MATTEO MOREIRA மற்றும் அவரோடு சேர்ந்த 27 தோழர்கள், CRISTOFORO, ANTONIO, GIOVANNI FAUSTINO MÍGUEZ, ANGELO DA ACRI ஆகியோரை, அக்டோபர் 15, ஞாயிறன்று, புனிதர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-09 22:19:52]


கிறிஸ்தவத்தின் மாபெரும் புதினம் இறை இரக்கம்

நாம் நம் தவறுகளாலும், பாவங்களாலும் இறைவனை ஏமாற்றம் அடையச் செய்திருந்தாலும், இறைவன் தம் வார்த்தையில் மாறாதவர் மற்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் பழிவாங்காதவர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கூறினார். இதுவே கிறிஸ்தவத்தின் மாபெரும் புதினம் என்றும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான (மத்.21:33-43) கொடிய குத்தகைக்காரர் உவமையில் இது, தெளிவாகத் தெரிகின்றது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள், ஒரு கட்டத்தில், அத்தோட்டத்தின் பலன்களைத் திருப்பித்தர மறுத்து, அதன் உரிமையாளரின் பணியாளர்களையும், அவரின் மகனையும் கொலைசெய்த நிகழ்வு இந்த உவமையில் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். கடவுள் மனித சமுதாயத்தோடு உடன்படிக்கை ஏற்படுத்தி, அதில் நாம் பங்குகொள்ள அழைப்பு விடுப்பதாய் உள்ள இந்த உவமைக் கதை, நமக்கும் பொருந்தும் எனவும் விளக்கினார், திருத்தந்தை. நம் தந்தையாம் கடவுளின் அன்பிற்கும், அவரின் உடன்படிக்கைக்கும் நாம் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்கும்வேளையில், அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கேள்வியால் நாம் புரிந்துகொள்கிறோம் என்றும், நம் பலவீனம் மற்றும் பாவங்களால் கிறிஸ்துவை நாம் புறக்கணித்தாலும், கடவுள் தம் திராட்சைத் தோட்டத்தில், தம் இரக்கமாகிய புதிய இரசத்தை தொடர்ந்து வழங்குகிறார் என்றும் திருத்தந்தை கூறினார். கிறிஸ்தவத்தின் மாபெரும் புதினம் இறைவனின் இரக்கம் எனவும், எல்லாரின் நன்மைக்காக கடவுள் நட்டுவைத்துள்ள திராட்சையாக, சமுதாயத்தின் அனைத்து இடங்களிலும், குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளில் நாம் வாழவேண்டுமெனவும், மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ் (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-09 22:16:12]


பாசமுள்ள பார்வையில்...: தாயின் போதனைகள் துணை நிற்கும்

இரவில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார் இலாசர். திடீரென அவர் முன் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, 'இன்று நீ என்னுடன் சொர்க்கத்திற்கு வருகிறாய். உன்னுடன் யாரையாவது அழைத்துவர விரும்பினால், அவர்களையும் அழைத்துவர உனக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. உனக்கு மிக வேண்டியவர்கள் யார்? உன் தாயா? மனைவியா? குழந்தைகளா? அல்லது நண்பர்களா?' எனக் கேட்டார். இலாசர் சொன்னார், ' என் நண்பர்கள் வேண்டாம். அவர்கள் இன்னும் பல காலம் உலகில் வாழ்ந்து அனுபவிக்கட்டும். என் குழந்தைகள் இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. என் மனைவியோ, ஒரு நல்ல தாயாக இருந்து என் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்களும் வேண்டாம்' என்று. உடனே, அந்த வானதூதர் இலாசரை நோக்கி, 'அப்படியானால் உன் தாயை அழைத்துச் செல்கிறாயா? ஏனெனில் அவர்கள் உன்னைவிட அதிக காலம் உலகில் இருந்தாகிவிட்டது. உன் குழந்தைகளைக் கவனிக்க உன் மனைவி இருக்கிறார். உம் அம்மாவை அழைத்துச் செல்வோமா? என்று கேட்டார். இலாசர் அமைதியாகச் சொன்னார், ' என் தாய், இந்த ஊரில் ஆசிரியராக இருக்கிறார். என்னை நரகத்திற்கு அழைக்காமல், சுவர்க்கத்திற்கு நீங்கள் அழைப்பதற்கு, என் தாயின் வளர்ப்ப்பு முறையே காரணம். அவர்கள் இன்னும் சிறிது காலம் உலகில் இருந்தால், இன்னும் நிறைய பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்குவார்கள். எனவே, என் தாய் இங்கேயே இருக்கட்டும். என் தாய் இதுவரை எனக்குக் கற்றுத்தந்த நல்ல விடயங்களை மட்டும், எனக்குத் துணையாக, என்னுடன் எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்' என்று முடித்தார் இலாசர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-09 01:14:36]


திருத்தந்தை : நன்றாக உருவாக்கப்பட்ட அருள்பணியாளர்கள் அவசியம்

குருத்துவ பயிற்சி என்பது, நம் வாழ்வின் செயல்களைச் சார்ந்தது அல்ல, ஆனால், அது முதலில், நம் வாழ்வில் கடவுள் ஆற்றும் செயலைச் சார்ந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் குழு ஒன்றிடம் கூறினார். குருத்துவ இறையழைத்தலின் கொடை (Ratio Fundamentalis) என்ற தலைப்பில், திருப்பீட குருக்கள் பேராயம் நடத்திய பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட 268 பிரதிநிதிகளை, வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருத்துவ உருவாக்குதலை குயவர் கையிலுள்ள மண்கலத்தை (எரே.18,1-10) ஒப்புமைப்படுத்தி விளக்கினார். திருஅவை, நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட அருள்பணியாளர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே, விசுவாசத்தைப் புதுப்பிப்பதற்கும், இறையழைத்தலின் வருங்காலத்திற்கும் உதவுவதாக இருக்கும் என்றும் கூறியத் திருத்தந்தை, நிலைத்த பயிற்சிக்கு, முதலும், முக்கிய பொறுப்பாளர்களாக இருப்பவர்கள், அருள்பணியாளர்களே என்றும் கூறினார். இரண்டாவதாக, அருள்பணியாளர்கள் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படுவதற்கு, பயிற்சியாளர்களும், ஆயர்களும் பொறுப்பானவர்கள் என்றும், இவர்கள் கடவுளின் பணியோடு ஒத்துழைக்கவில்லையெனில், நன்றாக உருவாக்கப்பட்ட அருள்பணியாளர்களை நாம் கொண்டிருக்க இயலாது என்று கூறினார். குருத்துவ வாழ்விற்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இறைமக்களையும் நாம் மறந்துவிடக் கூடாது என்று கூறினார். குயவரின் கையில் நாம் இருக்கும்போது, நாம் எவ்வாறு உருவாக்கப்பட விரும்புகிறோம் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, செபமாலை அன்னை மரியாவின் விழாவாகிய இந்நாளில், குயவராகிய இறைவனின் கையில் தம்மைத் தாழ்மையுடன் ஒப்படைத்த அந்த அன்னையின் பரிந்துரையைக் கேட்போம் என்று கூறி, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-07 21:29:30]


டிஜிட்டல் உலகில் சிறாரைப் பாதுகாக்க உறுதியுடன் ஒன்றிணைவோம்

சிறார் உரிமைகள் குறித்த உலகளாவிய அறிக்கையையும், அது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் திருப்பீடம் முழுமையாகவும், உறுதியாகவும் ஏற்கும் அதேநேரம், இந்த அறிக்கையின் அடிப்படையில், டிஜிட்டல் உலகில் சிறாரைப் பாதுகாக்க, நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைவோம் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். ‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’ என்ற தலைப்பில், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக மாநாட்டில் கலந்துகொண்ட ஏறத்தாழ முன்னூறு பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்தார். இக்கால டிஜிட்டல் உலகில் சிறாரின் நிலை குறித்து விரிவாக விளக்கிய திருத்தந்தை, இன்று உலகில் இணையதளத்தைப் பயன்படுத்தும் முன்னூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களில், 25 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சிறார் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும், ஐம்பது கோடிக்கு மேற்பட்டவர்கள், இணையதள வசதிகளைப் பெற்றுள்ளனர், இவர்களில் பாதிப்பேர் சிறார் என்றும் கூறினார். இணையதளத்தில் மக்கள் எதைப் பார்க்கின்றனர்? இணையதளம் இம்மக்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்ற கேள்விகளை எழுப்பிய திருத்தந்தை, இந்த கசப்பான உண்மையிலிருந்து நம்மை மறைத்துக் கொள்ளாமல், இது குறித்து நம் கண்களை அகலத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த மாநாட்டின் இறுதி அறிக்கை பற்றியும், இணையதளம் சிறார் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைக் களைவதற்கு இந்த மாநாட்டினர் உறுதி எடுத்துள்ளதையும் பாராட்டிப் பேசிய திருத்தந்தை, இவ்விவகாரத்தில், கத்தோலிக்கத் திருஅவை தன் முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார். சட்டத்துக்குப் பறம்பே இடம்பெறும் மனித வர்த்தகம், பொருளாதார மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள், உலகளாவிய பயங்கரவாதம் உட்பட பல்வேறு கூறுகள், இணையதளத்தோடு தொடர்புகொண்டுள்ளன என்றும், இவற்றுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு, அச்சமின்றி செயலில் இறங்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தார், திருத்தந்தை. டிஜிட்டல் யுகத்தில் இடம்பெறும் தவறான அணுகுமுறைகளில் மூன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இத்தவறுகளைத் துணிச்சலுடன் எதிர்க்க வேண்டுமெனவும், இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இணையதளம் சிறார்க்கு ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுவது, தொழில்நுட்பம் வழியாக தீர்வு காணச்செய்வது, இணையதளம் பற்றிய கருத்தியல் மற்றும் பொய்யான கண்ணோட்டம் ஆகிய தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா நாடுகளிலும் சிறாரின் கண்களில் எப்போதும் மகிழ்ச்சி தெரிவதற்கு, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உரையில் கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-07 00:01:26]


சிறாரின் மாண்பு மீறல் நிறுத்தப்பட கர்தினால் பரோலின் அழைப்பு

‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’என்ற தலைப்பில், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள உலக மாநாட்டில், முக்கிய உரையாற்றிய, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், சிறாரின் மாண்பு மீறல் நிறுத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார். சிறாரின் மாண்புக்கு எதிராக பெருமளவில் குற்றங்கள் இடம்பெறுவதற்கு அதிகமான சான்றுகளைக் காண முடிகின்றது என்று உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த உலகில் இடம்பெறும் பல பிரச்சனைகள் போன்று, டிஜிட்டல் உலகிலும் குற்றங்கள் பரவி வருவதைக் காண்கிறோம் என்று கூறினார். டிஜிட்டல் உலகம், ஏனைய எதார்த்தங்களிலிருந்து பிரிக்கப்படவில்லை, இது உலகின் தனித்துவமிக்க எதார்த்தத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது எனவும், பழைய ஆபத்துக்கள் புதிய வழிகளில் வெளிப்படுத்தப்படும் ஆபத்துக்களை சிறார் எதிர்நோக்குகின்றனர் எனவும் உரையாற்றினார், கர்தினால் பரோலின். நாம் யாருடைய மாண்பைப் பாதுகாத்து, ஊக்கப்படுத்த விரும்பி பேசிவருகிறோமோ அவர்களும் மனிதர்கள் எனவும், அவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள் எனவும் கூறினார், கர்தினால் பரோலின். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் இவ்வுலக மாநாடு, அக்டோபர் 06, வருகிற வெள்ளியன்று நிறைவடையும். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-06 00:07:56]


கடல் தொழிலாளர்கள் மீது திருப்பீடத்தின் அக்கறை

கடலில் வாழ்பவர்கள் மற்றும் வேலைசெய்பவர்கள் மீது, திருஅவை எப்போதும் சிறப்புக் கவனம் செலுத்துகின்றது என்று, பேரருள்திரு Fernando Chica Arellano அவர்கள், ஐ.நா. கூட்டமொன்றில், இச்செவ்வாயன்று உரையாற்றினார். FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் திருப்பீடப் பிரதிநிதியாகிய பேரருள்திரு Arellano அவர்கள், இஸ்பெயின் நாட்டின் Vigo வில், Conxemar மற்றும் FAO நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார். மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட, எந்த ஒரு தொழிலாளரும் ஒதுக்கப்படாமல், நீதி, சுதந்திரம், மாண்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, சமவாய்ப்புகள் ஆகிய, அனைத்துத் தொழிலாளருக்கும் வழங்கப்படுமாறு கேட்டுக்கொண்டார், பேரருள்திரு Arellano. இதற்கு அரசியலில் ஆர்வமும், சமுதாயத்தின் ஆதரவும் அவசியம் எனவும், அவர் கூறினார். அக்டோபர் 3, இச்செவ்வாய் முதல், அக்டோபர் 05, இவ்வியாழன் வரை நடைபெறும் இக்கருத்தரங்கு, காலநிலை மாற்றமும், மீன்பிடித்தொழிலும் என்ற தலைப்பில் இடம்பெற்று வருகின்றது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-10-05 23:53:20]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்